சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 45 Second

குறும்படம் எடுத்தோமா யூடியூபில் போட்டோமா நாலு காசு பார்த்தோமா என்றில்லாமல், இளம்பெண் ஒருவர் ஆவணப்படத்தை இயக்கி சாதனை படைத்து வருகிறார். சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஜீவிதா சுரேஷ்குமார், 16 டாக்குமென்டரி படங்களை இயக்கியுள்ளார். பெண்கள் சினிமாவில் இயக்குனராக நுழைவதே பெரிய விஷயம் என்கின்ற நிலையில் ஆவணப்படங்களை இயக்குவது என்பதையும் தாண்டி 16 படங்களை இயக்கி ஜொலித்து வருகிறார். இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

‘‘குழந்தை தொழிலாளர்களை மையப்படுத்தி குழந்தை தொழிலாளர், என்னை விடு, மரம், தண்ணீர் பிரச்னையை முன்னிறுத்தி கிணறு, கதகளி, கடந்த 2005ம் ஆண்டில் எடுத்த சுனாமி என 16 படங்களை இயக்கியுள்ளேன். மீடியா மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ படித்துள்ளேன்.பொதுவாக ஆவணப்படம் எடுப்பது கடினம். காரணம், இதற்காக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்றுதான் ஷூட்டிங் நடத்தவேண்டும். இருளர் பற்றிய படம் என்றால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி அல்லது பொள்ளாச்சி போன்ற மலைப்பிரதேசங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்லணும். அவர்களுடன் நெருங்கி பழக வேண்டும்.

இப்படிதான் ஒருமுறை எனது உதவியாளர் ஒருவர் படப்பிடிப்பின் போது கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் அலறியடித்து ஓடிவந்தார். என்ன என்று கேட்டபோது பின்பகுதியை தடவியபடி அலறித்துடித்தார். எதுவும் கடித்துவிட்டதா என கேட்டதற்கு, அவர் அழுதபடியே இருந்தாரே தவிர பதில் சொல்லமுடியவில்லை. மலம் கழிக்க சென்றவர், தண்ணீர் இருக்கும் இடம் தெரியாமல் அங்கிருந்த யானை விரட்டி இலையை பற்றி தெரியாமல் டிஷ்யூ பேப்பராக பயன்படுத்தியுள்ளார். அதனால் அந்த பகுதி தடித்துவிட்டது. அவர் அலறியதற்கும் இது தான் காரணம். அங்குள்ள மலைவாழ் மக்கள் நல்லெண்ணெயை தடவிய பிறகு தான் குணமானது.

இது மட்டுமல்லாமல், சில நேரங்களில் படப்பிடிப்பின்போது யானை உள்ளிட்ட மிருகங்களின் தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கணும். என்னுடைய அடுத்த ஆவணப்படம் சித்தர்கள் சம்பந்தப்பட்டது. ‘சித்தர்கள் விஞ்ஞானிகள்’ என்பதே எனது புதிய ஆவணப்படத்தின் மையக்கருத்து. இதற்காக சென்னை, போரூர் பகுதியில் உள்ள மாயன் செந்தில் என்பவரை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கி இருக்கிறேன்.

அவர் உலகளாவிய பாரம்பரிய சித்த மருத்துவம் என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். நமக்கு ஏற்பட போகும் ஆபத்தை தடுக்க ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்கள் எல்லாம் ஒரு வகை அறிவியலே. சூரியனை விட சந்திரனில் ஈர்ப்பு சக்தி அதிகம். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி காலங்களில் தீயசக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன’’ என்றவர் சித்தர்களின் மருத்துவ குறிப்புகள் பற்றி விவரித்தார்.

‘‘மாரடைப்பு பிரச்னையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு எளிய வைத்தியம், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் போதும் என்கிறார்கள் சித்தர்கள். கால் கட்டை விரலில் புண் வந்தாலோ நோய்தொற்று ஏற்பட்டாலோ இதயத்தில் ஏதோ பிரச்னை என்பது அர்த்தம். கொசுத்தொல்லை அதிகம் இருந்தால் அந்த வீட்டில் விளக்கெண்ணெயை கொண்டு தீபம் ஏற்றலாம்.

பகலில் பால் குடிக்கக்கூடாது, சூரிய உதயத்துக்கு முன் அல்லது இரவில் குடிக்கலாம். பகலில் பால் குடித்தால் செரிமான பிரச்னை ஏற்படும். அந்த காலத்தில் சித்தர்கள் சொன்னதெல்லாம் அறிவியலே. இப்போது ஆங்கிலம் மருத்துவம் தலையெடுக்க ஆரம்பித்து விட்டதால் போகரும்,நவபாசாணமும் வழக்கொழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலில் உள்ள மூலவர் சிலை நவபாசாணத்தால் ஆனது. அந்த சிலையில் பட்டு வரும் பாலும், தேனும் நம் நோய் தீர்க்கும் மருந்துகள். கருஞ்சீரகத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது. எலுமிச்சை, உப்பு, மஞ்சள் தூள் கலந்து குடித்தால் கொரோனா கூட தலைதெறிக்க ஓடிவிடும். மாயன் செந்தில் சேகரித்து வைத்துள்ள ஓலைச்சுவடி, நவபாசாணங்கள், மூலிகைகள், கத்தி பானை, கூஜா என ஒவ்வொன்றும் ஒரு நோய் தீர்க்கும் மருந்துதான்.

கோயிலில் பாம்புக்கு பால், முட்டை வைப்பது கூட ஒருவகை விஞ்ஞானமே. பாம்பு பாலை குடிக்காது. ஆனால் முட்டை பாம்புக்கு பிடித்த உணவு. இவை எல்லாம் தான் எனது புதிய ஆவணப்படத்தின் கருப்பொருட்கள். அக்டோபரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறேன்’’ என்றவரின் ஆவணப்படங்கள் பலருக்கு நன்மை விளைவித்துள்ளது.

‘‘நான் எடுத்த ஆவணப்படங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்தை தொடர்ந்து சில மலைவாழ் கிராமங்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளன சில தன்னார்வ அமைப்புகள். சுனாமி என்ற ஆவணப்படத்தை எடுத்த பிறகு சுனாமியில் இருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சதுப்பு நில காடுகள் வேதாரண்யம், கடலூர் உள்ளிட்ட 48 இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

இனி எந்த சுனாமியும் இவர்களை தாக்காது. இருளர்கள் என்பவர்கள் வனத்தை பாதுகாப்பவர்கள், முதுவான்கள் இனத்தினரும் வனத்தின் காவலர்களே. அவர்களை வெளியேற்றினால் இயற்கை முற்றிலும் அழிந்து விடும். நம் வளத்தை பாதுகாப்பது நம்முடைய கடமை’’ என்றவரின் மகளான ஹிரன்மயாவும் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் கூடாதா? (மகளிர் பக்கம்)
Next post சிசேரியனுக்கு பின்னும் சுகப்பிரசவம்! (மகளிர் பக்கம்)