செஸ் போட்டியாளர்களின் மனச்சோர்வை நீக்கிய யோகாசனம்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 3 Second

சென்னையின் மிகவும் முக்கிய சின்னமாக எல்லாருடைய மனதிலும் பதிந்துவிட்டான் ‘தம்பி’. சாலையில் எங்கு சென்றாலும் இவனுடைய புகைப்படத்தை பார்க்காமல் நாம் கடந்திருக்க முடியாது. தம்பி வேறு யாருமில்லை. சென்னையில் 15 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் குதிரை சின்னம். போட்டியில் பங்கு பெறுவதற்காக சென்னை மகாபலிபுரத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து செஸ் போட்டியாளர்கள் வந்திருந்தனர்.

இவர்களுக்கு அனைத்து வசதிகளும் நம் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்திருந்தது. அதில் மிகவும் முக்கியமானது… அவர்களின் ஆரோக்கியம். செஸ் மூளையினைப் பயன்படுத்தி விளையாடக்கூடிய விளையாட்டு என்பதால், போட்டியாளர்கள் அனைவரும் சோர்வடையாமல் இருக்க… அவர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சியினை இந்த 15 நாட்களும் தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வந்தது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இருந்து யோகா நிபுணர்கள் போட்டியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இவர்களை தலைமை தாங்கி அழைத்து சென்றவர் அந்த கல்லூரியின் யோகா தத்துவத்துறையின் தலைவர் டாக்டர் இந்திரா தேவி. இவர் போட்டியாளர்களுக்கு அளித்த யோகாப் பயிற்சி குறித்த தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் சென்னைப் பொண்ணு. எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது தான் கனவு. நான் படிக்கும் காலத்தில் மருத்துவ படிப்பிற்கு சேர நுழைவுத் தேர்வு எழுதணும். இப்போது நீட் எப்படி நுழைவுத் தேர்வாக உள்ளதோ அதேபோல் அப்போதும் தேர்வு எழுதினால் தான் மருத்துவ படிப்பில் சேர முடியும். +2வில் 93% பெற்று இருந்தாலும், நுழைவுத் தேர்வில் என்னால் மருத்துவ துறைக்கு சேர தேவையான மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை. அந்த சமயத்தில் என் மாமா அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி இருப்பதாகவும், அதுவும் மருத்துவ துறைக்கு நிகரானது என்று சொன்னார். அந்தக் கல்லூரியில் சேர அரசு ஒதுக்கீடு 10 சீட் தான். அதில் ஒருவராக நானும் தேர்வானேன்.

ஐந்தரை வருடம் யோகா, நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ் குறித்து படிச்சேன். அதன் பிறகு எம்.பி.ஏ ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படிச்சேன். படிப்பு முடிச்ச கையோட நான் படிச்ச கல்லூரியிலேயே எனக்கு பேராசிரியராக வேலை கிடைச்சது. தற்போது நான் யோகா தத்துவத்துறையின் (yoga philosophy) தலைவராக பணியாற்றி வருகிறேன்’’ என்றவர் செஸ் போட்டியாளர்களுக்கு யோகா பயிற்சி அளித்தது பற்றி விவரித்தார்.

‘‘செஸ் விளையாட்டு மூளையை மட்டுமல்ல உடலையும் சோர்வடைய செய்யும் என்பதால் அவர்களுக்கு யோகா, தியானம் போன்ற பயிற்சி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆயுஷ் மூலமாக தமிழக அரசை அணுகியது. யோகா பயிற்சி குறித்து பல தனியார் நிறுவனங்கள் இருந்தாலும், எங்களின் கல்லூரி அரசு சார்ந்தது என்பதால், தமிழக அரசு எங்களை அணுகி போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்க சொல்லி கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் 21 குழுவாக அமைத்து யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் பயிற்சி அளித்தார்கள். இந்த போட்டியில் 187 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

இவர்களை ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள 21 நட்சத்திர ஓட்டலில் தங்க வச்சிருந்தாங்க. எங்களின் 21 குழு கொண்ட மருத்துவர்கள் ஒரு ஓட்டலுக்கு இரண்டு டாக்டர்கள் என்று நியமனம் செய்யப்பட்டு இருந்தார்கள். டாக்டர்களான தீபிகா, பிரியதர்ஷினி, சூர்யா, எழிலோவியம் என்னுடைய தலைமையின் கீழ் செயல்பட்டார்கள். அவர்களுக்கு தினமும் போட்டியாளர்களுக்கு என்ன பயிற்சி கொடுக்கணும் என்று ஆலோசனை வழங்குவேன். மேலும் போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த பயிற்சி மூலம் கிடைத்த பலன்கள் குறித்தும் கேட்டறிந்து கொள்வேன்.

செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை விளையாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும். இதனால் அவர்களுக்கு மனச்சோர்வு, மன அழுத்தம், உடல் சோர்வு, செஸ் காய்களையே பார்த்துக் கொண்டு இருப்பதால் கண்களும் சோர்வடையும். இதற்கு தூக்கம் மட்டுமே பலன் அளிக்கும் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் யோகாசனப் பயிற்சி செய்யும் போது அவர்கள் தங்கள் உடலில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றதை உணர்ந்தனர்.

தினமும் காலை எட்டு மணி முதல் பகல் 12 மணி என ஒரு மணி நேரம் மூன்று குழுவாக இவர்களை பிரித்து பயிற்சி அளித்து வந்தோம். இதில் யோகா பயிற்சி, தியானம், ரிலாக்சேஷன் டெக்னிக், யோகா நித்திரை, கிளாப்பிங் மற்றும் லாஃப்பிங் பயிற்சி, கடைசியாக கண்களுக்கான பயிற்சியும் அளித்து வந்தோம். பிராட்டக்கா என்பது கண்களுக்கான பயிற்சி. இந்த ஒரு மணி நேர பயிற்சியில் இதனை கடைசியாக வழங்குவோம். ஒரு இருட்டு அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதையே அவர்கள் கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டும். அப்போது கண்களில் இருந்து தண்ணீர் வெளியேறும். அந்த சமயத்தில் கண்களை மூடி ஒரு நிமிடம் இருந்தால் கண்களுக்கு நல்ல புத்துணர்ச்சியினை உணர முடியும்.

ஆசனங்களில் தாடாசனம், கட்டிசக்கராசனம், உத்கட்டாசனம், பத்மாசனம், வஜ்ராசனம், கருடாசனம், விருக்‌ஷ்சாசனம் சொல்லிக் கொடுத்தோம். இந்த ஆசனங்கள் கவனச் சிதறல்கள் ஏற்படாமல், புத்திக்கூர்மையாக இயங்க உதவும். மூச்சுப் பயிற்சியில் பிராணாயாமம் சொல்லிக்கொடுத்தோம். இதன் மூலம் அவர்கள் சுவாசம் தடைபடாமலும், இரவு நல்ல தூக்கத்தினை கொடுக்கும்.

இதனுடன் தியானம், யோக நித்திரை, முத்ராக்களும் சொல்லிக் கொடுத்தோம். அடுத்து கிளாப்பிங் பயிற்சி. நம்முடைய கைகளில் அக்குப்பிரஷர் புள்ளிகள் இருப்பதால், அவைகளை கைதட்டி இயக்கும் போது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதேபோல் லாப்பிங் தெரபி மன அழுத்தத்தை நீக்கும். இந்தப் பயிற்சியினை 15 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தோம். பல போட்டியாளர்கள் நல்ல வித்தியாசத்தை உணர்ந்தது மட்டுமில்லாமல், அவர்கள் இந்த பயிற்சி காரணமாக வெற்றி பெற்றதாகவும்’’ என்றவர் தங்களின் மருத்துவ கல்லூரியிலும் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார்.

‘‘எங்க மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும். மாலை 3 மணி முதல் 5 மணி வரை மக்களுக்கு அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப யோகாசனம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை, தியானப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி அளித்து வருகிறோம். இவை அனைத்தும் இலவசமாக வழங்கி வருவதால், பலர் தங்களின் நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமாகியுள்ளனர். என்னதான் நாம் மாடர்ன் டெக்னாலஜி நோக்கி பயணம் செய்தாலும், இயற்கை சார்ந்து வாழும் போது கண்டிப்பாக அதன்
மாற்றத்தை உணர முடியும்’’ என்றார் டாக்டர் இந்திரா தேவி .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யோகாவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழகம்! (மகளிர் பக்கம்)
Next post முதுமையை இளமையாக்கும் முருங்கைக்கீரை!!! (மருத்துவம்)