வெற்றிப் படிகளில் தெருவோரக் குழந்தைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 23 Second

2019 லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதே ஆண்டு, அதே மைதானத்தில் களமிறங்கிய சென்னை சாலையோர சிறார்கள் அணி வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், மொரீஷியஸ், தான்சானியா, தென்னாப்பிரிக்கா
உள்ளிட்ட 10 அணிகளுடன் மோதி, இறுதியாக இங்கிலாந்து அணியை அவர்கள் மண்ணிலேயே எதிர்த்து, உலகக் கோப்பையை கைப்பற்றியது. தடைகள் பல கடந்து சிறார்கள் பெற்றது, “தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை.”

வசிப்பதற்கு வீடு இல்லாமல் சாலையிலேயே உண்டு, உடுத்தி, உறங்கி வாழும் சிறுவர்களின் வாழ்வில் மாற்றத்தை விதைக்கும் “கருணாலயா” தொண்டு நிறுவனத்தை, சென்னை தண்டையார்பேட்டையில் 1995ல் தொடங்கி, கடந்த 28 ஆண்டுகளாக இயக்கி வருகிறார் இந்நிறுவனத்தின் செயலாளர் பால் சுந்தர் சிங். லண்டனை தலைமையிடமாய் கொண்டு தெருவோரக் குழந்தைகளுக்காக இயங்கும் “ஸ்டீட் சைல்ட் யுனைடெட்” நிறுவனத்தோடு “கருணாலயா” கைகோர்த்து, ஃபுட்பால், கிரிக்கெட், தனி விளையாட்டு என திறமையாளர்களை உருவாக்கி பிரேசில், மாஸ்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து, கத்தார், இந்தோனேஷியா என வெளிநாடுகளுக்கு பயணிக்க வைக்கிறார்கள்.

பால் சுந்தர் சிங்கிடம் பேசியதில்…‘‘வீடில்லாமல் தெருவில் வாழுகிற அனைத்துக் குழந்தைகளுமே தெருவோரக் குழந்தைகள்தான். குழந்தைகள் தெருவோரமாய் வாழ்வதை தடுப்பது, மீட்பது, மறுவாழ்வு தருவதே எங்கள் நோக்கம். இரு பாலருக்கும் எங்களிடம் தனித்தனியே இல்லம் (shelter) இருக்கிறது. முக்கியமாக பெண் குழந்தைகள் பாதுகாப்பை அரசு உதவியுடன் வழங்கி வருகிறோம்.ஒரு குழந்தை வீட்டைவிட்டு வெளியில் வந்து தெருவோர வாழ்க்கையை வாழ ஆரம்பித்தால், பசிக்காக எந்த கெட்ட செயலையும் செய்யத் துணிவார்கள். தவறாக பயன்படுத்தப்படுகிறோம் என்பதை ஏற்று, சூழலுக்கு வாழ குழந்தை பழகிவிட்டால், பிறகு மீட்டெடுப்பது சிரமம்.

கல்வி, உரிமை, போதை பழக்கம் இல்லாத வாழ்வை குழந்தைகளிடம் வலியுறுத்துவதுடன், ஆளுமை, பாதுகாப்பு போன்றவற்றிலும் ஊக்கப்படுத்துகிறோம். பள்ளி படிப்பை முடித்ததும் கல்லூரி படிக்கும் வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறோம். எல்லாவிதமான வாய்ப்பையும் சாலையோர குழந்தைகளுக்கு தரவேண்டும் என்ற நோக்கத்தில், கல்வி தவிர்த்து, விளையாட்டு அனுபவத்தை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சிக்கிறோம். விளையாடுவதற்குத் தேவையான ஸ்போர்ட்ஸ் உடை, ஷூ, விளையாட்டு உபகரணங்கள் என வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு கிடைக்கும் அனைத்தையும் முற்றிலும் இலவசமாக செய்துகொடுத்து, வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம்.

தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2014ல் இருந்தே எங்களிடம் விளையாடுவதற்கான அணி அடுத்தடுத்து உருவாகிக் கொண்டே இருக்கிறது. இதில் கத்தார் நாட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க, சென்னையில் இருந்து சென்ற எங்கள் அணி பிரேசில், வங்கதேசம், பொலிவியா, கொலம்பியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, பெரு, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஜிம்பாப்வே, எகிப்து, இங்கிலாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிரியா, ஹங்கேரி, மொரீஷியஸ், உகாண்டா உள்ளிட்ட நாடுகளோடு மோதி வென்று, காலிறுதியில் கொலம்பியாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. மீண்டும் 2018ல் ஒரு அணி மாஸ்கோவிற்கு ஃபுட் பால் விளையாடச் சென்றது. அதன் பிறகே பெண்கள் அணிகளை உருவாக்கி அவர்களையும் வெளிநாடுகளில் விளையாட அழைத்துச் செல்கிறோம்.

ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்தின் கோட்டைக்குள் புகுந்து, பெருமைமிகு லார்ட்ஸ் மைதானத்தில் “தெருவோரக் குழந்தைகளுக்கான” உலகக் கோப்பையை குழந்தைகள் 2019ல் தட்டி வந்தனர். இந்த நிகழ்வு ஊடகங்களை திரும்பிப் பாரக்க வைத்தது. இந்தியாவில் இருந்து சென்ற 8 குழந்தைகளில் சென்னையில் இருந்து பால்ராஜ், சூர்ய பிரகாஷ், மோனிஷா, நாகலெட்சுமி என நால்வரும், மும்பையில் இருந்து நான்கு மாணவர்களும் களமிறங்கினர்.

சென்னையில் இருந்து சென்ற வர்களில் உடை மாற்றகூட எனக்கு வீடில்லை. நான் தூங்குவதும், வசிப்பதும் சாலையோரம்தான்’’ என்கிற +2 மாணவி மோனிஷா, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், வைஸ் கேப்டனாக களமிறங்கி விளையாடி உலகக் கோப்பையை வென்று வந்தார். அதே போட்டியில் டீம் கேப்டனாக தலைமையேற்று விளையாடிய பால்ராஜ், சென்னை பாரிமுனையில் குடும்பத்தோடு சாலையோரம் தார்ப்பாயின் அடியில் வசிப்பவர்.

இவர்களுடன் விளையாடிய சூர்ய பிரகாஷ் குழந்தை தொழிலாளியாக சித்ரவதை தாங்க முடியாமல் ஓடிவந்து ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவர். பெற்றோர் இல்லாமல் அரசு இல்லத்தில் சேர்க்கப்பட்ட நாகலெட்சுமியும் உலகக் கோப்பையை வென்ற டீமில் லண்டன் சென்று வந்தவர். வசிக்க வீடில்லாத நிலையில், பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை போன்றவை இவர்களுக்கு இருக்காது. பாஸ்போர்ட் எடுப்பதும் கடினம். எங்களுடைய கருணாலயா முகவரியில், எனது தரவுகளின் அடிப்படையில், ஓராண்டிற்கான பாஸ்போர்ட் பெற்று இவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்.

‘‘பொறியியல் படித்து இன்று ஐ.டி.யில் வேலை செய்யும் மாணவர்கள் இதில் இருக்கிறார்கள். ஒருசிலர் இந்திய ராணுவத்திலும் பணியாற்றுகிறார்கள். விளையாட்டில் பயிற்சியாளராகவும் இருக்கிறார்கள். சிலர் வெளிநாடுகளில் பணி வாய்ப்பு பெற்றும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளை பொறுத்தவரை, நாங்கள் போராடி படிக்க வைத்து, விளையாட்டிலும் அவர்களை சாதனைகளை செய்ய வைக்கும்போது, பதினாறு, பதினேழு வயதில் பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு சாலையோரக் குழந்தையிடமும் ஒரு கதை இருக்கும். அதைக் கேட்டால் நாம் முழுவதுமாக ஒடிந்து போய்விடுவோம் என்றவரிடத்தில், இத்தனை வருட அனுபவத்தில் சாலையோர சிறார்களிடம் என்னமாதிரியான மாற்றத்தை உணர்கிறீர்கள் என்றதற்கு?

