கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 30 Second

மனிதர்களை பார்த்த மாத்திரத்தில் அவர்கள் குணாதிசயங்களைப் பற்றி எளிதாக கணித்துவிட முடியாது. அவர்களுடன் நெருங்கிப் பழகி, இன்ப துன்பங்களில் அவர்களின் போக்கு எந்த அளவுக்கு ஆதரவு தருவதாக அமைகிறதோ, அதைப் பொறுத்துதான் கணிக்க முடியும். வள்ளுவர், நண்பர்கள் ஒருவருக்கு எப்படி அமைந்துள்ளனரோ அதைக்கொண்டே நம் குணத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளார். அதாவது நல்ல நண்பர்களைக் கொண்டவனின் குணமும் கண்டிப்பாக பெருமைபடத்தக்கதாகத்தான் இருக்கும். சமயமறிந்து ஆபத்து காலத்தில் உதவுபவனே நல்ல நண்பனாவான். பிள்ளைகளுக்குள் பொதுவாக பாகுபாடு இருக்க முடியாது. சமயங்களில் அவர்களின் வளர்ப்பு முறையும், குடும்ப சூழலும் சிலவித வித்தியாசமான எண்ணங்களைப் பிரதிபலிக்கலாம்.

சிறுமி ஒருத்தி பார்ப்பதற்கு ‘கர்வம்’ கொண்டவள் போன்று தோன்றுவாள். ஆனால் அவள் வெள்ளை மனம் படைத்தவள். எதையும் ஒளித்து மறைத்துப் பேசத் தெரியாது. முகத்திற்கு நேரே ‘பட்’டென பேசி விடுவாள். அவளின் பெற்றோர் அவளுக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியிருந்தனர். இதில் அவள் குறை எதுவுமே கிடையாது. அவளுக்கென்று நிறைய தோழிகளும் இருந்தனர். திடீரென பள்ளியில் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்களால் அவள் மனம் அவ்வளவு வேதனைப்பட்டதாம். மாநில அங்கீகாரத்திலிருந்து சில வகுப்புகள் மத்திய அங்கீகாரம் பெற்ற சமயம், குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் தகுதி பெற்றார்களாம்.

அதில் நம் மாணவியும் அந்தப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாளாம். துரதிருஷ்டமாக அவளின் தோழிகள் அனைவரும் பழைய வகுப்பில் தங்கி விட்டார்களாம். அவள் மட்டும் புதிய வகுப்பிற்கு அறிமுகமாம். அவள் வீறுநடையுடன் செல்வதைப் பார்க்கும் பொழுதெல்லாம், ஆண் பிள்ளைகள் அவ்வளவு பேசுவார்களாம். அவளின் நிறத்தை வைத்தெல்லாம் கேலி செய்வார்களாம். முதலில் இவற்றையெல்லாம் கேட்டு மனம் நொந்த அவள் படிப்பிலும் ஆர்வம் செலுத்தாமல் இருந்தாளாம்.

ஆசிரியர்கள் குறை சொல்ல ஆரம்பிக்க அவளுக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்கவில்லையாம். பள்ளிக்குப் போகாமல் இருப்பதற்காக காரணம் தேட ஆரம்பித்தாளாம். பெற்றோருக்கு இதைக் கண்டு மன வருத்தம் அதிகமாகி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே அவள் பல ஆண்டுகள் கழித்து பிறந்த பிள்ளை. கொஞ்சம் கொஞ்சமாக அவளின் விரக்திக்குக் காரணம் அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. பிள்ளைகளின் கேலிப் பேச்சுதான் இவற்றிற்குக் காரணமென புரிந்தவுடன் விஷயம் எல்லா ஆசிரியர்களுக்கும் புரிய ஆரம்பித்தது. ‘அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்’ என்பார்களே. அது போல் அனைத்து ஆசிரியர்களும், பாடம் நடத்துவதை விட நீதியை போதிக்க ஆரம்பித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளைப்பற்றி பேசுவது குறைந்து முற்றிலும் சூழல் மாறிவிட்டது. அவளின் கையெழுத்து அழகாகவும் தெளிவாகவும் காணப்படும். அதி புத்திசாலி வேறு. இந்த விஷயம் அதிகம் பேசப்படவே புரியாத பிள்ளைகள் அவளிடம் பாடம் கேட்க ஆரம்பித்தனர். அவள் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து காப்பி எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் வகுப்பறையே அவளுக்கு நட்பாகி விட்டது. அவளிடம் நம்பி ஒரு வேலை கொடுத்தால் அதை முடிக்காமல் இருக்கமாட்டாள். ஆசிரியர்கள் கூட அவளை நம்பி கரும்பலகையில் பாடம் எழுத வைத்தனர். பல விதமான பொது அறிவுக் கேள்விகளில் ‘பட்-பட்’ டென பதிலளித்து பிரமிக்க வைத்தாள். ஒரு நாடகம் நடத்த தலைப்பைச் சொன்னால் போதும், துவக்கி விடுவாள். ‘முதல் பரிசு’ தான் என்கிற அளவில் கொண்டு வந்து விடுவாள்.

