வீட்டை அழகாக்கும் மர ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 9 Second

பிடித்த துறை, பிடித்த வேலை, பிடித்த இடம் என்று என்னதான் எல்லாம் பிடித்ததாக அமைந்தாலும் நம்மை எல்லோரிடமிருந்தும் தனித்துவமாக்கி காட்டும் முயற்சியில்தான் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அது சிறு புள்ளியாக இருந்தாலும் அதனை விடாமல் பிடித்து அதன்வழி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றனர். அதுபோல தாங்கள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த பாடத்தில் தாங்கள் ஏதேனும் புதுமையை கொண்டு வர வேண்டும் என பல முயற்சிகளுக்கு பிறகு இந்த சமூகத்தில் தங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி உள்ளனர் சென்னையில் உள்ள ‘ஸ்டுடியோ க்ளட்டரின்’ உரிமையாளரான ஷைல்னா வாத்வா மற்றும் அனீஸ் செரியன் தம்பதியர். தங்கள் கலைப் பயணத்தின் முதல் புள்ளியிலிருந்து தற்போது வரை எத்தனை மைல்கல்லை எட்டியுள்ளனர் என்று பகிர்கின்றனர்.

‘‘என்னை எங்க வீட்டில் பொறியியல் படிக்க சொல்லி கூறினார்கள். ஆனால் எனக்கு கலைகளில் ஆர்வம் அதிகம். அதன் காரணமாகவே ஆர்க்கிடெச்சர் துறையினை தேர்ந்தெடுத்தேன். இந்த துறைக்கு வந்த பிறகுதான் இதனை ஒரு வட்டத்தில் அடக்க முடியாது, இதில் எக்கச்சக்கமான வகைகள் இருப்பது புரிந்தது. எனது நண்பர்களே ஆர்க்கிடெச்சரில் சிலர் புகைப்பட கலைஞர்களாகவும், சிலர் ஓவிய கலைஞர்களாகவும், சிலர் இதே துறையில் டெக்னாலஜி என பல பிரிவில் வேலை செய்கின்றனர்’’ என்கிறார் அனீஸ் செரியன்.

அவரைத் தொடந்து ஷைல்னா வாத்வாவும் ஆர்க்கிடெச்சர் துறையை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்குகிறார். ‘‘எனக்கு படங்கள் வரைவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய ஓவியங்கள், படங்கள் மற்றவர்களின் படைப்புகளில் இருந்து வேறுபட்டு தெரியவேண்டும் என நினைப்பேன். எனக்கு பொறியியலிலோ, வேறு துறைகளிலோ அதிக ஈடுபாடு கிடையாது. கட்டிட கலைகள் மற்றும் கட்டிடங்கள் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது எனவும் சொல்லலாம். அதனால் தான் நான் ஆர்க்கிடெச்சர் துறையை தேர்ந்தெடுத்து படித்து வந்தேன்’’ என படிப்பையும் வேலையையும் பகிர்ந்த இவர்கள் எவ்வாறு மரத்துண்டுகளில் ஓவியம் மற்றும் மரவேலைப்பாடுகளை துவங்கினர் என்று விளக்குகிறார்கள்.

‘‘கட்டிட கலை படித்து அந்த துறையிலேயே வேலை செய்து வந்த எங்களை இணைத்தது கலை மற்றும் அதன் மீது எங்களுக்கிருந்த ஆர்வம். பிடித்த துறையாக இருப்பினும் அலுவலக வேலையில் ஏதோ ஒன்று குறைவதாகவே எங்க இருவரின் மனதிலும் தோன்றியது. இருப்பினும் அது என்ன என்று எங்களுக்கு அப்போது புரியவில்லை. அதனால் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம். அதனால் எங்களின் தனிப்பட்ட கலைத் திறன்களை வளர்க்க அலுவலக வேலை போக மீதி நேரங்களில் மரத்துண்டுகளில் கலை பொருட்களை உருவாக்கி எங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வந்தோம். அதைப் பார்த்து ஒரு சிலர் ஆர்டர் கொடுப்பாங்க.

