தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:12 Minute, 15 Second

‘‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும். எனவே, பேரின்ப வேளைகளுக்காகத் திட்டமிடுங்கள்.

திருமணமான புதிதில் அன்பைக் கொண்டாட இருவருக்கும் இடையில் காற்று நுழைவதைக் கூட அனுமதிக்க யாரும் விரும்புவதில்லை. திருமணமாகி ஓர் ஆண்டு வரையிலுமே ‘நமக்கு இடையில் குழந்தை வேண்டாம். இது முழுக்க முழுக்க இளமையைக் கொண்டாட வேண்டிய காலம்’ என திட்டமிடுவது பெரும்பாலான தம்பதியரின் விருப்பமாக உள்ளது.

எனவே, கரு உருவாவதைத் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பான வழிமுறைகளை இளம் தம்பதியினர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுபற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் குழந்தை உருவாகிவிட்டால் கருக்கலைப்பு செய்வது அவ்வளவு சரியானதல்ல.

இது உடலையும் மனதையும் பாதிக்கும். மழலைச் செல்லத்தின் கொஞ்சல் எப்போது வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றலாம். மருத்துவரின் ஆலோசனைப்படியே கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவரான வள்ளி.

‘‘ஆணிடம் லட்சோப லட்சம் விந்தணுக்கள் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் உயிர் உற்பத்திக்கு அவை தயாராகவே உள்ளன. ஆனால், அந்த விந்தணுக்கள் தானாக உயிராகப் பரிணமிக்க முடியாது. அதற்கு பெண்ணிடமிருந்து ஒரு கரு முட்டை வேண்டும். பெண்ணின் கருப்பையில் மாதத்துக்கு ஒரு கரு முட்டை மட்டுமே கிடைக்கும்.

அதுவும் அவள் மாதவிடாய் முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மட்டுமே வெளியாகும். உயிருக்கான இந்தத் தேடல் விளையாட்டில் ஆயிரக்கணக்கான விந்தணுக்களில் வீரம் மிகுந்து வேகம் அடைந்து கரு முட்டையின் மீது முதலில் மோதி உயிர்க்கொடி நாட்டும் அந்த விந்தணுவின் பேராற்றலே உயிராய் மலர்கிறது.

இந்த உயிர் விளையாட்டின் உச்ச வரமே குழந்தை. திருமணமானவுடன் பெரும்பாலானவர்கள் இந்த வரத்தினை காண முயற்சிப்பதில்லை. ஓர் ஆண்டுக்காவது குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட விரும்புகின்றனர். இப்படி குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட விரும்புகிறவர்கள் குழந்தை உருவாகும் விதம் பற்றித் தெரிந்து கொண்டால் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது எளிதாகும்.

பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை 24 மணி நேரம் மட்டுமே உயிர்த்தன்மையுடன் இருக்கும். உடலுறவின் மூலம் பெண்ணின் கருப்பை வாய்க்குள் செலுத்தப்படும் விந்தணு 48 முதல் 72 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும். பெண்ணின் கரு முட்டை உயிருடன் இருக்கும் அந்த 24 மணி நேரத்துக்குள் விந்தணு இணைந்தால் மட்டுமே ஒரு புதிய உயிர் உருவாகும்.

அப்படியானால் பெண்ணின் கருப்பையில் கரு முட்டை எப்போது வெளியாகும் தெரியுமா?

மாதவிலக்கு முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கரு முட்டை வெளியாகும். மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த இடைவெளி சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி நாட்கள் மாறும்போது கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கு மாறும்.

மாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்யம் வைத்துக் கொள்ளலாம்.

ஆணின் விந்தணுக்கள் கருப்பைக்குள் போனால்தானே குழந்தை உருவாகும்?! போகாவிட்டால் எப்படி குழந்தை உருவாகும் என்று யோசிக்கும் சிலர் உடலுறவு சமயத்தில் விந்தணு வெளியேறும் தருணத்தில் ஆணுறுப்பை வெளியில் எடுத்துவிட்டால் குழந்தை உருவாகாது என்று நம்புகின்றனர். ஒரு சிலர் குழந்தை உருவாவதைத் தடுக்க இந்த முறையைப் பின்பற்றுகின்றனர்.

ஆனால், இது 100 சதவீதம் பாதுகாப்பானது அல்ல. ஒரு சில சமயங்களில் விந்தணு கருப்பைக்குள் சென்றுவிட வாய்ப்புள்ளதால் முழுக்கவும் இந்த முறையை நம்ப வேண்டாம். உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது.

இது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம்.

உடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.

கரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது.

பெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம்.

இதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம். இதனை பயன்படுத்திய பின் சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்தலாம். இதன் விலை கொஞ்சம் கூடுதல். ஆனால், பெண்களுக்கு சாதகமான ஒன்று.

சர்விகல் கேப் (Cervical cap) என்ற சாதனமும் இதே போல செயல்பட்டுக் கருத்தரிப்பைத் தடுக்கிறது. ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது காண்டம் பயன்படுத்துவதை விரும்புவதில்லை. Spermicide எனும் ரசாயனப் பொருளை உடலுறவின்போது உறுப்பில் தடவிக் கொள்கின்றனர்.

நுரை, க்ரீம், மாத்திரை வடிவத்திலும் இது இருக்கும். இந்த ஸ்பெர்மிசைட் சில ஆண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும். அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படியே இதுபோன்ற கருத்தடை சாதனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

IUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை.

திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள்.

தாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும். எனவே, இன்புறுவதிலும் அன்புறுவதிலும் கவனமாக இருங்கள். அன்பு மிகுந்த அக்கறையால் உங்கள் இணையின் உள்ளத்திலும் இரண்டறக் கலந்திடுங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதுமையை வெல்ல! (மருத்துவம்)
Next post முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! (அவ்வப்போது கிளாமர்)