என் சாதனையை நானே முறியடிப்பேன்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 20 Second

சென்னை ஹோட்டலில் வேலை செய்யும் தொழிலாளியின் மகள் அர்ச்சனா. கண்ணை கட்டிக்கொண்டு காலை 7 மணி முதல் இரவு 7.15 மணி வரை சிலம்பம் சுற்றி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற இரு பெரிய பட்டங்களை பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கண்ணை திறந்து கொண்டே 1 மணி நேரம் வரை சிலம்பம் சுற்றுவது கடினம். கண்ணை கட்டிக் கொண்டு எப்படி சிலம்பம் சுற்றினீர்கள் என கேட்ட போது, ‘‘நம்பிக்கையோடு விடாமுயற்சி செய்தேன்’’ என்று குழந்தைத்தனம் மாறாமல் கூறினார்.

“சென்னை தி.நகரில்தான் நாங்க வசித்து வருகிறோம். 11ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என்னுடைய அப்பா ஹோட்டலில் வேலை செய்கிறார். எனக்கு 6 வயது இருக்கும் போது என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் அக்கா ஒருவர் YMCA மைதானத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு எங்களுடைய குடும்பத்திற்கு அழைப்பு கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றும் போட்டி நடந்தது. எனக்கு அப்படி சிலம்பம் சுற்றுவதை பார்த்தவுடன் சிலம்பம் கற்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் அப்பாவிடம் சிலம்பம் கற்க வேண்டும் என்ற என் ஆசையை தெரிவித்தேன். அவரும் சரின்னு சொன்னார்.

சில நாட்கள் கழித்து எங்கள் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் அன்று மைதானத்தில் சிலம்பம் சுற்றிய அதே குழுவினர் திருவிழாவிற்கு வந்திருந்தனர். இந்த முறை சிலம்பு குச்சியின் இரு முனைகளிலும் தீ பற்ற வைத்து சுற்றினார்கள். அதைப் பார்த்ததும் எனக்குள் இருந்த சிலம்பம் மீதான ஆசை அதிகமானது. மீண்டும் அப்பாவிடம் என் விருப்பத்தை கூற திருவிழா முடிந்தவுடன் சிலம்பம் மாஸ்டர் சதீஷிடம் அப்பா என் விருப்பத்தை தெரிவித்தார். அன்று முதல் நானும் அவரின் மாணவியாக மாறினேன். தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பயிற்சி நடக்கும். அப்ப எனக்கு எட்டு வயசு என்றாலும், சென்னையில் நடைபெற்ற சின்னச் சின்ன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற ஆரம்பித்தேன்.

அதனைத் தொடர்ந்து வெளியூர்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள தொடங்கினேன். சேலத்தில் நடந்த சிலம்பம் சுற்றும் போட்டி தான் என்னுடைய முதல் போட்டி. அதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினேன். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன். இதுவரை 40க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன்’’ என்ற அர்ச்சனா தன் சாதனைப் பற்றி விவரித்தார்.

‘‘காலையில் பள்ளிக்கு சென்று மாலை வந்ததும் சிலம்பம் பயிற்சிக்கு சென்று விடுவேன். தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்ததால் சிலம்பத்தில் ஏதேனும் புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மாஸ்டரிடம் சொன்னபோது, ‘கண்ணை கட்டிக் கொண்டு 10 மணி நேரம் சிலம்பம் சுற்றுகிறாயா?’ன்னு கேட்டார். அப்படி செய்தால் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெறலாம்னு சொன்னார். எனக்கு அது பிரமிப்பை கொடுத்தாலும், என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. வீட்டில் சொன்ன போது அம்மாவும் அப்பாவும் தயங்கினாங்க. ஆனால் நான் அதில் கடும் ஈடுபாடாக இருந்ததை புரிந்து கொண்டு பச்சைக் கொடி காட்டினார்கள்.

என்னுடைய பத்து வருட பயிற்சி இதற்கு மிகவும் உறுதுணையா இருந்தது. இருந்தாலும் கண்ணை கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றும் போது மயக்கம் வரும், தலை எல்லாம் சுற்றும்ன்னு சொன்னாங்க. அதனால் ஆரம்பத்தில் கண்ணை கட்டிக் கொண்டு மெதுவாக சிலம்பம் சுற்ற சொல்லி மாஸ்டர் பயிற்சிகளை ஆரம்பித்தார். கவனம் சிதறாமல் எச்சரிக்கையாக சிலம்பம் சுற்றவும் சொன்னார்.

ஆரம்பத்தில் கண்ணை கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றும் போது கை கால்களில் அடி விழும். அந்த தவறு ஏற்பட காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டேன். பயிற்சி நேரம் படிப்படியாக 4 மணி நேரம் 5 மணி நேரம் என அதிகமானது. முதலில் 1 மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் ஓய்வு என ஆரம்பித்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை என பயிற்சி அதிகமானது. ஓய்வு நேரம் குறைந்து கொண்டே வந்தது.

எனக்கு படிப்பும் சிலம்பமும் ஒன்று போல தான் இருந்தது. சிலம்ப வகுப்புகளுக்கு போகாமல் என்னால் சரியாக படிக்க முடியாது. 10 ஆம் வகுப்பு தேர்வு நேரத்திலும் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டுதானிருந்தேன். ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றை தொடர முடியாது என்பதால் இரண்டையும் சரிசமமாக செய்து வந்தேன். சிலம்ப பயிற்சிகளுக்கு போனாலும் படிப்பதில் எந்த ஒரு தொந்தரவும் வந்ததில்லை.

எனக்கு 10ஆம் வகுப்பு தேர்வு முடிந்த சமயம் இந்த பயிற்சியினை நான் ஆரம்பித்ததால் படிப்பு தொடர்பான எந்த ஒரு அழுத்தமும் எனக்கு இல்லை. காலை முதல் மாலை வரை பயிற்சி எடுப்பேன். கடைசியாக 10 மணிநேரம் வரை பயிற்சி செய்து தயாராக இருந்தேன். ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் இரண்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் முன்னிலையில் சிலம்பம் சுற்றும் போது 11.15 மணி நேரம் சிலம்பம் சுற்றினேன். 11.15 மணி நேரம் சிலம்பம் சுற்றியது இதுவே முதல் முறை. கின்னஸ் உலக சாதனை படைத்து விட்டேன் என்று பெருமையாக இருந்தாலும், என் சாதனையை நானே முறியடிக்க அடுத்ததாக 20 மணி நேரம் வரை சிலம்பம் சுற்றலாம் என்றிருக்கிறேன்” என மலைக்க வைக்கிறார் அர்ச்சனா!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்ப்பால் குறைவைப் போக்கும் அம்மான் பச்சரிசிக் கீரை! (மருத்துவம்)
Next post காற்றைக் கிழித்துப்போடும் சிலம்பம்!! (மகளிர் பக்கம்)