மீண்டும் கொரோனா… தப்பிக்க… தவிர்க்க! (மருத்துவம்)

Read Time:10 Minute, 42 Second

உலகம் முழுதும் மீண்டும் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக சீனாவில் புதியவகை வேரியண்ட் ஒமிக்ரான் பிஎஃப் 7 வகை கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. சீனாவின் நகரங்களில் லாக் டவுன் அறிவிக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தடுப்பூசி நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட கூட்டம் அலைமோதுகிறது. மறுபுறம் சீன அரசு படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், சுடுகாடுகளை எரியூட்டி மயானங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.

சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளிலும் இந்த புதியவகை வேரியண்ட் பிஎஃப் 7 பரவலாகக் காணப்படுகிறது. அந்நாட்டு மக்களும் அரசும் பதற்றமாக இருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த புதியவகை வைரஸ் பரவியிருப்பதை அரசு அறிவித்துள்ளது. இதனால், மீண்டும் லாக் டவுன் ஏற்படுமா? பாதிப்புகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் கவலை மக்களிடையே இருக்கிறது. ஒமிக்ரான் பிஎஃப் 7 பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

பழைய வேரியண்ட்டின் புதிய துணைவகை

B.F 7 எனப்படும் இந்த வேரியண்டின் விரிவாக்கம் B.A.5.2.1.7 என்பதாகும். இந்த புதியவகை வேரியண்டின் ஒமிக்ரான் பி.ஏ 5 என்ற வைரஸிலிருந்து உருவாகிவந்த வேரியண்ட்தான். வேரியண்ட் என்பது ஒருவகை மரபு வழி வைரஸிலிருந்து பரிணாம வளர்ச்சியடையும் புதியவகை வைரஸை குறிக்கும் சொல். இந்த புதியவகை வேரியண்ட்டை ஒமிக்ரான் ஸ்பான் என்றும் அழைக்கிறார்கள். இந்த புதிய கொரோனா வைரஸ் முந்தைய வேரியண்டான பிஏ5 விட  சக்தி வாய்ந்தது. கொரோனா வைரஸின் அடிப்படையான ஒரிஜினல் வைரஸைவிட 4.4 மடங்கு அதிகமான நியூட்ரைசேஷன் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. இதனால் ஏற்கெனவே உடலில் தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கக்கூடியது.

இந்த புதியவகை வைரஸ்கான இயற்கையான ஆண்டிபாடி ஒன்று இதுவரை உடலில் இல்லை என்பதால் இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். வைரஸ்களை அதன் தாக்கும் திறனை வைத்து ஆர் வேல்யூ என மதிப்பிடுவார்கள். இந்த வைரஸ்களின் ஆர் வேல்யூ 10-18. அதாவது, இந்த வைரஸ் ஒருவரைத் தொற்றினால் அவரிடமிருந்து பத்து முதல் பதினெட்டு பேர் வரை பாதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸின் முந்தைய வேரியண்ட்டின் ஆர் வேல்யூ வெறும் ஐந்துதான்.

அப்படிப் பார்க்கும்போது இந்த வைரஸ் முந்தைய வைரஸைவிட நான்கு மடங்கு வேகமாகப் பரவக்கூடியது. முந்தைய வைரஸோடு ஒப்பிடும்போது இதன் ஆயுட்காலம் குறைவுதான் என்றாலும் இதன் தாக்கிப் பரவும் வேகம் அதிகம் என்பதால் பாதிப்புகள் தீவிரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.இதன் ஸ்பைக் புரோட்டின் ஆர்346டி என்ற புரதக்கட்டுமானம்தான் இதற்கு இவ்வளவு அதிகப் பரவலாக்கத்தன்மையைக் கொடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கக்கூடும் என்பதால் அலட்சியமாய் இருக்கக் கூடாது. மாஸ்க், கை சுத்தம் போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் புதியவகை ஒமிக்ரான் பி.எஃப் 7

சீனாவையும் பிற ஐரோப்பிய அமெரிக்க நாடுகளையும் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த புதியவகை வேரியண்டான ஒமிக்ரான் பி.எஃப் 7 பரவிவருகிறது. தற்போதைய சூழலில் தினசரி தொற்று 158 என்பதாக இருக்கிறது.  உலக அளவில் இதன் பரவல் 5.9 லட்சம்.

அறிகுறிகள்

இருமல், காய்ச்சல், தொண்டைப்புண், மூக்கில் ஒழுகுதல், மயக்கம் போன்ற வழக்கமான கொரோனா அறிகுறிகள்தான் இதற்கும் உண்டு. சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கும் கணிசமாக இருக்கக் கூடும். எனவே, இந்த அறிகுறிகள் கண்டால் தாமதிக்காமல் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கோ மருத்துவமனைக்கோ விரைய வேண்டும்.

