ஆயுர்வேத பொருட்களிலும் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 21 Second

யாருங்கம்மா நீங்க… எப்படிம்மா உங்களால் இதெல்லாம் சாத்தியமாகுது என்று கேட்க வைத்துள்ளார் விஜயா மகாதேவன். இவர் விவசாயி மட்டுமில்லை தொழில்முனைவோரும் கூட. தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் விஜயா மகாதேவன் பெயரை சொன்னாலே இணைய தளத்தில் உலா வருபவர்களுக்கு இவரது தயாரிப்புகள் எளிதாக தெரிகிறது. பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்திருக்கும் இவர் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையே உயர்ந்தது என்ற வலுவான கொள்கை கொண்டவர். தொழில் முனைவோரான இவர் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபராக முன்னேறியுள்ளார்.

‘‘இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத பொருட்களுக்கு உள்ள நன்மையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஆரம்பத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் ஆயுர்வேத பற்பொடி, ஆயுர்வேத சோப் போன்ற பொருட்களை தயாரித்து நாங்களே உபயோகித்து வந்தோம். அப்போது குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம், இயற்கை பொருட்களால் கிடைக்கும் நன்மை நமக்கு மட்டும் இருக்கக் கூடாது. சமுதாயமும் பயன்படணும்னு சொன்னாங்க.

என் கணவர் மற்றும் மகன்களின் ஆலோசனைபடி இன்ஸ்டாகிராமில் ‘வசீகர வேதா’ என்ற பெயரில் 2017ல் ஆயுர்வேத பற்பொடியை விற்பனைக்காக பதிவிட்டேன். ஆனால் யாரும் வாங்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு ஒன்று இரண்டு ஆர்டர்கள் வரத் தொடங்கியது. தொடர்ந்து ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இயற்கை குளியல் சோப், தேங்காய் எண்ணெய், தலைமுடி எண்ணெய் என ஒவ்வொன்றாக தயாரிக்க ஆரம்பித்தேன்.

இப்போது ஆவாரம் பூ குளியல் சோப், கலப்படமில்லா தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, கற்றாழை போன்ற பொருட்களை கொண்டு தயாரான ஹேர் ஆயில், முடி உதிர்வதை தவிர்க்கும் ஹேர் மாஸ்க், செம்பருத்தி டீ பவுடர், பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற 8 வகையான ஃபேஸ்பேக், குழந்தைகளுக்கான ஆயுர்வேத பொருட்கள், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றையும் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறேன்.

கெமிக்கல் கலந்து பொருட்களை தயாரிப்பதில் மூலப்பொருட்கள் மிக எளிதாக கிடைத்து விடும். ஆனால் எவ்வித கலப்படமும் இன்றி இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே கொண்டு செய்யப்படும் இதுபோன்று ஆயுர்வேத பொருட்கள் அனைத்து நாட்களிலும் கிடைக்காது. ஒரு சில சீசன்களில் மட்டுமே கிடைக்கும். எனவே அது போன்ற கையாந்தரை, கடுக்காய், பொடுதலை, கருமூலா, ஆவாரம்பூ போன்ற பலவிதமான பொருட்களை தேவையான அளவிற்கு மொத்தமாக வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்வேன்’’ என்றவர் விவசாயத்திலும் முழு ஈடுபாடு கொண்டவர்.

‘‘இயற்கை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் போது நாம் சாப்பிடும் உணவும் அதே முறையில் இருக்க விரும்பினேன். அதற்கு ஒரே வழி இயற்ைக விவசாயம். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் எங்களுக்கு இருந்த வயலில் கரும்பு, நெல் சாகுபடி செய்து வந்தேன். தற்போது என்னுடைய மூலிகை தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வெளியே வாங்குவதற்கு பதில் என் நிலையத்திலேயே பயிரிட திட்டமிட்டேன். தற்போது என் நிலத்தில் செம்பருத்தி மற்றும் ரோஜாப்பூ செடிகளை சாகுபடி செய்துள்ளேன்.

தேங்காய் எண்ணைக்காக தரமான தேங்காய்கள் வாங்குகிறோம். அதன் மூடிகளை வீணாக்காமல் பாலிஷ் செய்து சின்ன பாத்திரமாக உருமாற்றி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்து வருகிறேன். எங்களின் தனிச்சிறப்பு இயற்கை பொருட்கள் கையிருப்பை கொண்டு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் சப்ளை செய்வது. என்னிடம் 15 பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இயற்கை மூலப்பொருட்களை சேகரித்து, சுத்தம் செய்து, பொருட்கள் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது என அனைத்திற்கும் தனிக் குழுவாக பெண்களை நியமித்திருக்கிறேன். சமூக வலைத்தளத்தினை பார்த்துக் கொள்வது மற்றும் அதன் மூலம் வரும் ஆர்டகளுக்கு சப்ளை செய்ய தனியாக ஒரு குழு அமைத்திருக்கிறேன்.

இப்படி ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் பார்ப்பதால், ஆர்டர்களை தாமதமில்லாமல் ெகாடுக்க முடிகிறது. பெண் விவசாயியாக இருந்த என்னை தொழில் முனைவோராக மாற்றியது என் கணவர் மற்றும் மகன்கள்தான். இன்றும் என்னுடைய தொழில் வளர்ச்சிக்கு பக்கபலமாக இவர்கள் உள்ளனர். ஆயுர்வேத பொருட்களை வீட்டிலிருந்தேதான் செய்து வருகிறேன். ஆனால் ஆர்டர்கள் அதிகமாக வருவதால், புதிய தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறேன். விரைவில் எங்களின் வசீகரா வேதா அங்கு செயல்பட ஆரம்பிக்கும். எங்களுடையது முழுக்க முழுக்க இயற்கை மூலப்பொருட்கள். ஆனால் அவை கிடைப்பதே மிகவும் சவால்தான். ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் பராமரிக்க வேண்டும். சிலவற்றை நிழலில்தான் உலர்த்த வேண்டும். ஒரு சிலப் பொருட்கள் இங்கு கிடைப்பதில்லை. அதனை வெளி மாவட்டங்களில் இருந்து வாங்குகிறோம்.

பிடிக்காத வேலையில் பல்லைக்கடித்துக் கொண்டு வேலை பார்த்து, வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம் கிடைக்கும் என்பது தெரியாமல், வெளி உலகத்திற்கு செல்ல பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பெண்களுக்கு மத்தியில், வீட்டிலிருந்தே உலக நாடுகள் பலவற்றிற்கும் நம் கிராமங்களில் கிடைக்கும் மூலிகை பொருட்களைக் கொண்டு ஆயுர்வேத பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்து லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி வரும் தஞ்சாவூர் விஜயா மகாதேவன் மற்ற தொழில் முனைவோர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்றால் மிகையில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விளிம்புநிலை பெண்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி!! (மகளிர் பக்கம்)
Next post செரிபரல் பால்சி… குழந்தைப்பருவ மூளைப்பாதிப்பு! (மருத்துவம்)