உண்மையான நட்பை புரிந்து கொள்ள 27 வருஷமானது!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 17 Second

எதிர்நீச்சல் புகழ் ஹரிப்பிரியா (நந்தினி)

‘‘ஃபிரெண்ட்ஷிப்… அந்த வார்த்தையைக் கேட்டவுடன் எனக்கு ‘தளபதி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் பேசும் டயலாக் தான் நினைவுக்கு வரும். ஒரு நல்ல நட்பு என்னைப் பொறுத்தவரை நமக்காக எதையும் செய்வாங்க. நட்பு என்ற பந்தம் நம் ஒவ்வொருவருடைய வாழ்வில் மிகவும் முக்கியம். இதனை நான் மனப்பூர்வமாக உணரவே 27 வருஷமாச்சு. அதற்காக நண்பர்கள் இல்லை என்று சொல்ல மாட்டேன். அவர்கள் இருந்தார்கள்.

ஆனால் அவர்களின் அரவணைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நான் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன்’’ என்கிறார் ஹரிப்பிரியா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் தன் துடுக்குத்தனமான மற்றும் நகைச்சுவையான பேச்சினால் மக்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தினை இவர் பிடித்துள்ளார். இவர் தன்னுடைய நட்பு வட்டாரம் மற்றும் தன் சீரியல் பயணங்கள் குறித்து மனம் திறக்கிறார்.

‘‘கனாகாணும் காலங்கள் தொடர் மூலமாகத்தான் நான் சின்னத்திரையில் அறிமுகமானேன். நான் நடிக்க வர முக்கிய காரணம் என்னுடைய அம்மாதான். அவங்களுக்கு எனக்கு என்ன பிடிக்கும் என்பது தெரியும். எனக்கு நடனம் பிடிக்கும்ன்னு அவங்களுக்கு தெரிந்து தான் எனக்கு பரதம் கற்றுக் கொடுத்தாங்க. பரதத்திற்கு மிகவும் முக்கியம் முகபாவம். அது எனக்கு இயற்கையாகவே அமைந்ததால், எனக்கு நடிக்க வரும்ன்னு அவங்க நினைச்சாங்க. எனக்கு தெரியாமலேயே ஆடிஷனுக்கு அப்ளை செய்தாங்க. அவங்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றினேன். இப்போது உங்கள் முன் நான் ஒரு நடிகையாக வலம் வருகிறேன்.

எதிர்நீச்சல் தொடர் பொறுத்தவரை, எனக்கு அதற்கான ஆடிஷனுக்கு அழைப்பு வந்தது. திருச்செல்வம் அவர்கள்தான் இயக்குகிறார்னு எனக்கு தெரிய வந்தது. நானும் ஆடிஷனுக்கு போனேன். செலக்டானேன். நான் எதிர்நீச்சலில் கமிட்டான போது, என்னுடைய கதாபாத்திரம் என்ன என்று கூட கேட்கவில்லை. காரணம், எனக்கு திருச்செல்வம் அவர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கையுண்டு. அவரின் பிராஜக்ட்டில் நடிக்கும் சின்ன கதாபாத்திரம் கூட பேசப்படும்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன்.

அதனால் என்னுடைய கேரக்டர் என்ன என்று கூட நான் யோசிக்கவில்லை. செலக்டெட்னு சொன்ன அடுத்த நிமிஷம் கண்ணை மூடிக் கொண்டு சரின்னு சொல்லிட்டேன். அதில் நடிக்க ஆரம்பிச்ச பிறகு தான் என்னுடைய கதாபாத்திரம் நந்தினின்னு எனக்கு தெரியும். அப்பகூட என்னுடைய கதாபாத்திரத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு வரும்னு நான் எதிர்பார்க்கல. எல்லாவற்றையும் விட எனக்கு நகைச்சுவையும் வரும்னு நந்தினி கதாபாத்திரத்தில் நடிச்ச பிறகு தான் எனக்கே தெரிந்தது. என்னுடைய இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியதற்கு நான் இயக்குனர் திருச்செல்வம் அவர்களுக்குதான் நன்றி சொல்லணும்.

