கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 54 Second

கற்பித்தல்’ என்பது தொழிலாக மட்டும் இருக்காது. ஒரு ‘கலை’யும்கூட என்று சொன்னால், அதற்குப் பல காரணங்கள் உண்டு. பிள்ளைகள் மனதில், தன் ஆற்றல் மூலம் இடம் பிடிப்பது என்பதே ஒரு கலைதான். பாடப்புத்தகத்தை படித்து விளக்கி விட்டால் மட்டும் பிள்ளைகள் நம்மை விரும்பி விடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது.

நாம் விளக்குவது அவர்கள் மனதில் எவ்வளவு புரிதலை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியம். வெறும் கருத்துக்களை மட்டும் திணிக்காமல், சுவையோடு கலந்த காலத்திற்கேற்ற சம்பவங்களையும் கலந்து தருவதுதான் நல்ல ஒரு கலையாகும். தினசரி நடைபெறும் நிகழ்வுகள், பாடப்பகுதி சம்பந்தப்பட்ட பல்வேறான சரித்திர நிகழ்வுகள், நம் பாரம்பரிய கலாச்சாரங்கள், தேசத் தலைவர்கள் பற்றிய ருசிகரமான சம்பவங்கள் இவற்றையெல்லாம் தேவைக்கேற்ப எடுத்துரைக்கும்பொழுது, அவர்கள் பாடப்பகுதி மட்டுமில்லாமல், பல்வேறு கருத்துக்களை கற்றுக்கொள்கிறார்கள்.

சில வகுப்புகளில் பின்பக்க பெஞ்சில் அமர்ந்து கொண்டு தூங்கும் பாவனையில்கூட பிள்ளைகள் காணப்படுவார்கள். நம் அணுகுமுறை உற்சாகம் தருமானால், தூங்குபவர்களைக்கூட எழுப்பி விடலாம். நடுவில் நின்று நாற்பது பிள்ளைகளையும் நம் ஒருவரால் கண்காணிக்க முடியும். ‘கற்பிப்பவர்’ சுறுசுறுப்பாகத் தன் வேலைகளை கவனிக்கும்பொழுது, பிள்ளைகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பார்கள். சுலபமாக மனதில் பதியும் வண்ணம் சொல்லி விளக்கும்
பொழுது அன்றைய பாடம் அன்றே படித்து முடிப்பார்கள்.

சில கேள்விகள் கேட்பதன் மூலமே, அவர்கள் புரிந்துகொண்ட விதம் நமக்கும் புரிந்துவிடும். அப்படி வெற்றிகரமாக நம் சேவையை ஒவ்வொரு நாளும் செய்து வரும் ‘குருவிற்கு நாளும் மாணவ சமுதாயத்தின் நட்பும், மரியாதையும் கூடிக்கொண்டே தான் வரும். இன்று உலகம் பரந்து விரிந்து ஒரு கைபேசியிலேயேகூட அடங்கி விட்டதால், ஆசிரியர் -மாணவர் பந்தமும் உலகம் முழுவதும் விரிந்து கிடக்கிறது. சில தினங்களுக்கு முன் முகநூல் மூலம் ஒரு மாணவன் என்னிடம் தொடர்பு கொண்டான். அவன் திருமணத்திற்கு என்னை அழைக்க வந்ததாகவும், நான் ஊரிலில்லை என கேள்விப்பட்டதாகவும் சொன்னான்.

பின் தன் மனைவி, குழந்தை புகைப்படங்களை அனுப்பி வைத்து ஆசி வழங்கவும் வேண்டினான். மிகவும் பெருமைக்குரிய விஷயம்தான். அதேசமயம், அவன் நினைவுபடுத்திய மற்றொரு விஷயம் எனக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அவன் சொன்னான், ‘‘மிஸ் உங்களிடமெல்லாம் இப்பொழுது பேச முடிகிறது. ஆனால் என்னைத் திட்டி திட்டி படிக்க வைத்த பௌதிக ஆசிரியை என் வளர்ச்சியைப் பார்க்கவேயில்லையே! அவர்களை என்னால் மறக்கவே முடியாது’’ என்று ஆதங்கப்பட்டான். ஆம்! அவன் குறிப்பிட்ட அந்த ஆசிரியை இறந்துவிட்டார்.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஊருக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டு ஓரிரு தினங்களில் இறந்துவிட்டார். கற்பிப்பவருக்கு, பிள்ளைகளிடம் இருக்கும் பந்தமும், இழந்த சிலருக்காக நாங்கள் பட்ட துயரமும் முன்பே விளக்கியிருந்தேன். ஆசிரியரை இழந்த வேதனை பிள்ளைகளுக்கும் எவ்வளவு துயரத்தைத் தருகிறது என்பதை, இவ்வளவு வருடங்கள் கழித்து இம்மாணவன் கூற்றின் மூலம் உணர முடிகிறது. அதுதான் பள்ளியின் பதினாலு ஆண்டுகால பந்தம்!

