அக்கி அம்மை அறிவோம்! (மருத்துவம்)

Read Time:9 Minute, 21 Second

அக்கி அம்மை விழிப்புணர்வு வாரம்!

மராத்தி மற்றும் ஹிந்தியில் ‘நாகின்’ என்று அழைக்கப்படும் அக்கி அம்மையால் பாதிக்கப்பட்ட நம் குடும்பத்தினர் குறித்தோ அல்லது நண்பர்கள் குறித்தோ நாம் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். இந்த அக்கி அம்மை தாங்க முடியாத நரம்பு வலியை ஏற்படுத்தும் மற்றும் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கும். இந்த வேதனையான நிலைக்கு என்ன காரணம் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அக்கி அம்மை விழிப்புணர்வு வாரத்தையொட்டி, டாக்டர். சுப்ரமணியம் அக்கி அம்மை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்:

1. அக்கி அம்மை என்றால் என்ன, அதற்கு என்ன காரணம்?

அக்கி அம்மை என்பது ‘வரிசெல்லா ஜோஸ்டர்’ வைரஸால் ஏற்படும் ஓரு வைரஸ் தொற்று ஆகும். இதே வைரஸ் தான் சிக்கன் பாக்ஸை உண்டாக்கும். சின்னம்மை தடிப்புகள் நீங்கிய பிறகு, இந்த வைரஸ் உடலின் நரம்பு செல்களில் ஓய்வு நிலையில் இருக்கும். நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்போது இது ஓய்வு நிலையில் இருக்கும்; மன அழுத்தம், முதுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்தால், இந்த வைரஸ் ‘செயல்படத்துவங்கும்’ மற்றும் அக்கி அம்மையை ஏற்படுத்தும். இந்த நிலை பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில், முதுகு மற்றும் மார்பில் ஒரு தடிப்பு போல் தோன்றும், மேலும் கடுமையான, தாங்க முடியாத நரம்பு வலியுடன் இருக்கும்.

2. அக்கி அம்மை பொதுவாக ஏற்படுவதா? இதற்கான ஆபத்து யாருக்கு அதிகமாக உள்ளது?

அக்கி அம்மை ஒரு பொதுவான தொற்று ஆகும். 50 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு 3 பேரில் ஒருவருக்கு வாழ்நாளில் ஒருமுறை இந்த நோய்த்தொற்று ஏற்படுவதாகவும், அவர்கள் வயதாகும்போது இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கிறது என்றும் உலகளாவிய தரவு காட்டுகிறது. ஏனென்றால், வயது முதிர்ச்சியடையும் போது, நோயெதிர்ப்பு செல்கள் இளமையில் செயல்படுவது போல் செயல்படாது. இது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைரஸ் மீண்டும் செயல்பட வழிவகுக்கிறது. வயதுக்கு கூடுதலாக, மருத்துவ நிலைமைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் மருந்துகளும் கூட ஒரு நபருக்கு அக்கி அம்மை அபாயத்தை அதிகரிக்கும். இந்த நிலைமைகளில் நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் மற்றும் முடக்கு வாதம் போன்ற சில நோய்களுக்கான சிகிச்சை ஆகியவை அடங்கும்.

3. உங்களுக்கு சின்னம்மை வந்ததில்லை என்றால் அக்கி அம்மை வருமா?

இல்லை, உங்களுக்கு சின்னம்மை இருந்ததில்லை என்றால், உங்களுக்கு அக்கி அம்மை வராது. ஆனால் நம் நாட்டில், நம்மில் பெரும்பாலோர் சிறுவயதிலேயே வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸுக்கு ஆளாகியிருக்கிறோம், சில சமயங்களில் சின்னம்மை தொற்று மிகவும் லேசானதாக இருக்கும், அது கவனிக்கப்படாமல் போகும். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகும், பல குழந்தைகளுக்கு ஒரு நிலையற்ற தாக்குதல் ஏற்படுகிறது, அது கண்டறியப்படுவதற்கு முன்பே மறைந்துவிடும். சிறுவயதில் சின்னம்மை இருந்ததா என்பது கூட நினைவில் இருக்காது. எனவே, நம் நினைவையோ அல்லது நம் பெற்றோரின் நினைவையோ நாம் முழுமையாக நம்ப முடியாது. நம்மில் பெரும்பாலானோருக்கு வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் நம் உடலில் மறைந்த நிலையில் உள்ளது மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது படர்தாமரை வரலாம்.

