3 மணி நேரத்தில் 135 கோவில்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 41 Second

ஓவியங்கள் மனிதர்களின் கட்டுப்பாடுகளுக்கும் சிந்தனைகளுக்குள்ளும் அடங்காதவை. நம்முடைய சிந்தனைகள் விரிவடையும் போதுதான் ஓவியங்களின் பரந்து விரிந்து கிடக்கும் பரப்பை நம்மால் அறிய முடியும். நாம் பார்த்த உலகத்தை அப்படியே தாளில் வரையும் தந்திரம் தெரிந்தவர்களே ஓவியனாகிறான். பெரிய பெரிய ஓவியங்கள் வரைந்து பாராட்டுகளுக்கு ஏங்கியவர்கள் மத்தியில் சிறிய அளவிலான ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார் தஞ்சாவூரை சேர்ந்த யமுனா தேவி. ஒரே ஏ4 தாளில் தமிழ்நாட்டில் உள்ள 135 கோவில்களையும் மூன்று மணி நேரத்தில் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார் யமுனா தேவி.

‘‘சில சமயம் நாம செய்யக்கூடிய சின்ன வேலைகள் மற்றவர்கள் சொல்லித்தான் நாம் எவ்வளவு பெரிய சாதனையை பண்ணி இருக்கோம்னு நமக்கே தெரிய வரும். அப்படித்தான் எனக்கும் தெரிய வந்தது’’ என உலக சாதனை படைத்த மகிழ்ச்சியோடு தன்னுடைய கதையை சொல்கிறார் யமுனா. ‘‘சொந்த ஊரு படிச்சதெல்லாமே தஞ்சாவூர்ல தான். இப்போ ஃபேஷன் டெக்னாலஜி படிச்சிட்டு இருக்கேன். நான் 5ம் வகுப்பு படிக்கும் போதே படிப்பு மட்டும் இல்லாம மாணவர்களோட தனித் திறமைகளை வெளிய கொண்டு வரணும்னு சிலம்பம் சுற்றுதல், ஓவியம் வரைதல் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க.

என்னோட வகுப்பு ஆசிரியர்களும் படிப்பு மட்டும் இல்லாம உங்களோட தனித்திறமைகளை வளர்த்துக்கோங்கன்னு சொல்லி ஊக்கப்படுத்துனாங்க. நான் பள்ளிக்கூடத்துல சொல்லி கொடுத்த எல்லாத்தையும் கத்துக்க தொடங்கினேன். நான் நல்லா பேசுவேன் என்பதால பேச்சு போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். பல மேடைகளில் பேசி மாவட்ட அளவில முதல் இடம் வாங்கி இருக்கேன். இதோடு சிலம்பம் சுத்தி பழகவும் தொடங்கினேன். நான் நல்லா சிலம்பம் சுத்துவதைப் பார்த்து என் ஆசான், மற்ற பள்ளிகளில் நடக்கும் சிலம்பம் போட்டிகளில் கலந்து கொள்ளும் படி ஊக்கமளித்தார். நானும் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளும் வாங்கினேன்’’ என்றவர் ஓவியம் மேல் ஏற்பட்ட ஆர்வம் குறித்து விவரித்தார்.

‘‘நான் சிலம்பம் மற்றும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டாலும், ஓவியம் வரைவதிலும் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. பொதுவாக ஒருவர் ஓவியங்கள் வரையும் போது இயற்கை சார்ந்த ஓவியங்கள்தான் வரைந்து பழகுவாங்க. நானும் இயற்கை சார்ந்த ஓவியங்கள் வரைந்து தான் கற்றுக் கொண்டேன். ஓவியங்களில் முக்கியமானதே நாம பாக்குற காட்சியை வரையும் போது அதோட வடிவங்களுக்கேத்த மாதிரி வளைவு நெளிவுகளோட வரையணும். அதை ஓவியங்கள் வரைய வரையதான் புரிந்து கொண்டேன். அந்த புரிதல்தான் எனக்கு ஓவியங்கள் மேல் தனிப்பட்ட ஆர்வத்தினை தூண்டியது.

ஓவியம் வரையும் போது அதிகமா அடித்தல் திருத்தல் இருக்கக் கூடாதுன்னு என் ஓவிய ஆசிரியர்கள் சொல்வாங்க. முதல்ல பென்சில் மட்டும் எடுத்து பிழையே இல்லாம வரைய தொடங்கினேன். அதுல நல்லா வரைய வரவும் அடுத்து பேனாவில் நேரடியாக வரைய ஆரம்பிச்சேன். கொஞ்ச நாட்களிலேயே நான் தவறுகள் இல்லாம ஓவியங்கள் வரைய தொடங்கினேன்’’ என்றவர் அவர் நிகழ்த்திய சாதனை குறித்து பேசத் தொடங்கினார். ‘‘சிலம்பம் போட்டி, பேச்சு போட்டிகளில் கலந்து கொள்வது போல ஓவியப் போட்டிகளிலும் கலந்து கொள்ள தொடங்கினேன். எங்க வீட்டிலும் ஆர்வத்தினை ஊக்குவிப்பாங்க. அதனால் நான் பலதரப் போட்டிகளில் பங்குப் பெற்று பரிசு பெற்றிருக்கேன். நான் இப்போது இந்த சாதனை செய்ய முக்கிய காரணம் என் பெற்றோர்கள்தான்.

