உடலில் உப்பு அதிகமானால்…!! (மருத்துவம்)
நாம் தினமும் பயன்படுத்தும் உப்பு, நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதேசமயம், ஒருவருக்கு உடலில் உப்பு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அது பலவித பிரச்னைகளை உருவாக்கிவிடும். முன்பெல்லாம் வீ்ட்டில் சமைக்கும் உணவுகளே பிரதானமாக இருந்தது. ஆனால், இப்போது உணவைத் தாண்டி நாம் பல செயற்கைச் சுவையூட்டிகள், துரித உணவுகளையும் உட்கொள்ள தொடங்கிவிட்டோம். இதனால், பல நாளில் பெற வேண்டிய உப்பை ஒரே நாளில் பெற்றுவிடுகிறோம்.
அதாவது, ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 2. 3 கிராம் முதல் 5 கிராம் வரையிலான அளவு உப்பு இருந்தாலே போதுமானது. மூன்று வேளை உணவையும் சேர்த்தால் இவ்வளவு உப்புதான் இருக்க வேண்டும். ஆனால் துரித உணவுகளில் உப்புதான் பிரதானமாக இருக்கிறது இதனால், அளவுக்கு அதிகமான உப்பு நம் உடலில் சேர்ந்துவிடுகிறது.மேலும் பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், சீஸ், சிப்ஸ் ரகங்கள் போன்ற நொறுக்குத்தீனிகளை உண்பவர்கள் கணக்கிலடங்காமல் உப்பை ஏற்றிகொள்கிறார்கள். மேலும், கருவாடு, ஊறுகாய், அப்பளம், வடகம் போன்றவற்றிலும் உப்பு அதிகமாகவே இருக்கிறது. அதுபோன்று பன், ரொட்டி, போன்றவற்றிலும் சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுவதால் இவற்றின் மூலமும் அதிக உப்பு உடலில் சேர்கிறது.
அதுபோன்று சுத்தமான தண்ணீர் என்று நாம் குடிக்கும் சுத்திகரிக்கப்பட்ட கேன் வாட்டர்களில் கால்சியத்தை அகற்றி சோடியத்தை சேர்க்கிறார்கள். இதனால் அந்த தண்ணீரை குடிக்கும் போது நமது உடலில் மறைமுகமாக சோடியம் சேர்கிறது உடல் உழைப்பு இருக்கும்போது அதிகப்படியான உப்பு வியர்வை வழியாகவெளியேறி உப்பு தேவைக்கு ஏங்கி இருக்கும். ஆனால் உடல் உழைப்பும், வியர்வையும் இல்லாத சூழலில் உப்பு சேரக்கூடாது.
உப்பில் இருக்கும் சோடியமானது உடலின் நீர்த்துவ செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முக்கிய பணியை செய்கிறது. உடலின் வேறு பல பணிகளையும் சோடியம் செய்துகொண்டிருக்கிறது. உப்பின் அளவு அதிகரிக்கும்போது உறுப்புகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கும் நிலையும் உண்டாகும்.தற்போது, கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு, அயோடின் சேர்த்த உப்பு, அயோடின் சேர்க்காத உப்பு என்று பலவகைகள் உண்டு. இதில் எந்தவகை உப்பாக இருந்தாலும் அளவுக்கு அதிகமானால் ஆபத்தே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.