சிறப்பு மருத்துவக் காப்பீடு…!! (மருத்துவம்)

Read Time:16 Minute, 34 Second

எப்போ… யாருக்கு… எப்படி?

மருத்துவக் காப்பீடு என்றாலே வரப் போகும் நோய்களுக்கான காப்பீடுதான் எனும் எண்ணம் பலருக்கும் உள்ளது. அதெல்லாம் பழைய காலம். இப்போது ஏற்கெனவே நோய் உள்ளவர்களுக்கும் பிரத்யேகமான மருத்துவக் காப்பீடுகள் வந்துவிட்டன. அதனை சிறப்பு மருத்துவக் காப்பீடு என்கிறார்கள். அதாவது, சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளவர்களுக்குக்கூட சிறப்பு மருத்துவக் காப்பீடுகள் வந்துவிட்டன.

மேலும் குறிப்பிட்ட நோய்க்கான காப்பீடுகள் என்பவையும் சந்தையில் உள்ளன. பெண்களுக்கான சிறப்புக் காப்பீடுகள், முதியோருக்கான சிறப்புக் காப்பீடுகள், கோவிட், டெங்கு போன்ற நோய்களுக்கான சிறப்புக் காப்பீடுகள், முதியோருக்கான காப்பீடுகள், ஏடிஹெச்டி, ஆட்டிசம் போன்ற குறைபாடு உடையவர்களுக்கான பிரத்யேக சிறப்புக் காப்பீடுகள் ஆகியவையும் சந்தையில் கிடைக்கின்றன.

சர்க்கரை நோய் பாலிசி

சர்க்கரை நோயாளிகளுக்குப் பிரத்யேகமான பாலிசிகள் உள்ளன. டைப் 1, டைப் 2 என இருவகை நோயாளிகளுக்கும் பாலிசிகள் உள்ளன. முதல் நாள் முதலே காப்பீடு தொடங்கும் திட்டங்களும் உள்ளன. காத்திருப்புக் காலம் முடிந்து காப்பீடு தொடங்கும் திட்டங்களும் உள்ளன. இந்தக் காப்பீட்டில் சர்க்கரை நோய் உட்பட என்னவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் காப்பீடு உண்டு. ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள் சர்க்கரை நோய்க்கான சிறப்புப் பாலிசியை எடுக்கலாம்.

கல்லீரல், சிறுநீரகங்கள், இதய நோய் பாலிசி

கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்புக் காப்பீடு உள்ளது. ஆனால், இவற்றுக்கு இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை காத்திருப்பு காலம் உள்ளது. அதாவது, இந்த பாலிசி எடுத்த தேதி முதல் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரையிலும் இவை செயல்பாட்டுக்கு வராது. நோய் வருவதற்கான வாய்ப்பை முன்கூட்டியே அனுமானிக்க முடிந்தால் இந்த பாலிசியை எடுக்கலாம். உதாரணமாக, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் கல்லீரலுக்கான சிறப்பு பாலிசியை எடுக்கலாம்.

புற்றுநோய் பாலிசி

இன்று எல்லாவகைப் புற்றுநோய்களுக்குமான பிரத்யேக சிறப்புக் காப்பீடுகள் வந்துவிட்டன. இந்தக் காப்பீட்டில் புற்றுநோய் பாதிப்பு வரும் எனும் அச்சத்தில் உள்ளவர்கள் (மரபார்ந்த முறையில் புற்றுநோய் கொடிவழி கொண்டவர்கள்), புற்றுநோய் பாதிப்பிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டவர்கள் என இருதரப்புமே காப்பீடு பெறலாம். புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளும் இக்காப்பீட்டில் எதிர்கொள்ளப்படும்.

சீனியர் சிட்டிசன் பாலிசிகள்

முதுமையை நோய்களின் வேட்டைக்காடு என்பார்கள். சாதாரண சளி முதல் உயிர் வாங்கும் புற்றுநோய் வரை எல்லாவகை நோய்களுக்கும் முதுமை திறந்த வாசலாகவே இருக்கிறது. எனவே, முதுமையில் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது இந்தக் காலத்தின் தேவையாக இருக்கிறது. தற்போது 65 வயதைக் கடந்த முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவக் காப்பீடுகளை பல நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. இவற்றிலும் சிலவற்றுக்கு காத்திருப்புக் காலம் உண்டு. முதியோர் காப்பீட்டில் பத்து முதல் இருபது சதவீதம் வரை கோ பேமென்ட் எனப்படும் முறை உள்ளது. அதாவது, ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் இருபது சதவீதம் வரை நோயாளியே எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

கர்ப்ப கால காப்பீடு

கருவுற்ற நாள் தொடங்கி, பிரசவம், குழந்தைப் பிறப்பு மற்றும் பிறந்த குழந்தைக்கான கவரேஜ் வரை கர்ப்ப கால காப்பீடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ட்ரைமஸ்டரின் போதும் ஏற்படும் மருத்துவச் செலவுகள், நார்மல் டெலிவரி அல்லது சிசேரியன் டெலிவரி போன்றவற்றுக்கான மருத்துவ செலவுகள், மருத்துவமனை படுக்கை வாடகை, பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்கான செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

