ஸ்டென்ட் சிகிச்சையில் புதுமை – ரத்தத்திலேயே கரையும்…!! (மருத்துவம்)
இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது அதை நீக்க கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரத்த குழாய் அடைப்பு நீக்க சிகிச்சையின் மூலம் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு, அதன் உதவியுடன் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களின் குறுக்கம் விரிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படும்.
இதய அடைப்புக்கு தற்போது பொருத்தப்படும் ஸ்டென்ட்கள் உலோகத்தாலானவை. இந்த மெட்டல் ஸ்டென்ட்டானது இதயத்தின் ரத்தக் குழாயிலேயே நிரந்தரமாக தங்கிவிடுகிறது. இதற்கு மாற்றாக கரையும் ‘ஸ்டென்ட்’கள் என்ற புதிய தொழில்நுட்பம் மருத்துவ உலகில் அறிமுகமாகியுள்ளது. இது ரத்த நாளங்களின் அடைப்பை நீக்குவதோடு அவை ரத்த குழாய்களில் தற்காலிமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு பின்னர் ரத்த குழாய் அதன் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் இந்த ‘ஸ்டென்ட்’கள் 2 முதல் 3 வருடங்களில் படிப்படியாக கரைந்துவிடும்.மெட்டல் ஸ்டென்ட் போன்று ரத்தக்குழாய்களில் இது நிரந்தரமாக இருக்காது. இந்த ஸ்டென்ட் கரைந்த உடன் ரத்த நாளத்தின் இயல்பான விரிவாக்கம் மற்றும் சுருக்கமானது வழக்கமான நிலைக்கு திரும்புகிறது. இந்த ஸ்டென்ட் முழுவதுமாக கரைந்த பிறகு ரத்தக்கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
மெட்டல் ஸ்டென்ட் போல் இல்லாமல் இந்த ஸ்டென்ட் கரைந்து விடுவதால், எதிர்காலத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ள முடியும். இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கரையும் ஸ்டென்ட்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சில குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கும், குறிப்பாக இளம் வயதினருக்கும் இது மிகுந்த பயன் அளிக்கும் சிகிச்சை முறையாகவும் உள்ளது!