நாம் விளையாட்டுக்காக சில சமயங்களில் பேசுவோம். ஆசிரியர் ஒருநாள் வராவிடில், பிள்ளைகளுக்கு சந்தோஷம்-உற்சாகம் என்றெல்லாம். ஆனால் பல வருடங்கள் கழித்து, அவனுக்கென்று குடும்பம் வந்த பின்னும் அந்தப் பையன் ஆசிரியரை நினைத்து வருத்தப்படுகிறான் என்று நினைத்தால், அவன் மனதில் ஆசிரியர் எவ்வளவு தூரம் இடம் பிடித்துள்ளார் என்பது புலப்படுகிறது. ‘திட்டி திட்டி என்னை படிக்க வைத்தார்கள்’ என்று சொல்லும்பொழுது, சிறுவயதில் அவர்கள் திட்டியது மட்டும் ஞாபகம் இருக்கலாம். வளர்ந்தவுடன் அவனுக்கே புரிந்துவிட்டது, தன்னை படிக்க வைப்பதற்காகத்தான் திட்டியிருக்கிறார்கள் என்று. மற்றொரு ஆசிரியை இளம் வயதில் இறந்து போனதைக் கண்டோம்.

அவர்கள் இரண்டாம், மூன்றாம் வகுப்பைக் கையாண்டார்கள். குழந்தைகள் பிறந்தநாளுக்கு, பரிசுப் பொருளோடு, கன்னம் இரண்டிலும் முத்தம் கொடுப்பது அவர்கள் பழக்கம். இறந்த அன்று ஒரு பெண் குழந்தை ‘முத்தா மிஸ் செத்துட்டாங்க’ என்று சொல்லி அழுவதைக் கேட்டோம். மறக்க முடியாத சம்பவங்கள் இவை. வகுப்பில் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும், நம்மை படுத்தியெடுத்தாலும் அவை அந்த நேரத்திற்கு மட்டும் பிரதிபலிக்கும் எண்ணங்கள். ஒருநாள் மழை பெய்தோ, அசம்பாவிதத்தாலோ திடீரென விடுமுறை அறிவித்து விட்டால், அப்படியொரு சந்தோஷம்.

அதே பல நாட்கள் விடுமுறை வந்துவிட்டால், மீண்டும் எப்பொழுது நண்பர்களை சந்திப்போம், ஆசிரியர் விடுமுறைப்பற்றி கேட்கும்பொழுது, பார்வையிட்ட இடங்களைப்பற்றி வாய் நிறைய சொல்ல வேண்டும் இவைதான் ஆசை. இன்றைய ‘கொரோனா’ காலகட்டத்தில் இவற்றைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. எவ்வளவு பிள்ளைகள் ‘பள்ளிக்கு எப்படா போகப் போகிறோம்’ என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிறகடித்துப் பறக்குமிடம் பள்ளிக்கூடம் தான். ஓடியாடி விளையாடுமிடம் பள்ளிக்கூடம்தான். வீட்டுப் பாடங்களில் பிள்ளைகளுக்கு உதவிக் கொண்டிருந்த பெற்றோர்களுக்குக்கூட ஏதோ, வேலையே இல்லாது போன்ற உணர்வுகள்தான் மேலிடும்.

என்னதான் பல்வேறு விஷயங்களை ‘ஆன்-லைன்’ முறையில் கற்றாலும், நேருக்கு நேர் உரையாடல் என்பது தனி அனுபவம். ஒருவன் சந்தேகம் கேட்க, மற்றவன் அதை கேலி செய்ய ஆசிரியர் சொல்லி முடிப்பதற்குள், அவர்களுக்குள் ஒரு வகுப்பறையே நடத்தி முடித்து விடுவார்கள். வெகுளித்தனமான அவர்களின் கேலிப்பேச்சு பெரியவர்களையும் சிரிக்க வைத்துவிடும். அதனால்தான் சிறிய வகுப்பு எடுப்பவர்கள் தன்னையும் இளமையாகவே உணருவார்கள். ஒரு குழந்தை, சிறுவயதில் ஆசிரியர் தோற்றத்தைப் பார்த்து வகுப்பிற்குச் செல்லவே அடம் பிடித்தது. காரணம், அவர்கள் ஒரு ஆங்கிலோ இந்தியன்.

