பசுமையான உலகத்தினை அமைக்க வேண்டும்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 2 Second

‘‘உணவு காடுகளை அமைப்போம்
இயற்கை வகை விவசாயம் செய்வோம்
மண் வளங்களை பாதுகாப்போம்
ரசாயனத்தால் ஏற்படும் அழிவை தவிர்ப்போம்
நமது சந்ததியை காப்போம்.
இது நமது கடமை…

அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே இவை சாத்தியப்படும். இதைத் தான் நான் ஒவ்வொரு பள்ளிகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டத்திலும் கூறி வருகிறேன்’’ என்று பேச ஆரம்பித்த செங்கல்பட்டை சேர்ந்த 10 வயதான சிறுமி ப்ரசித்தி. இவ்வளவு சிறு வயதில் ஒரு லட்சம் மரங்களை நட்டு, என்னெற்ற விருதுகளையும், தமிழ்நாட்டின் சைல்ட் கிரீன் அம்பாசிடராக பட்டத்தையும் பெற்றுள்ளார். அவரின் இந்த பெரிய சாதனையின் ஆரம்பப்புள்ளி எது என்பதும், தனது இலக்கு மற்றும் இதனால் தான் அடைந்த இடத்தையும் கூறுகிறார்.

‘‘இயற்கை சார்ந்த அனைத்தும், கடல், பறவைகள், மரங்கள், தேனீக்கள், காற்று… இவங்க எல்லாம் என்னுடைய நண்பர்கள். நான் 6வது படிக்கும் போதே இந்த ப்ரசித்தி பார்ம்ஸ் ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சேன். இயற்கை கொடுத்த பெரிய ஆசான் மரம் தான். நாம் எவ்வளவு தான் ஒரு மரத்தை வெட்டினாலும், அது திரும்ப திரும்ப வளர்ந்து வரும். அதிலிருந்து நான் கற்றுக் கொண்டது தான் ‘never giveup’’ என்றவர் தன்னுடைய பயணத்தை முதன் முதலில் மரங்களில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

‘‘2016 வர்தா புயல் பற்றி எல்லாருக்கும் ரொம்ப நல்லாவே தெரியும். அந்த நேரத்தில் நடந்த இயற்கை சேதாரம் அதிகம். அதிலும் மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்திருந்தது. அதை நான் பார்த்த போது ரொம்பவே கஷ்டமா இருந்தது. சொல்லப் போனால் நான் அந்த மரங்களை பார்த்து அழுதிட்டேன். அப்போ எனக்கு 4 வயசு. அதன் பிறகு தான் புரிந்தது அழுவதால் ஏதும் நடக்காது என்று. என்ன செய்யலாம்ன்னு யோசித்த போது, மரங்களை நடலாம்ன்னு முடிவு செய்தேன்.

2 வருஷம் மரங்கள் நடுவது குறித்து தெரிந்து கொள்ள ஆரம்பிச்சேன். அதாவது ஒரு மரம் நடவேண்டும் என்றால் அதன் மண் வளம் சரியாக இருக்க வேண்டும். தோட்டம் எவ்வாறு அமைக்கலாம். செடிகளுக்கு தண்ணீர் எந்த அளவு பாய்ச்சணும், விதைகள் தேர்வு செய்யும் முறை… இப்படி மரம் வளர்ப்பது குறித்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனக்கு ஆறு வயசு இருக்கும் போது ‘ப்ரசித்தி பாரஸ்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பினை துவங்கினேன். ஆரம்பிக்கும் போது ஒரு லட்சம் மரங்களை நடவேண்டும் என்ற குறிக்கோளோடுதான் துவங்கினேன்.