ஆக அவள் மேல் எந்தக்குறையும் கிடையாது. விளையாட்டாக பேசும் வார்த்தைகள் மேலோட்டமாக இருந்து விட்டால், பிள்ளைகள் தப்பாக நினைக்கவே மாட்டார்கள். வகுப்பின் புதிய சூழல், சக தோழிகளின் பிரிவு, அறிமுகமில்லா புதிய ஆசிரியைகள் இவற்றுடன் சேர்ந்த கேலிப் பேச்சுகள் அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்கின. நன்கு படித்த பெற்றோர்கள் சூழ்நிலைப் புரிந்து ஆசிரியருடன் ஒத்துழைத்தது மாணவியை மேலும் புத்திசாலியாக மாற்றியது. அப்படி ஒரு நேர்மை அவளுக்குள் இருந்தது. யார் என்ன தவறு செய்தாலும் அவர்களை ஆசிரியரிடம் மாட்டி விடுவாள். இதற்கு பயந்து மாணவர்கள் உஷாராக நடந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அப்படி ஒரு திறமை அவளிடம் காணப்பட்டது. உதவி செய்வதிலும் அப்படி ஒரு குணம் அவளுக்கு. யாரேனும் மதிய உணவு எடுத்துவரவில்லையென்றால், தன் உணவை அப்படியே தியாகம் செய்து விடுவாள். முதலில் எல்லோருக்கும் சாப்பிட உணவு இருக்கிறதா என்பதைப் பார்த்து விட்டுத் தான் தன் டப்பாவைத் திறப்பாள். இப்படியெல்லாம் ஒரு தாயுள்ளம் கொண்ட மாணவி என்றே சொல்லக்கூடிய வகையில் அவள் அனுசரணை காணப்பட்டது. ஒரு சிறிய வார்த்தை-நிறத்தின் பெயரால் அழைத்ததால் அவள் பாதிக்கப்பட்டிருந்தாள். முதலிலேயே பிரச்னை அடியோடு அறுக்கப்பட்டதால், அவள் மாணவப்பருவம் வெற்றியடைய ஏதுவானது. பல மாதங்கள், வருடங்கள் மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டால்தான் பின்னால் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

பார்த்தால் ‘கண்டிப்பு’ போன்று தோன்றிய மாணவிக்குள் அப்படி ஒரு நேர்மையைக் கண்டோம். மிகவும் தாராள மனம் கொண்டவர்போல் காணப்படும் பெண் ஒருத்தி, எல்லா வசதிகளும் அவளிடம்தான் இருப்பது போலவும், மற்ற யாரிடமும் எந்த ஒரு வசதியும் கிடையாது போலவும் காட்டிக் கொள்வாளாம். எந்த உதவியும் தன்னால் செய்ய முடியும் என்பாளாம். செய்முறைக் கல்விக்கு ஆசிரியர் ஏதேனும் பொருட்கள் சேகரிக்கச் சொன்னால் கூட, முந்திக் கொண்டு வருவாளாம். ஒரு சமயம் ஒரு கலை நிகழ்ச்சிக்காக மாதிரி உடை ஒன்று தேவைப்பட்டதாம். ஆசிரியை பிள்ளைகளிடம் அது பற்றி விசாரிக்க, அனைத்து பிள்ளைகளும் சேர்ந்து, குறிப்பிட்ட மாணவி பெயரை சொல்லி, அவளிடம் அத்தகைய உடை இருப்பதாகச் சொன்னார்களாம். மெல்ல யோசித்து எழுந்த பெண், தன்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக ஞாபகம் இல்லையெனவும், இருந்தால் எடுத்து வருவதாகவும் சொன்னாளாம்.

அனைத்து பிள்ளைகளும் அவளிடம் ஆசிரியர் முன்பாகவே, ‘நேற்று கூட உன் அம்மாவை அந்த உடையில் பார்த்தோமே!’ என்று கூற அவளால் மறுப்புச் சொல்ல முடியவில்லையாம். மறுநாள் ஒரு பழைய உடையை எடுத்துவந்தாளாம். அதை தையற்காரரிடம் காண்பித்து, அந்த மாதிரியில் உடை விழாவுக்கு தயார் செய்வதுதான் ஆசிரியர் நோக்கமாக இருந்திருக்கிறது. மறுநாள் தையற்காரர் வராமல் போகவே, ஆசிரியர் தன் அலமாரிக்குள் பத்திரமாக பூட்டி வைத்துத்தான் செல்ல நினைத்திருக்கிறார்.