அவர் மட்டுமில்லை, இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பது டயலாக். ஒவ்வொரு டயலாக்கையும் தெறிக்க விடுறாங்க ஸ்ரீவித்யா. நகைச்சுவைக்கு ரொம்ப முக்கியம் கவுண்டர் டயலாக். அதை ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க. இந்த தொடரை பொறுத்தவரை எல்லாரும் ரொம்பவே யதார்த்தமா இருக்குன்னு தான் சொல்றாங்க. அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் சந்தானம் அவர்கள்தான். எங்க எல்லாரையும் ரொம்ப அழகா காட்டி இருப்பார். அடுத்து கோ ஆர்டிஸ்ட். எப்போதும் முழு எனர்ஜியோட இருப்பாங்க. நாம கொஞ்சம் துவண்டாலும் அவங்களின் வைஃப்பை பார்த்தா அடுத்த நிமிடம் நாமும் உற்சாகமாயிடுவோம். எப்போதும் பாசிடிவ்வா தான் யோசிப்பாங்க.

நம்முடைய தனித்தன்மை, சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. உனக்கு எது சரின்னு படுதோ அதை செய்ன்னு சொல்வாங்க. அதே சமயம் நான் தப்பு செய்தாலும், அதை எடுத்து சொல்லி புரியவைப்பாங்க. இப்படிப்பட்ட ஒரு டீமுடன் சேர்ந்து நான் வேலை பார்க்கிறேன்னு நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு’’ என்றவர் தன் நட்பு வட்டாரம் பற்றி பகிர்ந்தார்.

‘‘நான் பள்ளியில் படிக்கும் போது ரொம்ப சைலன்டா தான் இருப்பேன். ஒரு சில ஃபிரெண்ட்ஸ் இருந்தாலும், அவங்களுடன் நான் ரொம்ப எமோஷனலா இணைந்தது இல்லை. பள்ளியில் படிக்கும் போது எந்த வித சேட்டை தனமும் செய்ய மாட்டேன். ஸ்கூல் விட்டா வீடு, அப்புறம் டான்ஸ் கிளாஸ்ன்னு தான் இருந்தேன். அப்ப படிச்சவங்களோட நான் இன்றும் தொடர்பில் இருக்கேன். ஆனாலும் நீ நல்லா இருக்கியா. நான் நல்லா இருக்கேன்… அவ்வளவு தான் எங்களின் நட்பு. யாருடனும் ரொம்ப நெருக்கமா இருந்தது இல்லை.

பள்ளிப் படிப்பு முடிச்சு கல்லூரியில் ேசர்ந்ததும், நான் நடிக்க வந்துட்டேன். எனக்கு சிறப்பு அனுமதி கல்லூரியில் இருந்ததால், ஷூட்டிங் இல்லாத போது தான் கல்லூரிக்கு போவேன். அதனால் அங்கு நண்பர்கள் என்று சொல்லிக்க யாரும் இல்லை. ஒருத்திய தவிர. அவ பெயர் ஜுலியட். அவளிடமும் கல்லூரி பாடங்கள் வாங்க மட்டும் தான் பேசுவேன். அதன் பிறகு தேர்வு நாட்களில் மட்டும் கல்லூரிக்கு போவேன். அப்போது போகும் போதுதான் அவளை சந்திப்பேன். அவ்வளவு தான். மற்றபடி நானும் அவளும் வெளியே எல்லாம் போனது கிடையாது. காரணம், நான் நடிப்பு தான் என்னுடைய கனவுன்னு ஓடிக்கொண்டு இருந்ததால் பெரிய அளவில் நட்பு வட்டாரத்தை அமைத்துக் கொள்ள முடியல.

அதன் பிறகு எம்.ஏ படிக்கும் போதுதான் எனக்கு கல்லூரி உலகம் எப்படி இயங்கும்னு தெரிய வந்தது. சொல்லப்போனால் கல்லூரியின் வாழ்க்கையை அப்பதான் நான் வாழ்ந்தேன்னு சொல்லணும். அங்கு தான் எனக்கான நட்புகளை சம்பாதித்தேன். நமக்கு பிடிச்ச விஷயத்தை மனசுக்கு பிடிச்சவங்களோட செய்யும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதை அவங்களுடன் இருக்கும் போது உணர்ந்தேன். என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் நான் துவண்ட போது எனக்கு ஆறுதல் சொல்லி என்னை மீட்டவங்களும் அவங்கதான். என் வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷலானவங்க என் கல்லூரி தோழிகள்.

