குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற முடியும்! (மருத்துவம்)

Read Time:9 Minute, 26 Second

இன்றைய காலத்தில் எடுத்ததெற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் குணத்தை குழந்தைகள் இயல்பாகவே வளர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு பிடிவாதம் நிறைந்தக் குழந்தையை வளர்ப்பது எளிதான காரியம் அல்ல.அதற்கு விரைவாக தீர்வு காணவில்லை என்றால் ஒவ்வொரு சிறிய விஷயமும் பெரிதென மாறி அது ஒவ்வொரு நாளும் பெற்றோர்களுக்கு போராட்டமாக மாறும். பிடிவாதமானக் குழந்தைகளின் நடத்தையைகட்டுப்படுத்துவது என்பது குறித்து ஏராளமான தகவல்களை அறிந்தாலும் அதனை செயல்படுத்துவது என்பது சவாலாக உள்ளதாகவும், இதனால் தங்கள் நாட்களை மனஅழுத்தத்தோடு கழிப்பதாகவும் பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளின் பிடிவாதத்திற்கான காரணங்களும் அதன் தீமைகளும்

*குழந்தைகள் தங்கள் ஆளுமையின் ஒரு பகுதியாக இந்த பிடிவாதமானப் பண்பை நினைக்கிறார்கள். முக்கியமாக ஒன்றை அடைவதற்கான ஆயுதமாகவும் அதனைக் கையாளுகிறார்கள். மேலும் குழந்தைகள் பிடிவாதத்தால் மட்டுமே தாங்கள் வெற்றி பெற முடியும் விரும்பியதை அடையவும் முடியும் என்று உறுதியாக நினைக்கிறார்கள்.

*இது தவிர பிடிவாதத்திற்கு மற்றுமொரு காரணம் பெரும்பாலும் குழந்தைகள் தனது பாதுகாப்பின்மையின் அடையாளமாகவும் மற்றும் தங்களின் பலவீனமான மனநிலையை மறைத்துக்கொள்ள வேண்டியும் பிடிவாதத்தைக் கைக்கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*மேலும், சரியான சூழலில் சரியானப் பெற்றோர்களிடம் அதாவது குடும்ப உறவுகள் சுமூகமாக அடையாத குழந்தைகள் இயற்கையாகவே பிடிவாதக் குணத்தோடு வளர நிறைய வாய்ப்புள்ளது.

*இதுபோக பிடிவாதத்தைக் கொண்டு வளரும் பிள்ளைகள் பின்னாளில் சுயநலவாதியாகவும், மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல் தன் சொந்த நலன்களுக்காகப் போராடத் தயாராகும் குணநலங்களைக் கொண்டும் வளரலாம்.இதனால் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளலாம். உறவுகளிடம் ஒட்டுத்தன்மையிலிருந்தும் விலகலாம் போன்ற எதிர்மறை விஷயங்கள் நிறைய உள்ளன.

பிடிவாதமான குழந்தையின் பண்புகள்

*குழந்தைகள் தங்களின் நோக்கத்தை செயல்படுத்த வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், தங்களின் இருப்பை நிரூபித்துக் கொண்டிருக்கவும் பெற்றோர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கவும் விரும்புவதால் அதிகப் பிடிவாதத்தைக் கையாளுகின்றனர்.

*இன்னும் சில குழந்தைகள் தங்களின் தலைமைப்பண்பு மற்றும் சுதந்திரத்தை உணர்த்தவும் கூட பிடிவாதமானக் குணத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் நினைத்தது நிறைவேறுகையில் அப்பிடிவாதத்தை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள்.

*மேலும், குழந்தைகள் உணவு, வேலை மற்றும் படிப்பு விஷயத்தில் பெரும்பாலும் அதிக பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் ஒரு செயலிலிருந்து எளிதாகத் தப்பிப்பதற்கு பிடிவாதத்தைத் தந்திரமாக கையாளுகிறார்கள்.

*பிடிவாதமான குழந்தைகளை கையாள நாம் அவர்களைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும். உதாரணமாக ஒரே மாதிரியான உணவு முறை தவிர்த்து முடிந்தளவு ஆரோக்கியம் கலந்த விதவிதமான உணவுகளை அளிக்கலாம். கொடுக்கும் உணவை முழுவதும் உண்டுவிட்டால் ஏதேனும் ஒரு இனிப்பை வெகுமதியாக தருவேன் என ஊக்கப்படுத்தலாம்.