அவர்கள் முறைப்படி ஆடை அணிந்திருந்தார்கள். மிகவும் அன்பானவர்தான். பிள்ளைகளிடம் அளவற்ற ஆசை வைப்பவர். இருப்பினும் அச்சிறுவயதில் குழந்தைக்கு, தன் தாயைப்போலவும், வீட்டு மனிதர்களைப் போலவும், புடவை கட்டியிருந்தவர்களையே பிடித்ததாம். சில நாட்கள் வேறு பிரிவில் போடப்பட்டு, ஆசிரியரிடம் சில நாட்கள் பழகியபின் அவர் வகுப்பிற்கு மீண்டும் சென்றான். இதெல்லாம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை.
இப்பொழுதுள்ள பிள்ளைகள் பிறக்கும்பொழுதே புத்திசாலியாக இருக்கிறார்கள்.

நிறங்களையும், சுற்றுப்புறங்களையும் ஆராய்கிறார்கள். மூன்று வயதில் கே.ஜி. வகுப்பு படிக்கும்போதே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ‘கணினி யுகம்’ என்பதற்கேற்றவாறு ‘கைபேசி’தான் அவர்கள் விளையாட்டுப் பொருளாக அமைகிறது. கற்பிப்பவர்கள் ‘மாடர்ன்’ உடை போட்டிருந்தால் போதும். வயது நிறைய இருந்தாலும் பிள்ளைகள் பார்வையில் அவர்கள் இளைஞர்கள்தான். சிலரைப் பார்த்தால் நாம், நம்மையறி யாமலேயே ‘அக்கா’, ‘அண்ணா’ என்றுதான் அழைப்போம். அதுபோல் பிள்ளை களுக்கும் சில எண்ணங்கள் ஏற்படலாம்.

‘ஆன்ட்டி’, ‘அங்கிள்’ என்று அழைப் பார்கள். இதெல்லாம் சாதாரணம்தான். ஆனால், மேலை நாடுகளில் வயதைக் குறைத்தோ, அதிகரித்தோ அடைமொழி தரக்கூடாது என்பதற்காகவே உயர் பதவியில் இருப்பவர்களைக்கூட பெயர் சொல்லியே அழைப்பார்கள். மழலைச் செல்வங்கள் என்ன சொல்லி அழைத்தாலும், அதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் மனம் எந்தவிதத்திலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் நம் பணி. சிறுவயதில் அவர்கள் மனநிலை பாதித்தால் அதிலிருந்து மீண்டுவர பல நாட்களாகும்.

ஆனால் நம்நாட்டில் அத்தகைய நிலை கிடையாது. பிள்ளைகள் சந்தோஷமாகத்தான் வளர்க்கப்படுகிறார்கள். ஒருமுறை மேலை நாட்டில் ஒருவரை சந்தித்தபொழுது, பள்ளியில் பணிபுரிவதாகச் சொன்னார்கள். ‘‘என்ன பாடம் கற்பிக்கிறீர்கள்?’’ என்று கேட்டேன். அவர்தான் கே.ஜி. வகுப்புகளுக்கும் முதலாம் வகுப்பிற்கும் ‘கவுன்சிலர்’ என்று சொன்னார். இவ்வளவு சிறிய வகுப்புப் பிள்ளைகளுக்கு ‘கவுன்சிலிங்’ தேவைப்படுகிறது என்றால் மற்றவற்றை நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளின் மனநிலையைப்பற்றி சொல்லும்பொழுது மற்றொரு நிகழ்வும் கண்முன் தோன்றுகிறது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். எங்களிடம் படித்த ஒரு அருமையான மாணவன், பட்டப்படிப்பில் கணிதம் எடுத்திருந்தான். கடின உழைப்பும், நேர்மையும் அவனிடம் அதிகமாகவே காணப்பட்டது. இயற்கையிலேயே, கடவுள் அவனுக்கு புத்திசாலித்தனத்தையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையையும் வரம் தந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். எப்பொழுதும் அவனிடம் கற்றுக்கொள்வதற்காக மாணவர் கூட்டம் வந்துபோகும்.

