தாகம்!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 44 Second

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. வெயில் என்றதுமே உடனே நினைவுக்கு வருவது அதிகமான தாகம்தான். ஆனால் தாகம் என்பது ஒரு இயற்கையான தூண்டுதல் மட்டுமில்லாமல் ஒரு நோயின் அறிகுறியாகவோ அல்லது ஒரு நோயாகவோ கூட வரலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நீர் மனித உடலின் இன்றியமையாத அங்கமாகும். அதிகப்படியான திரவ இழப்பு தாகமாக வெளிப்படும். தாகம் என்பது திரவ சமநிலையை பராமரிக்கும் உடலியல் அமைப்பு. நீர் அருந்துவதற்கான இயற்கை தூண்டுதல்தான் தாகம்.

‘நீர், உயிர்களுக்கு அவசியமானது என்று கூறுவதற்கு மாறாக வாழ்க்கையே நீர் தான் எனக் கூறலாம்’ – இந்த மேற்கோள் நம் வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. நமது உடல் எடையில் 50 சதவீதத்தை உள்ளடக்கியது நீர். இது பல்வேறு செயல்பாடுகளைச் செய்வதால் உயிர் வாழ்வதற்கு முக்கியமாகிறது. இது ஊட்டச்சத்துக்களை திசுக்களுக்கு கொண்டு செல்கிறது, வளர்சிதை மாற்ற கழிவு பொருட்களை நீக்குகிறது, உடல் உறுப்புகளின் நச்சை நீக்குகிறது, உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துகிறது, pH, எலக்ட்ரோலைட் சமநிலை போன்றவற்றை பராமரிக்கிறது.

சாதாரண உடலியல் செயல்பாட்டில், குறிப்பிட்ட அளவு திரவ சத்தை நாம் தொடர்ந்து இழக்கிறோம். அவ்வாறு நமது திரவ சத்து 2.5 சதவீதம் குறைந்தாலே உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இதை மறுபடியும் சீரான நிலைக்கு கொண்டுவர நமது மூளை நமது நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் உணர்வு (தகவல்) தான் ‘தாகம்’. இந்த திரவ சமநிலையை பராமரிக்கவில்லை
என்றால், கடுமையான விளைவுகளுக்கு இது வழிவகுக்கும்.

தாகம் ஒரு இயற்கையான நிகழ்வாக இருந்தாலும் அது வரம்பை மீறும் போது நோயாக மாறுவது மட்டுமில்லாமல் மேலும் பல நோய்களிலும் இது ஒரு பொதுவான அறிகுறியாகவும் வருகிறது. நவீன விஞ்ஞானம் இதை ஒரு அறிகுறியாக மட்டுமே ஏற்றுக்கொள்கிறது, அதை ‘நோயாக’ கருதவில்லை. ஆனால் உண்மையில் “திரவ ஏற்றத்தாழ்வு”, நோயுற்ற தன்மை மற்றும் இறப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும், மேலும் திரவ சமநிலையின்மையின் குறிகாட்டியாக ‘தாகம்’ இருக்கிறது. இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு ஆயுர்வேதம் தாகத்தை ஒரு அறிகுறியாக மட்டும் கருதாமல் ஒரு தனி நோயாக விவரிக்கிறது.

தாகம் என்பது ஒவ்வொருவருக்கும் இயல்பான ஒரு நிகழ்வாக இருந்தாலும் எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல், எப்போதும் அதிகமாக தாகத்தை உணர்ந்தாலும், மீண்டும் மீண்டும் தண்ணீர் குடித்த போதிலும் திருப்தி அடையவில்லை என்றாலும், இது ஒரு தனிப்பட்ட நோய்க்கான அறிகுறியாகும். இதை ஆயுர்வேதத்தில் ‘த்ரிஷ்னா’ என்றும் நவீன மருத்துவ அறிவியலில் ‘பாலிடிப்ஸியா’ என்றும் அழைக்கிறோம்.

ஆயுர்வேதத்தில், அடக்கப்படக் கூடாத 13 வகையான இயற்கை தூண்டுதல்களில் ஒன்றாக தாகம் விளக்கப்பட்டுள்ளது.ஆனால் இங்கே, நாம் வழக்கத்திற்கு மாறாக அதிக தாகத்தை ஏற்படுத்தும் ‘த்ரிஷ்னா’ என்ற நோய் பற்றி பேசுகிறோம், இது தோற்ற தன்மையின் அடிப்படையில், 6 வகைகளாக ஆயுர்வேதம் வகைப்படுத்துகிறது.

