சிறுகதை-நீ பாதி நான் பாதி!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 52 Second

அன்று அந்த மாதத்தின் கடைசி தேதி. வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மணவாளன் “இந்தா” என்று சம்பளம் இருக்கும் கவரை மனைவி முன் நீட்டினான். அதை வாங்கி பிரித்துப் பார்த்த மாலதி, “ஏங்க! இந்த மாத சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் குறையுது” என்றாள்.“நண்பன் ஒருவன் கைமாத்தாக ரூ.1000 கேட்டான். கொடுத்தேன்” என்றான் மணவாளன்.

“பொய் சொல்லாதீங்க. நேற்று கடன் வாங்கிக் குடிச்சிருப்பீங்க. இன்னிக்கு இவன் சம்பளம் வாங்கியதும் சட்டையை பிடித்திருப்பான், கொடுத்திருப்பீர்கள்”.
“அதுக்கு என்ன இப்போ?”

“நீங்கள் கொடுக்கிற சம்பளத்தில் குடும்பம் நடத்துறதே சிரமம். இந்த அழகில் குடி, கூத்து என்ற வீண் செலவு செய்தால் எப்படி?”“கொடுப்பதை வச்சுக் குடும்பம் நடத்து.”“என்னால் இந்த கொஞ்சப் பணத்தை வைத்து சமாளிக்க முடியாது.”“முடியாவிட்டால், உன் அம்மா வீட்டிற்குப்போ.”

“அப்போ எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”

“அந்தத் தப்பை செய்துட்டுதான் முழிக்கிறேன்.”“உங்களைக் கட்டிக்கிட்டு முழிப்பது நான்தான்.”இப்படி தினமும் ஏதாவது ஒரு காரணத்திற்காக மணவாளனும், மாலதியும் சண்டை போடுவது வழக்கம்.இந்தத் தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. குழந்தையின் பெயர் சாந்தி. பெயருக்கேற்றபடி அமைதியான குழந்தை. ஆனால் அக்குழந்தைக்கு எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தது. அப்பா, அம்மா சண்டை போடுவதை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கும்.

தம்பதிகளுக்குள் சண்டை வந்தாலும், இருவருக்கும் குழந்தை மீது அதிக பாசம் உண்டு. பெற்றோருடைய செயல்பாடுகளைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ, குழந்தை சாந்தி படுத்துவதில்லை. பிடிவாதம் பிடிப்பதில்லை. அமைதியாக விளையாடும். மணவாளன்-மாலதி தம்பதியினர் ‘வசந்த பவனம்’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ள மூன்று வீடுகளில் நடுவில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இரு பக்க வீடுகளிலும் இரு வெவ்வேறு குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

இரு பக்க வீடுகளில் உள்ளவர்கள், மணவாளன்-மாலதி இருவரும் தினமும் சண்டை போடுவதைப் பார்த்து ஆரம்பத்தில் முகம் சுழித்தனர். பின்னர் அவர்களுக்குப்
பழகிப் போய் விட்டது. யாரும் கண்டு கொள்வதில்லை.குழந்தை  சாந்தி மட்டும் இருபக்க வீடுகளுக்கும் சென்று விளையாடுவாள். அவளை எல்லோருக்கும் பிடிக்கும்.“பாவம்! இக்குழந்தை சண்ைடபோடும் அப்பா, அம்மா இருவருக்கும் இடையில் கிடந்து தவிக்கிறது” என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

மணவாளனுடன் அடிக்கடி யாராவது அவனுடன் வேலை செய்யும் நண்பன் உடன் வருவான். அவனுக்கும் சேர்த்து இரவுச் சாப்பாடு செய்து மாலதி வழங்க வேண்டும்.
ஒரு நாள் மாலை, வேலை முடிந்து திரும்பிய மணவாளனுடன் உடன் வேலை செய்யும் குணசீலன் என்பவனும் வந்தான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் மணவாளன், “மாலதி! இவன் என் நண்பன், குணசீலன். இவனுக்கும் சேர்த்து இரவுச் சாப்பாடு எடுத்துவை” என்றான்.

மாலதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருக்கின்ற நிலைமையை நண்பன் முன்னிலையில் எப்படி சொல்ல முடியும்? அமைதியாக இரண்டு தட்டுகளை எடுத்து வந்து வைத்தாள். மணவாளனும் குணசீலனும் வந்தமர்ந்ததும், பரிமாறத் தொடங்கினாள்.கூட்டு, கறி, சாதம், குழம்பு, ரசம், மோர் என்று வரிசையாகப் பரிமாறினாள். இருவரும் வயிறார உணவருந்தினர். குணசீலன் மாலதியைப் பார்த்து “அண்ணி! சமையல் பிரமாதம். ரொம்ப நன்றி” என்று கூறினான். பின்னர் விடைபெற்றுச் சென்று விட்டான்.

