நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?! (மருத்துவம்)

Read Time:8 Minute, 6 Second

பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி உங்கள் டாக்டரிடம் கேளுங்கள். அவருக்குத்தான் நோயின் தன்மையும், அதற்கேற்ப எப்படி உணவளித்தால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதும் தெரியும். அப்படி மருத்துவர்கள் பொதுவாகப் பரிந்துரைத்திருக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்…

சளி பிடித்தால்…

சளி பிடித்த குழந்தைக்கு எப்பொழுதும் போல் வழக்கமான உணவையே அளிக்கலாம். இந்த சமயத்தில் குழந்தைக்கு பசி  குறைவாக இருக்கும். சளி மற்றும் அசதியால் அதிகம் ஓடி விளையாடாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பசி இருக்காது. சளியைக் குழந்தை விழுங்கிக் கொண்டிருந்தாலும் பசி குறைந்துவிடும். எனவே, குழந்தையை சாப்பிட சொல்லி வற்புறுத்த வேண்டாம். வற்புறுத்தினால் வாந்திதான் ஏற்படும். குழந்தை எதை குடிக்க விரும்பினாலும் கொடுக்கலாம். அதற்கு இந்த நேரம் அதிக தாகம், வறட்சி ஏற்படும்.

காய்ச்சலில் உணவு…

102 டிகிரியோ அதற்கு மேலோ காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தை கெட்டி உணவு சாப்பிடுவது சற்று கடினம். ஆகவே, அம்மாதிரி உணவுகளை குறைத்து கொண்டு கொஞ்சமாக அரை மணி, ஒரு மணிக்கு ஒரு தடவை தண்ணீரோ, பால், மோர், பழச்சாறு போன்றவற்றையோ கொடுக்கலாம். தண்ணீர் குழந்தைக்கு தேவை. விரும்பி குடிக்கும். அது விரும்புமளவு தண்ணீர் குடிக்கட்டும். காய்ச்சல் அதிகமாகி, குமட்டல், வாந்தி ஏற்பட்டால் குழந்தைக்கு எந்த நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து தண்ணீர் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி எடுத்தால் வாந்தி எடுத்த மறுநிமிடமே வாயை துடைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் அதில் ஒரு சிட்டிகை உப்பு, அரை கரண்டி சர்க்கரை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம்.

காய்ச்சல் குறைய ஆரம்பித்து வாந்தி, குமட்டல் நின்று, குழந்தைக்கு பசி லேசாக எடுக்கும் சமயம் ஒன்றிரண்டு வேளை இட்லி அல்லது குழைந்த சாதத்துடன் சாம்பார், கடைந்த தயிர், கடைந்த கீரை, பருப்பு, காய்கறி முதலியவற்றுடன் உப்பு, உரைப்பு, புளிப்பு சேர்த்தும் கொடுக்கலாம். ரொட்டி, ரஸ்க் தனியாகவோ பாலுடனோ கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தண்ணீர் மட்டும் அதிகம் கொடுக்க வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள். சோடா, காபி, டீ முதலியவற்றை தவிர்த்து விடுங்கள்.

வாந்தி எடுத்தால்…

குழந்தை வாந்தி எடுத்தால் அதன் இரைப்பைக்கு உணவு தேவையில்லை. ஓய்வு ஒன்றே உடனடி தேவை என்பது அர்த்தம். மேலும் மேலும் உணவையே கொடுக்க ஆரம்பித்து விடாதீர்கள். மேற்கொண்டும் வாந்தி தொடரும். வாந்தி எடுத்தபின் இரைப்பைக்கு குறைந்தது 3 – 4 மணி நேரம் ஓய்வு தேவை. அப்பொழுது வயிற்றில் வலியில்லாமல் குமட்டலில்லாமல் குழந்தையும் நிம்மதியாக தூங்கிவிட கூடும். குழந்தையின் வயிறும் ஓய்விற்கு பின் மெதுவாகிவிடும். முதலில் தண்ணீர் மட்டும் சிறுக சிறுக கொடுங்கள். தண்ணீரை ஆவலுடன் குழந்தை குடிக்க முற்பட்டாலும், நிறைய தண்ணீரை கொடுக்காமல் ஒரு ஸ்பூனால், அவசரமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கொடுங்கள். சிறிது தண்ணீர் குடித்த பின் சற்று நிறுத்தி கொள்ளுங்கள்.

5-6 நிமிடங்களுக்கு வாந்தியோ, குமட்டலோ இல்லையென்றால் மேற்கொண்டு  கொடுக்க ஆரம்பியுங்கள். தண்ணீர் கொடுத்த பின் மறுபடியும் குழந்தைக்கு ஓய்வு கொடுங்கள். மேற்கொண்டு 3 மணி நேரம் வரை வாந்தி இல்லையென்றால் 40 – 50 மில்லி பால் கொடுக்கலாம். பாலை தனியாகவோ அல்லது சம பங்கு அரிசி கூழ் சேர்த்தோ கொடுக்கலாம். 12 மணி நேரம் வாந்தி இல்லையென்றால் இட்லி கொடுக்கலாம். சாம்பார், கீரை, பருப்பு, காய்கறி ஏதாவதொன்றை சேர்த்து  கொடுக்கலாம். அதன் பின்னர் குழைந்த ரசம் சாதம், தயிர் சாதம் முதலியனவும் கொடுக்க ஆரம்பிக்கலாம். முதல் ஒன்றிரண்டு நாட்களுக்கு வயிறு பாதி நிறைவது போலவே கொடுக்க வேண்டும்.

பசி இல்லையென்றால்…

பல நாட்கள் காய்ச்சலில் அவதிப்படும் குழந்தை மெலிந்தும், பசியின்றியும் இருக்கும். பெற்றோருக்கு குழந்தை காய்ச்சலால் மெலிந்து விட்டதை கண்டு சகிக்க இயலாமல் ஆகாரங்களை ஒரேயடியாக கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். காய்ச்சலில் தளர்ச்சி அடைந்திருக்கும் குழந்தையின் குடல் இத்தனையும் ஏற்றுக்கொள்ள இயலுமா என்று அவர்கள் யோசிக்க மாட்டார்கள். குழந்தை சாப்பாட்டை கண்டு பயந்து ஒதுக்கி விடவும் கூடும். ஆகவே காய்ச்சல் நின்ற ஓரிரு தினங்களுக்கு குழந்தை முடிந்த அளவே சாப்பிட அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள்.

பின்னர், குழந்தைக்கு தானாகவே பசி உண்டாக ஆரம்பித்துவிடும். அந்த நேரம் குழந்தை நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சாப்பிட ஆரம்பித்து விடவும் கூடும். அதன் இஷ்டத்துக்கு சாப்பிட விட்டுவிடுங்கள். குழந்தையின் மெலிந்த உடல் தன்னிலை அடையும் வரை அதுவும் அதிகமாகவே சாப்பிட்டு கொண்டிருக்க கூடும். பின்னர், அதன் வழக்கம்போல் அளவான உணவு கொள்ள ஆரம்பித்துவிடும். காய்ச்சல் குறைந்து ஓரிரு வாரங்களுக்கு பின்னரும் குழந்தைக்கு இயற்கையாகவே ஏற்பட வேண்டிய பசி ஏற்படவில்லையென்றால் குழந்தையை உங்கள் டாக்டரிடம் காண்பித்து காரணம் தெரிந்து கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?! (மருத்துவம்)
Next post மனதைக் கவரும் ஜி.ஆர்.பி பட்டு! (மகளிர் பக்கம்)