முதியோர்களுக்கான குளிர்கால பராமரிப்பு!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 27 Second

பொதுவாக குளிர்காலம் தொடங்கியதுமே நமக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிலும் முதியோர்களுக்கு சற்று கூடுதலாகவே மாற்றங்கள் இருக்கும். அவற்றிலிருந்து முதியோர்கள்
தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்பதை வரிசைப்படுத்தி கூறுகிறார் மருத்துவர் அஜித்குமார்.

 அலர்ஜி மற்றும் ஆஸ்துமா

பனிக்காலத்தில் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பரவலாகவே காணப்படும். அதிலும் முதியோர்களுக்கு இந்த பிரச்னை சற்று கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு ஏற்கெனவே அலர்ஜியோ ஆஸ்துமாவோ இருந்தால் அதன் பாதிப்பு குளிர்காலத்தில் அதிகரிக்கலாம். காரணம், குளிர்காலத்தில் வீசும் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நாசி வழியாக உள்ளே செல்லும்போது மூச்சுக் குழலில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் மூச்சுக்குழல் லேசாக சுருங்கி மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த சுவாச பிரச்னை அதிகரிக்கும்போதுதான் முதியவர்கள் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

அதுபோன்று, வெயில் காலத்திலும் சரி குளிர்காலத்திலும் சரி, பருவக்கால மாற்றத்தினால், காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்துவிடுகிறது. வெயில் காலத்தில் வெப்பக்காற்று வீசுவதால் நமது உடலில் உள்ள தண்ணீர் ஆவியாகி குறைந்து விடுகிறது. அதேபோன்று குளிர்காலத்தில், வீசும் வாடைக்காற்றினால், காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து, நமது உடலில் உள்ள ஈரப்பதத்தை காற்று உறிந்து கொள்கிறது. இதனால் தான், பனிக்காலங்களில் நமது உடல் வறண்டு போய் வெடிப்பு ஏற்படுகிறது.

மேலும், குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது, அதில் உள்ள ஈரப்பதம் நமது நுரையீரலைத் தாக்காமல் தடுக்க நமது உடலில் இயற்கையாகவே, ஒரு லேயர் அமைந்திருக்கும். ஆனால், வயது முதிர்வு ஏற்படும்போது, இந்த லேயர் அதன் தடுப்பு வேலையை முழுமையாக செய்யாது. இதனால் முதியவர்கள், சுவாசிக்கும்போது, காற்றில் உள்ள கெட்ட பேக்டீரியாக்கள் , வைரஸ், தூசுகள் போன்றவை அவர்களது நுரையீரலை தாக்கி தொற்றை ஏற்படுத்துகிறது. இப்படி நுரையீரலில் தொற்று ஏற்படும்போது, சுவாசக் குழாய் சுருங்குகிறது.

சுவாசக்குழாய் சுருங்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, அலர்ஜியும் ஆஸ்துமாவும் அதிகரிக்கிறது. எனவே, அலர்ஜி, ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் மற்றும் 70 – 80 வயதில் இருப்பவர்கள்.ஹுமிடி ஃபயர் எனும் கருவியை வாங்கி தங்களது அறையில் வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் அவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி வெப்பம் பாதுகாக்கப்பட்டு ஒருவித கதகதப்பை கொடுக்கும்.

இதனால் அலர்ஜியும் ஆஸ்துமாவும் கட்டுப்படும். அதுபோன்று தங்கியிருக்கும் அறையை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். கதவு, ஜன்னல் எல்லாம் கொஞ்ச நேரமாவது திறந்து வைக்க வேண்டும். மேலும், இன்ஹெல்லர்ஸ் அலர்ஜிக்கான மாத்திரைகள் எல்லாம் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று வாங்கி சேமித்து வைத்துக் கொண்டால் அவசரத்துக்கு உதவும்.

