
ஏலகிரி… கோடை வசந்த ஸ்தலம்! (மருத்துவம்)
கிழக்கு தொடர்ச்சி மலையில் சூழ்ந்துள்ள ஒரு பீடபூமி பிரதேசம் ஏலகிரி! திருப்பத்தூரிலிருந்து பிச்சனூர் வழியாக 4 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த இடத்தை எளிதில் அடையலாம். வாணியம்பாடியிலிருந்தும் வரலாம். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரியில் புங்கனூர் ஏரி, நேச்சர் பார்க், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, சுவாமிமலை, அரசு ஹெர்பல் பார்க், சாகச கேம்ப் என பார்க்கக்கூடிய இடங்கள் அதிகம்.
மலைகளின் மையத்தில் 5670 சதுரமீட்டரில் பரவியுள்ளது புங்கனூர் ஏரி. இங்கு படகு சவாரி மூலம் ஏரியினை சுற்றியுள்ள மலைகளை ரசிக்கலாம். அடுத்து குழந்தைகள் பூங்கா அருகிலேயே உள்ளது. குழந்தைகள் கண்டு மகிழ பூச்செடிகள் மற்றும் விளையாட்டுக் கருவிகள் உள்ளன. மலை ஏறுபவர்களுக்கென சுவாமி மலை. அதன் உச்சியிலிருந்து ஏலகிரியை காண்பது கண்கொள்ளாக்காட்சி. பறவைகள் பூங்கா, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் காண வேண்டியது. 3000க்கும் அதிகமான இங்குள்ள பறவைகளுக்கு உணவளிக்கலாம். இயற்கை பூங்கா 15 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு பல வகையான தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதனுள் செயற்கை நீர் வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகள், கைவினைப் பொருட்கள், மலைப் பிரதேசத்தில் கிடைக்கும் எண்ணெய்கள், பழங்கள், வாசனை திரவியங்கள், மூலிகை சரும பொருட்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும். சடையனூர் என்ற இடத்தில் ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி உள்ளது. இதில் குளித்து அருகில் உள்ள முருகன் கோயிலையும் தரிசிக்கலாம். ஏலகிரியில் உள்ள வேலவன் முருகன் கோயிலுக்கு வெளியே உள்ள பிரம்மாண்ட கருடத்கஜன் சிலை உள்ளது. வேலன் கோவில் ஏலகிரியின் உயரமான ஒரு சிகரத்தில் அமைந்திருப்பதால் கோயிலில் இருந்து பார்க்கும் போது ஏலகிரி ரம்யமாக காட்சியளிக்கும்.
அரசு மூலிகை பூங்காவில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து சார்ந்த பல அரிய மூலிகைகளை பார்த்து ரசிக்கலாம். ஏலகிரி சாகச முகாமில் பாராகிளைடிங் பயிற்சி நடக்கிறது. அதில் பங்கு பெறலாம். இங்கிருந்து 25 கிேலா மீட்டர் தொலைவில் காவலூர் உள்ளது. அங்கு இந்திய வானியல் நிலையம் சார்ந்த நான்கு தொலை நோக்கிகள் உள்ளன. அவற்றின் மூலம் வானின் ரகசியங்களை ரசிக்கலாம். வேலூரிலிருந்து 91 கிலோ மிட்டர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து 19 கிலோ மீட்டரில் உள்ளது. இங்கு மே மாதம் இரு நாட்கள் கோடை விழா மிகச் சிறப்பாக நடக்கும். பொதுவாக வருடம் முழுவதும் ஏலகிரிக்கு பயணிக்கலாம்.