சர்க்கரை நோயும் நரம்புகளும்…!! (மருத்துவம்)

Read Time:16 Minute, 19 Second

இந்தியா சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமாக உருமாறிக் கொண்டிருப்பதை உலக சுகாதார மையம் எச்சரித்து வந்தாலும், அந்த அச்சுறுத்தலையும் மீறி, நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. தற்போதைய ஆய்வின்படி 7 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் சர்க்கரை நோயினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், 2025ல் இது இரட்டிப்பாகக் கூடும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது. சராசரியாக ஒரு இந்தியனுக்கு 42.5 வயதில் சர்க்கரை நோய் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் இந்தியர்கள் சர்க்கரை நோயினால் இறக்கின்றனர். தற்போதைய இறப்பு விகிதம் 53/100000 ஆக உள்ளது.

இந்தியாவில் சர்க்கரை நோயினால் இறப்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் மற்றும் கர்நாடகா அதைத் தொடர்ந்து வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு 26-31 சதவீதம் வரை ‘டயாபட்டிக் நியூரோபதி’ என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயினால் நரம்புகளில் அதிகமான பாதிப்புகள் உண்டாகின்றன. அதில் முக்கியமாக, நம் முகத்தில் உள்ள கண், காது, மூக்கு, வாய், நாக்கு, தொண்டை ஆகியவற்றின் செயல்திறனுக்கு நமது மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகள் உறுதுணையாக உள்ளன. இதனை முக நரம்புகள்(Cranial Nerves) என்று சொல்வோம்.

இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையது. இவற்றிற்கும் சர்க்கரை நோய்க்குமான பந்தம் என்ன என்பதை விளக்கமாகப் பார்ப்போம். இதை பொதுமக்களுக்கு ஏற்படுகிற பரவலான சந்தேகங்களின் அடிப்படையில் கேள்வி பதிலாகவே பார்ப்போம்…

கேள்வி: எனக்கு சர்க்கரை நோய் 5 வருடங்களாக இருக்கிறது. திடீரென்று கடந்த ஒரு வாரமாக நான் வலது பக்கமாக பார்க்கும்போது என் பார்வை இரண்டாக தெரிகிறது. அதுவே இடதுபுறமாகவோ, மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ பார்க்கும்போது எப்போதும் போல் ஒரு பார்வையாக உள்ளது. ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்த்தாலும் ஒரே பார்வையாக நன்றாக தெரிகிறது, என்ன காரணம்?

பதில்: நமது கண் அங்குமிங்கும் நகர்வதற்கு மூன்று முக்கிய முக நரம்புகள் பங்காற்றுகின்றன. அவை 3, 4 மற்றும் 6-வது முக நரம்புகள். பொதுவாக நாம் வலது பக்கம் பார்க்கும்போது நமது வலது கண் வெளிப்புறமாகவும், இடது கண் உட்புறமாகவும் நகரும். அதுவே இடது புறத்தில் உள்ள பொருளை பார்க்கும்போது இடது கண் வெளிப்புறமாகவும், வலது கண் உட்புறமாகவும் நகரும். இதற்கு ஆங்கிலத்தில் Gaze என்று பெயர். இப்படி ஒருங்கிணைந்து நகர்வதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் நமது பார்வை இரண்டிரண்டாக தெரியும். நீங்கள் வலதுபுறம் பார்க்கும்போது உங்கள் வலதுகண் வெளிப்புறமாக நகர மறுக்கிறது.

இதற்கு காரணம் உங்களது வலதுகண்ணில் ஆறாவது நரம்பு செயலற்றுப் போனதுதான், கண் நரம்புகளைச் சுற்றி மெல்லிய ரத்தக்குழாய்கள் படர்ந்திருக்கும், உங்களுக்கிருக்கும் சர்க்கரை நோயினால் இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நரம்பினை செயலிழக்க வைக்கிறது. இதைத் தவிர்க்க உங்களது சர்க்கரை அளவை சீராக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக முக்கியம். ரத்த ஓட்டத்தினை சீராக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் ஓரிரு மாதங்களில் உங்கள் பார்வையைக் குணப்படுத்தலாம்.

கேள்வி: எனக்கு 3 வருடங்களாக சக்கரை நோய் உள்ளது. கடந்த இரு நாட்களாக என் இடதுகண்ணின் இமை என் கண்ணை முழுவதுமாக மூடிவிட்டது. விரலை வைத்து இமையை மேலே தூக்கினால்தான் எனது இடது கண்ணால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்த்தாலும் எனக்கு பார்வை இரண்டிரண்டாக தெரிகிறது, என்ன செய்வது?

