இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய ஆன்லைன் இசைப் பள்ளி!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 50 Second

இசை எல்லோருக்குமானது. சிலருக்கு பாட்டு பாட பிடிக்கும். ஒரு சிலருக்கு இசைக் கருவிகள் மேல் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். இசை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பிணையப்பட்டு தான் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்ட நண்பர்களான ஆஷிஷ் ஜோஷி மற்றும் விவேக் ரைச்சா இசையினை அவரவரின் இல்லத்திற்கே கொண்டு வந்துள்ளனர். ‘‘நான் 20 வருஷமா மீடியா துறையில் தான் இருந்தேன். அதில் முதல் 10 வருஷம் இசை மற்றும் டிஜிட்டல் துறை சார்ந்து வேலை பார்த்து வந்தேன். தென் ஆசியாவின் தலைவராகவும் செயல்பட்டு வந்ததால், பல இசைக் கலைஞர்களின் நட்பு ஏற்பட்டது. ஆர்டியம் இசைப் பள்ளி அமையவும் இது தான் காரணம்’’ என்று பேசத் துவங்கினார் ஆஷிஷ்.

‘‘இந்தியா மட்டுமில்லை உலகம் முழுக்க இசைக்கான வாய்ப்பு அதிகம்.  பாரம்பரிய கற்பித்தல் முறையில் 100 வருடங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில் நேரடியாக சென்று மாணவர்கள் கற்கும் பழக்கம் தான் இன்று வரை உள்ளது. உலகளவில் இசைக்கான பயிற்சி முறைகள் டிஜிட்டலாக இயங்கி வருகிறது. அதே போல் தரமான பயிற்சி முறையை இந்தியாவில் கொண்டு வர விரும்பினோம். இசை சார்ந்த பாடத்திட்டங்கள் சில கோட்பாடுகள் அடிப்படையில் தான் இயங்குகிறது. நடைமுறை பயிற்சிகள் இங்கில்லை. இசை கற்க விரும்புபவர்களில் பெரும்பாலானவர்கள் அதை செயல்திறனாக வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.

ஒரு குறைந்த சதவிகிதம் தான் அதனை தொழில் முறையாக அமைத்துக் கொள்கிறார்கள். நாங்க செயல்திறனுக்காகவும் பாடத்திட்டங்களை அமைக்க நினைச்சோம். இதன் மூலம் பலர் இசையினை கற்றுக் கொள்ள முன்வருவார்கள். அதற்கான சிறந்த பாடத்திட்டங்களை அமைக்க விரும்பினோம். இதற்காக இசைத் துறையில் உள்ள ஜாம்பவான்களை அணுகினோம். ஒவ்வொரு ஜாம்பவான்களைக் கொண்டு தனித்தனி பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் விட இந்தியாவில் ஒரு தரமான இசை பயிற்சிக்கான பிராண்ட் எங்க பள்ளியாக இருக்க விரும்பினோம்’’ என்றவரை தொடர்ந்த விவேக், ஆர்டியம் பள்ளியின் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.

‘‘எங்களுடையது மும்பை சார்ந்த நிறுவனம். நானும் ஆஷிஷுடன் தான் கடந்த 20 வருடமாக இசை சார்ந்த துறையில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் இங்கு தரமான இசைக்கான கல்விக்கு நிறைய வாய்ப்புள்ளது. பலர் பயின்று வந்தாலும், ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப இசை அமைத்து தரவேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். நம் பாரம்பரியம் மாறாமல் மார்டன் பாடத்திட்டத்தை இசை ஜாம்பவான்கள் கொண்டு அமைத்திருக்கிறோம். இதில் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, கசல், சினிமா பாடல்கள் (தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மொழிகள்) மட்டுமில்லாமல் கிட்டார், பியானோ, தபேலா, டிரம்ஸ் போன்ற இசைக்கருவிகளும் பயிற்சி அளிக்கிறோம்.

ஒவ்வொரு இசைக்கும் தனிப்பட்ட ஆசிரியர்கள் உண்டு. நேர்காணல் மூலம்  தேர்ச்சி செய்கிறோம். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இசை ஜாம்பவான்கள் எங்களின் பள்ளியின் பாடத்திட்டங்கள் குறித்து பயிற்சி அளிப்பார்கள். ஆறு மாச பயிற்சிக்கு பிறகு சான்றிதழ்களும் வழங்கப்படும். அதன் பிறகுதான் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். ஆசிரியர்கள் பொறுத்தவரை அவர்கள் முறையான இசை குறித்து பயிற்சி எடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் களால் எங்களின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.