அதற்குள் வீடு போகுமுன்னே அந்தப் பெண் அதை திருப்பித் தரும்படி கேட்டிருக்கிறாள். ஆசிரியர் மறுநாள் ‘டிசைனரி’டம் காட்டிவிட்டுத் தருவதாகக் கூறியும், அவள் ஒப்புக் கொள்ளாமல் “அது எங்கள் உடைமையில்லை, என் அம்மா பக்கத்து வீட்டு ‘ஆன்ட்டி’யிடம் வாங்கித்தந்தார்கள். நான் மாலையில் தந்து விடுவதாக சொல்லி விட்டேன்” என்றாளாம். இதற்கப்புறமும் அதை வைத்துக் கொள்ள ஆசிரியைக்கு இஷ்டமில்லை. ஒரு பேப்பரில் அதன் வடிவத்தை வரைந்து வைத்துக் கொண்டு, உடைமையை திருப்பித்தந்து விட்டாராம். ‘அப்பாடா’ என்று ஓட்டம் பிடித்தாள் அச்சிறுமி. அப்புறம் அழகான சடைகள் ‘டிசைனர்’ தயாரித்துத்தர அனைத்தும் விமர்சையாக நடந்ததாம். அந்நிகழ்வில் அச்சிறுமியும் இருந்தாளாம்.

இத்தகைய நிகழ்வில், நாம் அச்சிறுமியை குறைகூறமுடியாது. காரணம் அவளின் மன ஓட்டம் அப்படி. எங்கே தங்களின் பொருட்களை பிறர் எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்கிற பயம் அவளுக்குள் இருந்திருக்கிறது. அதே சமயம், தன்னை ‘தாராள மனம்’ கொண்டவளாக காட்டிக் கொள்ள அவளின் மனம் விரும்பியுள்ளது எனவாம். குடும்பத்தில் இது போன்று யாராவது இருந்திருக்கலாம். அதைப் பார்த்து பார்த்து அவள் மனம் அதை ஏற்றுக் கொள்ளச் செய்துள்ளது என்று கூட உரைக்கலாம். வளர, வளர அவள் மனநிலை மாறி பக்குவம் அடைந்து விடுவாள். சிறு வயதில் அவர்களுக்கு சிந்தித்து செயல்படும் முதிர்ச்சி இல்லாத காரணத்தால், யாரையாவது பார்த்து பின்பற்ற நினைப்பார்கள்.

வளர்ந்து சொந்தமாக சிந்தித்து, நல்லது-கெட்டது தெரிய ஆரம்பித்தவுடன் பக்குவமாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். மற்றபடி அவள் செயலில் குறைகூறும் நோக்கம் நமக்கில்லை. அவள் அம்மாவும் அப்படிக் கண்டித்துப் பேசி, பள்ளிக்கு பழைய உடையை அனுப்பியிருக்க மாட்டார்கள். தெரிந்தால் மகளின் செய்கைக்குக் கூட வருத்தப்படுவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சிறுமியின் மனதிலும் எப்படியாவது தன் பொருளை பத்திரமாக திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் இருந்தது.

அதுதான் அறியாப்பருவம் எனப்படுவது! ஆக பிள்ளைகள் மனநிலை என்பது ஒன்றுபோல் இருக்காது. அவர்களின் அணுகுமுறையை வைத்து நாம் அவர்கள் இப்படித்தான் என்கிற முடிவுக்கு வந்து விட முடியாது. அவர்களை அணுகவேண்டிய முறையில் அணுகி, சரியான கருத்துக்களை எடுத்துக் கூறி வழிப்படுத்தலாம். அதுதான் நம் கடமையும் கூட. நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பல்வேறு தடைகளைத் தாண்டிதான் ஒரு இலக்கை எட்டமுடிகிறது. அப்படியிருக்கையில் வெவ்வேறு வித சூழல்களிலிருந்து வரும் பிள்ளைகளின் மனநிலையும் வெவ்வேறுதான்.

இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டு விட்டால், எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும். இவையெல்லாம் புரிந்து கொள்வதற்கே சில காலம் நமக்கு அனுபவம் தேவைப்படுகிறது. அதனால்தான் சிலசமயங்களில் அதிகம் படித்தவரை விட அனுபவசாலிகள் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிறார்கள். அணுகுமுறையும் கற்பிக்கும் முறையும் ஒன்றாக இருப்பது என்பது சிலசமயங்களில் தான் கைகொடுக்கும். சில பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளும் அணுகுமுறை அவர்களை நல்வழிப்படுத்த உதவும். சிலரிடம் அன்பாகப் பேசினால் அது வேலைக்கு உதவாமல் போகும். அதுவும் ஒழுக்க விஷயத்தில் எங்கெங்கு கண்டிப்பு தேவைப்படுகிறதோ அங்கு நம் கண்டிப்பும் கண்காணிப்பும் அவசியம் தேவைப்படுகிறது. நம் முன்னோர்கள் அதனால்தானோ என்னவோ ‘கோலெடுத்தால் குரங்காடும்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