தாகத்தில் வரும் பொதுவான அறிகுறிகள்

*முக சோஷம்: வாய் வறண்டு போதல்.
*ஸர்வதா அம்புகாமிதவம்: எந்நேரமும் நீர் வேட்கை
*அங்க சாதம்: உடல் சோர்வு
*பிரமம்: தலைசுற்றல்
*பாதிர்யம்: காது அடைத்தது போல் உணர்தல்
*ஷ்ரமம்: அசதி
*ஹ்ருதய வியதா: படபடப்பு
*சந்தாபம்: உடல் எரிச்சல்.

கடுமையான தாகம் ஏற்பட்டால் வரும் அறிகுறிகள்

*மங்கலான அல்லது இரட்டைப் பார்வை
*மன நிலை மாற்றம்
*குழப்பம்
*காய்ச்சல் மற்றும் குளிர்
*அதிகரித்த பசியின்மை
*சோம்பல்
*வாந்தி, குமட்டல்
*எடை இழப்புதாகம் ஒரு அறிகுறியாக வரும் நிலைகள்
*தாகத்தின் முக்கிய காரணம் நீரிழப்பு (Dehydration). அதிகமாக வியர்த்துவிட்டாலும் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாகவும் நீரிழப்பு ஏற்படக்கூடும்.

*நீரிழிவு – சர்க்கரை நோய்
*கர்ப்பம்
*கடுமையான உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு
*கோடை அல்லது வறண்ட வானிலை
*மன அழுத்தம் (பயம், கோபம், துக்கம் போன்றவை).
*வறண்ட உணவு
*உப்பு அல்லது காரமான உணவுகளை சாப்பிடுவது
*மதுப்பழக்கம்
*விரதம்
*வாதம் மற்றும் பித்த சமநிலைஇன்மை
*விஷம்
*சைக்கோஜெனிக் பாலிடிப்சியா (காரணம் அல்லது தூண்டுதல் இல்லாமல் தண்ணீரை அதிகமாக உட்கொள்வது)
*மருந்துகள் – அதிகப்படியான தாகம் சில நேரங்களில் லித்தியம், ஆன்டிசைகோடிக்ஸ் மற்றும் டையூரிடிக்ஸ் (நீர் மாத்திரைகள்) உள்ளிட்ட சில வகையான மருந்துகளின் பக்க விளைவுகளாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகளை கொண்ட மற்றும் பல நோய்கள்

*பெருங்குடல் அழற்சி

*இரைப்பை புண்கள்

*ஹார்மோன் தொந்தரவுகள்

*இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள்

*உறுப்பு செயலிழப்பு (இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழப்பு)

*தீக்காயங்கள்

*காய்ச்சல்

*செப்சிஸ்

*மல்டிபிள் மைலோமா

தாகத்திற்கு சிகிச்சைஅ. தாகத்திற்கு தண்ணீர் தாகம் எடுக்கின்றபோது நம்மில் பெரும்பாலானோர் ஃப்ரிட்ஜில் உள்ள குளிர்ந்த நீரைத்தான் முதலில் எடுத்து குடிப்போம். ஐஸ் நீரை பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு செயலாகும். அதற்கு காரணம், அறை வெப்பநிலையில் (Room Temperature) நீரின் மூலக்கூறுகள் இயல்பான நிலையில் இருக்கும். நீரை குளிர்விக்கின்றபோது நீரின் மூலக்கூறுகள் இறுக்கம் அடைந்து அதன் இயல்பான ஆற்றலை இழக்கும்.

இப்படி ஆற்றலிழந்த குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது உடல் உள்ளுறுப்புகள் அதிகப்படியான ஆற்றலை செலவழித்து அந்தக் குளிர்ந்த நீரை இயல்பான நிலைக்குக் கொண்டுவர முயலும். இவ்வாறு முயலும்போது தாகம் எடுப்பது குறைந்தாலும் உடல் வெப்பநிலை சீராக இல்லாமல் சில உடல் உபாதைகள் (சளி, ஜுரம்) ஏற்படும். மேலும் தாகம் உள்ள போது குளிரூட்டப்பட்ட பானங்களை பருகினால் இவைகளில் அதிகப்படியான தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உள்ளதால் அவை நம் ஆரோக்கியத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும்.

ஆ. தாகத்திற்கு ஆயுர்வேத வீட்டு வைத்தியம்

*ஒரு ஸ்பூன் அதிமதுரப் பொடியை அரை ஸ்பூன் பெருஞ்சீரகத்துடன் 400 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீரை 100 மில்லியாகக் குறைத்து, வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை (காலை மற்றும் மாலை) உட்கொள்ளவும்.

*தண்ணீரிலுள்ள கெடுதல்களை போக்கவும் மேலும் தாகத்தை போக்கவும் சுமார் 10 கிராம் சீரகம், 5 கிராம் தனியாவும் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீருடன் காய்ச்சி, அரை லிட்டரானதும், அதை குளிர்வித்து தண்ணீர் தாகம் எடுக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாக அருந்தலாம்.

