பட்டுச் சேலையுடன் இணைந்து பயணிக்கும் காஞ்சிபுரம் ஜரி!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 37 Second

க்ளட்சஸ்!பெண்களுக்கு ஃபேஷன் என்றாலே ஆடைக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்தது ஹாண்ட்பேக்குகள்தான். பல வெளிநாட்டு லெதர் ஹாண்ட்பேக்குகளை அதிக விலைக்கு வாங்கும் பெண்கள், இப்போது இந்தியாவில் நம் பாரம்பரிய பட்டுத்துணியால் உருவாக்கப்படும் கலைநயமிக்க ஹாண்ட்பேக்குகளையும் க்ளட்சஸ்களையும் விரும்பி வாங்குகின்றனர். இதை மயிலாப்பூரில் இருந்தபடியே சிங்கப்பூர், மலேசியா, கனடா என உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு அவர்களின் காஞ்சிபுரம் பட்டுக்கு தகுந்த க்ளட்சஸ்களை அனுப்பி வருகிறார் ஸ்ரீத்தி.

ஸ்ரீத்தி சடகோபன், பிறந்து வளர்ந்தது ஸ்ரீரங்கத்தில். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்திருந்தாலும் அந்த துறையில் பணிபுரிய விருப்பமில்லாமல், தன்னுடைய ஃபேஷன் என்னவென்று பொறுமையாக கண்டுபிடிப்போம் என அமைதியாக தனக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் கற்று வந்துள்ளார்.

‘‘பொதுவாக திருமண நிகழ்ச்சிகளுக்கு காஸ்ட்லியான பட்டுப்புடவைகளை அணிந்து செல்லும் போது, அதற்கு ஏற்ற அதே மதிப்புடைய ஹாண்ட்பேக்குகளை வாங்குவது எனக்கு சவாலாகவே இருந்து வந்தது. பல பெருமைகளையும் மதிப்பையும் தாங்கி நிற்கும் நம் பாரம்பரிய உடைகளுக்கு இந்த லெதர் பேக்குகள் விலைஉயர்ந்தவைகளாக இருந்தாலுமே அதற்கு ஈடாக இல்லை என்பதுதான் இங்கு பலரின் பார்வையாக இருக்கிறது.

அப்போதுதான் சரி இந்த மதிப்புக்குரிய காஞ்சிபுரம் பட்டிலேயே கைப்பைகளையும் தயாரிக்கலாமே என்ற யோசனை தோன்றியது. இதை என் வீட்டில் சொன்ன போது, எங்களுடைய வீட்டில் வேலை செய்யும் சாந்தி, தனக்கு ஹாண்ட்பேக்குகள், பைகள் செய்ய தெரியும் என்றார். அதனால் சாந்தியின் திறமையையும் என்னுடைய க்ரியேட்டிவிட்டியையும் பயன்படுத்தி என்னுடைய கனவை நிஜமாக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.

2019 நவராத்திரி சமயம், என் அம்மா வீட்டில் கொலு வைத்திருந்தார். வரும் விருந்தினருக்கெல்லாம் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். நானும் சாந்தியும் சேர்ந்து முதல் முறையாக அப்போது மிகவும் பிரபலமாக இருந்த கலம்காரி டிசைனில் பர்ஸ்களை உருவாக்கி கொடுத்தோம். இது விருந்தினர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதை யார் செய்தது, எங்கு வாங்குவது என தொடர்ந்து எங்களுக்கு ஆர்டர்கள் வர ஆரம்பித்தது.

சில நாட்களிலேயே ‘ஸ்ரீ ரங்’ என நான் பிறந்த ஊரையும், என் பெயரையும் அடிப்படையாகக் கொண்டு புதிய தொழிலுக்கு பெயர் வைத்து ஆரம்பித்தோம். வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரமான பொருட்களில் இந்த க்ளட்சஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று பல மாதங்கள் செலவழித்து சிப், பாக்கெட், மெட்டல் செயின் என ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து தேர்வு செய்தோம். பொதுவாக மார்க்கெட்டில் யாருமே யோசிக்காத, யாரிடமும் இல்லாத டிசைன்களை செய்தேன்.

