ஏஞ்சலின் எழுத்தோவியம்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 52 Second

ஏஞ்சல் மேரி ஓவியா பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு இப்போது சிங்கப்பூரில் செட்டிலாகியிருக்கும் நம்ம தமிழ் பொண்ணு. வணிக மேலாண்மை பயின்று, அதே துறையில் வேலையும் செய்து வருகிறார். சிங்கப்பூரில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும், அதிகாரப்பூர்வமான மொழியாகவும் தமிழ் இருப்பதால், வெளிநாட்டில் வளர்ந்திருந்தாலும், தமிழ் மொழி மீது எப்போதுமே ஈடுபாடு இருந்ததாகக் கூறுகிறார்.

“தமிழ் மொழியை எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால், காலத்திற்குத் தகுந்தமாதிரி ட்ரெண்டாக ஆப்கிரேட் செய்ய வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்தது டைபோகிராஃபி எனப்படும் தமிழ்  எழுத்துரு கலை. எனக்கு எழுத்துரு எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு தமிழ் மொழியும் பிடிக்கும். எழுத்துரு என்பதை ஒரு மொழியின் எழுத்தோவியம் அல்லது வரிவடிவம் எனக் கூறலாம். நான் படித்தது வணிக மேலாண்மையாக இருந்தாலும், கலையில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு.

இதனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஏஞ்­சல்­ஹார்ட்­வொர்க்ஸ்(@angelheartworks) என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்து, அதில் ஆங்கிலத்தில் டைபோகிராஃபி உருவாக்கிப் பதிவேற்றி வந்தேன். பள்ளிக் கூடங்களில் எப்படி அழகான கையெழுத்து இருப்பவர்களிடம் வாழ்த்துக்களை எழுதச் சொல்லுவோமோ, அதே மாதிரிதான் முதலில் என்னையும் வாழ்த்துக்கள் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள்.

நான் என்னுடைய க்ரியேட்டிவிட்டியை பயன்படுத்தி வித்தியாசமான கார்டுகளை செய்து கொடுப்பேன். பலரும் என்னை அணுகி தங்களுக்கும் வாழ்த்து அட்டைகள் செய்து கொடுக்கச் சொன்னதால், அதை அப்படியே என் சைட் பிஸினஸாக டெவலப் செய்தேன். அந்த சமயம் நண்பர்கள் தமிழில் சில குறிப்புகள் வரைந்து  கொடுக்க முடியுமா எனக் கேட்டார்கள். சரி, அதையும் முயற்சி செய்து பார்க்கலாமே என ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பலரிடமிருந்தும், வித்தியாசமான தமிழ் எழுத்துருவில் பரிசுப் பொருட்கள் வேண்டும் என்றார்கள்.

2020 கொரோனா லாக்டவுனில்தான் என் கல்லூரிப் படிப்பை முடித்தேன். படித்ததும் சில நாட்கள் வீட்டிலிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழ் எழுத்துருவில் முழுமையாகக் கவனம் செலுத்த முடிந்தது. என்னுடைய எழுத்தோவியத்தை மேலும் மெருகேற்றிக்கொண்டு டிஜிட்டல் எழுத்துருவில் ஆத்திச்சூடியை, அழகாக வடிவமைத்து தமிழ் அட்டைகளாக உருவாக்கினேன். அடுத்து நம் தமிழ் சினிமாவில் பிரபலமான வடிவேலு டயலாக்குகளையும், மற்ற பஞ்ச் டயலாக்குகளையும் வைத்தும் நகைச்சுவையான சில வாழ்த்து  அட்டைகளை உருவாக்கினேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர் ந்து, வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ற பாணியில் புதுப்புது வடிவங்கள் கேட்க அதற்குத் தகுந்த கார்டுகளை டிசைன் செய்து, என்னுடைய திறமையையும் வளர்த்துக் கொண்டேன். பொதுவாக இப்போது ஒரே ஒரு குறுஞ்செய்தியை அப்படியே நம் மொபைல் போனில் இருக்கும் அனைத்து தொடர்பு எண்களுக்கும் வாழ்த்து செய்தியாக  அனுப்பிவிடுகிறோம். ஆனால் நம் கைப்பட ஒரு வாழ்த்து அட்டையை எழுதிக் கொடுக்கும் போது, அதைப் பெறுபவருக்கு கிடைக்கும் அதே சந்தோஷம், கொடுப்பவருக்கும் கிடைக்கும்.

இதனால் பலரும் என் வாழ்த்து அட்டைகளையும், பரிசுப் பொருட்களையும் வாங்குகின்றனர். என் பரிசுப் பொருட்கள் ரொம்ப ஸ்பெஷலாகவும், தனித்துவமாகவும் இருக்கும்” என்கிறார். ஏஞ்சல், தன் பரிசுப் பொருட்களை உலகம் முழுக்க இன்ஸ்டாகிராம் வாயிலாகவும், Etsy வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறார். எதிர்காலத்தில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட பல பரிசுப் பொருட்களை உருவாக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.                 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஒலிம்பிக்ல இந்தியாவுக்காக ஓடணும்!! (மகளிர் பக்கம்)