‘‘நான் இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கியபோது, குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்தார்கள். குழந்தைகள் பள்ளிக்கே செல்லமாட்டார்கள். குறிப்பாக வடசென்னையில், மீன் பிடி தொழிலின் பல்வேறு வேலைகளிலும் சிறார்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று குழந்தை தொழிலாளர்கள் குறைந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அதிகமாகி இருக்கிறார்கள். படிக்கும் ஆர்வம் அதிகமாக வந்திருக்கிறது. பெற்றோர்களிடமும் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகமா வந்திருக் கிறது’’ என விடை பெற்றார்.

மோனிஷா,கிரிக்கெட் வைஸ் கேப்டன்

தற்போது வெளியான +2 தேர்வில் நான் 600க்கு 499 மதிப்பெண்களை பெற்றுள்ளேன். எனக்கு அப்பா இல்லை. அம்மாவுக்கு கார்ப்பரேஷன்ல பெருக்குற வேலை. சாலையோரத்தில்தான் படுத்து எழுந்து பள்ளிக்கு சென்று வருகிறேன். கருணாலயா மூலமாக 8வது படிக்கும்போதே லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் சென்றேன். 18 நாள் லண்டனில் இருந்தோம். ஃப்ளைட்டை மிக அருகில் பார்த்ததுமே செம ஹேப்பி ஆனேன். லார்ட்ஸ் மைதானத்தையும் நேரில் பார்த்து அசந்து போனேன்.

இந்தியன் கிரிக்கெட் பிளேயர்ஸ் தங்கியிருந்த அறையில்தான் நாங்களும் தங்கியிருந்தோம். ஃபைனலில் இங்கிலாந்துடன் நாங்கள் மோதும்போது, இங்கிலாந்து அணிக்கு அந்த நாட்டின் சப்போர்ட் அதிகமாக இருந்தது. எழுந்து நின்று ஆர்ப்பரித்து அவர்களை ஊக்குவித்தார்கள். ஒரே ஒரு ரன் தேவையென்ற நிலையில், கடைசி பாலில் நாங்கள் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையை இந்தியாவிற்காக வாங்கி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தோம்.

இந்தியா திரும்பியதும், ஒவ்வொரு மீடியாவும் எங்களை நோக்கி வரும்போது, எங்கள் நிலை மாறிவிடுமென நினைத்தோம். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. எந்த மாற்றமும் இல்லை. ஒரு செய்தி வந்ததுமே அதை பரபரப்பாக்கி பார்த்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவும் மனநிலைதான் இங்கு. எல்லா அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வந்து பார்க்கிறார்கள். வீடு தருவதாகச் சொல்கிறார்கள். இதுவரை நடக்கவில்லை. உடை மாற்றக்கூட இடமில்லாமல் பெண்கள் கஷ்டப்படுகிறோம். வீடு இருந்தால்தான் எங்களால் எதையும் செய்ய முடியும். எங்கள் பிரச்னைகளை அரசு ஆழமாகப் பார்க்க வேண்டும்.

நாகலெட்சுமி,லண்டன் சென்ற கிரிக்கெட் பிளேயர்.

‘‘எனக்கு பெற்றோர் இல்லை. சின்ன வயதில் இருந்தே விடுதியில் இருக்கிறேன். +1 படிக்கும்போது, கிரிக்கெட் பயிற்சியில் இறங்கி, லண்டன் சென்று விளையாடும் அளவுக்கு முன்னேறினேன். மொத்தம் 12 பேர் பயிற்சி எடுத்ததில் 4 பேரை தேர்வு செய்து லண்டன் அனுப்பினார்கள். அதில் நானும் ஒருத்தி. முதல் முறையாக நாடுவிட்டு நாடு போனதும் எனக்கு பிரமிப்பாக இருந்தது. விளையாடுவதற்காக ஃப்ளைட்டில் பறந்ததும் எனக்கு மிகப் பெரிய எக்ஸைட்மென்ட். கிரிக்கெட் பிளேயர்ஸ்கான கனவு மைதானத்தில் விளையாடக் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாகவே நினைக்கிறேன். அங்கு வந்து விளையாடிய அனைவருமே வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த தெருவோரக் குழந்தைகள். மொழி புரியவில்லை என்றாலும் நண்பர்களாக பழகி மகிழ்ச்சியாக இருந்தோம். அவரவர் நாட்டு பிரச்னையை பேசி பகிர்ந்து கொண்டோம்.’’

