தினசரி வாழ்வாதாரத்தால் ஏற்படும் பாதிப்பு! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 22 Second

ஒரு பக்கம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது திருநெல்வேலி மாநகரம். அதே நகரத்தில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் அமைதியாக பெண்கள் தங்கள் வீட்டின் கதவருகில் அமர்ந்து தங்களின் வருமானத்திற்கான வேலையினை பார்த்து வருகிறார்கள். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் இவர்கள் அப்படி என்ன வேலை பார்க்கிறார்கள் தெரியுமா..? இவர்கள் எல்லோரும் புகையிலையை நிரப்பி சுருட்டி பீடிகளை தயாரிக்கிறார்கள். ஓய்வில்லாமல் நாள் முழுக்க பீடி சுருட்டினாலும் அவர்களுக்கு கிடைக்கும் பணம் இருநூறு ரூபாய்தான்.

ஆனால், அதுவே வயதான பெண்கள் என்றால் நூறு ரூபாய். தமிழ்நாடு முழுவதும் 98% ஆண்கள் பீடி குடிக்கிறார்கள் என்றால் 98% பெண்கள் பீடி சுருட்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி முழுக்க பாதி பெண்கள் பீடி சுருட்டியே தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி, வேலூர் பகுதிகளில் இருந்துதான் தமிழ்நாட்டின் 90% பீடிகள் உற்பத்தியாகின்றன. 100 வருடங்களுக்கு மேலாக இந்த ஊரில் உள்ள மக்கள் பீடி சுருட்டுவதை தொழிலாக கொண்டுள்ளனர். பீடி குடிப்பவர்களுக்கே நுரையீரல் புற்று நோய், ஆஸ்துமா, மூச்சிரைப்பு போன்ற நோய்கள் வரும் போது பீடியை தயார் செய்யும் இவர்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாதா என்றதற்கு ‘‘கண்டிப்பாக நோய் வரும். ஆனால் அது எங்களுக்கு வயசான பிறகுதான் தெரியும்’’ என கடகடவென பீடியை சுற்றிக் கொண்டே பேசுகிறார் பார்வதி.

‘‘நான் சின்ன வயசுல இருந்தே பீடி சுருட்டும் வேலை செய்து வருகிறேன். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் என் அம்மாவோட சேர்ந்து நானும் பீடி சுருட்டும் வேலைக்கு போயிடுவேன். ஆறாவது வரைக்கும் தான் படிச்சேன். படிச்சிட்டு இந்த வேலைக்கு வந்துட்டேன். தினமும் காலையில சாப்பாடு செய்து முடிச்சிட்டு இந்த வேலையை தொடங்குனா நாள் முழுக்க பீடி சுருட்டுவேன். கல்யாணமான சில வருடங்கள்ல என்னோட கணவர் இறந்திட்டாரு. குழந்தைகளை படிக்க வச்சது எல்லாமே நான் தான். பீடி தொழிலில் பெரிய வருமானம் கிடையாது. பசங்கள படிக்க வைக்கணும், வீட்டைப் பார்க்கணும் அதனால் தையல் வேலைகளையும் செய்கிறேன்.

ஒரு நாளைக்கு 1000 பீடி சுருட்டுனா 222 கிடைக்கும். ஆனா, ஆயிரம் பீடி அவ்வளவு எளிதா சுருட்டிட முடியாது. அவ்வளவு பீடி சுருட்டணும்னா பீடி இலை மிருதுவா இருக்கணும். ஆனா, பீடி கம்பெனிங்க தரும் பீடி இலைகள் கடினமாகவும், ஓட்டை விழுந்தும் இருக்கும். இலைகளை தான் தருவாங்க. பெரிய இலைகள் என்றால் அதில் இரண்டு பீடிகள் செய்யலாம். சின்ன இலைகள் என்றால் ஒரு பீடிதான் சுற்ற முடியும். பீடிக்குள் வைக்க அவங்க கொடுக்கும் புகையிலை ஆயிரம் பீடிகளுக்கு வராது. இதனால நாங்க வெளி கடையில் சொந்தக் காசை போட்டு பீடி இலையும், புகையிலையும் வாங்கி சுருட்டி தர்றோம். இங்க இருக்குற பெண்கள் எல்லோரும் இந்த வேலையை தான் செய்யறாங்க. இந்த ஊர்ல அவ்வளவா வேற வேலை வாய்ப்புகள் இல்லை. மேலும் இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். கம்பெனிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பெண்கள்  அனைவரும் இந்த   வேலையினை தேர்வு செய்கிறார்கள்’’ என்றவர் பீடி சுருட்டும் முறையை பற்றி விவரித்தார்.

