பெண் சாதனையாளர்களை உருவாக்குவேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 39 Second

‘‘நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் புதிதாக ஏதாவது செய்தால் சாதிக்கலாம்’’ என சொல்கிறார் ராஜராஜேஸ்வரி. 1.41 நிமிடத்தில் இந்திய வரைபடத்தை ஆரி டிசைனில் வடிவமைத்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர் இவரது மாணவிகள். ஆரி டிசைன்களை கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து பல பெண்களை தொழில் முனைவோராக மாற்றி வரும் ராஜராஜேஸ்வரியிடம் பேசினோம்.

‘‘எனக்கு சொந்த ஊரு திருச்சியில இருக்குற புதுக்கோட்டை. என்னோட அப்பா நான் 12வது படிக்கும் போதே இறந்துட்டார். அம்மாதான் என்னை படிக்க வச்சாங்க. நான் எம்.ஏ படிச்சி முடிச்சதும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆங்கில துறையில் ஆசிரியரா வேலைக்கு சேர்ந்தேன். என்னுடையது காதல் திருமணம். கல்லூரியில் படிக்கும் போதே இருவருக்கும் பிடித்து போக இரு வீட்டாரின் சம்மதத்தோடு எங்க இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் ஆசிரியர் வேலையை தொடர்ந்து கொண்டே தொலைதூர கல்வி மூலம் எம்ஃபில் படித்து முடித்தேன்.

இதற்கிடையில் கர்ப்பமானேன். அதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்த நேரத்தில் என்னால் சும்மா இருக்க முடியாத காரணத்தால் ஏதாவது கை வேலை கற்றுக் கொள்ள நினைச்சேன். அப்படித்தான் ஆரி வேலைப்பாட்டினை கற்றுக் கொண்டேன். பொழுது போக்கிற்காகத்தான் நான் இதனை கற்றுக் கொண்டேன். ஆனால் அதன் மேல் எனக்கு தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்பட்டது. பல விதமான டிசைன்களை செய்து பழகினேன்’’ என்றவர் மதுரைக்கு குடிபெயர்ந்துள்ளார்.

‘‘நானும் என் கணவரும் திருச்சியில் வசித்து வந்தோம். என் மாமனார், மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் என் கணவரின் சொந்த ஊரான மதுரை திருமங்கலத்திற்கு குடி பெயர்ந்து வந்துவிட்டோம். மதுரைக்கு வந்த பின்னர் குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டேன். நான் ஏற்கனவே வேலை பார்த்து வந்ததால், என் மாமனார் ஏன் திறமையை வீணாக்க வேண்டும் என்றார். குழந்தைகளை அவர்களால் முழு நேரம் பார்த்துக் கொள்ள முடியாது. அதே சமயம் நான் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டும். என்ன செய்யலாம்னு யோசித்த போது தான், ஆரி டிசைன்ஸ் செய்ய முடிவு செய்தேன். அதற்கான ெபாட்டீக் கடை ஒன்றை துவங்கினேன்.

முதலில் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு தான் செய்து கொடுத்தேன். அவர்களுக்கு பிடிக்கவே, அவர்கள் மூலமாக பலர் என்னை நாடி வந்தனர். நிறைய ஆர்டர் வந்ததால் என்னால் தனியாக அனைத்து வேலையினையும் பார்க்க முடியவில்லை. அதனால் வேலைக்கு ஆட்களை நியமித்தேன். என்னிடம் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு நானே பயிற்சி அளித்தேன். பின்னர் ஏன் இதையே ஒரு தொழிலாக செய்யக் கூடாது என தோன்றவே,  ஆரி டிசைன்களுக்கான பயிற்சி வகுப்பினை தொடங்கினேன். இப்போது வரை 80 மாணவர்கள் என்னிடம் ஆரி டிசைன் குறித்து பயிற்சி எடுத்து வருகிறார்கள்’’ என்றவர், ஆரி டிசைன் குறித்து ேபாட்டிகளும் நடத்தி வருகிறார்.

‘‘எந்த ஒரு வேலையை கற்றுக்ெகாண்டாலும், அதற்கான தனிப்பட்ட திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் என் மாணவர்களுக்கு இத குறித்து போட்டி வைப்பேன். அதில் திறமையான டிசைன்களை வடிவமைப்பவர்களுக்கு பரிசு அளிப்பேன். இதனால் மாணவர்களும் மிகவும் ஆர்வமாக பல புது டிசைன்களை வடிவமைப்பார்கள். இந்த நேரத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் ஆரி வேலைப்பாட்டில் சாதனை செய்யலாமே என்றார்.