பதில்: நமது கண் மேலே, கீழே மற்றும் உட்புறமாக நகர்வதற்கு முக்கியமாக பங்காற்றுவது மூன்றாவது முக நரம்பான ஆக்குலோமோட்டார்(Oculomotor) என்னும் நரம்புதான். கண் இமைகளில் உள்ள தசைகள் சுருங்கி விரிவதற்கும் இந்நரம்பே காரணம். இந்நரம்பை சுற்றியுள்ள மெல்லிய ரத்தக்குழாய்களில் சர்க்கரை நோயினால் அடைப்பு ஏற்பட்டு இந்த மூன்றாவது நரம்பு செயலற்றுப் போனதே உங்கள் நோய்க்கான காரணம். சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் ஓரிரு மாதத்தில் இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

கேள்வி: எனது வலது கண்ணின் பார்வை கடந்த ஒரு மாதமாக மங்கலாக உள்ளது, சமயத்தில் பொறி பறப்பதுபோலவும், திட்டு திட்டாக கருப்பாகவும் தெரிகிறது. எனக்கு சர்க்கரை நோய் கடந்த 10 வருடங்களாக உள்ளது, என்ன காரணம்?

பதில் : உங்களது கண்ணை பரிசோதித்த பிறகு, உங்களுக்கு டயாபட்டிக் ரெட்டினோபதி என்று சொல்லக்கூடிய கண் விழித்திரையில்(ரெட்டினா) சர்க்கரை நோயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இதனை லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் மற்றும் பார்வைக்கு தேவையான இரண்டாவது முளை நரம்பான ஆப்டிக்(Optic) நரம்பிலும் சர்க்கரை நோயினால் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை டயபெட்டிக் பபிலிட்டிஸ்(Papillitis) என்று கூறுவோம். இதற்கும் தகுந்த சிகிச்சைமுறைகள் உள்ளன.

கேள்வி : நான் நேற்றிரவு குளிர்நேரத்தில் எனது கிராமத்திற்கு சென்று வந்தேன். இன்று காலை முதல் என்னால் எனது வலது கண்ணை மூட முடியவில்லை. வலது நெற்றியை சுருக்க முடியவில்லை. பேசினால், சிரித்தால் எனது வாய் கோணுகிறது, சரியாக சாப்பிட முடியவில்லை, விழுங்க முடியவில்லை. எனக்கு சர்க்கரை நோய் கடந்த 3 வருடங்களாக உள்ளது. எனக்கு பயமாக இருக்கிறது. என்ன செய்வது?

பதில் : உங்களுக்கு வலது பக்கத்தில். முகவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் முகத்தில் உள்ள தசைகளின் செயல்திறனுக்கு தேவையான ஏழாம் நரம்பு(Facial nerve) சர்க்கரை நோயினால் பாதிப்படைந்திருப்பதே. உங்களது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்து முகப் பயிற்சிகள் செய்து வருவதோடு, தகுந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டால் முகவாதத்தை எளிதாக குணப்படுத்தலாம்.

மேலே சொன்ன முகநரம்புகளைத் தவிர, சர்க்கரை நோயினால் உடம்பில் உள்ள பல பகுதிகளில் உள்ள நரம்புகளிலும் பாதிப்புகள் ஏற்படலாம். அதற்கான சில உதாரணங்கள்…

கேள்வி: எனது வலது நெஞ்சு பகுதியில் மார்புக்கு கீழ் பளிச்பளிச்சென்று ஷாக் அடிப்பதை போல் வலிக்கிறது .இரவு நேரங்களில் வலி தாங்க முடியவில்லை. வலிக்கும் இடத்தில் சற்று வீக்கமாகவும் தெரிகிறது. எனக்கு 5 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. அதற்காக இன்சுலின் ஊசியும், மருந்து மாத்திரைகளும் உட்கொண்டு வருகிறேன். எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து விட்டேன். ஒன்றுமில்லை என்று கூறுகிறார்கள். என்ன செய்வது?

பதில்: உங்களை பரிசோதித்து பார்த்ததில் உங்களுக்கு முதுகு தண்டுவடத்தில் இருந்து வெளிவரும் தண்டுவட நரம்புகளில் சர்க்கரை நோயினால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிகிறது. இதனை டிரங்கல் நியூரோபதி(Truncal Neuropathy) என்று சொல்வோம். சில நேரங்களில் இதனால் ஏற்படும் வலி, தாங்க முடியாத அளவிற்குக்கூட இருக்கும். எம்.ஆர்.ஐ ஸ்கேனினால் இதனை கண்டுபிடிக்க இயலாது. இந்நரம்புகளை சுற்றி இருக்கும் தசைகள் வலுவிழப்பதால் வீக்கம் தென்படும். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்து தகுந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டால் இதனை குணப்படுத்தி விடலாம்.

கேள்வி: எனக்கு 56 வயதாகிறது. எனக்கு சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் 10 வருட காலமாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக நடக்க கஷ்டப்படுகிறேன். படிகள் ஏறி இறங்க முடியவில்லை. வலது தொடையில் வலி அதிகமாக இருக்கிறது. மேலும், என் வலது தொடையில் உள்ள தசைகள் சற்று சுருங்கி காணப்படுகிறது. என்னால் நடக்க முடியாமல் போய்விடுமோ என்று பயமாக உள்ளது. என்ன செய்வது?