பள்ளி போலவே, கல்லூரியிலும் பல தேர்வுகளிலும், போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்தான் என்.சி.சி., ஸ்காவுட் போன்ற அனைத்திலும் தொண்டு செய்வதில் முதன்மையாக இருப்பான். கல்லூரி இறுதித் தேர்வும் முடிந்து, ‘ரிசல்ட்’ அன்றைய மாலை வெளியாவதாக தகவல் தெரிந்தது. இப்பொழுது போன்று அப்பொழுது சமூக வலைத்தளங்கள் அதிகமில்லாத காலகட்டம். தினசரி செய்தித்தாள்கள்தான் பிரதானம். அன்றைய மாலை செய்தித்தாளில் வரவிருந்ததால், மதியம் முதல் அவனுடன் ஒரு மாணவர் கூட்டம் சேர்ந்தது. அடுத்து எந்தத் துறைக்குச் செல்வது, வேலைக்கு எப்படியெல்லாம் விண்ணப்பிக்கலாம் போன்ற விஷயங்களை விவாதித்துக்கொண்டிருந்தனர்.

மாலை செய்தித்தாள் வருவதற்கு முன்பே அனைவரும் பேப்பர் வாங்க கடைக்குச் சென்றனர். பையனின் பெற்றோரும் நல்ல ‘ரிசல்ட்’டுடன் வா. நாங்கள் காத்துக்கொண்டிருப்போம் என்று வாழ்த்தி அனுப்பினர். மாலை நான்கு மணிக்கு வெளியில் சென்ற பையன் இரவு ஒன்பது மணி ஆகியும் திரும்பாததால், அம்மா அழ ஆரம்பிக்க, அப்பா ஆறுதல் கூற, பக்கத்தில் இருந்தவர் பேப்பர் கடைகளில் சென்று தேட ஆரம்பித்தார். பையனும் தென்படவில்லை, அவன் நண்பர்களையும் காணவில்லை. ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல், அனைவரும் தெரு வாசலில் வந்து நின்றனர். ஒன்பது மணிக்குமேல், சில நண்பர்களுடன் அவன் சோர்ந்து நடை தளர்ந்து வந்துகொண்டிருந்தான். அம்மாவுக்கோ, பிள்ளையைப் பார்த்தால் போதும் என்றாகி விட்டது.

நண்பர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். மாலையே ‘ரிசல்ட்’ வந்து, நண்பர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டதாக தெரிந்துவிட்டதாம். ஆனால், நாம் குறிப்பிட்ட புத்திசாலியின் தேர்வு எண் பேப்பரில் வரவில்லையாம். விட்டுப்போயிருந்தது. அவன் மனம் நொந்து ‘ஷாக்’ ஆகி, வீட்டிற்கு வர விரும்பாமல் எங்கோ நடக்க ஆரம்பித்தானாம். பின் நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் கூறி, வகுப்பாசிரியரிடம் இதுபற்றிக் கூறலாம் என்று அழைத்துச் சென்றனராம். அப்பொழுதெல்லாம் பேப்பரில் ‘ரிசல்ட்’ வந்தவுடன் கல்லூரிக்கும் ‘தந்தி’யில் வந்துவிடும்.

இவர்கள் தேடிச்சென்ற ஆசிரியர் கல்லூரியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அனைவரும் கல்லூரிக்குச் சென்றனராம். அங்குதான் அவனுக்கு சந்தோஷம் தரும் அதிர்ச்சித் தகவல் இருந்ததாம். நம் பையனைப் பார்த்ததும் பேராசிரியர் கட்டித் தழுவி, கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தாராம். அவர்களுக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விபரம், மதிப்பெண் பட்டியல் அனைத்தும் ‘தந்தி’ மூலம் வந்திருந்ததாம். பின் நடந்த சோகத்தைக் கேட்டு அவர்களும் அனுதாபப்பட்டனராம்.

முதல் மதிப்பெண் பெறும் மாணவன் எண் விடுபட்டதென்றால், என்ன ஒரு சோகம்! அவன் உதவிய மற்ற மாணவர்கள் சமயத்தில் அவனுக்குத் துணையாக
இருந்திருக்காவிட்டால், அவன் நிலை என்னவாயிருக்கும்? பெற்றோர்களுக்கு எப்படியிருக்கும்? நல்ல நட்பு அவனுக்கு தக்க சமயத்தில் கை கொடுத்தது. இல்லையெனில் அந்த ஒரு நிமிடம் ‘பேப்பரில்’ அவன் ‘நம்பர்’ இல்லாதபொழுது மனநிலை அவனை எப்படியெல்லாம் மாற்றியிருக்குமோ? இப்படியும் நம் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மலை ரயிலில் ஓர் இசைக் குயில்!! (மகளிர் பக்கம்)
Next post மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! (மருத்துவம்)