மெனோபாஸ் தூண்டும் ஆஸ்டியோபோரோசிஸ்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 16 Second

பெண்களில் மாதவிடாய் சுழற்சியின் முடிவைக் குறிக்கும் ஒரு நிலை மெனோபாஸ். இது மிகவும் பொதுவான, இயல்பான நிகழ்வு. இந்த நிலையில் மாதவிடாயின் அசௌகரியத்தை இனி சமாளிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சிலருக்கோ மெனோபாஸ் மிகவும் வேதனையாக அமையலாம். கவலை, மனநிலை மாற்றங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவற்றுடன் இது சேர்ந்து நடக்கலாம். சில சந்தர்ப்பங்களில், பெண்களின் இதய, எலும்பு ஆரோக்கியமும் கணிசமாக பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக மெனோபாஸ் அல்லது மாதவிடாய் நின்ற காலகட்டத்தை அனுபவிக்கும் பெண்கள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்ட வேண்டும். எலும்பு இழப்பைத் தடுக்க முயல வேண்டும். மெனோபாஸ் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து அதிகரிக்கிறது, எலும்பு இழப்பு தூண்டப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, மெனோபாஸ் காலத்தில் 20% எலும்பு இழப்பு ஏற்படலாம். உலகளவில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பத்து பெண்களிலும் ஒருவரை ஆஸ்டியோபோரோசிஸ் பாதிக்கிறது.

எலும்பு சேதம் அதிகரிப்பு, எலும்பு வலிமைக்குப் பாதிப்பு போன்றவற்றை ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுத்துகிறது. வலி அல்லது அறிகுறிகள் இல்லாமலேயே இந்த நோய் ஏற்படலாம். பெண்களின் எலும்பு வலிமையைப் பராமரிப்பதில் ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் எலும்பு இழப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற முதல் ஐந்து வருடங்களில் பெண்கள் 10% வரை எலும்பை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும் காரணிகள்

* வழக்கமான உடற்பயிற்சி – உடற்பயிற்சி, தசை – எலும்பு வலிமையை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் எலும்பு பலவீனத்தைத் தடுக்கிறது. உடல் இயக்கம் மற்றும் செயல்பாட்டை பராமரிக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. எடை தாங்கும் உடற்பயிற்சிகள் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுப்பதற்கு சிறந்தவை. வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை இதைச் செய்ய வேண்டும். நடனம், நடைபயிற்சி, ஜாகிங் என ஒவ்வொருவரின் வசதி மற்றும் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சி அமையலாம்.

* உரிய அளவு கால்சியம் உட்கொள்ளுதல்- கால்சியத்தை உரிய, போதுமான அளவில் உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது. கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கால்சியம் செறிவூட்டப்பட்ட மாவு ஆகியவை கால்சியத்துக்கான சிறந்த ஆதாரங்கள்.

* வைட்டமின் டி உட்கொள்ளுதல் – உடலில் வைட்டமின் டி இருப்பது கால்சியத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் ஒருவர் செலவழித்தால் போதுமான வைட்டமின் டியை உடல் உற்பத்தி செய்துகொள்ளும். வைட்டமின் டி அதிகமுள்ள பிற உணவு ஆதாரங்கள் முட்டை, கொழுப்பு நிறைந்த மீன், செறிவூட்டப்பட்ட தானியங்கள், பால் ஆகியவை.

* ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை – அண்டப்பை சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன், எலும்பு இழப்பைத் தடுக்க உதவுகிறது. உடலில் போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் சுரக்காதபோது தரப்படும் ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை, ஆஸ்டியோபோரோசிஸை தடுப்பதற்குத் தரப்படுகிறது. மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை தருவதன் மூலம், உடலில் கால்சியத்தைக் கிரகித்து தக்கவைக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது.

* ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிருங்கள்- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும். புகைபிடித்தல் உடலின் ஈஸ்ட்ரோஜனைக் குறைக்கிறது. மது அருந்துவது எலும்பின் வலிமையையும் திறனையும் பலவீனப்படுத்துகிறது.மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் ஒரு பெண்ணின் உடல் சுற்றுச்சூழலுக்கு வித்தியாசமாக எதிர்வினையாற்றத் தொடங்குகிறது. பெண்கள் முதுமையடையும்போது மூட்டுவலி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

இவை மெனோபாஸுக்கு முந்தைய கட்டத்தில் தொடங்கி, மாதவிடாய் நின்ற நிலை வரை தொடரும். இந்தப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்தால், பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம். ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான எலும்பு முறிவுகளைக் குறைப்பதுடன், நல்ல எலும்பு ஆரோக்கியத்தையும் பராமரிப்பதே இதன் குறிக்கோள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிசேரியனுக்கு பின்னும் சுகப்பிரசவம்! (மகளிர் பக்கம்)
Next post சமச்சீர் டயட்… சரிவிகித ஆரோக்கியம்! (மருத்துவம்)