எங்களின் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இசை பயில வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும். முதலில் எங்களின் பாடத்திட்டங்கள் என்ன என்பதை ஒரு வீடியோ மூலம் அவர்களுக்கு புரிய வைப்போம். அதன்பின் அவர்கள் விரும்பும் துறையில் பயிற்சியினை பெறலாம். பேசிக் மற்றும் அட்வான்ஸ்ட் என இரண்டு பயிற்சி திட்டங்கள் உள்ளது. பயிற்சிக்கு பிறகு தொழிலாக அமைத்துக் கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட இசை ஆல்பங்களை உருவாக்கலாம்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் ஆன்லைன் முறை என்பதால் உலகம் முழுக்க உள்ள இசைப் பிரியர்கள் பயிற்சியினை பெறலாம். ஒவ்வொரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்று பயிற்சி அளிப்பார்கள். பயிற்சிக்கு பிறகு அவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கப்படும். அதை முடித்து அவர்களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள டாஷ்போர்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஆசிரியர்கள் பார்த்து, எங்கு தவறு உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான விளக்கத்தினை அளிப்பார்கள்.

இதன் மூலம் தவறுகள் திருத்தப்பட்டு, அவர்களின் தரத்தினை உயர்த்த முடியும். எங்களிடம் இருக்கும் ஜாம்பவான்கள் அவ்வப்போது ஆசிரியர்களின் திறமையினை மெருகேற்றுவதால், அதனை அவர்கள் மாணவர்களுக்கு சொல்லித் தரும்போது, மேலும் மாணவர்கள் தங்களின் இசை திறனை படிப்படியாக அதிகரித்துக் கொள்ள முடிகிறது. ஜாம்பவான்களும் மாணவர்களின் திறனை அவ்வப்போது சோதிக்கவும் செய்வார்கள்.

கர்நாடக இசைக்கு அனுராதா சாய்ராம், ஹிந்துஸ்தானிற்கு சுபா முத்கல், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட சினிமா இசைக்கு பாடகி சித்ரா, ஹிந்தி, சினிமா பாடல்கள் மற்றும் கசலுக்கு இசைக் கலைஞர் சோனு நிகாம், குரல் வளத்திற்கு அனந்த் வைத்தியநாதன், கிட்டார் இசைக்கு ராஜு சிங், தபேலாவிற்கு அனீஷ் பிரதான், பியானோவிற்கு லூயிஸ் பாங்கஸ், டிரம்சிற்கு கினோ பாங்க்ஸ் போன்ற ஜாம்பவான்களின் பயிற்சியின் அடிப்படையில் தான் இந்த இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது’’ என்றவர் புல்லாங்குழல், வீணைக்கான பயிற்சியும் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

அனுராதா சாய்ராம்

கர்நாடிக் இசை குறித்து ஒருவர் வேண்டும் என்று தேடிய போது, என் பெயர் வந்தது. என்னிடம் இது குறித்து பேசினார்கள். அப்படித்தான் நான் ஆர்டியத்தில் இணைந்தேன். இதில் நான் மட்டுமில்லை ஹிந்துஸ்தானி இசைக்கு சுபா முத்கல், குரல் வளத்திற்கு அனந்த் வைத்தியநாதன், கோலிவுட் மற்றும் டோலிவுட் பயிற்சிக்கு சித்ரா என அனைவரும் உள்ளனர். பள்ளியில் என்னுடைய முக்கிய பங்கு கர்நாடிக் இசைக் குறித்து பாடத்திட்டம் அமைப்பது.

பயிற்சி பெற வருபவர்கள் பல தரப்பட்ட வயதினை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதில் எல்லோரும் கர்நாடக இசையினை தங்களின் தொழிலாக எடுக்கமாட்டார்கள். சிலர் பாட வேண்டும் என்பதற்காக கற்றுக் கொள்ள வருகிறார்கள். ஒரு சிலர் ஐ.டி அல்லது டாக்டர் அல்லது வேறு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களுக்கு இசையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதனால் பாடத்திட்டத்தினை பலரின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்திருப்பதால், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயிற்சியினை தேர்வு செய்யலாம்.

ஆசிரியர்கள் நாங்க தயாரித்திருக்கும் பாடத்திட்டத்திற்கு ஏற்ப சொல்லித் தருவார்கள். இதில் என்னுடைய முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அவர்களை ஊக்குவிப்பது மற்றும் ஆசிரியர்களின் பலம் என்ன என்று அறிந்து அதற்கு ஏற்ப அவர்களை மெருகேற்றுவது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில்லை என்றாலும், அவ்வப்போது, அவர்களுடன் பேசி அவர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பேன்.