சில மருத்துவக் காப்பீடுகள் பிரசவம், புதிதாய் பிறந்த குழந்தைக்கான கவரேஜ், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய செலவுகள், டிஸ்சார்ஜ் ஆன பிறகு ஏற்படும் பராமரிப்பு செலவுகள் (நர்ஸிங் ஃபீஸ், டாக்டர் ஃபீஸ், பிசியோதெரப்பி) போன்ற இதர செலவுகளுக்கான தொகையைத் தருவதற்கும் காப்பீடு அளிக்கின்றன. Daily cash போன்ற திட்டங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. ஆனால், இதன் விதிகளை கவனமாகப் படித்துவிட்டு நன்கு புரிந்துகொண்டபின் காப்பீடு எடுப்பது நல்லது.

ஏடிஹெச்டி, ஆட்டிசம் பாலிசி

கவனக்குறைவு மற்றும் அதீத துறுதுறுப்பு (ADHD) உள்ள குழந்தைகளுக்கும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குமே கூட இன்று பிரத்யேக மருத்துவக் காப்பீடுகள் வந்துவிட்டன. இந்த சிகிச்சைக்காக ஆகும் செலவு உட்பட பல்வேறு கவரேஜ் பிளான்கள் இந்தத் திட்டங்களில் உள்ளன.

தினசரி மருத்துவமனைச் செலவுகள்

சிலவகை நோய்களுக்கு தினசரி அல்லது அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்றுவர வேண்டியது இருக்கும். உதாரணம், டயாலிசிஸ் நோயாளிகள், பிசியோதெரப்பி எடுப்பவர்கள். இப்படியான நோயாளிகளுக்கான சிறப்புத் திட்டமாக Daily Cash பாலிசிகள் இருக்கின்றன. இந்த பாலிசி படி ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த சிகிச்சைகளைப் பெறுவதற்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

தீவிர நோய்களுக்கான காப்பீடு (Critical illness plans)

இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் படி ஒருவர் பாலிசி எடுக்கும்போது அது நடப்பில் இருக்கும் காலத்தில் இதயநோய், புற்றுநோய், பக்கவாதம் போன்ற தீவிரமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் மொத்தமாக ஒரு பெரிய தொகை காப்பீடாக வழங்கப்படும். பொதுவான, மெடிக்கல் இன்ஷூரன்ஸில் வழங்கப்படும் தொகையைவிடவும் பல மடங்கு அதிக தொகையாக இது இருக்கும்
என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நோய்களுக்கான திட்டங்கள்

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் என்பது மாரடைப்பு, புற்றுநோய் போன்ற அதிதீவிர நோய்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று இல்லை. தற்போது கோவிட், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் போன்ற அந்தந்த சீசனில் தோன்றும் தீவிரமான பருவகால நோய்களுக்கும் மருத்துவக் காப்பீடு வந்துவிட்டது. இவ்வகைத் திட்டங்கள் அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு மட்டுமே கவரேஜ் அளிக்கின்றன. அந்த குறிப்பிட்ட நோயை கண்டறிவதற்கான சோதனை, மருத்துவமனை கட்டணம், டாக்டர் பீஸ், மருத்துவச் செலவுகள் உட்பட அனைத்துக்கும் கவரேஜ் தருகின்றன. இதிலேயே ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கவர் செய்வதற்கான ஃப்ளோட்டர் திட்டங்களும் தற்போது நடைமுறையில் உள்ளன.

ப்ரோ ஆக்டிவ் ப்ளான்ஸ்

இது கொஞ்சம் வித்தியாசமானது. இவர்கள் உங்களுக்கு நேரடியாக எந்தக் காப்பீடும் அளிப்பது இல்லை. உங்களது ஹெல்த் நிலவரம், உங்கள் வாழ்க்கைமுறை, வாழ்க்கைச்சூழல் போன்றவற்றை அவதானித்து இன்ஷூரன்ஸ் துறையின் தற்போதைய போக்குகளைக் கவனத்தில்கொண்டு இந்தவகை மருத்துவக் காப்பீடு உங்களுக்குச் சிறந்தது என்ற அறிவுரையை இவர்கள் வழங்குவார்கள். மேலும், அந்த குறிப்பிட்ட மருத்துவக் காப்பீட்டையும் சேர்த்தே வழங்கும் நிறுவனமும் உள்ளன.