‘‘பீடி இலை பச்சையா இருக்கும் போதே கம்பெனில விலைக்கு வாங்கிட்டு வந்திடுவோம். அதை தண்ணீரில் நனைத்து இரவு காய வைப்போம். காலையில ஓரளவுக்கு காய்ந்திருக்கும். தண்ணியில் நனைத்து காயவைத்தால்தான் பீடி சுருட்டும் போது இலை கிழியாது. பீடி கம்பெனிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக புகையிலையை தயாரிக்கிறார்கள். அதனால் அவர்களுடைய புகையிலையை கம்பெனியிலேயே வாங்கிக் கொள்ளலாம். அடுத்து பீடியின் நீளம், அகலம் மாறாமல் இருக்க அளவு கோலாக ஒரு இரும்பு பட்டை இருக்கும். அதை அளவாக வைத்து பீடி இலையை வெட்டி அதில் புகையிலையை கசக்கி போட்டு சுருட்டி நூற்கண்டால் கட்டி விடுவோம். ஒரு கட்டிற்கு 23 முதல் 25 பீடிகள் வரை வைத்து கட்டுவோம்.

இந்த அளவுகள் பீடி விலையின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து மாறுபடும். தினமும் காலையில் செய்து முடித்த பீடிகளை எடுத்துக் கொண்டு போய் கம்பெனியில் கொடுத்தால் பீடிகளை பரிசோதனை செய்வார்கள். அதில் பீடி இலை கறுத்திருந்தாலோ அல்லது உயரம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ரிஜெக்டெட் பீஸ் போனது போக மீதி பீடியினை கணக்கிட்டு எங்களின் கணக்கு புத்தகத்தில் வரவு வைத்துக் கொள்வார்கள்.

நாங்க சுருட்டும் பீடிக்கான சம்பளம் வாரம் ஒருமுறை தருவார்கள். அதில் பி.எப் பென்ஷன் என்று ஒரு நாளைக்கு 27 ரூபாய் பிடிப்பாங்க. அதிக பட்சம் இதன் மூலம் ஒரு பெண் ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கலாம். ஆனால் இப்ப பி.எப் பென்ஷனுக்கான சலுகைகளும் சரியாக பிடிப்பதில்லை என்கிறார்கள் ஒரு சில பெண்கள். இந்த தொழில் செய்வதால் நாங்களும் சில உடல் உபாதைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். புகையிலையை கசக்கி பீடி இலையில வைக்கும் போது ஒரு விதமான புகை வெளியாகும். அதனால் இருமல், தும்மல் ேபான்ற பிரச்னை வரும். நாங்க அந்த நேரத்தில் மருந்து வாங்கி குடிச்சிப்போம், ஆஸ்துமா, காசநோய், புற்றுநோய் போன்றவை வரும்னு சொல்றாங்க. அந்த பிரச்னை எல்லாம் வயசான பிறகுதான் எங்களுக்கு தெரிய வரும். திருநெல்வேலி அதிகம் வளர்ச்சியடையாத பகுதி என்பதால், இங்கு பெண்களுக்கு வேலை வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த காரணத்தாலதான் நாங்க இந்த வேலையை செய்கிறோம்’’ என்கிறார் பார்வதி.

‘‘ஓய்வே இல்லாத தொழில்தான் இந்த பீடி சுருட்டும் தொழில். இரவு ஒரு மணிக்கும் பீடி சுருட்டுபவர்கள் இருப்பாங்க’’ என்று பேசத் தொடங்குகிறார் சி.ஐ.டி.யு  பீடி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட முன்னாள் தலைவர் மோகன்.‘‘கணவர் இல்லாமல் தனியாக வாழும் பெண்களே பீடி சுருட்டும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த வேலைதான் அவர்களின் வாழ்வாதாரமாக  உள்ளது. பிள்ளைகள் படிப்பு முதல் அவர்களின் வாழ்க்கைக்கான சம்பாத்தியத்தை ஏற்படுத்தி தருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வட மாநிலங்களிலும் அதிகம் இந்த வேலைகளை செய்வது பெண்கள் மட்டுமே. ஓய்வில்லாத தொழில் என்று இதை சொல்லலாம். வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என்ற ஒரே காரணத்தால், பெண்கள் இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்களில் ஒரு சிலர் இந்த வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 10 பீடி பிடிப்பவருக்கே புற்றுநோய் வருகிறது என்று சொல்கிறார்கள்.