4. அக்கி அம்மையின் மிகவும் பொதுவான சிக்கல்கள் யாவை?

தடிப்பு தோன்றிய பிறகு 3 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் நரம்பு வலியானது போஸ்ட் ஹெர்பெடிக் நியூரால்ஜியா என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது அக்கி அம்மையின் மிகவும் பொதுவான சிக்கலாகும். தடிப்பு மறைந்த பிறகும் இந்த வலி மாதங்கள் அல்லது வருடங்கள் கூட நீடிக்கும். நோய்த்தொற்று கண் போன்ற உடலின் மற்ற பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கும் பரவுகிறது மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் பார்வையிழப்பிற்கு வழிவகுக்கும். இது கல்லீரல், மண்ணீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு போன்ற பிற உறுப்புகளையும் பாதிக்கலாம் , இது உயிருக்கு ஆபத்தானது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இது நிகழ்கிறது, எடுத்துக்காட்டாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள்.

 5. அக்கி அம்மை தொற்றக்கூடியதா?

அக்கி அம்மை உள்ள ஒருவருடன் நீங்கள் நேரடித் தொடர்பில் இருந்தால், நீங்கள் வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் பாதிக்கப்படலாம் மற்றும் முதன்மைத் தொற்று, சின்னம்மையைப் பெறலாம், ஆனால் அக்கி அம்மை பரவாது. இதற்கு முன்பு உங்களுக்கு சின்னம்மை இல்லாதிருந்தால் மட்டுமே இது நடக்கும். சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள், அக்கி அம்மை நோயாளியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டாலும் ஆபத்தில்லை.

6. அக்கி அம்மை குணமாகுமா?

அக்கி அம்மையை நிர்வகிக்க பல வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை பலனளிக்க முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும். பொதுவாக, அக்கி அம்மை நோய் தாமதமாகவே கண்டறியப்படுகிறது, ஏனெனில் நோயாளிகள் அறிகுறிகள் தொடங்கி 2-3 நாட்களுக்குப் பிறகுதான் மருத்துவர்களிடம் செல்கின்றனர். இந்த நேரத்தில், வைரஸால் ஏற்படும் நரம்புகளுக்கு ஏற்படும் சேதத்தை முழுமையாக மாற்ற முடியாது. தடிப்பு நீங்கிய பிறகு நீடிக்கும் நரம்பு வலியை தற்போது கிடைக்கும் மருந்துகளால் முழுமையாக குணப்படுத்த முடியாது.

7. அக்கி அம்மை தடுக்க முடியுமா? அக்கி அம்மையில் இருந்து நம்மை ஏன் பாதுகாக்க வேண்டும்?

தடுப்பூசி மூலம் அக்கி அம்மையைத் தடுக்கலாம். அக்கி அம்மைக்கு எதிரான தடுப்பூசி ஒரு நபரை அக்கி அம்மை மற்றும் அதன் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கும். 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பாதுகாப்பைப் பெற வேண்டும், ஏனெனில் அக்கி அம்மையால் ஏற்படும் நரம்பு வலி கடுமையானது மற்றும் தினசரி உடல் செயல்பாடுகளான குளித்தல், உடுத்துதல், சாப்பிடுதல் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்வது போன்றவற்றை கடினமாக்குகிறது. ஆடையைத் தொட்டாலும் வலி அதிகமாகிவிடும். தற்போது கிடைக்கும் மருந்துகள் இந்த
வலியிலிருந்து முழு நிவாரணம் தராது.     

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் தொழிலுக்கு பாட்டியும் தாத்தாவும் சப்போர்ட்! (மகளிர் பக்கம்)
Next post மயக்கமா… கலக்கமா… வெர்டிகோ ரெட் அலெர்ட்!! (மருத்துவம்)