மாலதி பாத்திரங்களைக் கழுவி சமையல் மேடையில் கவிழ்த்து வைத்தாள். பின் டம்ளரில் தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தாள். “நீ சாப்பிட்டாயா?” என்றான் மணவாளன்.
“ஆச்சு” என்றாள் மாலதி.அன்று இரவு மணவாளன் தூங்கவில்லை. பலவாறு சிந்தித்தான். “மாலதி எல்லா உணவையும் பரிமாறி விட்டு வெறும் பாத்திரத்தை உள்ளே எடுத்துச் சென்றாள். மீதம் எப்படி இருக்கும்? நான் பார்க்காமல் இருந்தது தவறு” என்று நினைத்தான்.

மறுநாள் காலையில் எழுந்த
மணவாளன் “மாலதி! மாலதி!’’
என்று அழைத்தான்.
“என்னங்க” என்று கேட்டபடி மாலதி அங்கு வந்தாள்.

ஏதோ சண்டை நடக்கப் போகிறது என்று எண்ணிய குழந்தை சாந்தி பக்கத்து வீட்டிற்கு ஓடி விட்டாள்.

“மாலதி! இப்படி உட்கார்”
என்றான் மணவாளன்.
மாலதி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.
இப்போது மணவாளன்
கேட்டான்.

“மாலதி! ஒன்று கேட்பேன். உண்மையைச் சொல்ல வேண்டும்”
“நீங்கள் எப்படியோ? நான்
உன்மையாகத்தான் இருக்கிறேன்.”
“சரி! நேற்று இரவு
நீ சாப்பிட்டாயா?”
“திடீரென்று எதற்கு இந்த சந்தேகம்?”

“நான் சொல்லட்டுமா? நீ நேற்று உனக்கு வைத்திருந்த உணவை குணசீலனுக்குப் பரிமாறிவிட்டுப் பட்டினி கிடந்திருக்கிறாய்.”
“அதுக்கென்ன இப்போ? வந்தவர்களை உபசரிப்பதுதானே முக்கியம்.”
“என்னிடம் சொல்லி இருக்கலாமில்லையா?”

வந்த விருந்தாளி முன்பாகச் சொல்ல முடியுமா? அந்த நேரத்தில் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.”“அதற்கு முன்பும் பல நண்பர்களை அழைத்து வந்திருக்கிறேன். அப்போதும் உனக்கு வைத்திருந்த உணவைத்தான் பரிமாறினாயா?”மாலதி, மௌனமாகத் தலைகுனிந்தாள்.இப்போது மணவாளனின் சுய அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

“சே! நான் சம்பளத்தை ஒழுங்காகக் கொண்டு வந்து தந்திருந்தால், மனைவி பட்டினி கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்காதே. போதையில் எதையும் உணராமல் போனேனே. இதே நிலை நீடித்தால் என் மாலதியை நான் இழக்க வேண்டியது வரும். அவள் நல்ல மனைவி. நான் நல்ல கணவனா?” தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

இப்போது மாலதியை பார்த்துப் பேச ஆரம்பித்தான். “மாலதி! என்னை மன்னித்து விடு. பொறுப்பாக இருக்க வேண்டிய நான், குடிப்பழக்கத்திற்கு ஆளானேன். நான் கொடுத்த கொஞ்சப் பணத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய்? உனக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி எனக்கு இல்லாமல் போய் விட்டதே. மாலதி! நம் குழந்தை மீது சத்தியம். இனி நான் குடிக்கமாட்டேன். உன்னையும், குழந்தையையும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு” என்றான்.

“உண்மையாகவா? குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்களே” என்றாள் மாலதி.“அது தான் குழந்தை மீது சத்தியம் செய்து விட்டேனே”.“மாலதியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. எனக்கு சில நாட்களாகவே வெறுப்பின் காரணமாகத் தற்கொலை எண்ணம் வந்ததுண்டு. குழந்தைக்காக அதை மாற்றிக் கொண்டேன். நீங்கள் இவ்வளவு சீக்கிரம் மாறுவீர்கள் என்று நினைக்க வில்லை. கடவுள் என் மீது கருணை காட்டி விட்டான்” என்றாள்.

“மாலதி! பொறுப்பு என்பது மனைவிக்கு மட்டுமல்ல, கணவனுக்கும் உண்டு. நான் அதை மறந்தது பெரிய தவறு. கணவன்-மனைவி இருவரில் யார் பொறுப்பின்றி நடந்து கொண்டாலும், குடும்பத்திற்கு நல்லதல்ல. என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி மாலதியைக் கட்டிக் கொண்டு அழுதான். அப்போது ேபச்சுக் குரல் கேட்டு இருவரும் விலகி நின்று முன்னால்
பார்த்தனர்.

