அரிவாள் ஆட்டம்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 50 Second

சாமியாட்ட வகைகளில் முக்கியமானது அரிவாள் ஆட்டம். மற்ற நாட்டுப்புறக் கலைகள் பொழுதுபோக்கு என்றால், அரிவாள் ஆட்டம் பக்தியும் வீரமும் சார்ந்தது. அரிவாள் வைத்திருக்கும் காவல் தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் இந்த ஆட்டம் உண்டு. இதில் முக்கிய வாத்தியமாய் உறுமி இருக்கும். உறுமி ஒலியின் சத்தத்தில் பலர் சாமி வந்து ஆடுவார்கள். எல்லைகளில் காவல் காக்கும் தெய்வங்கள் தென் மாவட்டங்களில் அதிகம். இதில் கருப்பசாமி, மாடசாமி, சுடலமாடை எல்லாம் வேட்டைக்குப் போகிற எல்லைசாமிகள்.

எல்லை காக்கும் நமது தெய்வங்கள் அரிவாளை வைத்து ஊரைப் பாதுகாப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதில் வேட்டைக்கு செல்வது, காவு கொடுப்பது, சாமைக்கொலை போன்றவை தென் மாவட்டங்களைச் சார்ந்த எல்லை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள். இதில் அரிவாள் இல்லை என்றால் கருப்ப சாமியே இல்லை. இந்த ஆட்டத்திற்கு அரிவாள் வர்ணனை பாடல்களும் உண்டு.

சிவகங்கை மாவட்டம் வெட்டுடை காளியம்மன் கோயிலில், அரிவாளை வரிசையாய் அடுக்கி அதன்மேல் பூசாரி ஏரி நின்று சாமி ஆடிச் செல்வார். கோயில்களில் பெண்கள் கைகளில் அரிவாள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் பெண்களும் அரிவாள் ஆட்டத்தை ஆட வேண்டும் என்கிற முயற்சியினை கையிலெடுத்திருக்கிறார் விருதுநகர் மாவட்டம் கோடங்கி கலைக்குழுவைச் சேர்ந்த உமாராணி. இவர் அரிவாள் ஆட்டத்திற்கென பெண்கள் குழுவை உருவாக்கி, அவர்களை ஒருங்கிணைத்து இந்த ஆட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவருடன் பஞ்சவர்ணம், சரண்யா, சுவாதி, திருப்பதி போன்றவர்கள் முக்கிய அரிவாள் ஆட்டக் கலைஞர்களாக உள்ளனர். அவர்களிடம் பேசியபோது..

அரிவாள் வழிபாடு ஆண்களின் கைகளில் மட்டுமல்ல பெண்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பதற்காக இதனை ஆட்டக் கலைக்குள் விடாமல் கொண்டு வருகிறோம். வீரம் செரிந்த அதே நேரம் ஜாலியான ஒரு ஆட்டம் இது. அரிவாளை ஆண்கள் வன்முறைக்கு பயன்படுத்தினால், பெண்கள் வாழ்வாதாரத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்ற உமாராணி, விறகு வெட்டவும், சுள்ளி பொறுக்கவும் அரிவாளோடு காடு மலை தேடி சென்று அவற்றைச் சேகரித்துக் கொண்டுவந்து குடும்பத்தினரின் பசியாற்றியவர்கள் பெண்கள். அதனால் ஆண்களைவிட பெண்கள் வலிமையாகவே அரிவாளைப் பிடிப்பார்கள்.

வீரத்தைக் காட்ட சூலாயுதத்தை மட்டும் சுமக்காமல், அரிவாளையும் கொடுத்து கருப்பசாமி ஆட்டத்தை பெண்களை ஆட வைக்கிறோம். நாங்கள் அரிவாள் வைத்து ஆடுவதைப் பார்த்த கிராமப்புற பெண்கள் பலரும் எங்களிடத்தில் அரிவாளை வாங்கி தானாகவே ஆடுவார்கள். ஒருமுறை லயோலா கல்லூரியின் வீதிவிருது விழா நிகழ்வில் நாங்கள் ஆடிய அரிவாள் ஆட்டத்தைப் பார்த்த ஃபாதர் ஒருவர் எங்களின் கைகளில் இருந்த அரிவாளை வாங்கி ஆடிப் பார்த்தார் என்ற உமா, கலை நிகழ்ச்சிகளோடு இணைத்து பெண்களும் ஆடும் அரிவாள் ஆட்டத்தை பலரும் அங்கீகரிக்கிறார்கள் என்கிறார். கொரோனா பரவல் ஊரடங்குக்கு முன்பு 50 முதல் 60 பெண்களை ஒருங்கிணைத்து அரிவாள் ஆட்டத்தை ஆட வைத்த நிகழ்வையும் பகிர்ந்தார்.

