மனவெளிப் பயணம்-தாம்பத்யம் எனும் பந்தம்! (PHOTOS)

Read Time:13 Minute, 38 Second

மௌனராகம் படத்தில் மோகனும், ரேவதியும் திருமணமான ஏழே நாளில் விவாகரத்து வேண்டும் என்று கேட்பார்கள். அதற்கு வக்கீல் கூறும் பதிலில் இருந்து தான் தம்பதியர்கள் பிரிய வேண்டு மென்றால் ஒரு வருடம் சேர்ந்து வாழவேண்டும் என்ற தகவலே அந்தப் படம் மூலம் தான் 90களில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு தெரிய வந்து இருக்கும் என்றே நம்புகிறேன். குடும்ப அமைப்பு கட்டுக்கோப்புடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சட்டங்களும் தம்பதியர்களுக்கு சேர்ந்து வாழும் எண்ணத்தை உருவாக்க காலஅவகாசம் கொடுத்து இருக்கிறது என்று நீதிமன்றம் நம்மிடம் தெரிவிக்கிறது.

ஆனால் இன்றைய பல இளம் தம்பதியர்கள் இன்ஸ்டன்ட் விவாகரத்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப சட்டங்களும், அதன் விதிமுறைகளும் மாறி வருகின்றது. அதற்கேற்ப தற்போது தம்பதியர்கள் 30 நாட்களில் மனமொத்து பிரியலாம் என்றும் நீதித்துறையும் அறிவித்துவிட்டது.அதனால் நீண்ட வருடங்கள் காத்திருந்து விவாகரத்து பெறும் தம்பதியர்களின் எண்ணிக்கையும், இன்ஸ்டன்ட் விவாகரத்து பெறும் தம்பதியர்களின் எண்ணிக்கையும் நம் சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய தகவலாக இருக்கிறது.

உண்மையில் ஒரு விவாகரத்து நடக்கிறது என்றால், அதில் அந்த இருவர் மட்டுமா பாதிக்கப்படுகிறார்கள் எனக் கேட்டால்? கண்டிப்பாக இல்லை என்றே தற்போதைய சூழல் நமக்கு ஓங்கி அடித்துச் சொல்கிறது.50-60 வயதுகளில் இருக்கும் தம்பதியர்களின் அந்தரங்க பிரச்சனைகளுக்காக தற்போது கவுன்சலிங் வேண்டும் என்று வருபவர்களைப் பார்க்கும் போது, நமக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. வயதான தம்பதியர்களின் பிரச்சனைகளுக்கு காரணம் என்னவென்று பார்ப்பதற்கு முன், விசு அவர்கள் நடித்த “வரவு நல்ல உறவு” படம் பார்த்துக் கொண்டு இருந்தேன். படமோ 1981ம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்தப் படத்தில் இளம் தம்பதியர்கள் இருவரும், வயதான தம்பதியராக விசுவும், அன்னபூர்ணா அவர்களும் நடித்து இருப்பார்கள்.

இருவரும் கோவிலில் பேசிக்கொள்கிற சீனில் விசு கூறுவார் “காளைக்கு பசுமாடு மீது ரசனை, பசுமாட்டுக்கோ கன்றின் மீது ரசனை என்பார். அதற்கு அன்னபூர்ணா கூறுவார், கன்னுக்குட்டியை ரசிப்பது போல், காளையையும் ரசிக்கிறேன் என்பார். இது போல் தான் ஒரு வயதுக்கு மேல் தம்பதியர்கள் தனித்தனியாக உட்கார வேண்டும், தனித்தனியாகத் தான் படுக்க வேண்டும், தனித்தனியாக தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு லிஸ்ட் நம்மிடம் எழுதப்படாத சட்டமாகத் தான் குடும்ப அமைப்பில் இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் முதல் நடுவயதில் உள்ளவர்கள் வரை தங்களின் காதல் மற்றும் காமம் சார்ந்த வாழ்க்கையை பற்றிய புதுப்பரிணாமத்துக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கான தேவையைப்பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் வயது முதிர்ந்த தம்பதிகள் மட்டும் அவர்களின் அந்தரங்க வாழ்வைப் பற்றி யோசிக்கவே கூடாது என்று ஒவ்வொரு வீடும் வாய் திறந்து சொல்லாமல், தம்பதியர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டே இருக்கிறது.

