என் திறமை மேல் நம்பிக்கை வைத்து கம்பை சுழற்றினேன்… ஜெயித்தேன்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 19 Second

குழந்தைகயை பெற்று வளர்த்து வருங்காலத்தில் அவர்களுக்கு சொத்து சேர்த்துவைத்து மனமகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கும். ஆனால் பணம், சொத்து சேர்த்து வைப்பதை விட குழந்தைகளுக்குள் இருக்கும் அவர்களின் திறமையினை கண்டறிந்து அவர்களை அந்தந்த துறையில் வழிகாட்டினால் போதும்… உயர்ந்த நிலையை அடைந்து அவர்களே அவர்கள் வாழ்க்கைக்கான பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

‘அக்கினி குஞ்சை பொந்தில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு’ என்றான் பாரதி. அதுபோல் குழந்தைகளுக்குள் உள்ள பொறியை ஊக்குவிக்க வேண்டியது அனைத்து பெற்றோரின் கடமை.
விருதுநகர் மாவட்டம் பரளச்சி கிராமத்தில் வசிக்கும் கலைச்செல்வன் – அஜிதா தம்பதியின் கடைக்குட்டி தான் தஸ்வினி. கலைச்செல்வன் திருமணம் போன்ற விழாக்களுக்கு பந்தல் போடும் கூலி வேலை செய்து வருகிறார். தாய் அஜிதா, வீட்டில் இருந்தபடியே வீட்டைப் பார்த்துக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் தையல் வேலையும் செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் சம்பாதிக்கும் வருமானத்தைக் கொண்டு தான் குடும்பத்தை நடத்த வேண்டும். இருவர் சம்பாதித்தாலும் விற்கும் விலைவாசியில் குடும்பம் நடத்தவே பெரிய போராட்டமாக இருக்கும். இந்த நிலையில் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தினை அமைத்துத் தரவேண்டும் என்று பெற்றோரும் போராடி வருகிறார்கள். குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தாலும், அவர்களுக்குள் இருக்கும் திறமையை அறிந்து அதற்கான வழியும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

‘‘எங்களுக்கு பெரிய வசதி எல்லாம் கிடையாது. குழந்தைகளை கான்வென்டில் படிக்க வைக்க முடியவில்லை என்றாலும், அவர்களுக்கு படிப்பு அவசியம் என்பதால் அரசுப் பள்ளியில் தான் படிக்கிறார்கள்’’ என்று பேச ஆரம்பித்தார் தஸ்வினியின் தாய் அஜிதா. ‘‘ஒரு முறை என் பெரிய மகனுக்கு சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. நாங்களும் படிப்பு முக்கியம் என்றாலும், ஏதாவது ஒரு கலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் மறுக்காமல் பயிற்சிக்கு அனுப்பி வைத்தோம்.

அண்ணன் சிலம்பம் கற்றுக் கொள்ள போகும் போது எல்லாம் சின்ன பெண் தஸ்வினியும் உடன் சென்று வருவாள். அங்கு அவன் பயிற்சி எடுப்பதை பார்த்தவளுக்கு தானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, எங்களிடம் வந்து அவளின் விருப்பத்தை தெரிவித்தாள். குடும்பத்தில் பெரிய அளவில் பொருளாதார சிக்கல் இருந்தாலும், குழந்தை ஆர்வமாக கேட்ட போது, எங்களால் மறுக்க முடியவில்லை.

அண்ணனுடன் சேர்ந்து இவளையும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தோம். பொதுவாகவே தஸ்வினி ரொம்ப சுட்டி. எந்த ஒரு விஷயத்தையும் உடனே பிடித்துக் கொள்வாள். இரண்டே மாதத்தில் சிலம்ப பயிற்சியினை அப்படியே கிரகித்துக் கொண்டாள். அவளின் வேகத்தை பார்த்த அவளின் கோச் அவளை மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வைத்தார். தற்போது மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்’’ என்றவரை தொடர்ந்தார் மழலை மொழி மாறாமல் அதே குழந்தைத்தனத்துடன் இருக்கும் தஸ்வினி.

‘‘அண்ணன் தான் முதலில் சிலம்பம் பயிற்சிக்கு போனார். அங்கு கற்றுக் கொண்டு வீட்டில் வந்து பிராக்டிஸ் செய்வார். அப்ப கம்பை சுற்றும் போது காற்றில் விஸ்க்… விஸ்க்ன்னு சத்தம் வரும். அவர் பயிற்சி எடுக்கும் போது, நான் அம்மா, அப்பா எல்லாரும் சுற்றி உட்கார்ந்து பார்ப்போம்.