பாலிசி தொகை மற்றும் கவரேஜ்

மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்கான பாலிசி தொகை குறைந்தபட்சம் 500 ரூபாயில் தொடங்கி பல்வேறு நிலையில் உள்ளன. இதற்கான கவரேஜ் சுமார் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலும்கூட உள்ளன. என்ன மாதிரியான நோய், என்ன மாதிரியான சிகிச்சை, எவ்வளவு ரிஸ்க் என்பதற்கு ஏற்ப கவரேஜ் தொகையும் மாறுபடும். பொதுவாக, பாலிசி தொகை அதிகரிக்கும் விகிதத்துக்கு ஏற்ப அதன் கவரேஜ் தொகையும் அதிகரிக்கும். அதுபோலவே, பெரும்பாலான மருத்துவக் காப்பீடுகள் அதிகபட்சம் ஒரு வருடத்துக்கான கவரேஜ் மட்டுமே அளிக்கின்றன.

வருமான வரி விலக்கு

மெடிக்கல் இன்ஷூரன்ஸில் ப்ரீமியமாகச் செலுத்தப்படும் முழுத்தொகைக்கும் வருமான வரிச்சட்டம் 80 D ன் படி முழு விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, செலுத்தப்பட்ட ப்ரீமியம் தொகையை ஆண்டு வருமானத் தொகையில் கழித்துக்கொள்ளலாம். (வரியில் அல்ல வருமானத்தில் மட்டுமே கழிக்க முடியும். செலுத்தியதற்கான ரசீது ஆதாரம் முக்கியம்)

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன்…

பாலிசி எடுக்கும் முன் நீங்கள் எடுக்கப்போகும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் தன்மை, அதன் கவரேஜ், அது வழங்கப்படும் விதம் ஆகியவற்றை கவனமாகப் பரிசீலனை செய்யுங்கள். ஏனெனில், நிறைய பேர் இதன் விதிகளை கவனமாகப் படிக்காமல் அசட்டையாக இருந்துவிட்டு பின்னர் காப்பீடு கிடைக்கவில்லை என்று வருந்துவார்கள்.

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டால் அதில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் காப்பீடு உள்ளதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்குகின்றன. அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது இல்லை.

அதேபோல், பணிபுரியும் இடத்தில் மருத்துவக் காப்பீடு இருந்தாலும் உங்களுக்கு எனத் தனிப்பட்ட முறையிலும் மருத்துவக் காப்பீடு செய்துகொள்வது நல்லது. ஏனெனில், சில நிறுவனங்கள் பணியாளர்கள் பணியை விட்டு விலகியதும் பாலிசி நிறைவடையும்படியான திட்டங்களில் இருப்பார்கள். நமக்குத்தான் இந்த வருடம் முழுதும் கவரேஜ் இருக்கிறதே என்று அசட்டையாக இருந்தால் சிக்கல் உங்களுக்குத்தான்.

சில மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் தளர்வு காலம், காத்திருப்பு காலம் உண்டு. அவற்றைக் கவனமாகப் பரிசீலனை செய்யுங்கள். சிலவகை நோய்களுக்கான பாலிசிகள் காத்திருப்பு காலத்துக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரும். உங்களுக்கு அதற்கு முன்பு சிகிச்சை தேவைப்பட்டால் நீங்கள் கைக் காசைத்தான் இழக்க வேண்டியது வரும். எனவே, முன்பே திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள்.

சிலவகை பாலிசிகளில் டாக்டர் ஃபீஸ், அறுவைசிகிச்சை செலவு போன்றவை மட்டுமே காப்பீட்டுத் தொகையில் வரும். பெட் சார்ஜ், பரிசோதனை செலவுகள், மருந்துகளுக்கான செலவுகள் போன்றவற்றை நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும். எனவே, உங்கள் பாலிசி எந்த எல்லை வரை கவராகும் என்பதை நன்கு புரிந்துவைத்திருங்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள். அவற்றின் சலுகைகள் என்னென்ன என்பதை நன்கு கவனத்தில் கொண்டிருங்கள். ஒரேவகையான சலுகைகள்தான் இரண்டு பாலிசியிலும் உள்ளன என்றால் அதனால் உங்கள் பணம்தான் வீண். அந்தத் தொகையை ஒரே ப்ரீமியமாகச் செலுத்தினால் உங்களின் கவரேஜ் மேலும் அதிகரிக்கப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரே மாதிரியான மெடிக்கல் இன்ஷூரன்ஸ்களில் திரும்ப திரும்ப முதலீடு செய்யாதீர்கள்.

டெங்கு போன்ற பருவகால நோய்களுக்கான இன்ஷூரன்ஸ்கள் எடுக்கும்போது அதன் கவரேஜ் காலம் எதுவரை உள்ளது… நீங்கள் எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்பதைக் குறித்து விழிப்பாய் இருங்கள். பொதுவாக, டெங்கு போன்றவை மழைக்காலங்களில்தான் வீறுகொண்டு பரவுகின்றன. அந்த குறிப்பிட்ட காலத்தில் உங்கள் பாலிசி செயல் இழந்துவிடுவதாக இருக்கக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பறவைகளை ஆவணப்படுத்திய 12 வயது சிறுமி! (மகளிர் பக்கம்)
Next post ஏலக்காயில் இருக்கும் ஏராளமான நன்மைகள்! (மருத்துவம்)