அரிவாள் வழிபாடு வன்முறையின் வடிவமா என்ற கேள்விகளோடு இந்த ஆட்டம் குறித்து லயோலா கல்லூரியின் கலை பண்பாட்டுத் துறைப் பேராசிரியர் காளீஸ்வரனிடம் பேசியபோது. ‘‘சாமியாடிகள் என ஒரு வடிவம் உண்டு. நாட்டுப்புறக் கலை இலக்கிய வடிவத்தில் இது ஒரு முக்கிய வடிவம். இந்த வடிவத்தில் ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கும், ஒவ்வொரு குல தெய்வத்திற்கும் ஆட்டம் இருக்கிறது.

அய்யனார், சங்கிலிக் கருப்பு, முனீஸ்வரன் என 108 வகையான கருப்ப சாமிகள் இந்த ஆட்டக் கலையில் உண்டு. மக்களின் பாதுகாப்புக்கே ஊரைவிட்டு வெளியில் அரிவாளோடு இவை எல்லை தெய்வங்களாக காவல் இருக்கின்றன. காவல் தெய்வம் எந்த சாமியோ அந்த சாமியின் பெயரில் அரிவாளைக் கையில் பிடித்து ஆடிச் செல்வார்கள்.

குறிப்பாக தென் மாவட்டங்களில் இது உச்சம் என்றவர், இதில் முன்னோர்களைத்தான் மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்த தெய்வங்கள் மக்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அரிவாளை கைகளில் வைத்திருக்கும்’’ என்கிறார்.ஊரே ஆடக்கூடிய ஆட்டக் கலைகளின் மிக முக்கியமானது. ஆடுகளையும், சேவலையும் பலி கொடுப்பது. உடல் நலம் சரியில்லை எனில் உயிருக்கு பதிலாய் ஆட்டையும் சேவலையும் நேர்த்திக்கடனாய் நேர்ந்து கோயிலுக்கு விடுதல். இப்படித்தான் இந்த ஆட்டக் கலை வந்தது. இதற்கு வெறியாட்டம் என்கிற பெயரும் உண்டு. அதுவும் ஒரே நேரத்தில் பத்து அரிவாள் சாமிகள் ஒன்றாய் சேர்ந்து ஆடினால்?

அரிவாளை சுழற்றி நாக்கை கடித்து பார்க்கவே இந்த ஆட்டம் பயங்கரமான வடிவத்தில்தான் இருக்கும். மேலும் அரிவாளை வாயில் வைத்து ஆடுவது. தலைக்கு மேல் உயர்த்தி ஆடுவது என ஆண்களே ஆக்ரோஷமாக இதைச் செய்து வருகிறார்கள்.சிவராத்திரி முடிந்த இரவில் பரிவேட்டை நாளில் இந்த ஆட்டத்தை ஆடுவார்கள். இதனை மாசி மாதம் களறி ஆட்டம் என்பார்கள். அதாவது சிவன் வழிபாடாய் இல்லாமல் காவல் தெய்வத்தை நினைத்து கிடா வெட்டச் செல்லும்போது ஆடுகிற ஆட்டமாக இருக்கிறது.

அப்போது வீட்டுக்கு வீடு அரிவாள் எடுத்து சாமியாடி வருவார்கள். பெரிய அரிவாள், சின்ன அரிவாள், கொடுவாள், சுருள் கத்தி, கேடயம் என பலவித வடிவங்களில் இருக்கும். உறுமியோடு தவிலும் நாதஸ்வரமும் இணைய, இந்த இசையின் சத்தத்திற்கு பலரின் கால்கள் தானாகவே சாமியாட ஆரம்பிக்கும்.

சில கிராமங்களில் நேர்த்திக்கடனாய் ஆயிரம் கிடாய்களை ஒரே நேரத்தில் வெட்டும்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் அரிவாளோடு அங்கு நிற்பார்கள். இது பார்க்கவே மிரட்டலாய் இருக்கும். அரிவாள் வைத்து ஆடுபவர் ஒரே வெட்டில் ஆட்டின் தலையை வெட்ட வேண்டும். ஒரே ஆள் 10 ஆடுகளை வெட்டும் நிகழ்வும் இதில் உண்டு. வீட்டுக்கு வீடு கிடாய் வெட்டுவார்கள். அப்போது சேவலின் கழுத்தைக் கடித்து ரத்தம் குடிப்பதென்கிற வெறி ஏற்றும் நிகழ்வுகளும் உண்டு.