எலும்பு மற்றும் மூட்டுவலி

எலும்புத் தேய்மானம் மற்றும் மூட்டு வலியும் குளிர்காலத்தில் முதியவர்களுக்கு அதிகரிக்கலாம். காரணம், சூழ்நிலை அழுத்தம் குறையும். இதனால், எலும்பில் உள்ள டிஷ்ஷுக்கள் வீங்குவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி வீங்கும்போது, நரம்புகள் விரிவடையும். அப்படி நரம்புகள் விரியும்போது மூட்டுகளில் வலியை ஏற்படுத்தும். இதுதான் மூட்டுவலி ஏற்படக் காரணம். இதனால்தான், முதியவர்களுக்கு பனிக்காலத்தில் கை, கால்களில் மரத்துப் போன உணர்வு ஏற்படுகிறது. மேலும், வெளி வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசுவதனால், உடலில் உள்ள ரத்தக்குழாய்களும் சுருங்கும். அப்படி சுருங்கும்போது, ரத்த அளவு குறையும். அந்த சமயத்தில், உடல் தானாகவே, இருக்கும் ரத்தத்தை, உடலின் முக்கியமான உறுப்புகளான, மூளை, இதயம், லிவர், கிட்னி போன்றவற்றிற்கு பகிர்ந்தளித்துவிடும். இதனால், எலும்புக்கும், மூட்டுக்கும் செல்லும் ரத்தம் குறைவதாலும் மூட்டு வலி ஏற்படும்.

அதுபோன்று, நமது உடல் இயங்குவதற்கும், எலும்புகளையும் மூட்டுகளையும் பலப்படுத்தவும் கால்சியம் சத்து முக்கியமானது. இந்த கால்சியம் சத்தானது இயற்கையாகவே நமது உடலில் சுரக்கும் தன்மை கொண்டது. கால்சியம் சுரப்புக்கு, வைட்டமின் டி உதவுகிறது. நமக்கு தேவையான வைட்டமின் டியை சூரியஒளி மூலம் நமது உடல் தானாகவே பெற்றுக் கொள்ளும். ஆனால், குளிர்காலத்தில் சூரிய ஒளி அவ்வளவாக இருக்காததால், உடலுக்கு தேவையான வைட்டமின் டி குறைந்துவிடும். வைட்டமின் டி குறையும்போது, உடலில் உள்ள கால்சியம் அளவும் குறைந்துவிடும். இதுவும் மூட்டு வலியை ஏற்படுத்த ஒரு காரணமாகும்.

எனவே, வழக்கமாக செய்யும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை பனிக்காலம் தொடங்கிவிட்டது என்று நிறுத்தக்கூடாது. ஸ்வெட்டர், குல்லா போன்றவற்றை போட்டுக் கொண்டு நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்படி நடைப்பயிற்சியை தொடர முடியாவிட்டால், வைட்டமின் டி நிறைந்துள்ள உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, அசைவர்களாக இருந்தால், மீன், முட்டை, சிக்கன், மட்டன் போன்றவற்றையும், சைவர்களாக இருந்தால், பால், பால் பொருட்களான பன்னீர், சீஸ் போன்றவற்றையும் அதிகளவு எடுத்துக் கொள்வது அவசியம். இவை வைட்டமின் டி நிறைந்த உணவுகளாகும். மேலும், வைட்டமின் டி நிறைந்த சூர்யகாந்தி எண்ணெய், காளான், பாதாம், அக்ரூட், கிவிப் பழம், வேர்க்கடலை, நூல்கோல் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழங்களை நிறைய எடுத்துக் கொள்வதும், பருவக்கால மாற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

மனோவியாதி

பொதுவாகவே குளிர்காலத்தில், முதியோர்களுக்கு மனரீதியான அழுத்தங்கள் அதிகமாகவே இருக்கும். காரணம், மழைக்காலம் வந்ததும். குளிரின் தாக்கத்தால் வெளியில் செல்வது குறைந்துவிடும். பார்க் சென்று நடைப்பயிற்சி செய்வது நண்பர்களுடன் நேரத்தை கழிப்பது போன்றவை குறைந்துவிடும். எனவே, உள்ளுக்குள்ளேயே அடைந்துகிடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு, நார்மலாக உடலில் சுரக்கும் கெமிக்கல்கள் குறைந்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

 எனவே, இதுபோன்ற சமயங்களில் முதியவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் பெரியவர்கள் மீது கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். முடிந்தளவு அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும்.

