
கீரைகளை எவ்வாறு தேர்வு செய்யலாம்! (மகளிர் பக்கம்)
தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் குறிப்பாக கால்சியம், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கீரைகள் குறுகிய காலப் பயிர்கள் என்பதால் அதனை அந்தந்த காலத்திற்கு ஏற்ப நாம் உட்கொள்வது அவசியம். கீரைகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
*கீரைகள் ஃபிரெஷ்ஷாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது.
*பூச்சிகள் அரித்த கீரையை அகற்றி விடுங்கள்.
*கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் நீங்கி, பூச்சிக் கொல்லியின் வீரியம் குறையும்.
*சமைப்பதற்கு முன்பு கீரையை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும்.
*கீரைகளை பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. அதே தருணத்தில் போதுமான அளவு வெந்திருக்க வேண்டும்.
*மழை, வெயில் என அனைத்து காலங்களிலும் கீரைகளைச் சாப்பிடலாம்.
*இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகாது.
*கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. சேர்த்தால் மலச்சிக்கல், வயிற்று பிரச்னைகள் ஏற்படும்.
*கீரையுடன் பருப்பு கடைந்து சாப்பிடும் போது, அதில் பருப்பினை சிறிதளவு சேர்த்தால் போதுமானது.