
பள்ளிக்கு அனுப்பும் முன்னே..!! (மருத்துவம்)
பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பு, பாதுகாப்பு நடைமுறைகள், பேரிடர் சூழல் மேலாண்மை, முதலுதவி பயிற்சி களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன். குடும்பம், பள்ளி, சமூகம் என்று குழந்தைகளைச் சுற்றி மூன்று வட்டங்கள் இருக்கின்றன.
சமூகத்தில் குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குடும்பமும் பள்ளியுமே பயிற்றுவிக்க வேண்டும். மழை பெய்யும்போது மரங்களின் அருகில் நிற்கக்கூடாது. இடி இடிக்கும்போது, மின்கம்பங்களுக்கு பக்கத்தில் நிற்கக்கூடாது என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.
அருகாமைப் பள்ளியைத் தேர்வு செய்யுங்கள். தூரப்பள்ளி என்றால் வாகனங்களை நன்கு கண்காணியுங்கள்.
பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் மின்சாரப் பெட்டிகள் திறந்திருந்தாலோ, மேன்ஹோல் மூடியில்லாமல் இருந்தாலோ, மின் வயர்கள் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தாலோ சம்பந்தப்பட்ட துறைக்கு தாமதிக்காமல் தகவல் தெரிவியுங்கள்.
சாலையோரம் இருக்கும் பள்ளிக்கு அருகில் வேகத்தடை இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமும், அப்பகுதி மக்கள் பிரதிநிதியிடமும் பேசுங்கள்.
குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் அவசியம் இல்லாத புத்தகங்களை பள்ளியிலேயே வைத்துக்கொள்ளலாம்.
குழந்தையின் அழுகைக்கு மதிப்பளியுங்கள். காது கொடுத்துக் கேளுங்கள்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில் பிள்ளைகளை ஏற்றி அனுப்பாதீர்கள்.