இன்றைய தலைமுறையில் விவாகரத்து மற்றும் திருமணம் ஆகாமல் இருக்கும் நபர்கள் மட்டும் வாழாமல் இருக்கவில்லை. அவர்களால் வீட்டிலுள்ள பெற்றோர்களும் வாழ முடியாமல் இருக்கின்றனர்.சில வயது முதிர்ந்த பெண்களிடம் பேசும் போது வீட்டில் உள்ள சில விஷயங்களை எப்படி சொல்வது என்று தெரியாமல், பேச ஆரம்பிப்பார்கள். ஒரு சில வீட்டில் வயதான பெற்றோர் இருவரும் தூங்கி எழுந்து, தலைக்கு குளித்துவிட்டு வெளியே வந்தால், அந்த வீட்டு மகளோ என்ன விசேஷம் என்று தாயிடம் கேட்பாராம் . இதனால் அந்ததாய் வாரத்துக்கு ஒரு தடவை மட்டுமே தலைக்கு குளிக்கிறேன் என்று கூறும் பெண்கள் இருக்கிறார்கள்.

80களில் திருமணமான பெரும்பாலான தம்பதியர்கள், தங்களுடைய திருமண வாழ்க்கையின் புதிய அத்தியாய நாளில் இருந்து, குழந்தை மற்றும் குழந்தையின் நலன் கருதியே இருந்தார்கள். அவர்களை ஆளாக்கும் வரை தங்களின் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றாமலேயே இந்த 50 வயதை கடந்து வந்து இருப்பார்கள். குழந்தைகள் ஓரளவு அவர்களின் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் போது, நிதானமாக பெற்றோர்கள் அவர்களின் வாழ்வைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் மனதில் வைத்து தான் அந்த தம்பதியர்கள், ஆன்மீகப் பயணம், தனியாக தியேட்டர் வருவது, பார்க்கில் உட்கார்ந்து பேசுவது என்று தங்களின் இந்தப் பருவத்தை நிதானமாக ரசித்து, தங்களின் வயது சார்ந்த நோய்களைப் பற்றி பேசியும், சிரித்துக் கொண்டும் இருப்பார்கள்.தற்போது வளர்ந்த பிள்ளைகள் விவாகரத்து மற்றும் திருமணமாகாமல் இருப்பதால், பெரும்பாலும் பெற்றோர்கள் ஹாலில் தான் தூங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு ரூம் தங்குவதற்கு இல்லை. இத்தனை தூரம் உழைத்து, சம்பாதித்து எல்லாம் சேர்த்து வைத்தாலும், இந்தக் காலமாற்றத்தால் பிள்ளைகளின் வாழ்வைப்பற்றிய கவலையும், அதனால் ஏற்படும் மனஉளைச்சலால் ஆறுதலுக்காக வேண்டி கூட தன் துணையை நெருங்க விட முடியாத அளவுக்கு ஒரு இறுக்கம் பல குடும்பங்களில் உருவாகி இருக்கிறது.

இதனால் சில இடங்களில் 50வயதுகளில் இருக்கும் ஆணோ/பெண்ணோ அந்தத் தனிமையின் வீரியம் தாளாமல் மற்ற நபர்களுடன் பழக ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களின் அனுபவமும், சிறு வயதில் உள்ளவர்களை சரியாக புரிந்து கொண்டு இருப்பதாலும், உறவைத் தெளிவாக தொடர்கிறார்கள். இதனால் தான் வயது வித்தியாசம் இல்லாமல், பொருந்தாக் காமம் பற்றிய சில காதல் சார்ந்த உறவுகளின் கதைகளை கேட்க நேரிடுகிறது.

சில தம்பதிகள் தங்களின் வயதான தோற்றத்தை குறைப்பதற்காக பியூட்டி கான்ஷியஸாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இதற்காக செலவு செய்யும் போதும் சரி, அவர்களை பொலிவுடன் காண்பிப்பதற்கும் வீட்டில் உள்ள வளர்ந்த பிள்ளைகள் விரும்புவதில்லை. தன்னோட வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்கும்போது, இவர்களின் அழகுக்கோ அல்லது சுய திருப்திக்காக செலவு செய்வதை விரும்பவில்லை என்பது தான் பதிலாக நிற்கிறது.