அச்சம் வேண்டாம்!

சீனாவிலும் பிற ஐரோப்பிய அமெரிக்ககா நாடுகளிலும் உருவான பாதிப்பைப் போல் இந்தியாவில் ஏற்படாது என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். இங்கு ஏற்கெனவே கொரோனா மூன்று அலைகள் வந்திருக்கிறது. அதில் மூன்றாவதாக வந்த அலை ஒமிக்ரானால்தான் நிகழ்ந்தது. இதனால் தடுப்பூசி மூலமும் இயற்கையான ஆண்டிபாடி உருவாக்கங்கள் மூலம் ஓரளவு ஹெர்டு இம்யூனிட்டு எனப்படும் மந்தை நோய் எதிப்பாற்றல் உருவாகியிருக்கிறது. மேலும், சீனாவில் ஜீரோ கோவிட் என்ற கொள்கையின் படி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தியதால் பெரிய கலவரங்கள் உருவாகி அரசு அதைப் பாதியிலேயே கைவிட்டது. நம் நாட்டில் மூன்று பெரிய அலைகளால் உருவான இயற்கையான பாதுகாப்பும் தடுப்பூசி விழிப்புணர்வும் நம்மைக் காக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

நம் நாட்டில் 95% பேர் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். அதில் 88% பேர் இரண்டு டோஸ்களும் போட்டவர்கள். குறிப்பாக முதியவர்களுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட்டிருக்கிறோம். அதனால், கொரோனா மரணங்கள் இனி இந்தியாவில் அதிகம் நிகழாது.ஒருவேளை கொரோனா பாதிப்பு இருந்தாலும் அது ஒரு அலையாக எல்லாம் மாறாது. தொற்றாகப் பரவிவிட்டு நீங்கிவிடும். எனவே, மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்பதை நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எச்சரிக்கை அவசியம்!

இந்தியாவில் இந்த புதியவகை கொரோனாவால் அலைகள் எதுவும் உருவாகாது என்றாலும் நாம் அலட்சியமாக இருக்க முடியாது. தொடர்ந்து தங்களைக் காத்துக்கொள்வதும் மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்கச் செய்வதும் நம்முடைய கடமை.

கொரோனா முன்னெச்சரிக்கைகள்!

மாஸ்க் அணிவதை கட்டாயம் பின்பற்றுங்கள். குறிப்பாக, பொது இடங்களில் உலவும் போது நல்ல தரமான என்-96 ரக மாஸ்களைப் பயன்படுத்துங்கள். இயன்றவரை பொது இடங்களுக்குச் செல்வதையும் கும்பலாகச் செல்வதையும் கூடுவதையும் தவிர்த்திடுங்கள்.கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். கை கழுவும் முறைகள் பற்றிய வீடியோக்களை கவனித்துவிட்டு அதன்படி கையை நன்றாகச் சுத்தமாக வைத்திருங்கள்.நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது கையை சானிட்டைசர் ஊற்றிக் கழுவிக்கொள்வது நல்லது. சோப்புப் போட்டுக் கழுவுவது இன்னமும் சிறப்பானது.

பொது இடங்களில் இடைவெளிகளைப் பயன்படுத்துங்கள். சமூக இடைவெளி கொரோனாவிலிருந்து நம்மைக் காக்கும்.தும்மும்போதும் இருமும்போதும் கைகளை அல்லது கைக்குட்டைகளை வாயின் அருகே வைத்து, மறைத்துக்கொள்வது நல்லது. இதனால், சுற்றுச் சூழல் ஆரோக்கியமாய் இருக்கும்.தடுப்பூசி போடாதவர்கள் இரண்டாம் தவணை ஊசி போடாதவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் வீட்டிலேயே உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள். வெளியே சென்று மற்றவர்களையும் சிரமத்துக்கு ஆளாக்காதீர்கள். தொடர்ந்து இரு நாட்களுக்கு மேல் சளி, காய்ச்சல் இருந்தால் தயங்காமல் மருத்துவரை நாடுங்கள்.மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் மருத்துவரை நாடுங்கள். லேசான சளி காய்ச்சல் இருக்கும்போதே உடலில் உள்ள ஆக்சிஜன் அளவைப் பரிசோதித்துவிடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்! (மருத்துவம்)
Next post தாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை!! (அவ்வப்போது கிளாமர்)