எல்லாக் கருப்ப சாமி வழிபாட்டிலும் ஆள் உயர அரிவாள் இருக்கும். அவர் வேட்டைக்கு போகும்போது அதை எடுத்துக்கொண்டு செல்வதாக மக்கள் கருதுகிறார்கள். எல்லை காவல் தெய்வமாக இரவில் அவர் சுற்றி வரும்போது ஒரு கையில் அரிவாளையும் ஒரு கையில் திரியையும் வைத்திருப்பார். அரிவாள் சாமியாக வருபவரின் அரிவாள் ஆறடி உயரம் வரை இருக்கும். அரிவாளை கையில் வைத்து சுழற்றி ஆடுவது. அரிவாளின் மேல் ஏறி நின்று ஆடுவது எனவும் இந்த ஆட்ட வடிவம் இருக்கும். சாமியாடி அப்போது கருப்பு உடை அணிந்திருப்பார்.

என் உயிரை பாதுகாத்துட்ட, என் இனத்தை பாதுகாத்துட்ட, என் சொத்தை பாதுகாத்துட்ட என்பதற்கு நேர்த்திக்கடனாய் அரிவாளை அடித்து காவல் தெய்வம் முன் வைத்து வணங்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டும் இதைச் செய்கிறார்கள். சில இடங்களில் குளத்தை ஒட்டியுள்ள ஆலமரம் அருகே அரிவாள்கள் நடப்பட்டு இருப்பதையும் பார்க்க முடியும். மயானக் கொள்ளையிலும் அரிவாள் பிரபலம்.

சிவகங்கை அருகே திருமலையில் அரிவாள் சாமி என்கிற எல்லை காக்கும் தெய்வம் உள்ளது. அதன் முன் ஆள் உயரத்திற்கு ஒரு அரிவாளை அடித்து நட்டு வைத்திருப்பார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி, திருப்புவனம் போன்ற அரிவாள் தயாரிக்கும் ஊர்களில் முதல் அரிவாளை அரிவாள் சாமிக்கு வைத்தே படையல் இட்டு வழிபடுவார்கள். இதனால் கோயிலுக்கு வெளியில் ஆயிரக்கணக்கில் அரிவாள் அடித்து நடப்பட்டு பார்க்க அந்த இடம் அரிவாளாய் காட்சி தரும்.

ராணி வேலுநாச்சியாரின் காலாட் படையில் அரிவாள் படை முக்கியமானது. அரிவாளை வீசி போருக்கு போவது வீரம் நிறைந்ததாய் பார்க்கப்பட்டது. அரிவாளை வீசும் முறையே இதில் வித்தியாசமானதாய் இருக்கும். சிலம்பத்தை எப்படி அடவுகளோடு செய்வார்களோ அதே மாதிரி அரிவாள் ஆட்டத்திற்கும் சில அடவுகள் உண்டு. அதாவது எதிரிகளைக் களம் காண ஆடியது என தென் மாவட்டங்களில் சொல்கிறார்கள். வீரம் செரிந்த ஒன்றாக பிரபலமா அரிவாள் படை இருந்ததால் இந்த கலையைய் விடக்கூடாது என வேலுநாச்சியார் மற்றும் குயிலி வேடம் தரித்தே பல பெண்கள் இந்த ஆட்டக் கலையை எடுத்து செய்ய ஆரம்பித்தார்கள்.

தலையை எடுக்க பயன்பட்ட போர்குணம் நிறைந்த ஒரு கருவியை, பெண்கள் யார் மீதும் படாமல் லாவகமாக சுழற்றி, வடிவத்தோடு சிறப்பாக ஆட ஆரம்பித்தார்கள். அக்னி சட்டி எடுத்து ஆடும்போது அரிவாளையும் ஒரு கையில் வைத்து பெண்கள் ஆடி வருகிறார்கள்.

அரிவாள் மாதிரியான கொலை கருவியை
பெண்கள் கைகளில் பிடித்து ஏந்திப் பார்ப்பதும்.
லாவகமாய் பிடித்து ஆடுவதும் பெரிய
விஷயம் என்றவாறு விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லாவணிக் கலை!! (மகளிர் பக்கம்)
Next post உடல் எடையை குறைக்கும் கறிவேப்பிலை!!! (மருத்துவம்)