வைட்டமின் ஈ

 வைட்டமின் ஈ சத்தும் நமது உடலுக்கு மிக மிக முக்கியமானது. இதுதான் நமது தோலை பாதுகாக்கிறது.  குளிர்ந்த காற்றில் ஈரப்பதம் குறைந்து நீரின் அளவு குறைந்துவிடுவதால், நமது உடலில் சுரக்கும் வைட்டமின் ஈ சத்தும் குறைந்து தோல் வறண்டுபோகிறது. வறண்ட தோல் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. தோல் வறண்டு போகும்போது வெடிப்பு ஏற்பட்டு, அந்த வெடிப்பின் வழியே உடலுக்குள் கெட்ட பேக்டீரியா, வைரஸ் போன்றவை சென்று தொற்றை ஏற்படுத்தும்.

எனவே, குளிர்காலங்களில் தோல் வறண்டு போகாமல் பாதுகாக்க வைட்டமின் ஈ நிறைந்த மாய்சுரைஸர்கள் வாங்கி தோலில் தடவிக் கொள்ளலாம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். நீர் சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று, சுத்தமான ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலே பாதுகாப்பாக இருக்கலாம்.

உடல் எடை

பொதுவாக குளிர்காலத்தில் வெளியில் அவ்வளவாக செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், உடல் எடை கூட வாய்ப்புள்ளது. காரணம், உடல் உழைப்பு குறைந்துவிடும். டயட்டை கடைப்பிடிக்க முடியாது. மேலும், தூக்கம் அதிகமாக இருக்கும். எனவே, இரண்டு, மூன்று மாதங்களில் உடல் எடை கூட வாய்ப்புண்டு. எனவே, வெளியில் செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலேயே சிறு சிறு உடற்பயிற்சிகள், வீட்டுக்குத் தேவைப்படும் வேலைகளை செய்வது நல்லது.

ஹைபோதர்மியா

 ஹைபோதர்மியா என்பது உடல் சூட்டை பாதுகாப்பது. பொதுவாக, 37 டிகிரி சென்டிகிரேட் உடல் சூடு நார்மலாக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் , இந்த உடல் சூடு குறையும். இது கூட முதியவர்களுக்கு உடல் நல குறைபாட்டை ஏற்படுத்தும். ஒரு முதியவர், திடீரென்று 2 நாளாக சோர்வாக இருக்கிறார் என்றால், உடனே அவர் ஏன் சோர்வானார் என்பதையும், அவரது உடல் சூட்டையும் முதலில் கவனிக்க வேண்டும்.

உடல் சூடு குறைந்திருந்தால், அவருக்கு உடல் கதகதப்பு தரும் ஸ்வெட்டர், தலைக்கு குல்லா போன்றவற்றை அணிவிக்க வேண்டும். அதுபோன்று தற்போது, முதியவர்களுக்காக குளிர்கால பாதுகாப்பு தடுப்பூசி இருக்கிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆண்டுதோறும் இந்த தடுப்பூசியை அந்த ஆண்டுக்கான சீதோஷண நிலையை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி அரசு அறிமுகம் செய்கிறது. இந்த தடுப்பூசியை உங்களது மருந்துவரின் ஆலோசனை பெற்று போட்டுக் கொள்ளலாம்.

சளிப் பிடித்தல்

அலர்ஜியும், ஆஸ்துமாவும் கூட வைரஸால்தான் ஏற்படுகிறது. பொதுவாக சளிப்பிடித்தலும் காற்றினால்தான் பரவுகிறது. கொரோனா எப்படி பரவுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதே வகைதான் இந்த சளிப்பிடித்தலும், ஆனால், கொரோனாவைவிட அதிவேகமாக பரவக்கூடியது. சளி, இருமல் வீட்டில் ஒருவருக்கு இருந்தால், அவர் தும்மும் போதும் இருமும் போதும் அந்த வைரஸ் கிருமிகள் காற்றில் பரவி வீட்டில் உள்ள மற்றவர்க்கும் தொற்றிக் கொள்கிறது.

அதனால் அவ்வப்போது கை கழுவுவது, வெளியே சென்று வந்தால் கைகளை சுத்தம் செய்வது, சாப்பிடுவதற்கு முன் கை கழுவிவிட்டு சாப்பிடுவது , வெந்நீர் அருந்துவது போன்றவற்றை செய்தால் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம். மேலே சொன்னவற்றை எல்லாம் பின்பற்றினாலே, முதியவர்கள் பலரும் குளிர்காலத்தை பாதுகாப்பாக கடந்து செல்லலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 30 வயது பெண்ணா…நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்! (மருத்துவம்)
Next post முதலிரவு குழப்பங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)