நான் இந்த அமைப்பு துவங்க இரண்டு காரணம். ஒன்று நான் மரங்கள் நடணும். அதனால் ஒரு பயோ டைவர்சிட்டியினை அமைக்க முடியும். அதாவது மரங்கள் பறவைகள், தேனீ மற்றும் அணில்களின் இருப்பிடம் மட்டுமில்லாமல் அதில் உள்ள பழங்கள் அவர்களின் உணவாகவும் மாறும். இரண்டாவது நான் மட்டுமில்லாமல் மற்றவர்களையும் மரம் நடுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அதை செயல்படுத்தவும் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் பல மாவட்டங்களில் நான் மரங்கள், இயற்கை பற்றின விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியிருக்கேன். சில இடங்களில் மரங்களை நானே நட்டிருக்கேன்.

டிசம்பர் 15, 2022-ல் என்னுடைய இலக்கான 1 லட்சம் மரக் கன்றுகளை நட்ட காரணத்தால், பல விருதுகளையும் பெற்றிருக்கேன். ஒவ்வொரு முறை, நான் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரம் நடுவது திட்டங்கள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவர்களிடம் தெரிவிப்பேன். அவரும் எனக்கு எங்கு மரம் நடலாம், விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எங்கு அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை எனக்கு வழங்குவார்கள். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு கொடுத்திருக்கேன். என்னோட இந்த செயல்களை பார்த்து பள்ளிகளில் பேச்சாளராக கூப்பிடுவாங்க. அது என்னுடைய மரம் நடும் விழிப்புணர்வுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்’’ என்ற ப்ரசித்தி கிரீன் தமிழ்நாடு மிஷனின் ப்ராண்ட் சைல்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘‘என்னுடைய அமைப்பிற்கு தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பலர் உதவி செய்திருக்காங்க. தமிழ்நாடு அரசு மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஊரில் உள்ள பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரும் நான் என் இலக்கை அடைய வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டார்கள். ஏன் நாட்டின் முதுகெலும்பு என்று கருதப்படும் விவசாயிகளும் எனக்காக சப்போர்ட் செய்றாங்க. தமிழ்நாட்டில் கோயம்புத்துர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கன்னியாகுமரி மற்றும் பிற மாவட்டங்களிலும், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசங்களிலும் விழிப்புணர்வு பேரணியும் நடத்தியிருக்கேன்.

நான் நாட்டு பழங்கள் தரக்கூடிய மரங்கள் நடுவது மட்டுமில்லாமல் அசோக மரம், தென்னை மரமும் நடுகிறேன். ஒவ்வொரு இடத்திலும் மரம் நடும் முன் அங்குள்ள மண் வளங்களை பார்த்து அதற்கு ஏற்ற மரங்களைதான் நடுவேன். காலநிலையில் ஏற்படும் மாற்றம் இயற்கையில் பிரதிபலிக்கிறது. அதற்கான தீர்வு இயற்கை அழியாமல் பாதுகாக்கணும். அதற்கு மிகவும் முக்கியம் தண்ணீரும் மண்ணும்தான். இவை இரண்டையும் நமக்கு தருபவை மரங்கள்’’ என்றவர் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்து கடற்கரையினை சுத்தம் செய்யும் பணியினையும் மேற்கொண்டுள்ளார். ‘‘2050-ல் கடலில் மீன்களை விட ப்ளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகமாக காணப்படும் என ஆராய்ச்சியில் தெரிவித்திருந்தார்கள். இதனை தவிர்க்க நான் ப்ளாஸ்டிக் பயன்பாட்டினை குறைத்து அதனை மறுசுழற்சி செய்வது குறித்து பல விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தியிருக்கேன்.

அதன் தொடர்பாக சுப்ரியா சாஹு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் மேயநாதன் அவர்களுடன் இணைந்து கடற்கரையினை சுத்தம் செய்திருக்கிறேன்’’ என்று கூறும் ப்ரசித்தி தமிழ் நாட்டில் சதுப்புநில காடுகள் அமைவதற்கு சிறந்த இடம் என்று குறிப்பிட்டார். பிச்சாவரம், தமிழ்நாட்டிலேயே 2வது பெரிய சதுப்பு நில காடுகளை கொண்டது. இவை சுனாமி வரும் காலங்களில் ஏற்படும் பெரும் சேதாரத்தை தவிர்க்க உதவுகிறது.

