அழகான நினைவுகளை தரும் ஹேண்ட் காஸ்டிங்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 38 Second

நாம் குழந்தையாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் தோன்றுகிற சந்தோஷம் அலாதியானது. ெகாழுக் மொழுக் என்று குட்டி குட்டி கைகால்களுடன் நம் குழந்தை பருவத்தை வர்ணிக்கும் போது நாம இப்படி இருந்தோமா என்று எண்ணி சந்தோஷப்படுவோம். அம்மா சொல்ல சொல்ல நம்முடைய மனத்திரையில் நம்மை நாம உருவகப்படுத்தி சந்தோஷப்படுவோம். அடுத்து புகைப்படங்களாக எடுத்து அதனை ஆல்பமாக வடிவமைத்து பார்த்து சந்தோஷப்பட்டோம்.

இதையெல்லாம் தாண்டி நம்முடைய கை கால்களின் அளவுகளை அப்படியே அச்சு அசலாக காஸ்டிங் முறையில் எடுத்து சிலைகளாக மாற்றி வைக்கும் முறையும் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இதனை கடந்த மூன்று வருடங்களாக பகுதி நேரமாக செய்து வருகிறார் கயல்விழி கிருஷ்ணன். ‘ஹேப்பி காஸ்டிங்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் இந்த வேலையை செய்து வருகிறார்.

‘‘சொந்த ஊர் கரூர். படிச்சதெல்லாமே அங்க தான். நான் சிவில் இன்ஜினியரிங் படிச்சு முடிச்சிட்டு, அரசு தேர்வு எழுத திட்டமிட்டதால், அந்த தேர்வுக்காக என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் நேர்காணல் சந்திப்பில் என்னால் தேர்வாக முடியவில்லை. அதனால் வேலையும் கிடைக்கவில்லை. இருந்தாலும் விடா முயற்சியோடு படிச்சேன். அந்த சமயத்தில் என் அக்காவிற்கு கல்யாணமாகி ஆண் குழந்தை பிறந்தது. அக்கா பையனை செல்லமா நாங்க ஹேப்பி என்று தான் கூப்பிடுவோம். நாம சின்ன வயசுல எப்படி இருந்தோம் என்ன மாதிரியெல்லாம் சேட்டைகள் செய்தோம்னு சொல்லிதான் கேள்விப் பட்டிருப்போம்.

ஆனா, என்னோட அக்கா பையனுக்கு அதை அப்படியே காட்சிகளா காட்ட வேண்டும் என்பதற்காக அவன் சின்ன வயசில் விளையாடிய மற்றும் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் சேகரித்து வைக்க ஆரம்பித்தோம். அது மட்டுமில்லாமல் மாதம் ஒருமுறை புதுவிதமான ஐடியாக்களில் அவனை வைத்து புகைப்படங்கள் எடுப்போம். அந்த மாதிரியான நேரத்தில்தான் கைகளை சிலைகளை போல மாற்றும் காஸ்டிங் முறை பற்றி கேள்விப்பட்டேன். ஹேண்ட் காஸ்டிங்க் செய்பவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை காஸ்டிங் செய்ய வேண்டும்னு அழைச்சோம்.

ஆனா, அவங்க கொரோனா சமயம் என்பதால வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு காஸ்டிங் முறை ரொம்பவும் பிடிச்சிருந்தது. அதை நாமளே கற்றுக் கொண்டு செய்தால் என்ன என்று யோசனை வந்தது. அது குறித்து இணையத்தில் தேட ஆரம்பிச்சேன். சிலர் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தினாங்க.

அதில் சேர்ந்து காஸ்டிங் பற்றி கொஞ்சம் கொஞ்சமா கற்றுக் கொண்டேன். என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை வந்தவுடன் முதன் முதலில் என் அக்கா பையனோட கையைதான் காஸ்டிங் முறையில் சிலை வடிவத்தில் செஞ்சு பார்த்தோம். ரொம்ப அழகா வந்திருந்தது. அதை அப்படியே பிரேம் செய்து மாட்டி வைத்தோம்’’ என்றவர் எப்படி இதை ஒரு தொழிலாக மாற்றினார் என்று சொல்ல தொடங்கினார்.‘‘என் வீட்டில் மாட்டியிருந்த காஸ்டிங் போட்டோவை பார்த்த எங்களின் சொந்தக்காரங்களும் நண்பர்களும் இந்த மாதிரி எங்களுக்கு செய்து தர முடியுமான்னு கேட்டாங்க. நானும் ஆரம்பத்தில் பல பேருக்கு கிஃப்ட் பண்றதுக்காகவே படிக்கிற நேரம் போக இந்த வேலையை செய்து கொடுத்தேன்.

