
இளநரையை போக்கும் மருதாணி!! (மருத்துவம்)
“மருதாணி” என்றாலே அனைவரும் அறிந்திருப்பது மருதாணி இலைகளை அரைத்து கைகளில் வைத்துக்கொண்டால் சிவந்த சாயம் கைகளில் ஏற்படும் என்பது தான். மருதாணி இலைகளுக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன.
*நீரிழிவு அதிகமாக இருப்பவர்களுக்கு நரம்புகள் சீக்கிரம் பலவீனமாகி விடும். அதனால் சிலருக்கு கால்கள் குடைவது போல வலிக்கும். சிலருக்கு பாதம் மரத்துப்போகும். சிலருக்கு பாதத்தில் முள் குத்துவது போன்ற வலி அல்லது நெருப்பில் கால் வைத்தது போல எரியும். இந்த பிரச்னைகளை நீக்கும் வல்லமை மருதாணிக்கு உண்டு. மருதாணி வாதங்கள் வராமல் இருக்கவும், அதனால் வருகிற வலியை நீக்கவும் பயன்படுகிறது.
*மருதாணிக்கும் சரி, அதன் பூவுக்கும் சரி ஆழ்ந்து தூங்க வைக்கும் சக்தி இருக்கிறது. தூக்கமின்மை பிரச்னையிருப்பவர்கள் மருதாணிப் பூங்கொத்தை தலையணை போல் வைத்து உறங்க நல்ல உறக்கம் வரும்.
*உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றலும் மருதாணிக்கு உண்டு.
*அடிக்கடி மருதாணி வைக்கிறவர்களின் சருமத்தில் பூஞ்சைத் தொற்று வராது. சருமத்தின் ஹெல்மெட் என்று மருதாணியை குறிப்பிடலாம்.
*மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்கள்… உள்ளங்கைகளும், உள்ளங்கால்களும்தான். உடலில் இருக்கிற அத்தனை நரம்புகளின் பிரதிபலிப்புப் புள்ளிகளும் இந்த பகுதியில் தான் இணைகின்றன. அதனால் இந்த பகுதிகளில் மருதாணி வைப்பதால் உடல் குளிர்ச்சியாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயபடபடப்பு, ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்தும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
*மாத விடாய்க்கு முன்னதாக பெண்களுக்கு மனதளவில் ஒருவித எரிச்சலும், சிடுசிடுப்பும் காணப்படும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரும். இவற்றுக்கெல்லாம் காரணம் ஹார்மோன் சம நிலையற்ற தன்மைதான். இவர்கள் விரல் முனைகளில் மருதாணி வைப்பதால் ஒற்றைத்தலைவலி போகும். எரிச்சலும் சிடுசிடுப்பும் கூட மட்டுப்படும்.
*நீரிழிவு பிரச்னை இருப்பவர்களுக்கு காலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. அதனால் தான் அவர்களுக்கு கால் கட்டை விரலில் டயபட்டிக் அல்சர் வருகிறது. இவர்கள் கால் விரல்களில் மருதாணி வைக்கலாம்.
*மருதாணி இலைகளை அரைத்து சின்ன சின்ன வடைகளாகத் தட்டி காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து, அந்த எண்ணெயைத் தலைக்கு பயன்படுத்தினால் இளநரையை வரவிடாமல் தடுக்கும். இளநரை உள்ளவர்கள் இதை தொடர்ந்து பயன்படுத்த முடி கருமையாகும்.