இதனாலேயே பல பெற்றோர்களின் மனதில் எத்தனையோ தனிப்பட்ட ஆசைகள் இருந்தாலும், பிள்ளைகளைத் தவிர வேறு உலகம் இல்லை என்றே அவர்களும் தங்களுக்கு தாங்களே நிரூபிக்கத் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இவை எல்லாம் தாண்டி பிள்ளைகளுக்கு திருமணம் செய்து விட்டோம், இனி சமையலை மெதுவாகவும் அல்லது அவர்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து விட்டு ரெஸ்ட் எடுக்கலாம் என்றும் நினைத்து இருப்பார்கள். ஆனால் மறுபடியும் பிள்ளைகள் வீட்டிற்கு வரும் போது, அதைத் தொடர்ந்து வரும் வேலைகளும் அவர்களை இன்னும் தொடர்ச்சியாக செயல்பட வைக்கிறது. அதுவும் அவர்களின் வாழ்க்கை மீது ஒரு சலிப்பை உண்டாக்கி விடுகிறது.

மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நடக்கும் போது, பெரியவர்களும் சரி, இளைஞர்களும் சரி அவரவர் காதல் சார்ந்த வாழ்வினை பற்றி எதுவும் சிந்திக்க முடியாத அளவிற்கு நகர்த்தப்படுகிறார்கள். இவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் துறை சார்ந்த வெற்றிகள், வீட்டிற்கு வாங்கும் பொருட்களின் சந்தை நிலவரங்கள், வருமானம் சார்ந்த பேச்சுக்கள், வாங்கிய அல்லது வாங்கப்போகும் சொத்துக்கள் மற்றும் நகைகள் பற்றிய பேச்சாக மட்டுமே இருக்கிறது.

இதனால் தான் பல குடும்பங்களில் வர்க்க வேறுபாட்டை நிரந்தரமாக கடைப்பிடிப்பார்கள். அங்கு நீங்க காதல், காமம் பற்றி பேசும்போது முற்றிலும் கொந்தளித்து ஒழுக்கத்தைப் பற்றி நிறைய பேசுவார்கள் அல்லது பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனாலேயே சோசியல் மீடியாவில் பலரும் கவுரவ கொலைக்கும், காதலின் எதிர்ப்புக்கும் முழுமூச்சாக ஆதரவு தெரிவிப்பார்கள்.

தாங்கள் வாழாத வாழ்க்கையை அல்லது தாங்கள் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாத போது சமூகத்தில் எளிதாக சோசியல் மீடியா மூலம் அவர்களுக்கு தோன்றிய தகவல்களை பரப்புகின்றனர்.மனிதர்கள் என்றைக்குமே அன்புக்கும், காதலுக்கும், காமத்துக்கும் எதிரிகள் இல்லை. அதனால்தான் வரலாறு முழுக்கவும் பல ரோமியோ ஜூலியட் மற்றும் ஜஹாஹிர் அனார்கலி கதைகளை எல்லாம் கொண்டாடியவர்கள்தான் நம் முன்னோர்கள் என்று நாம் காலர் தூக்கி சொல்கிறோம்.

ஆனால் தற்போதைய அறிவார்ந்த சமூகத்தில் தனித்துவத்துக்கான மாற்றம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதனால் தன்னுடைய சுக, துக்கங்கள் மட்டுமே பிரதானமாக மாறிவருகிறது. இதன் தாக்கமே சமூகப் பிராணியில் இருந்து மாறி, சமூகம் பற்றிய பார்வையே வேண்டாம் என்று யோசிக்கும் முறையே இத்தனை மாற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது. இவை சரியா, தவறா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய முடியாத அளவுக்கு இருக்கிறோம். எல்லா மாற்றங்களுமே மனிதனை மனதளவில் முற்றிலும் சிதைத்து, நொறுக்கி, அதன் பின்னே மலர வைக்கிறது. இன்றைய மாற்றமும் அப்படியே மலர்வதற்கு முன் உதிர்தலின் தாக்கத்தை நாம் அனுபவித்துக் கொண்டே இருக்கிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அன்புடன் அந்தரங்கம்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே! (மருத்துவம்)