என் தோழிதான், உன்னுடைய டிசைன்கள் ரொம்ப அழகா இருக்கு. இதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தால் இன்னும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்றாள். பைஸ்ரீ ரங் – @bysrirang எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினேன். அவள் சொன்ன மாதிரியே என்னுடைய ஸ்ரீரங் க்ளட்சஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. இந்த ஹாண்ட்பேக்குகள் எல்லாமே கையில் நெய்யப்பட்ட பட்டுத் துணியில் இருந்து கையிலேயே பைகளாகவும் தைக்கப்படுகிறது.

நான் ஒவ்வொரு க்ளட்ச் அனுப்பும் போதும், இது யார் கைக்கு போகப்போகிறது என்று ஆவலுடன் இருப்பேன். அப்போது ஏற்கனவே அந்தத் தளத்தில் பிரபலமாக இயங்கி வந்த மார்கழி டிசைன்ஸ் உரிமையாளர் மதுலிகா கபிலவை, என்னுடைய க்ளட்சஸ்களை பார்த்து, அது பிடித்துப்போக, உடனே என் பொருட்களை அவருடைய பக்கத்தில் ப்ரமோட் செய்தார். இது வாடிக்கையாளர்களுக்கு என் மீது நம்பிக்கை வர செய்தது. தைரியமாக ஆன்லைனில் என் பொருட்களை வாங்கினர்.

ஸ்ரீரங் பொருட்கள் எல்லாமே லிமிடட் எடிஷன்தான். ஒரே டிசைனில் நூறு பேக்குகள் நாங்கள் தயாரிப்பது இல்லை. ஒரு டிசைனில் ஐந்து பேக்குகளுக்கும் குறைவாகத்தான் செய்வோம். எனக்கும் சரி, என் குழுவினருக்கும் சரி, தொழிலை தாண்டி இந்த ஹாண்ட்பேக் செய்வதை ஒரு கலையாகவும் க்ரியேட்டிவிட்டியாகவும்தான் நாங்கள் பார்க்கிறோம். காஞ்சிபுரத்தில் எனக்கு தெரிந்த நெசவாளர்கள் இருக்கிறார்கள்.

அங்கே நம்பத்தக்கவர்களிடமிருந்து தான் பட்டு வாங்குவேன். வாடிக்கையாளர்கள் மூன்று வருடம் கழித்தும், உங்களுடைய பேக் புதுசு போல அப்படியே இருக்கிறது என்று போட்டோ எடுத்து அனுப்புவார்கள். எப்படி ஒரு பட்டுச்சேலை வழிவழியாக பாட்டியிடம் இருந்து அம்மாவுக்கு, அம்மாவிடமிருந்து பேத்திக்கு என்று தலைமுறை தலைமுறையாக பயணிக்கிறதோ அது போலவே என்னுடைய பட்டு பைகளும் பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்’’ என்றவர் பேக்கில் ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதை சரி செய்து கொடுக்கிறார்.

‘‘பணம் கொடுத்து வாங்கும் பொருள், சில முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி விடக் கூடாது. உங்கள் பட்டுச் சேலையுடன் சேர்த்து இந்த கைபைகளும் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் பயணிக்கிறோம். எப்படி பட்டுச்சேலையை பாதுகாப்பாக வைக்கிறோமோ, ஸ்ரீரங் பைகளையும் கொஞ்சம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான பொருட்களையும் நாங்கள் கொடுக்கிறோம். நாங்கள் கொடுக்கும் போட்லி பையில் உங்கள் க்ளட்சஸை வைத்து பாதுகாக்க வேண்டும்.

கொரோனாவிற்கு பின், ஒரே வருடத்தில் 18 ஆயிரம் ஃபாலோவர்ஸ் எனக்கு கிடைத்தார்கள். அதில் நூற்றுக்கணக்கானோர் என் வாடிக்கையாளர்களாகவும் மாறியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நவராத்திரி, தீபாவளி, புது வருடக் கொண்டாட்டம் என எல்லா முக்கிய பண்டிகைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் என்னிடம் இருந்து ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் வாங்குபவர்களில் 40-50 காஞ்சிபுரம் க்ளட்சஸ் வேண்டும் என்று கேட்பார்கள். இது போல பெரிய ஆர்டர்களுக்கு எங்களுக்கு போதுமான கால அவகாசம் தேவை.