பால்ராஜ், கிரிக்கெட் கேப்டன்

பாரிமுனையில் தார்ப்பாயின் கீழ் பகுதிதான் எங்கள் குடும்பத்தின் வசிப்பிடம். சென்னை பிரசிடென்ஷி கல்லூரியில் பி.ஏ. முடித்திருக்கிறேன். அதே கல்லூரியில்
எம்.ஏ. படிக்க வேண்டும் என்பதே என் ஆசை. சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். கருணாலயா மூலமாக பயிற்சி எடுத்து சிறப்பாக விளையாடி இந்தியா டீமுக்கு கேப்டனாக பொறுப்பேற்று இங்கிலாந்து சென்றுவந்தேன்.

என் சூழ்நிலையில் நான் படிப்பதே கஷ்டம். ஒரு ஸ்போர்ட்ஸ்மேனாக விளையாட்டில் தீவிரம் காட்டி பயிற்சி எடுப்பதே எனக்கு முக்கியம். கல்லூரியில் நான் எல்லாத் தேர்வுகளையும் ஆல் க்ளியர் செய்திருந்தாலும் அதே கல்லூரியில் தொடர்ந்து எம்.ஏ. படிக்க மார்க் குறைவாக இருக்கிறது என கல்லூரி நிர்வாகம் எனக்கு சீட்டு வழங்கவில்லை. இந்தியாவிற்காக விளையாடி உலகக் கோப்பையை வென்ற என் நிலைமை இன்று இதுதான்.

சந்தியா, ஃபுட்பால் கேப்டன்

+2 முடிச்சிருக்கேன். வீடு இல்லாமல் ரோட்டில்தான் வசித்தேன். 4வது படிக்கும்போது கருணாலயா பாதுகாப்பு இல்லத்திற்கு என்னை கொண்டுவந்தாங்க. வகுப்பில் நான் முதல் மாணவி. என்னோட சீனியர் அக்கா எல்லாம் கருணாலயாவில் இருந்து ஃபுட்பால் விளையாட ரஷ்யா போனாங்க. அதைப் பார்த்து நானும் விளையாட்டில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். காலையில் 5 மணிக்கே எழுந்து, துறைமுகம் அருகே உள்ள பாபு ஜெகஜீவன்ராம் மைதானம் மற்றும் பெரம்பூர் கேரேஜ் மைதானம் என மாறிமாறி பயிற்சி எடுப்போம்.

தலைநகர் டெல்லிக்கும் சென்று விளையாடியிருக்கேன். நான் கேப்டனாக பொறுப்பேற்று 2019ல் கத்தார் நாட்டில் உள்ள தோகாவிற்கு ஃபுட்பால் விளையாடச் சென்றேன். முதல் மேட்ச் யு.எஸ். நாட்டுடன் விளையாடினோம். இரண்டாவது மெக்சிகோ. 3வது பங்களாதேஷ். 4வது ஜிம்பாப்வே. குவாட்டர் ஃபைனல் என்ட்ரி ஆவதற்கு முன்பு பெருவோடு விளையாடி ஜெயித்தோம். பெருவோடு விளையாடியது எங்களுக்கு ரொம்பவே டஃப் ஆக இருந்தது. குவாட்டர் பைனல் வரை நாங்கள் சென்றதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எட்டு வழியில் இன்பம் எட்டலாம்! (அவ்வப்போது கிளாமர்)
Next post ப்ரேக்-அப் கவலைகளை உடையுங்கள்! (மருத்துவம்)