*மற்றொரு எளிய வீட்டு வைத்தியம் 4 கப் கொதிக்கும் நீரில் 1 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்க்க வேண்டும். அவற்றை நன்றாக கலக்கவும். கலவையை குளிர்விக்கவும், தாகமாக உணரும்போது நாள் முழுவதும் இதை சில சிப் எடுத்துக் கொள்ளவும்.

*50 கிராம் சீந்தில் இலைகளை 50 கிராம் நெல் (அரிசி) உடன் ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் 150 மில்லியாக குறையும் வரை கொதிக்க வைத்து திரவத்தை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். இதை தொடர்ந்து சில நாட்கள் செய்யவும்.

*நெல்லிக்காய் சாற்றில் தேன் அல்லது கற்கண்டை கலந்து காலை-மாலை குடிப்பது அதிக தாகத்தைத் தடுக்கும்.

*இளநீர் குடிப்பது நன்மை பயக்கும்.

*அதிக தாகத்திற்கு பால் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

*தேனுடன் எலுமிச்சை சாறு அதிக தாகத்தை குறைக்க நன்றாக வேலை செய்கிறது.

*நாவல், மாதுளை, மாம்பழம் ஆகியவற்றின் மென்மையான இலைகளை சேகரித்து நன்றாக பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்டை 1 டீஸ்பூன் மோருடன் கலந்து குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும், இது தாகத்தை குணப்படுத்துகிறது.

*5 கிராம் கொத்தமல்லி விதைகளை எடுத்து பொடியாக்கி ஒரு கப் தண்ணீரில் சேர்த்து ஒரு இரவு வைக்க வேண்டும். இதை வடிகட்டி அத்துடன் ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்த்து பருக வேண்டும்.

இ. அதிக தாகத்திற்கு ஆயுர்வேத ஒற்றை மூலிகைகள்

*திராட்சை, பேரீச்சம் பழம், வெட்டிவேர், சந்தனம், அதிமதுரம், நாரத்தங்காய், தாமரை பூ மற்றும் தண்டு, ரோஜா இதழ்கள், நெல்லிக்காய் போன்றவை நல்ல பலனளிக்கின்றன.

ஈ. அதிக தாகத்திற்கு ஆயுர்வேத மருந்துகள்

*கர்ஜூராதி மந்தம் – பேரீச்சம்பழம் மற்றும் மாதுளை போன்ற இனிப்பு பழங்கள் உள்ளன.

*ஷடங்க பனீயம் – ஜுரத்தில் ஏற்படுகின்ற தாகத்தில் இது மிகவும் பலன்அளிப்பதாக உள்ளது.

*தான்யகாதி ஹிமம் – கொத்தமல்லி விதையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

*பர்பதாத்யாரிஷ்டம் – கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளுக்கு சிகிச்சைஅளிக்கப் பயன்படுகிறது.

*திரிணபஞ்சமூல கஷாயம் – ஐந்து வகையான புற்களால் செய்யப்பட்டது. சிறுநீர் பாதை கோளாறுகளில் பயன்படுத்தப்படுகிறது.

*சந்திரகலா ரசம் – ரத்தப்போக்கு கோளாறுகளில் பயனுள்ளதாக இருக்கும்.

*சந்தனசவம் – 4 டீஸ்பூன் மருந்தை சம அளவு தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டும்.

*மேலும் காமதூக ரசம், ப்ரவல பிஷ்டி, உசிராசவம், த்ரயண்த்யாதி கஷாயம், சின்சாதி லேஹ்யம் போன்றவை தாகத்தில் நல்ல பலனளிக்கின்றன

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பழக்க வழக்கங்கள்

ஆயுர்வேதம் கனமான, புளிப்பு, உப்பு, மற்றும் காரமான உணவுகளிலிருந்து விலகி, வேலை சோர்வு மற்றும் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை தவிர்க்கவும் பரிந்துரைக்கிறது.

ஆரோக்கியமான உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்

அதற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. சமைத்த பார்லி, வறுத்த அரிசி, சர்க்கரை மிட்டாய் அல்லது தேன் மற்றும் நெய், பால், பழங்கள், பச்சைப் பயறு, கரும்புச் சாறு, திராட்சை, கூஷ்மாண்டா (சாம்பல் பூசணி), மாதுளை, வெள்ளரி போன்றவற்றை பரிந்துரைக்கின்றது.தாகம் என்பது இயற்கையான தூண்டுதல் என்றாலும், வரம்புக்கு அப்பாற்பட்ட தாகம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)
Next post பெண் விற்பனையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங்! (மகளிர் பக்கம்)