*அது போல அவர்களிடம் வேலை வாங்க நினைக்கையில் அல்லது படிக்க சொல்லும்போதும் அவர்களிடமே விருப்பத்தை விடுவது நல்லது. உதாரணமாக,‘‘இந்த அறையை இங்கிருந்து சுத்தம் செய்” எனும் கேள்வியை விட ‘‘எங்கிருந்து தொடங்க விருப்பம்” என அவர்களிடமே கேட்கையில் அவர்களுக்கும் ஆர்வம் பிறக்கும். படிப்பும் அவ்வாறே ‘‘எந்தப் பாடத்தை முதலில் படிக்க விரும்புகிறீர்கள்” எனக் கேட்பதும் அவர்களின் படிப்பார்வத்தை அதிகரிக்கும்.

*சிலநேரங்களில் பிடிவாதத்தின் அடர்த்தி அதிகரிக்கையில் சின்ன சின்ன தண்டனைகளை அதாவது தோப்புக்கரணம் போடவைத்தல். சில வார்த்தைகளை எழுத வைத்தல், வீட்டில் ஏதாவது ஒரு வேலையை முடிக்கும் பொறுப்பைக் கொடுத்தல் என அவர்களை வழிக்கு கொண்டுவர முயற்சிக்கலாம்.

பிடிவாதமான குழந்தையை சமாளிக்கும் எளிய முறைகள்

*குழந்தைகள் ஒன்றைக் கேட்கையில் ‘‘இல்லை” என்று சொல்வதைத் தவிர்த்து, அதற்கு மாற்றுப் பொருளை தர பயிற்றுவிக்கையில் அவர்கள் விரும்பிய பொருளின் மீது ஆர்வம் குறையும் வாய்ப்புள்ளது

*குழந்தைகள் விரும்பாத ஒன்றை செய்யும்படி கட்டாயப்படுத்தாதீர்கள். அது அந்த செயலின் மீதான வெறுப்பை வளர்க்கும்.

*உங்கள் குழந்தையின் தூண்டுதல்களை எந்த செயல்கள் மூலம் உருவாக்கலாம் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் (உதாரணமாக: கைத்தட்டுவது, பாராட்டுவது, பரிசு கொடுப்பது)
*குழந்தைகளைத் தண்டிக்கவோ தீய வார்த்தைகளைக் கையாளுவதோ மிகப்பெரிய தவறாகும்.

*குழந்தைகள் மாறுவதற்கான அவகாசங்களையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து கொடுக்கத் தவறாதீர்கள்.

*அவர்கள் பக்கத்து நியாயங்களையும் அவர்கள் சொல்லும் காரணங்களையும் கேட்க நாம் தயாராக இருப்பதாக காட்டும்போது, ​​​​நாம் சொல்வதைக் கேட்க குழந்தைகளும் தங்களை ஆயத்தமாக்கிக் கொள்வார்கள். குழந்தையின் பிடிவாதத்தைப் பற்றி எதிர்மறையாக இருப்பதைக் காட்டிலும் அதனை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்த்து அவர்களோடு அமர்ந்து பொறுமையாக பேசுவதும் நல்ல பலனைத் தரும்

*அதிகப்படியான பாராட்டு வார்த்தைகளை குழந்தைகளிடம் தொடர்ந்து உபயோகிப்பதும், அவர்கள் சின்ன சின்ன செயல்கள் செய்யும்போதும் அதனைப் பெரிய அளவில் பாராட்டுவதும் பிடிவாதக் குணத்தை மாற்றும் சீரிய வழிமுறையாகும்.

*குடும்பச் சூழலை நல்விதமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது ஒவ்வொரு பெற்றோர்களின் தலையாய பணியாகும். குழந்தைகள் முன் சண்டையிடுதலை தவிர்ப்பதும் கூட குழந்தையின் பிடிவாதத்தை மாற்றும் வழியாகும்.

*மேலும் குழந்தைகள் அழுது பிடிவாதத்தைத் தொடர்ந்து கையாளும்போது அவர்களோடு வாதம் புரியாமல் சிறிதுநேரம் அவர்கள் போக்கில் விடுத்து பின்னர் அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும்.

*குழந்தைகளுக்கு தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வைக்கலாம்.வீட்டின் பொருளாதார சூழலை அவர்களுக்கு புரியும்படி எடுத்துரைப்பதும் நல்ல பலனைத் தரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புடவைகளுக்கு மெருகூட்டும் டாசில்ஸ்! (மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளுக்கான விளையாட்டு வழி பிசியோதெரபி!! (மருத்துவம்)