சமீபத்தில் நாங்கள் அறிமுகப்படுத்திய பொன்னியன் செல்வன் க்ளட்சஸ் இப்போது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சோழர் காலத்து பிரபலமான நகைகளை எங்கள் க்ளட்சஸ்களில் பொருத்தி இந்த புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். பொதுவாக எல்லா விற்பனைகளும் ஆன்லைன் மூலமாகத்தான் நடைபெறும். இந்தியாவில் இருப்பவர்கள் எங்களுடைய ஸ்ரீரங் இணையதளம் மூலமாக பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். வெளிநாட்டவர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாக எங்களை தொடர்புகொண்டு வாட்ஸ்-அப் ஷாப்பிங் செய்யலாம்’’ என்றவர் முதலில் இந்த தொழிலை ஆரம்பித்த போது பல நெகட்டிவ் கமென்ட்களைதான் சந்தித்துள்ளார்.

‘‘நான் இந்த க்ளட்சஸ்களை விற்பனை செய்ய ஆரம்பித்த போது என் நண்பர்களே பலர் இந்த தொழில் நிச்சயம் வெற்றி பெறாது. இவ்வளவு விலைகொடுத்து யார் இந்தப் பொருட்களை எல்லாம் வாங்குவார்கள் என்றனர். ஆனால் என் கணவர், என் அம்மா மற்றும் என் மாமியார் மூவரும் தான் எனக்கு தைரியம் கொடுத்தனர். இந்த பிஸினஸ் தோல்வியில் முடிந்தாலும் பரவாயில்லை, நீ நிச்சயம் இதை செய் என்றனர். சில மாதங்களில் நல்ல வரவேற்பு கிடைத்த போதும் எனக்குள் ஒரு சிறிய பயம் இருந்தது.

என்னால் அந்த சந்தோஷத்தை முழுமையாக உணர முடியவில்லை. ஆனால் என்னுடைய வாடிக்கையாளர்களின் வார்த்தைகள் என் திறமை மீது எனக்கு நம்பிக்கை கொடுத்தது. தொடர்ந்து தைரியமாக பல புதிய டிசைன்களை உருவாக்கினேன். என்னுடைய குழுவும் விரிவடைந்தது. இதற்கு நான் என் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல், ஜோதி லக்ஷ்மி-ராஜா சார் தம்பதியினருக்கும் நன்றி தெரிவிக்கணும். அவங்க தான் என்னுடைய ஒவ்வொரு படியிலும் துணையாக இருந்தனர்.

எங்க வீட்டில் படிப்பிற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. மற்றது எல்லாம் வெறும் பொழுதுபோக்குதான். ஆனால் அதுவே இப்போது என்னுடைய தொழிலாக மாறி இருக்கிறது. நாம் வெற்றியடைய இரண்டு தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளே போதும். உன்னால் முடியாது என்று சொல்ல பல பேர் இருப்பார்கள். தெரிந்தோ தெரியாமலோ நமக்குள் பலவிதமான குழப்பங்களையும் பயத்தையும் விதைப்பார்கள்.

பல பெண்கள் ஏதாவது ஒரு தொழில் ஆரம்பித்த இரண்டே மாதத்தில் காணாமல் போய்விடுவதை பார்த்திருக்கிறேன். புதிதாக பிஸினஸ் செய்யும் போது பொறுமை மிகவும் அவசியம். பல தோல்விகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும். அதுதான் உங்க முன்னேற்றத்தின் முதல் படி. இங்கு ஜெயித்தவர்கள் எல்லோரும், கண்டிப்பாக தோல்விகளை கடந்து வந்தவர்கள் தான்” என்கிறார் ஸ்ரீத்தி.இவருடைய க்ளட்சஸ்கள், பர்சுகள் மற்றும் பைகள் எல்லாமே 1,500 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இன்னும் குறைந்த விலையில் எப்படி தரமான பொருட்களை கொடுக்கலாம் என்றும் இவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். எதிர்காலத்தில் ஆண்களுக்கான வாலட் செய்ய வேண்டும் என்பதும் இவரின் அடுத்தகட்ட திட்டமாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இது அமர்க்களமான டயட்!! (மருத்துவம்)
Next post நீரின்றி அமையாது நம் உடல்! (மருத்துவம்)