நான் செய்து கொடுத்த காஸ்டிங் பிரேமை பார்த்த ஒருத்தர் என்னை நேர்ல வந்து பாராட்டி கொஞ்ச பணம் கொடுத்துட்டு போனாரு. அது தான் நான் செய்த வேலைக்கு வாங்குன முதல் சம்பளம். இந்த வேலைக்கு இவ்வளவு வரவேற்பு இருக்குன்னு அப்போதான் தெரிஞ்சது. அதன் பிறகு பகுதி நேரமா இந்த வேலையை செய்ய தொடங்கினேன். நண்பர்கள் பலருக்கு செய்து கொடுக்க சொல்லி கேட்டாங்க. கொஞ்ச நாள்ல இதையே ஒரு ஸ்டார்ட் அப் வேலையா மாத்தினேன். சமூக வலைத்தளங்கள் மூலமா இதை பிரபலப்படுத்துனாலே போதும்ன்னு தோணிச்சு. என்னுடைய அக்கா பையன் ஹேப்பிக்காகத்தான் நான் இந்த வேலையை கத்துக்கிட்டேன்.

அதனால அவனோட பேருலேயே ஹேப்பி காஸ்டிங்னு ஆன்லைன் ஸ்டோருக்கு பெயர் வச்சேன். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று எல்லா சமூக வலைத்தளப் பக்கங்களிலும் நான் செய்து கொடுத்த காஸ்டிங் வேலைகளை பகிர்ந்தேன். அதை பார்த்து ஆர்டர்கள் வந்தது. ஹேண்ட் காஸ்டிங் வெளிநாடுகளில் பிரபலம். பலர் தங்களோட குழந்தைகளின் குட்டி கை கால்களை காஸ்டிங்க் முறையில் பிரேம் செய்து வைத்திருப்பார்கள். காஸ்டிங் செய்வதற்கு கொஞ்சம் பொறுமை அவசியம். மோல்டிங்க் பவுடரை தண்ணீரில் கலந்தவுடன் அது ரப்பர் மாதிரி கெட்டியாயிடும். அதை தண்ணீரில் கலந்தவுடனே அதற்குள் கையை விட்டு 30 செகண்ட் அசைக்காம வைத்திருக்கணும்.

பவுடர் ரப்பர் போல மாறினதும் கையை எடுத்திடலாம். கை வைத்திருந்த இடத்தில் காஸ்டிங் திரவத்தை ஊற்ற வேண்டும். அந்த திரவம் நம்முடைய கையின் வடிவத்திற்கு ஏற்ப இறுகிடும். பிறகு ரப்பரை கிழித்து எடுத்தால் நம்முடைய கையின் நகலை போலவே ஒரு உருவம் கிடைக்கும். இந்த காஸ்டிங்கின் சிறப்பு நம்முடைய கையில இருக்கிற சுருக்கம், தழும்பு, நகவெட்டு என எல்லாமே அப்படியே துல்லியமா பதிவாகி இருக்கும். இதனை பல விதங்களில் எடுக்கலாம்.

சிலர் குழந்தைகளின் கால்களை எடுத்து தர சொல்லுவாங்க. கை, கால் இரண்டையும் கூட எடுக்கலாம். குழந்தைகளோட கை அல்லது காலை காஸ்டிங் செய்யும் போது குழந்தைகள் அசையாமல் இருக்க வேண்டும். அதற்காகவே குழந்தைகள் தூங்கும் போது தான் காஸ்டிங் எடுப்போம். காஸ்டிங் உருவங்களுக்கும் நாம் விரும்பும் நிறங்களை வண்ணம் தீட்டலாம். பலர் கோல்டன் நிறங்களைதான் விரும்புகிறார்கள். காரணம், அது சிலை மாதிரி தெரிவதால் அதையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதில் நாங்க ஒரு மாற்றமாக கைக்கு சொந்தமான குழந்தையின் புகைப்படம், விளையாட்டு பொருட்கள், பெற்றோரின் கைகள் என அனைத்தையும் சேர்த்து பிரேம் செய்து கொடுக்கிறோம். இதற்கு ஒரு மாத காலமாகும்.

காஸ்டிங்கிற்கு பயன்படுத்தக்கூடிய பவுடர் கையில் ஒட்டாது, சரும அலர்ஜி, அரிப்பு ஏற்படுத்தாது. எங்களுடைய வாடிக்கையாளர்கள் தங்களின் நினைவு பொருட்களை பிரேம் பண்ணி கொடுக்க சொல்லுவாங்க. உதாரணமா கல்யாணமான தம்பதிகளின் கைகளை கோர்த்து காஸ்டிங் செய்து கொடுத்தோம். சிலர் தங்களோட வளர்ப்பு பிராணிகளோட கை கால்களையும் காஸ்டிங் செய்ய சொல்லி கேட்கிறார்கள்.

நான் இப்போது இதை பகுதி நேர வேலையாகத்தான் செய்து வருகிறேன். அவர்கள் வீட்டிற்கு சென்றும் செய்து தருகிறேன். சிலர் வேறு ஊரில் இருந்து அழைப்பாங்க. அந்த சமயத்தில் அந்த ஊரில் செய்ய விரும்பும் அனைவரின் கைகளையும் ஒரே நாளில் காஸ்டிங் செய்து கொண்டு வந்திடுவேன். தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது. பலரின் அழகான நினைவுகளை மீண்டும் உருவாக்கி தரும்போது, எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் கயல்விழி கிருஷ்ணன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீட்டுக்கு வரும் டிரங்க் பெட்டி பொட்டிக்!! (மகளிர் பக்கம்)
Next post வியர்க்குரு வராமல் தடுக்க எளிய வழிகள்!! (மருத்துவம்)