அப்போ அம்மா இது நம்முடைய பாரம்பரிய கலை என்றும், தற்போது அழிந்து வரும் நிலையில் இருப்பதாகவும், இப்போது தான் இந்த கலையைப் பற்றி உணர்ந்து பலர் கற்றுக் கொள்கிறார்கள்ன்னு சிலம்பம் பற்றி நிறைய விஷயங்களை சொல்வாங்க. அதை கேட்டு எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் நம் பாரம்பரிய கலையை நானும் ஏன் கற்றுக் கொள்ள கூடாதுன்னு என் மனசில் ஆர்வம் எழுந்தது. அதனால் நானும் அந்தக் கலையை கற்க விரும்புவதாக அம்மாவிடம் சொன்னேன், பயிற்சிக்கும் போகிறேன்.

வெற்றியும் ெபற்று வருகிறேன். இந்த போட்டி பொதுவாக வெவ்வேறு ஊர்களில் நடக்கும். ஆரம்பத்தில் தனியாக அம்மா, அப்பாவை விட்டு செல்லும் போது பயமாக இருக்கும். அதே சமயம் ஜெயிக்கணும் என்ற வெறியும் இருக்கும். அந்த சமயத்தில் என் ஆசான் தான் எனக்கு தைரியமும், ஊக்கமும் கொடுத்தார். அவர் கொடுத்த பயிற்சியும், தைரியமும் தான் என் வெற்றிக்கு முக்கிய காரணம். போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிறைய பேர் கலந்துக்குவாங்க. என்னைப் பொறுத்தவரை அவர்கள் பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. நம் திறமை மேல் நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். அந்த நோக்கத்தில் தான் கம்பை சுழற்றுவேன். தங்கமும் ஜெயித்து விட்டேன்.

இது வெறும் ஆரம்பம்தான். வரும் காலத்தில் நிறைய போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்பதே என்னோட லட்சியம். அடுத்து தேசிய அளவில் வெற்றி பெற்று பதக்கம் பெறவேண்டும். இதுவே எனது லட்சியம். அதுமட்டுமல்லாமல் படித்து நல்ல ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக வரவேண்டும் என்பது எனது லட்சியம் என்று மழலை மொழியில் சிலம்பத்தை சுற்றியபடி சிரிக்கிறார் தஸ்வினி.

இது குறித்து தஸ்வினியின் தாய் அஜிதா பேசுகையில், ‘‘குடும்பத்தில் பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும், எப்படியாவது பிள்ளைகளை நல்ல இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பாப்பா ‘அம்மா நான் பயிற்சிக்கு போகிறேன்’ என்று கூறிய போது, அவளை அனுப்புவதில் முதலில் சிறிய தயக்கம் இருந்தது. சரி! அவள் விரும்பியதை செய்யட்டும் என்று விட்டுவிட்டேன். ஆரம்பத்தில் இருந்தே அம்மா நான் ஜெயித்து தங்கம் வாங்குவேன் என்று கூறிக்கொண்டே இருந்தாள். நான் அப்போது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை என்னிடம் கொடுத்த போது ரொம்பவே பெருமையாக இருந்தது.

எங்களால் எங்கள் மகள் தஸ்வினிக்கு சொத்து சேர்த்துத் தர முடியாது. ஆனால் அவளுக்கான திறமையை சேர்த்துத் தர முடியும். குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் எல்லாம் என் மகளின் இந்தப் பதக்கத்தை பார்க்கும்போது, பறந்து போய் விட்டது. இனி அவளுடைய கனவு தான் எங்களுடைய லட்சியம். எதில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறாளோ, அதில் அவள் சாதிக்கட்டும்” என்றார் புன்னகையுடன். பெண் குழந்தைகள் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தஸ்வினியும் அவர்களது
பெற்றோரும்தான் சாட்சி!

இளைய தலைமுறையினர் விரும்பும் கலை தமிழர்களின் அடையாளமாக பாரம்பரிய கலைகள் பல இருந்தாலும் சிலம்பக் கலைக்கு என பல்வேறு தனிச்சிறப்புகள் உண்டு. கற்கால மனிதன் தன்னை விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு ஆயுதமாக கம்பை பயன்படுத்தி உள்ளான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கற்கால மனிதர்கள் கம்பை கையாண்ட முறையே பிற்காலத்தில் சிலம்ப கலையாக மாறி உள்ளது.

தற்போது சிலம்ப விளையாட்டு ஒரு தற்காப்பு கலையாக இந்த காலத்து தலைமுறையினரையும் ஈர்த்து அதை பயில வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆண் மற்றும் பெண் என இருபாலரும் இந்தக் கலையைக் கற்கலாம். சிலம்ப விளையாட்டில் பல உட்பிரிவுகள் உள்ளன. மெய்ப்பாடம், உடற்கட்டுபாடம், மூச்சுப்பாடம், குத்துவரிசை, தட்டுவரிசை, பிடிவரிசை, அடிவரிசை என பல பிரிவுகள் உள்ளன. தற்போது சிலம்பத்தில் சுமார் 50 பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரங்கோலியில் தலைவர்களின் உருவங்கள்! (மகளிர் பக்கம்)
Next post திருநங்கைகளுக்கான இலவச பரதப் பயிற்சி!! (மகளிர் பக்கம்)