தஞ்சாவூரில் கலை பண்பாட்டு துறை சார்பாக ஓவியப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி போன மாதம் நடந்த போட்டியில் கலந்து கொண்ட போது தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களை வரைய சொல்லி ஒரு தலைப்பு கொடுத்தனர். இந்த போட்டி தஞ்சாவூரில் நடந்ததால் இதில் கலந்து கொண்டவர்கள் அதிகம் தஞ்சை பெரிய கோவிலை மட்டுமே வரைந்திருந்தனர். நான் வேறு ஏதாவது புதிதாக வரையலாம் என நினைத்து மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலை வரைந்தேன். இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கருப்பு நிற மையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருந்தது. கருப்பு மை பேனாவில் பெரிய அளவில் கோவில் படங்களை வரைந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதாலும் பேனாவில் வரையும் போது தவறுகள் ஏதும் நடந்தால் அதை திருத்திக்கொள்ள முடியாது என்பதாலும் அப்படியான ஒரு கட்டுப்பாட்டினை வைத்திருந்தார்கள்.

இந்த போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. ஆனால் எனக்கு அந்த போட்டியில் அவர்கள் அறிவித்த தலைப்பு ரொம்பவே ஈர்த்தது. அதனால் மற்ற பிரசித்தி பெற்ற கோவில்களை வரைந்து பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால் ஒரே தாளில் அனைத்து கோவில்களையும் வரைந்தால் என்ன என்று நினைச்சேன். அதற்காக முதலில் தஞ்சாவூரில் உள்ள கோவில்களை சேகரித்தேன்.

அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோவில்கள் முதல் தற்போது வரை உள்ள கோவில்களை இணையத்தில் தேடி எடுத்தேன். அதை எல்லாம் ஒவ்வொன்றாக வரைய தொடங்கினேன். நான் வரைவதை பார்த்த என்னுடைய அம்மாவும் ஏன் நேரத்தை செலவு செய்கிறாய் என சொல்லுவார். ஆனாலும் நான் வரைந்ததை எல்லாம் அவரிடம் காட்டுவேன். நல்லா இருக்குன்னு பாராட்டுவார். இப்படி 30 கோவில்களை ஒரே பேப்பரில் வரைந்தேன். அதன் பின் அது 100 கோவிலாக மாறியது. இதை வரைவதற்கு எனக்கு கிட்டதட்ட 20 நாட்கள் ஆனது’’ என்றவர் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றதைப் பற்றி விவரித்தார்.

‘‘நான் வரைந்த ஓவியங்கள் எல்லாமே ஒரே முயற்சியில் வரைந்தவை. அழித்தல் திருத்தல் இருக்காது. அப்படி நான் வரைந்த ஓவியங்களை என் வாட்ச் ஆஃப் ஸ்டேட்டசில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து ஓவியப் போட்டியினை நடத்தி வரும் நிர்மல் சார் என்னை அழைத்து, ‘நீ வரைந்திருப்பது நல்லா இருக்கு. இதை வைத்து ஒரு உலக சாதனையை செய்யலாம். உன்னால் முடியுமா’ன்னு கேட்டார். எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. எதார்த்தமாக நான் செய்த வேலை உலக சாதனை வரைக்கும் செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. நிர்மல் சார் தான் இந்த சாதனை செய்ய என்னை ஊக்கப்படுத்தினார். நானும் சரி முயற்சி செய்து பார்க்கலாம்ன்னு சரி என்றேன்.

ஆனால் இதை சாதாரணமாக வரைய முடியாது. குறிப்பிட்ட நேரத்தில் வரைய வேண்டும். அதனால் நேரத்தை நிர்ணயித்து அதற்குள் வரைந்து காட்ட வேண்டும் என்று நிர்மல் சார் சொன்னார். ஒரு கோவிலை சில நிமிடங்களில் வரைந்து முடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். முதலில் 100 கோவில்களை வரைய எனக்கு 6 மணி நேரம் ஆனது. என்னுடைய வீட்டிலும் என்னை ஊக்கப்படுத்த ஆரம்பித்தனர். நிர்மல் சாரே சாதனைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

கடந்த மார்ச் 9ம் தேதி போட்டி நடந்தது. கோவில்களை ஒவ்வொன்றாக பார்த்து வரைய தொடங்கினேன். 135 கோவில்களை மூன்று மணி நேரத்தில் ஒரே பேப்பரில் வரைந்தேன். இது உலக சாதனையானது. எனக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தது. நாம் எதார்த்தமாக செய்யும் வேலைகள் எல்லாமே உலக சாதனைகள்தான். அவற்றை நாம் வெளி உலகிற்கு காட்டினாலே போதும்’’ என்கிறார் யமுனாதேவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உங்களை காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்! (மகளிர் பக்கம்)
Next post படிக்கட்டுகளைப் பயன்படுத்துவோம்!! (மருத்துவம்)