தினமும் 1000 பீடிகளை சுற்றும் போது அதிலிருந்து வரும் நெடியால் இவர்களுக்கும் புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது குறித்து சி.ஐ.டி.யு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தனிநபர் வழக்கு ஒன்றை மதுரையில் தொடுத்தது. நீதிமன்றமும் வழக்கறிஞர் பகுபட்சா என்பவரின் தலைமையில் ஒரு குழுவை நியமித்து பீடி தொழிலாளர்கள் அனைவரையும் பரிசோதிக்க உத்தரவிட்டது. அப்படி பரிசோதித்ததில் பெண்களுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த நோயின் பாதிப்பு இருப்பதே தெரியாமல் பெண்கள் இந்த வேலையினை செய்து வருகிறார்கள். இதையடுத்து தமிழ்நாடு முழுக்க பீடி தொழிலாளர்களுக்கென்று 22 சிறப்பு காச நோய் மருத்துவமனைகள் திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் மட்டும் 11 சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. போதிய நிதி வசதி மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த மருத்துவமனைகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை. இது போக பீடி தொழிலாளர்களுக்கென்று மருத்துவ பாதுகாப்பு, பென்ஷன் குறித்த சட்டம் உள்ளது. அதையும் தற்ேபாது யாரும் பின்பற்றுவதில்லை’’ என வேதனையோடு சொல்கிறார் மோகன்.

பீடி  சுற்றுவதால் வரும் நோய்கள்…

பீடி சுற்றுவதால் என்னென்ன நோய்கள் எல்லாம் வருகிறது… இதை எப்படியெல்லாம் தடுக்கலாம் என மருத்துவர் புகழேந்தி கூறினார். ‘‘பீடி இலைகளில் வைக்கப்படும் நிக்கோடின் துகள்களை கைகளால் கையாளும் போது புற்று நோய், ஆஸ்துமா போன்ற தாக்கம் ஏற்படும். இதில் நிக்கோடின் துகள்கள் எந்த வழிகளில் எல்லாம் நம்முடைய உடம்பிற்குள் செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். புகையாக நம்முடைய உடலுக்குள் செல்கிறதா? அல்லது சாப்பிடும் போதா? தண்ணீர் குடிக்கும் போதா? என பார்க்க வேண்டும்.

 வாய் வழியாக செல்லும் போது வாய் புற்று நோய்கள், நுரையீரல் புற்று நோய், இதய நோய் பிரச்னைகள் வருகிறது. தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இது மட்டுமில்லாமல் தினமும் உட்கார்ந்து கொண்டே வேலைகள் செய்வதால் முதுகு மற்றும் கழுத்து வலி, சுவாச நோய், பார்வை பிரச்சனைகள், மகளிர் பிரச்சனைகள், மூட்டு வலிகள், தசை கூட்டு பிரச்சனைகள் ஏற்படும். இதில் முக்கியமானது நோய் தாக்கப்பட்டதற்கான அறிகுறியே இருக்காது.

அதனால் இந்த வேலையில்  தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு அவசியம். இதை தடுக்க கையுறைகளை அணிந்து வேலைகளை செய்யலாம். சாப்பிடும் முன் கைகளை சோப்புகளால் நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பீடி சுருட்டும் போது மாஸ்க் அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். இது ஒரு பாதுகாப்புதான் என்றாலும், அவர்கள் அவ்வப்போது மருத்துவ ஆய்வு செய்வது அவசியம். அதன் மூலம் நோயின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்’’ என்றார் டாக்டர் புகழேந்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரத்த தானம் செய்வோம்… மனிதம் போற்றுவோம்! (மகளிர் பக்கம்)
Next post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!! (அவ்வப்போது கிளாமர்)