கற்பிக்கும் முறை, கற்கும் மாணவர்களின் திறமையைப் பொறுத்து மாறுபடலாம். ஒரு தடவை சொன்னாலே புரிந்து கொள்ளும் திறமைசாலி வேகமாக முன்னேறுவான். இரண்டு-மூன்று முறை உதாரணங்களுடன் எடுத்துச் சொல்லும் பொழுது ‘டக்’ கென சிலர் புரிந்து கொள்வர். பல முறை சொல்லியும் புரிந்து கொள்ளாதவர்க்கு அதிக நேரம் எடுத்து, பொறுமையுடன் எளிதாக மாற்றி புரிய வைக்க முடியும். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ற கற்பித்தல் முறையை கையாள்பவர் கண்டிப்பாக நல்ல ஒரு ‘குரு’வாகத்தான் இருக்க முடியும்.

தான் சாப்பிடுவதற்காக எடுத்து வந்த சிற்றுண்டியை, காலை உணவு சாப்பிடாமல் சிறப்பு வகுப்பிற்கு வந்து மாணவர்களுக்கு கொடுத்து உதவும் எத்தனையோ ஆசிரியர்களைக் கண்டிருக்கிறோம். அதனால்தான் சேவை மிகுந்த, தன்னலமற்றத் தொழிலாக இது கருதப்படுகிறது. சமீபத்தில் கேள்விப்பட்டு, நம் ஊடகங்களில் கூட வெளிவந்த ஒரு செய்திதான் என்றாலும், மெய்சிலிர்க்க வைத்த சம்பவமாக இருந்தது.

துருக்கியில் ஒரு விமானத்தில் விமான ஓட்டியின் வகுப்பாசிரியர் ஒருவர் பயணத்திருக்கிறார். விமானம் ஓட்டுவது தன் மாணவன் என்பது கூட ஆசிரியருக்குத் தெரியுமா என்பது புரியவில்லை. விமானம் எடுப்பதற்கு முன் வழக்கமான அறிவிப்புகள் வந்ததாம். பிறகு மற்றொரு அறிவிப்பு வந்ததாம். “என்னைப்படியேற்றி இப்பொழுது பறக்கவிட்டவர் இவர்தான்”… உடன் ஓடிவந்து ஆசிரியரைத் தழுவி கட்டிக் கொண்டாராம். ஆசிரியர் கண்களில் நீர் வழிய விமான ஓட்டியைத் தழுவி முத்தமிட்டாராம். அதற்குள் பணிப்பெண்கள் பூக் கொத்துக்களை மாறி மாறி அவர் கையில் திணித்தனராம். ஆசிரியருக்குப் பேச நா எழ வில்லையாம். தன் கண்ணீரால் அனைவருக்கும் ஆசி வழங்கினாராம்.

டாக்டர் ராதாகிருஷ்ணா சாதாரண ஒரு ஆசிரியராக இருந்து சாதனைகள் மூலம் நாட்டின் முதல் குடிமகனாக பொறுப்பேற்றார். நம் மதிப்பிற்குரிய அப்துல் கலாமும் கற்பிக்க விரும்பியவர்தான். நமக்கு ஒரு விருப்பம் இருந்தாலும், நீடித்து சேவை செய்வதற்கான பாக்கியம் அமைந்து விட்டால் போதும்.

ஒரு படித்த பையன் வெளி நாட்டில் வாழ்க்கையைத் தொடங்கினான். சில ஆண்டுகள் கழித்து தாய்நாடு திரும்பினான். அப்பொழுது முதலில் எங்கு சென்று யாரைப் பார்க்க விரும்பினான் தெரியுமா? முதன் முதலில் தான் படித்த பள்ளிக்குச் சென்றான். புதிய வகுப்புகளையும், பெரிய புதிய கட்டடத்தையும் பார்த்து மகிழ்ந்தான். பள்ளியை விட்டுச் செல்வதற்கு முன் தான் படித்த பன்னிரண்டாம் வகுப்பறைக்குச் சென்றான். இருக்கைகள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தன. இருப்பினும் தான் உட்கார்ந்திருந்த பழைய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான். பெருமூச்சு விட்டான். அப்பொழுது கற்பித்த ஒரு சில ஆசிரியர்களை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. காலைத் தொட்டு ஆசி பெற்றுக் கொண்டான். இது தானே மாணவனுக்கும் பள்ளிக்குமான உறவு!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தஞ்சாவூரு ராஜா… தஞ்சாவூரு ராணி…!! (மகளிர் பக்கம்)