
நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள்! (மருத்துவம்)
தீபாவளிக்குத் தீபாவளி மட்டுமே சிலர் எண்ணெய்க் குளியல் எடுக்கிறோம். அப்படியில்லாமல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதுவரை பழக்கம் இல்லாதவர்களும் இந்த தீபாவளி முதல் வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியலை தொடரலாம். எண்ணெய் குளியலினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:
எண்ணெய்க் குளியலுக்கு சிறந்த எண்ணெய் நல்லெண்னெய்தான். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்து வந்தால் நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர் கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். மேலும், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.
வறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல்ஒரு வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி அதன் ஆரோக்கியம் கெடும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எண்ணெய் தடவி (சொதசொதவென எண்ணெய் தடவத் தேவையில்லை. உடல் முழுக்க எண்ணெய் ஒட்டியிருக்கும் அளவுக்குத் தடவினால் போதும்). அரை மணிநேரம் வெயிலில் இருந்துவிட்டு பின்னர் குளிப்பதே முறையான எண்ணெய்க் குளியல் ஆகும்.அதேபோல சிலர் எண்ணெய் தேய்த்துக்கொண்டு குளிர்ந்த நீரில் குளித்துவிடுவார்கள். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, எப்போது எண்ணெய் தேய்த்துக்கொண்டாலும் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும்.
ஷாம்பூ போன்றவை எண்ணெயின் பிசுபிசுப்பை முற்றிலும் நீக்காது என்பதால் எப்போது எண்ணெய் தேய்த்துக்கொண்டாலும் தலைக்கு சீயக்காய் போட்டே குளிக்க வேண்டும். உடலில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பை எடுக்கவும்கூட சீயக்காய் மற்றும் கடலைமாவுக் கலவையைப் பயன்படுத்தலாம். அல்லது உடலில் நலங்கு மாவு தேய்த்தும் குளிக்கலாம். இதுபோன்ற பொடிகளைத் தேய்த்துக் குளிக்கும்போது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பு, அழுக்குகள் போன்றவை நீங்குவதோடு சருமத்துக்கு பொலிவும் கிடைக்கும்.