பாதிக்கும் பார்க்கின்சன்… சிகிச்சை என்ன? (மருத்துவம்)

Read Time:8 Minute, 24 Second

பார்கின்சன் என்பது நடுநரம்பு மண்டலத்தின் ஒரு சிதைவுக்கோளாறு ஆகும். பல ஆண்டுகளாக மூளையின் ஒரு பகுதி சிதைந்துவரும் ஒரு நிலையே பார்க்கின்சன் நோய் (அதிகரித்து வரும் ஒரு நரம்பியல் கோளாறு). நடுமூளையின் ஒரு பகுதியில் உள்ள, டோப்பமைனை (dopamine) உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் இறந்துபடுதலினால் பார்க்கின்சன் நோயின் அசைவியக்கக் கோளாறுகளின் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த உயிரணுக்கள் மடிவதற்கான காரணம் தெரியவில்லை.நோய் தோன்றும் அடிப்படையில் பார்க்கின்சன் நோய் நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:

முதன்மை அல்லது காரணமறியாததுஇரண்டாம்நிலை அல்லது பெறப்பட்டது மரபுவழி பார்க்கின்சன் நோய்பார்க்கின்சன் கூட்டுநோய்க்குறி அல்லது பல உடல் மண்டலச் சிதைவு

நோயறிகுறிகள்

மூன்று முக்கிய அறிகுறிகள்:

1. நடுக்கம்: கட்டுப்படுத்த முடியாத நடுக்கம். பொதுவாக இந்நடுக்கம், கரம் அல்லது புயங்களில் ஏற்படும். கரம் ஓய்வில் இருக்கும்போதே பொதுவாக நடுக்கம் உண்டாகும். மனவழுத்தம், மனக்கவலை அல்லது களைப்பு இருக்கும்போது அதிகமாக புலப்படும்.

2. மந்தமான இயக்கம்: இது இந்நோயின் இன்னொரு இயல்பாகும். ஓர் அசைவைத் திட்டமிடலில் இருந்து தொடங்கி செயல்படுத்துவது வரை கடினம் உண்டாகுதல்.

3. விறைப்பு: தசைகள் அதிகமாகத் தொடர்ந்து சுருங்குவதால் விறைப்பும் கை அசைவில் சிரமமும் ஏற்படுதல்.

பிற அறிகுறிகளில் அடங்குவன:

அனிச்சையான தசை பிடிப்பு

(உட்காரும்/நிற்கும்) நிலையில் உறுதியின்மை

மனவழுத்தம்

மனக்கலக்கம்

காரணங்கள்

பெரும்பாலும் பார்க்கின்சன் நோய்க்கான காரணத்தை அறிய முடிவதில்லை.

நரம்பணு இழப்பு:

மூளையின் கரும் மூளைப் பகுதியில் ஏற்படும் நரம்பணு இழப்பே பார்க்கின்சன் நோய்க்கான காரணம். மூளையின் இப்பகுதியிலேயே டோப்பமைன் எனும் வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. மூளைக்கும் நரம்புமண்டலத்திற்கும் நடுவில் இது தூதாகச் செயல்படுகிறது. உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவி புரிகிறது. இந்த நரம்பணுக்கள் சிதைவுற்றாலோ அல்லது மடிந்தாலோ மூளையில் டோப்பாமனின் அளவு குறைவு படும்.

இதனால் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி சரியாகச் செயல்படாது. இதனால் இயக்கம் மெதுவாகவும் அசாதாரணமாகவும் இருக்கும். நரம்பணு இழப்பு மிக மெதுவாக இருக்கும். நாட்பட நாட்பட டோப்பாமைன் அளவும் குறையும். மூளையின் கரும் பொருள் பகுதியில் உள்ள 80% நரம்பணுக்கள் அழிந்த பின்னரே பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள் தோன்றிப் படிப்படியாகக் கடுமையாக மாறும்.
பார்க்கின்சன் நோயோடு தொடர்புடைய பிற காரணிகள்:

மரபியல்: பார்க்கின்சன் நோய் பொதுவாக மரபியல் சாராத நோயாகவே கருதப்படுகிறது. இருப்பினும் அபூர்வமாக அது சில குடும்பங்களில் தொடர் நோயாகக் காணப்படுகிறது.
சூழலியல்: கீழ்க்காணப்படும் சூழலியல் காரணிகளால் பார்க்கின்சன் நோய் உருவாகும் ஆபத்து அதிகம்:

