அறுவை சிகிச்சையின்றி பார்கின்சனை குணமாக்கலாம்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 31 Second

‘‘பார்கின்சன்… ஆண், பெண் இருவரையும் தாக்கக்கூடிய நோய். இதனை நடுக்குவாதம் என்றும் அழைப்பார்கள். இந்த நோய் வயதானவர்களைத்தான் தாக்கும் என்ற அவசியம் இல்லை. 40 வயதினரையும் பாதிக்கும். பொதுவாக இந்த நோயின் பாதிப்பு 80% நடுக்கத்தில் இருந்துதான் துவங்கும். முதலில் ஒரு கை, கால் நடுங்க ஆரம்பிக்கும். சாதாரணமாக அமர்ந்து இருக்கும் நிலையிலும் நடுக்கம் ஏற்படும். சில சமயம் விறைப்புத் தன்மையும் ஏற்படும். ஒருவரின் அனைத்து செயல்பாடுகளிலும் மந்த நிலை ஏற்படும்.

அதே சமயம் திடீரென்று வேகமாக நடப்பார்கள். சரி நன்றாக நடக்கிறார்கள் என்று நினைக்கும் ேபாது, அப்படியே தள்ளாடி ஒரு மரக்கட்டை போல் கீழே விழுந்திடுவாங்க. அவங்களாலே ஏன் விழுந்தோம்னு சொல்ல முடியாது. இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து அவர்களின் மன உறுதி குறைய ஆரம்பிக்கும்’’ என்று பார்கின்சன் நோயின் ஆரம்ப நிலை மற்றும் அறிகுறியினைப் பற்றி விவரித்தார் நரம்பியல் நிபுணர் டாக்டர் விஜயன்.

மருந்து, மாத்திரை மூலம் சிகிச்சை அளித்து வந்த காலம் மாறி தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றம் காரணமாக எந்தவித அறுவை சிகிச்சையின்றி MRgFUS என்ற புதிய சிகிச்சை முறை மூலம் இதற்கு ஒரு தீர்வு அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள். அது குறித்து விளக்கம் அளித்தார் டாக்டர் விஜயன்.‘‘பார்கின்சன் நோய் ஏற்பட முக்கிய காரணம். நம் மூளையில் டோபோமின் என்ற அமிலம் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் ஆண், பெண் இருவரையும் சமநிலையில்தான் தாக்குகிறது.

நோயின் தாக்கம் ஏற்பட்டு அதன் அறிகுறி தென்படும் போது 80% டோபோமின் செயல்பாட்டினை மூளை இழந்திருக்கும். பாக்கியுள்ள 20%ல்தான் அவங்க செயல்படுவாங்க. மூளை ஒரு எலக்ட்ரிக்கல் உறுப்பு. இதில் நிறைய சர்க்யூட்கள் இருக்கும். நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒரு சர்க்யூட் மூலமாக செயல்படும். இதில் போடமைன் சுரப்பது குறைந்தால், ஒரு சர்க்யூட் மட்டுமில்லை, அதைச் சார்ந்த நான்கைந்து சர்க்யூட்களும் செயல்படாமல் போகும் வாய்ப்புள்ளது.

டோபோமின் சுரக்க மாத்திரை உள்ளது. இதன் மூலம் அவர்களால் 70% செயல்பட முடியும். ஆனால், ஒருமுறை டோபோமின் சுரப்பது நின்றுவிட்டால், அதனை மீண்டும் இயற்கை முறையில் சுரக்க செய்ய முடியாது. மாத்திரை மூலமாக செயற்கை முறையில்தான் செயல்பட வைக்க முடியும். அதே சமயம் இந்த மாத்திரை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடும் போது, நாளடைவில் அதன் சக்தியினை நம்முடைய உடல் ஏற்றுக் கொள்ளாது. அதனால் மருந்தின் வீரியத்தினை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்கும் போது அவர்களுக்கு வேறு மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும் ஆடிக்கொண்டு இருப்பார்கள். நிற்க முடியாது.

இதை தடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பேஸ்மேக்கர் கருவியினை உடலில் இணைத்து அதன் மூலமாக அவர்கள் மூளைக்கு கரன்ட் கொடுக்கணும். இதனால் அவர்கள் மீண்டும் பழையபடி செயல்பட ஆரம்பிப்பார்கள். ஆனால் இந்த சிகிச்சை செய்தாலும், அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்று மானிட்டர் செய்ய வேண்டும். சில வருடம் கழிச்சு புதிய கருவியினை பொருத்த வேண்டும். இந்த பிரச்னைக்கு மருத்துவ துறை ஒரு நிரந்தர தீர்வினை கண்டுள்ளது. நுண்ணலைகள் கொண்டு கொடுக்கக் கூடிய MRgFUS, கத்தியின்றி ரத்தமின்றி செய்யக்கூடிய சிகிச்சை’’ என்றவர் அது பற்றி முழுமையாக விவரித்தார்.

‘‘மூளையில் பாதிக்கப்பட்ட சர்க்யூட்டில் இந்த நுண்ணலைகளை செலுத்துவதுதான் MRgFUS சிகிச்சை. இதற்கு மயக்க மருந்து அவசியமில்லை. நுண்ணலைகளை செலுத்த ஆரம்பித்த சில விநாடிகளிலேயே உடலில் உள்ள நடுக்கம் நின்றுவிடும். மேலும் அவர்கள் சுயநினைவில் இருப்பதால், நுண்ணலைகள் செலுத்தும் போது அதில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக கண்டறிந்து சிகிச்சையினை மாற்றி அமைக்கலாம். எல்லாவற்றையும் விட பக்கவிளைவுகள் கிடையாது.

ஒரு சிலருக்கு பார்கின்சன் நோயின் பாதிப்பு மீண்டும் ஏற்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் மறுபடியும் இந்த சிகிச்சையினை அளிக்கலாம். இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். உலகளவில் கடந்த 10 வருஷ காலமாக இந்த சிகிச்சை முறை செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியா குறிப்பாக சென்னை மக்களுக்கு இது புதுசு. இதுவரை 16 பேருக்கு இந்த சிகிச்சையினை எங்களின் மருத்துவமனையில் அளித்திருக்கிறோம்.

அவர்கள் அனைவரும் குணமாகி மீண்டும் புதிய வாழ்வினை வாழ்ந்து வருகிறார்கள். எந்த ஒரு சிகிச்சைக்கு பிறகுதான் நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை காக்க கண்டிப்பாக ஏதாவது ஒரு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். நீச்சல், சைக்கிளிங், யோகா, மெடிடேஷன் அல்லது பிசியோதெரபி போன்றவற்றை தொடர வேண்டும்’’ என்று ஆலோசனை அளித்தார் டாக்டர் விஜயன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்! (மருத்துவம்)
Next post கணவனுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட பாடம் எடுத்த மாமனார், மாமியார் – உண்மை கதை..!! (அவ்வப்போது கிளாமர்)