அவங்களுக்கு அவ்வப்போது அதனை செய்து கொடுத்தோம். ஒரு கட்டத்தில் இதில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக இதில் இறங்க திட்டமிட்டோம். எங்களின் எண்ணப்படி, எங்க கிரியேட்டி விட்டிக்கு வெற்றியும் கிடைத்தது. புதுவிதமான யோசனைகளும் அதன் கலைவடிவமும் எங்களை இந்த துறையில் தனித்துவமாக்கி காண்பித்தது.

ஆரம்ப காலத்தில் மரப்பொருட்களில் கலைப் பொருட்கள் செய்வது எங்களுக்கு ஆர்வத்தை தூண்டியது. என் மனைவி மரப்பொருட்களில் ஓவியமும் வரைவார்கள். அவர்கள் சிந்தனையில் தோன்றுவதை, மரப்பலகைகளில் ஓவியங்களாகவும் மற்றும் பல்வேறு வடிவங்களில் செதுக்குதல் என முழுவதும் மாறுபட்ட முறையில் மரப் பொருட்களை செய்து வந்தோம். முதன்முதலில் அதாவது 5 வருடங்களுக்கு முன்பு எங்களின் செல்லப் பிராணியான பூனைக்கு மரத்தால் ஆன ஒரு தொட்டில் செய்தோம். அதனை பார்த்தவர்கள் தங்களின் பூனைகளுக்கும் வேண்டும் என்று சொல்லியதால் செய்து கொடுத்தோம். செல்லப் பிராணிகளுக்கான இருக்கைகள் போன்றவற்றை செய்து வந்தோம். அதனைத் தொடர்ந்து நாம் அமரக்கூடிய நாற்காலிகளை புதுவிதமாக வடிவமைத்தோம்’’ என்றவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பவும் வடிவமைத்து தருகிறார்கள்.

‘‘எல்லாருக்கும் தங்களின் வீட்டினை அழகாக வடிவமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அவர்களின் தேவை அறிந்து செய்து தருகிறோம். சிலர் அவர்களின் வீடு, சுவற்றின் நிறத்திற்கு ஏற்ப கேட்பார்கள். நாங்க பழைய பொருட்களை அப்படியே உருவகப்படுத்துவதில்லை. எங்களின் ஸ்டைலுக்கு ஏற்ப அதை வேறுபடுத்தி அமைத்து தருவோம். வரும் வாரத்தில் தாவரவியல் (Botanical Theme) கொண்டு 13 மர வேலைப்பாடுகளை துவங்க உள்ளோம்’’ என்றவர்களின் காக்டஸ் தீம் ஓவியங்களை மக்கள் விரும்பி பெற்றதாக கூறினர்.

‘‘எங்களின் ஓவியங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆன்லைன் என்பதால் அனைத்து ஊர்களில் இருந்தும் ஆர்டர் செய்றாங்க. ஒரு பொருளின் அளவு, அதனை உருவாக்க கால நேரம் பொருத்து ரூ.4000 முதல் ரூ.25,000 வரை விற்கப்படுகிறது. எங்களின் திறமையினை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். அதாவது கடந்த ஒன்றரை வருடமாக மர வேலைப்பாடுகள், மரத்தில் ஓவியம் வரைதல் குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். இதுவரையில் 200க்கும் மேற்பட்ட பயிற்சிகளை இந்தியா முழுவதிலும் நடத்தியுள்ளோம். பயிற்சிக்கு வருபவர்கள் அவர்களுக்கு தேவைக்கான பொருட்களை அவர்களே வடிவமைத்துக் கொள்கிறார்கள்’’ என்றனர் கட்டிடக்கலை தம்பதியினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறப்புக் குழந்தைகளின் டேலன்ட் டிஸ்பிளே!!
Next post வயதுவந்தவர்களுக்கு மட்டும் படியுங்க -பாலியல்..!! (அவ்வப்போது கிளாமர்)