1) பூச்சுக்கொல்லிகளின் பாதிப்பு

2) தலைக் காயம்

3) கிராமப் புறத்தில் அல்லது விவசாய நிலம் அருகில் வாழ்தல்

4) சாலைப் போக்குவரத்தால் உண்டாகும் மாசு நோய்கண்டறிதல்

மருத்துவ வரலாற்றைக் கொண்டும் நரம்பியல் சோதனை மூலமும் மருத்துவர் பார்க்கின்சன் நோயைக் கண்டறிகிறார், இநோயைக் குறிப்பாகப் புலப்படுத்தும் ஆய்வகச் சோதனைகள் இல்லை. எனினும் மூளை ஊடுகதிர்கள் மூலம் ஒரே விதமான அறிகுறிகளை உருவாக்கும் பிற கோளாறுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை

லெவோடோப்பா (levodopa- பொதுவாக டோப்பா டிகார்பாக்சிலேஸ் தடுப்பி அல்லது COMT தடுப்பியுடன் சேர்த்து), டோப்பாமைன் இயக்கிகள் (dopamine agonists) மற்றும் MAO-B தடுப்பிகள் (MAO-B inhibitors) போன்ற மருந்துகள் அசைவியக்கக் கோளாறு அறிகுறிகளுக்கான பயனுள்ள சிகிச்சையாகும்.

பொதுவாக வேறுகாணப்படும் இருநிலைகள்:

ஆரம்ப கட்டத்தில் பார்க்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் ஏற்படும். இதற்கு மருந்தியல் சிகிச்சை தேவைப்படும்.இரண்டாம் கட்டத்தில் லெவோடோப்பா பயன்பாட்டோடு தொடர்புடைய அசைவியக்கச் சிக்கல்கள் உண்டாகும்.டோப்போமைனின் செயல்பாட்டில் ஏற்படும் முன்னேற்றத்தினால் உண்டாகும் பக்கவிளைவிற்கும், அறிகுறிகளுக்கும் இடையில் உகந்த கட்டுப்பாட்டை உண்டாக்குவதே முதல்கட்ட சிகிச்சையின் இலக்காகும். அசைவியக்க இழப்பு ஏற்படுவதை தாமதப்படுத்தும் நோக்கில், MAO-B தடுப்பிகள் மற்றும் டோப்போமைன் இயக்கிகள் போன்ற மருந்துகளை பயன்படுத்தி, லெவோடோப்பா (அல்லது L-DOPA) சிகிச்சையைத் தொடங்குவது தாமதப்படுத்தப்படும்.

இரண்டாவது கட்டத்தில் அறிகுறிகளைக் குறைக்கும் அதே வேளையில் மருந்துகளினால் உண்டாகும் பதில்வினை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவதே நோக்கமாகும். மருந்துகளைத் திடீரென நிறுத்துவதும், மிகைப்பயன்பாடும் தவிர்க்கப்பட வேண்டும்.அறுவை சிகிச்சை: மருந்துகளினால் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியாத போது, அறுவை சிகிச்சையும், ஆழ்மூளைத் தூண்டலும் பயன்படலாம். நோயின் இறுதிக் கட்டத்தில், வாழ்க்கை நிலையை உயர்த்த நோய்க்கடுமைத் தணிப்புப் பராமரிப்பு வழங்கப்படும்.

தடுப்புமுறை

காஃபின் உட்கொள்ளுதல் (காப்பி போன்றவை) பார்க்கின்சன் நோய் அபாயத்தைக் குறைப்பதாகத் தோன்றுகிறது.புகைப்பது வாழ்க்கை முறையையும், வாழும் காலத்தையும் பாதித்தாலும், புகைக்காதவர்களோடு ஒப்பிடும்போது, புகைப்பவர்களுக்கு பார்க்கின்சன் நோய் அபாயம் மூன்றில் ஒரு பங்கு குறைகிறது. இதற்கான அடிப்படை அறியப்படவில்லை. நிக்கோட்டின் ஒரு டோப்போமைன் தூண்டியாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளின் சிறுநீரகங்களை காப்போம்! (மருத்துவம்)
Next post பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்! (மருத்துவம்)