பதில்: உங்களை பரிசோதித்துப் பார்த்ததில் உங்களுக்கு சர்க்கரை நோயினால் முதுகுத் தண்டுவடத்திலிருந்து தொடை மற்றும் இடுப்பு பகுதிகளுக்கு வரும் தண்டுவட நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதனை டயாபட்டிக் ஃபெமோரல்(Femoral) நியூரோபதி அல்லது டயபெட்டிக் எமையோட்ராபி(Amyotrophy) என்று கூறுவோம்.

இதனால் தொடைகளில் வலி ஏற்படும். தொடைகளில் உள்ள தசைகளின் செயல்திறன் குறையும். அதனால் நடப்பதற்கு, படிகளில் ஏறுவதற்கு,உட்கார்ந்து எழுவதற்கு சிரமம் ஏற்படும். நரம்புகள் வலுவிழப்பதால் தொடைத்தசைகள் சுருங்கிக் காணப்படும். இதற்கும் தீர்வு உள்ளது. ஓரிரு மாதங்கள் தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

கால் நரம்புகளும் சர்க்கரை நோயும்நீரிழிவுநோய் உள்ள உங்கள் வீட்டு பெரியவர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள், நண்பர்கள் ஆகியோரை விசாரித்துப் பாருங்கள். கால் பாதங்களில் சர்க்கரை நோயினால் ஏற்படும் தொந்தரவு எத்தனை வீரியமானது என்பது தெரிய வரும். சர்க்கரைநோய் உள்ளவர்களில் 30 முதல் 40 சதவீதத்தினர் கால்பாதங்களில் ஏற்படும் நரம்பியல் தொந்தரவினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பாதங்கள் மரத்து போவது; திகுதிகுவென எரிச்சல், சுருக் சுருக்கென்று குத்தல், நடந்தால் மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு, செருப்பை சரியாக பிடிக்க முடியாமல் சிரமப்படுதல், கால் பூமியில் எங்கே வைக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது, பேலன்ஸ் கிடைக்காமல் நடப்பதில் தடுமாற்றம் போன்ற இவை அனைத்தும் கால்பாத நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளின் வெளிப்பாடே.

பொதுவாக, உடம்பில் எந்த நரம்பு நீளமாக உள்ளதோ அதுதான் சர்க்கரை நோயினால் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும், அப்படிப் பார்த்தால் நம் கால்களில் உள்ள நரம்புகள்தான் உடலின் நீளமான நரம்பு. அதனால்தான் கால் பாதங்களில் முதலில் தொந்தரவு ஆரம்பிக்கிறது. சிறிதுசிறிதாக பாதத்தின் மேல்பரப்பிலும் உணர்ச்சி நரம்புகள் செயலற்று போகிறது.

நோயின் தீவிரம் அதிகமாக, அதிகமாக சிறிது சிறிதாக மேலேறி முட்டிவரை உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பின்பு தொடை நரம்புகளும் பாதிப்புக்கு உள்ளாகிறது அதன்பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் எரிச்சல், குத்தல், மரப்பு உண்டாகிறது. இதற்கு Stocking and glove pattern என்று பெயர். அதாவது தொடை வரை அணியும் உறைக்கு ஸ்டாக்கிங்ஸ் என்றும் கைகளில் அணியும் உறைக்கு ‘க்ளவுஸ்’ என்றும் பெயர். நரம்பியல் பாதிப்பு பாதங்களில் ஆரம்பித்து தொடை வரை சென்று பின் கைக்கு பரவுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மேலும், கால் பாதங்கள் உணர்வற்று இருப்பதால் முள், கண்ணாடி போன்ற கூர்மையான பொருட்கள் காலில் குத்தினாலும் இவர்களுக்கு தெரியாது. அதனால் காலில் புண்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுபோன்ற ‘டயபடிக் நியூரோபதி’ எனப்படும் நரம்பியல் நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில முக்கியமான விஷயங்களை சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டும்.

  • சரியான காலணிகள் அணிய வேண்டும்.
  • ரத்த சர்க்கரை அளவுகள் காலை வெறும் வயிற்றில் 100 -110 மிகி, சாப்பிட்ட பின்பு 2 மணி நேரம் கழித்து 140-150 மிகி, மற்றும் 3 மாதத்திற்கு 1 முறை பரிசோதனை செய்யப்படும். ரத்தச்சர்க்கரை அளவு சராசரி 6.5% எனவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
  • பாதநரம்புகளுக்கு என தனியாக மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.
  • தடையில்லாத, சரியான உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவை நீரிழிவு நோய் இருந்தாலும் சரியான முறையில் நம் நரம்புகளை பராமரிக்க உதவுபவை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post dash diet!! (மருத்துவம்)
Next post சாக்லெட்டில் தஞ்சாவூர் பெரிய கோவில்! (மகளிர் பக்கம்)