வாசகர் பகுதி-கபினி காடு!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 38 Second

கோடை விடுமுறை துவங்கிவிட்டது. எல்லோரும் குடும்பத்துடன் ஒரு வாரம் ஏதாவது ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். கோடை காலத்தில் சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலே ஊட்டி, கொடைக்கானல் அல்லது ஏற்காடு போன்ற மலைப்பகுதியை தான் பிளான் செய்வார்கள். இதைத் தவிர நம்நாட்டில் பல அழகான சுற்றுலா தளங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் கபினி காடு.

கேரளாவின் வயநாடு பகுதியில் துவங்கி, கர்நாடகாவின் நரசிப்பூர் அருகே காவிரியில் இணைகிறது கபினி! மொத்தம் 230 கிலோ மீட்டர்.இந்த நீர் செல்லும் வழியில்தான் கபினி அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் உயரம் 166 அடி, நீளம் 13,927 அடி. இந்த அணையின் நீர் தேக்கம் மஸ்தி குடி என்ற கிராமத்தை மூழ்கடித்து ஏரியாக மாறிவிட்டது. இதனை ஒட்டிய காடுகள்தான் கபினி காடுகள். இந்த இடத்தின் அருகில் நாகர்கோசல இயற்கை பாதுகாப்பு வனப்பகுதி சார்ந்து ஒரு காடு உள்ளது. சதுப்பு நிலங்கள் தான் இந்த காட்டின் ஸ்பெஷல்! இதன் மறுமுனையில் பந்திப்பூர் தேசியப் பூங்கா சரணாலயம் துவங்குகிறது!

இந்த காடு ஆசிய யானைகளுக்கு பிரபலம். ஏராளமான யானைகள், புள்ளி மான்கள், சாம்பல் மான் ஆகியவற்றை ஏரியில் படகு சவாரி செய்யும்போது கண்டுகளிக்கலாம்!மாறாக காட்டினுள் ஜீப் அல்லது யானை சவாரி சென்றால் மேலும் பல மிருகங்களை பார்க்க முடியும். உதாரணமாக காட்டுப்பன்றி, கட்டெருமை, கரடி, கருங்குரங்கு, புலி, சிறுத்தை, காட்டு நாய் என பார்த்து ரசிக்கலாம். முதலை கூட சில சமயம் கரையில் ஒதுங்கி வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும்!

இது பறவைகளுக்கும் அற்புத பூமி. 300க்கும் அதிகமான பறவைகளை இங்கு கண்டுகளிக்கலாம். இதற்காகவே பல பறவை ஆர்வலர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பழுப்பு மூக்கு மீன் கொத்தி, அரிவாள் மூக்கன், கொக்கு, நாரை என வெரைட்டியாக காணலாம். சமீபத்தில் ஒரு புலி தன் நான்கு குட்டிகளுடன் பவனி வந்தது சோஷியல் மீடியாவில் வைரலானது. இதே போல் மற்றொரு பெண் புலியும் 4 குட்டிகளை ஈன்று பிரபலமானது. இவற்றின் தந்தை புலிகளும் பிரபலமாகி பட்டப் பெயர்களுடன் உலா வருகின்றன!

பெங்களூர் நகரத்திலிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காடு உள்ளது. 55 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுயிர் அம்சங்கள் மற்றும் இயற்கை எழில் கொண்ட இந்த காடு, சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க சிறந்த இடம். பார்வை நேரம்: காலை 6.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோர்மே குச்சி ஐஸ் நம்ம சென்னையில்! (மகளிர் பக்கம்)
Next post டூர் போறீங்களா? ஹேப்பி ட்ரிப்… ஹெல்த் கைடு! (மருத்துவம்)