இங்கு மாணவர்களை மட்டுமில்லை ஆசிரியர்களை தேர்வு செய்வதும் பெரிய பிராசஸ். அதாவது ஒரு ஆசிரியருக்கு இசை குறித்த அறிவு உள்ளதா, அவர்கள் எப்படி சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களால் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியுமா? என பல ஆய்வுகளுக்கு பிறகுதான் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்வோம். திறமையான ஆசிரியர்கள் மெட்ரோபாலிடன் சிட்டியில்தான் இருக்க வேண்டும் என்றில்லை.

எங்களிடம் பெங்களூர், மும்பையில் இருந்தும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அதே சமயம் ஈரோடு, சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்தும் திறமையான ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். பயிற்சி எடுக்க விரும்பும் மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக பயிற்சி எடுத்தாலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று  இருக்கணும். அவர்களுக்கு பயிற்சி குறித்த வீடியோ வழங்கப்படும். அனைத்து பாடங்களும் பதிவு செய்யப்படுவதால், எங்கு தப்பு செய்கிறார்கள் என்பதை பதிவு செய்து ஆசிரியர்களுக்கு திருத்த எளிதாக இருக்கும்.

இசை எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத ஒன்று. ஒருவருக்கு பாட்டிசை பிடிக்கும். சிலருக்கு வாத்தியங்களை வாசிக்க பிடிக்கும். எதுவாக இருந்தாலும் மனசுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கொடுப்பது இசை மட்டுமே. மேலும் இந்த துறை ஒருவரை அடுத்த கட்டத்திற்கு முன்னேற செய்யும் பாதையாக அமைகிறது. அதில் என்னாலும் ஒரு பங்கு அளிக்க முடிகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது’’.

அனந்த் வைத்தியநாதன்

ஒருவரின் குரல் வளத்தினை தனிப்பட்ட முறையில் சொல்லித் தரமுடியாது. இசையுடன் சேர்த்து தான் பயிற்சி அளிக்க முடியும். அதன் அடிப்படையில் தான் நான் இவர்களுடன் ஒரு வருடத்திற்கு மேலாக சேர்ந்து செயல்பட்டு வருகிறேன். நான் குரல் வள பயிற்சியினை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பேன். அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். சில சமயம் மும்பைக்கு நேரடியாக சென்று அங்கு ஆசிரியர்களையும் சந்திப்பேன்.

குரல் வளத்தினை கண்காணிக்கும் போது ஆன்லைனில் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. நாம் ஒருவரின் குரல் வளத்தை அவர்கள் நேரடியாக பாடச்சொல்லி கேட்பதைவிட அவர் களின் குரல்களை ரெக்கார்ட் செய்து தான் தேர்வு செய்கிறோம். அதே முறை தான் ஆன்லைனும். அதனால் நேரடியாக பயிற்சி அளிப்பதற்கும், ஆன்லைனிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு குரல் வளப் பயிற்சி அளித்திருக்கேன்.

இதில் ஒரு பாடலைப் பாடும் போது எப்படி பாடணும். தவறாக பாடினால் என்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குரல் என்பது ஒரு கருவி. அந்த கருவி இயங்க என்னென்ன தசைகள் எவ்வாறு வேலை செய்கிறது, மூக்கு வழியாக காற்று எவ்வாறு வெளியேறுகிறது, எவ்வாறு குரலை வெளிப்படுத்தி பாடவேண்டும்  என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சினிமா பாடல்கள் மற்றும் கர்நாடக சங்கீத பாடல்கள் இரண்டையும் ஒரே மாதிரியாக பாட முடியாது. அதன் வித்தியாசம் தெரியணும்.

இவ்வாறு ஒவ்வொரு இசைக்கு ஏற்ப அவர்களின் குரல்வளத்தை மெருகேற்ற முடியும். என்னைப் பொறுத்தவரை குரல் வளம் குறித்த முறையான வீடியோக்கள் மற்றும் பாடத்திட்டங்களை ஆவணங்களாக பாதுகாக்க வேண்டும். இதன்மூலம் உலகம் முழுக்க உள்ள இசைக் கலைஞர்கள் பலனடைய முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது? (மருத்துவம்)
Next post எப்போதும் ஒரு பேக்கப் பிளான் வச்சிருக்கணும்! (மகளிர் பக்கம்)