அவர் பாலிடெக்னிக் பயிற்சியாளர். அவருடைய மாணவர் ஒருவர் 10 வகையான நோபல் ரெக்கார்டு செய்திருப்பதாக தெரிவித்தார். அதுவரை நான் சாதனைகள் பற்றி சிந்தித்தது கிடையாது. அவர் சொன்ன பின்னர் சரி செய்து பார்க்கலாம் என தோன்றியது. இந்திய வரைபடத்தை ஆரி டிசைனில் மூவர்ண வண்ணங்களில் துணியில் தைத்து அந்த வரைபடத்திற்குள் மரங்களை பாதுகாப்போம் என்ற வாசகத்தோடு 1.41 நிமிடங்களில் செய்து முடித்து நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றோம். இந்த ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி நடக்கும் போது நானும் என்னுடைய வகுப்பு மாணவிகளுக்கு என தனியாக ஒரு போட்டி வைத்திருந்தேன். அதில் 1.33 நிமிடங்களில் என்னுடைய மாணவிகள் ஆரி டிசைன்கள் செய்து அசத்தினர். அவர்களுக்கு நான் தனியாக பரிசுகளை வழங்கினேன்’’ என்றவர் பெண்கள் அதிகம் ஆரி வேலைப்பாட்டினை விரும்பும் காரணம் பற்றி விவரித்தார்.

‘‘பெண்கள் அதிகமாக ஆரி வேலைப்பாட்டினை தங்களின் வேலையாக தேர்வு செய்ய முக்கிய காரணம், இதில் ஒருவிதமான மன அமைதியை உணர முடியும். தினமும் என்னிடம் வரும் மாணவிகள் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் செல்வார்கள். இந்த வேலை அவர்களுக்கு வீட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடும் இடமாக உள்ளது. இதனாலேயே கைவினை சார்ந்த வேலைகளின் மேல் பெண்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதே போல வெளியில் ஆரியில் என்ன புதுமையான டிசைன்களை கொண்டு வர முடியும் என்று யோசித்து வேலை செய்கிறார்கள். புதுப்புது டிசைன்களைதான் வாடிக்கையாளர்களும் விரும்புகிறார்கள். தேடல் பரந்து விரியும் போது, அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பெண்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஒரு வேலையினை அமைத்து தருகிறேன். பல சாதனை பெண்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவும் கூட. அதற்காக என்னால் முடிந்த அளவு உதவிகளை செய்வேன்’’ என்றார் ராஜராஜேஸ்வரி.     

தொகுப்பு : மா.வினோத்குமார் 

தேங்காய்ப்பால் க்ரீம் ஹேர் பேக்

நிறைய பேருக்கு தலை மண்டையில் முடி குறைவாக இருக்கும். தலையை சீப்பை வைத்து சீவினால் கூட வழுக்கை தெரியும். அப்படி முடி விழுந்த இடத்தில் மீண்டும் முடிவளர அதேசமயம் நெருக்கமாக முடி திக்காக வளர விரும்பினால் இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க சூப்பரான ஹேர் பேக்கை உபயோகிக்கலாம். இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு தேவையான ஒரே ஒரு பொருள் தேங்காய். அந்தஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது?

முதலில் 1/2 மூடி அளவு தேங்காயை எடுத்து துருவி மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த தேங்காயை வடிகட்டினால் திக்கான தேங்காய்ப்பால் நமக்கு கிடைக்கும். அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். அதாவது 8 மணி நேரம் இந்த தேங்காய்ப்பால், அப்படியே இருக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெளியிலேயே வையுங்கள்.

எட்டு மணி நேரம் கழித்து இந்த தேங்காய்ப்பாலை திறந்து பார்த்தால், தயிர் போன்ற திரவம் நமக்கு கிடைத்திருக்கும். அடியில் தண்ணீர் அப்படியே தங்கி இருக்கும். இதை போட்டு கரண்டியை வைத்து கலந்து விடக்கூடாது. அப்படியே ஒரு வடிகட்டியில் மீண்டும் ஃபில்டர் செய்து கொள்ளுங்கள். தண்ணீர் அனைத்தும் வடிந்து விடும். மேலே கிரீமியாக கோக்கனட் கிரீம் கிடைத்திருக்கும். இதுதான் நம் தலை முடிக்கு தேவையான கோக்கனட் க்ரீம் ஹேர் பேக்.

இதை அப்படியே உங்களுடைய தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். தலையின் மயிர்க்கால்களில், வேர்ப்பகுதியில் இந்த கிரீம் நன்றாக பட வேண்டும். அதன் பின்பு முடியின் மேல் பக்கத்தில் இருந்து நுனிப்பாகம் வரை இந்த க்ரீமை அப்ளை செய்துவிட வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை போடவேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் வழுக்கையான இடத்தில் புதிய முடி முளைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்.. மில்லியன் வியூவ்ஸ்.. லட்சங்களில் வருமானம்! (மகளிர் பக்கம்)
Next post நைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு! ஹெல்த்… டயட்… லைஃப் ஸ்டைல்! (மருத்துவம்)