அங்கே பக்கத்து வீட்டு பரமசிவம் அவர் மனைவி பார்வதி ஆகியோர் நின்றிருந்தனர். பார்வதியின் இடுப்பில் குழந்தை சாந்தியும் இருந்தாள். “நீங்கள் எப்போது வந்தீர்கள்?” என்றான் மணவாளன். “மணவாளா நீங்கள் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் வந்து விட்டோம். உங்கள் குழந்தை சாந்தி ஓடி வந்து, “தாத்தா! அப்பா, அம்மா சண்டை போடறாங்க” என்று அழுதாள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று பயந்து நானும், பார்வதியும் சாந்தியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தோம்” என்றார் பரமசிவம்.

அப்போது பார்வதி சாந்தியைக் காட்டி “மாலதி! சாந்தி நல்ல கெட்டிக்காரக் குழந்தை. நீங்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தது உங்கள் மூவரின் எதிர்காலத்திற்கு நல்லது” என்றாள்.
“மணவாளா நீ என்ன படித்திருக்கிறாய்?” என்றார் பரமசிவம்.

“பிஏ” என்றான் மணவாளன்.“நாளை காலை கல்விச் சான்றுகளுடன் எங்கள் கம்பெனிக்கு வந்து என்னைப் பார். உனக்கு ஒரு நல்ல வேலை போட்டுத்தர ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
“ரொம்ப நன்றி சார்” என்று சொல்லி மணவாளனும், மாலதியும் பரமசிவம் தம்பதிகளின் காலில் விழுந்து வணங்கினர்.“நல்லாயிருங்க” என்று வாழ்த்தினர்.குழந்தை சாந்தி ஓடி வந்து பரமசிவம்-பார்வதி ஆகியோரின் கால்களில் விழுந்து வணங்கினாள். பார்வதி குழந்தையை தூக்கி முத்தமிட்டாள்.மணவாளனும் மாலதியும் தங்கள் குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தனர். வானொலியில் நீ பாதி! நான் பாதி கண்ணே என்ற பாடல் ஒலித்தது.

தொகுப்பு : ஜி. ராதா

தெய்வீக மூலிகை துளசி

‘துளசி’ ஒரு தெய்வீக மூலிகை. அதனால்தான் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்குப் பிரியமான துளசியை போட்டு தீர்த்தமாக வழங்குகிறார்கள். அதன் பலன்கள் அளவிட முடியாதது.
அதில் ஒரு சிலவற்றை ெதரிந்து கொண்டு பலனடைவோம்.

*தினமும் இரண்டு முறை துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுவதால் மனஅழுத்தம் குறையும், ரத்த ஓட்டம் சீராகும். சிறுநீரகக் கற்கள் இருந்தால் வெளியேறும். கற்கள் வருவதை தடுக்கும்.

*துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுவதால் வாயில் வீசும் துர்நாற்றம் மறையும்.

*உடம்பில் ஏற்படும் கொப்புளங்களுக்கு துளசி இலையை, தண்ணீர் விட்டு அரைத்து பூசி வந்தால் எளிதில் குணமாகும்.

*சரும நோய்களுக்கு துளசிச்சாறு ஒரு சிறந்த நிவாரணி. காலையில் ஒருவேளை குடித்து வந்தால் நோய்கள் கட்டுப்படும்.

*துளசி இலையை தணலில் வாட்டி சாறு பிழிந்து காலை, மாலை இருவேளைகள் காதில் விட்டு வந்தால் காது சம்பந்தமான நோய்கள் தீரும்.

*மழை காலத்தில் துளசி இலையை தேநீர்போல காய்ச்சி குடித்து வந்தால் விஷக்காய்ச்சல்கள் வராது.

*தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலை கஷாயம் குடித்து வந்தால் புண்கள் மறைந்துவிடும்.

*துளசி இலைச்சாறுடன், சிறிதளவு கற்பூரம் கலந்து பல்வலி உள்ள இடத்தில் பூசினால் வலி மறையும்.

*வெட்டுக்காயங்களுக்கு துளசி இலைச்சாறு பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

*துளசி இலைச்சாறுடன், சம அளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து, ஊற வைத்து, குளித்து வந்தால் பேன், பொடுகுத்தொல்லை நீங்கும். தெய்வீக  மூலிகையான துளசியை வளர்ப்போம். பயன் பல பெறுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விபத்து கால முதலுதவிகள்…!! (மருத்துவம்)
Next post கல்லையும் கைவினை கலைப் பொருளாக மாற்றலாம்! (மகளிர் பக்கம்)