அதன் முதல் தொடக்கமாக கோவளம் கடற்கரை அருகே சதுப்புநில காடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மார்ச் முதல் மே மாதம் வரை மரங்கள் நடுவதற்கான சரியான காலநிலை கிடையாது என்பதால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெருமளவு மரங்களை நட இருக்கிறேன். 370 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தான் இந்த மரங்கள். இவை காலநிலை மாற்றங்களுக்கு பெரிய பங்கு வகிக்கிறது. என்னுடைய முக்கிய நோக்கம் ‘Net Zero Target’, அதாவது வரும் ஆண்டுகளில் நிறைய மரங்கள் நடணும்’’ என்றவர் தன்னுடைய விருதுகள் குறித்து பகிர்ந்தார்.

‘‘Green Child Ambassador of Tamil Nadu விருது வாங்கும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது. இந்த விருது எனக்கு கொடுத்த போது, நான் இப்போ செய்யும் இந்த வேலையை இரண்டு மடங்கா செய்யணும்னு ஊக்கத்தைக் கொடுத்தது. நான் நடும் பெரும்பாலான மரங்களை என்னுடைய அமைப்பு மூலம் பராமரிக்கப்படும் தோட்டத்தில் இருந்துதான் எடுத்துக்கொள்வேன். அதற்கான முன்னேற்பாடாக அனைத்து வகையான மரச் செடிகளும், விதைகளும் அங்கு பராமரித்து வருகிறேன். என்னுடைய அமைப்பினால் உருவாக்கப்பட்டு இருக்கும் காடுகள் ஒரு விவசாயின் நிலம்தான். அவர்கள்தான் அதனை பராமரித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் வாழ்வியலுக்கு ஏற்ற அடிப்படை வசதிகளையும், உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

என்னோட அடுத்த இலக்கு, என் பாதையினை பின்பற்றக்கூடியவர்களை உருவாக்கணும், முடிந்தவரை மரக்கன்றுகளை இலவசமா தந்து மரம் நடுவதன் முக்கியத்துவத்தை எல்லாருக்கும் புரிய வைக்கணும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகள் மனதில் இந்த விதையை பதிக்க வேண்டும். அவர்கள்தான் எதிர்கால தலைமுறையினர். நம் பூமியின் பாதுகாவலர்களும் அவர்களே. அதன் தொடக்கமாகத்தான் G3 என்ற திட்டத்தை தொடங்கியிருக்கேன். (generate your own oxygen, grow your own food, gift the community – G3).

இது குறித்து விழிப்புணர்வு வகுப்பினை நடத்தி வருகிறேன். அதில் கலந்து கொள்பவர்களுக்கு விதைகள் அடங்கிய பெட்டி, மரம் நடுதலுக்கான முழு உபகரணங்கள், தொட்டிகள் மற்றும் பறவைகளுக்கு உணவு வைக்கக்கூடிய பானைகள் என அனைத்தும் வழங்குகிறேன். இது குறித்து இதுவரை 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் மட்டுமில்லாது, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், நைஜீரியா பொன்ற இடங்களில் உள்ள பள்ளிகளிலும் G3 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதன் முதன்மை குறிக்கோள், உலகத்தினை பசுமை மயமாக்குதல்’’ என்ற ப்ரசித்தி Earth Day Network Rising Star (USA), Young Change Maker, இங்கிலாந்தின் மிகவும் உயரிய விருதான ‘‘The Diana Award” மட்டுமில்லாமல் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குலோப் ஜாமூன் ரசமலாய் கேக்…!! (மகளிர் பக்கம்)
Next post தலைவலி எனும் உயிர்வலி!! (மருத்துவம்)