மீடியா பொறுத்தவரை கனா காணும் காலங்களில் உடன் நடிச்ச நிஷா, ஸ்வேதா, அழகப்பன் எனக்கு ரொம்ப க்ளோஸ். அதன் பிறகு பிரியமானவள் தொடரும் ரொம்ப நல்ல டீம். நாலு மகன், மருமகள் இடையே நடக்கும் நிகழ்வுதான் இந்த தொடர். அதில் நானும் ஒரு மருமகள். இந்த தொடரில் நடிக்கும் போது நான் கல்லூரியில் இருப்பது போல் உணர்ந்தேன். நாங்க நாங்களாவே இருப்போம். யாருக்காவது ஏதாவது பிரச்னைன்னா ஓபனா பேசி தீர்த்துக் கொள்வோம். கிரான்கி ஃபிரெண்ட்ஸ்னு சொன்னா அது நாங்க எட்டு பேர்தான். நாங்க எல்லாரும் சேர்ந்து கொடைக்கானல் டிரிப் எல்லாம் போனோம். ரொம்பவே ஜாலியான டீம்.

லட்சுமி வந்தாச்சு ஒரு குடும்பபாங்கான டீம்னு சொல்லணும். கலா அக்கா, கே.கே அண்ணா, சுலக்‌ஷனா அம்மா எல்லாரும் ரொம்ப நல்லா பழகுவாங்க. சுலக்‌ஷனா அம்மா அவங்க பொண்ணு போல பார்த்துப்பாங்க. அப்பெல்லாம் எனக்கு சரியா க்ரூம் செய்துக்க தெரியாது. அவங்க தான் சொல்லிக் கொடுத்தாங்க. நல்லா டிரஸ் செய்யணும். அப்பதான் நம்ம மேல நமக்கே பிரியம் ஏற்படும். வாழ்க்கை மேல பிடிப்பு வரும்ன்னு சொல்வாங்க. மேக்கப் கூட அவங்க தான் போட கத்துக் கொடுத்தாங்க. சீரியல் முடிஞ்சாலும் இன்றுமே நாங்க குடும்பமா தான் இருக்கோம்.

மீடியாவில் தனிப்பட்ட தோழின்னு சொன்னா எனக்கு ஜனனிதான். அன்பான சகோதரி மட்டுமில்லை சண்டைக் கோழியும் அவதான். நான் எப்ப சோகமா இருந்தாலும் என்னை பூஸ்ட் செய்வா. மனசில் உள்ள பாரத்தை நேரம் காலம் பார்க்காம அவளிடம் மட்டும் தான் கொட்டுவேன். இரவு இரண்டு மணிக்ெகல்லாம் அவளுக்கு போன் செய்தாலும் நம்முடைய பிரச்னையை கேட்க ஒருத்தங்க இருக்காங்கன்னா அவதான்.

பொதுவாகவே ஒரு சீரியலில் நாலு பெண்கள் லீட் ரோல் செய்தா ஒருத்தருக்கு ஒருத்தர் ஈகோ பிரச்னை, சண்டை வரும்னு சொல்வாங்க. நாலு பெண்கள் ஒன்னா இருந்தா நல்லாவும் இருக்கும்னு சொன்னா அது எதிர்நீச்சல் டீம்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் மேல அவ்வளவு அக்கறையோட இருப்பாங்க. எல்லாவற்றையும் விட எங்களின் கதாபாத்திரத்தை ரொம்பவே அழகா வடிவமைச்சிருக்கார் இயக்குனர். ஒருவருக்கு தன் மேல தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் தான் இன்னொரு பெண் மேல பொறாமை வரும். நான் இங்க என்னைச் சுற்றி தன்னம்பிக்கை பெண்களைத்தான் பார்க்கிறேன். எல்லாருமே பவர்ஃபுல் பெண்கள். அப்படி ஒரு சூழலில் நாமும் இருக்கும் போது அவர்களுடன் சேர்ந்து நாமும் வளர்வோம். ஒரு சகோதரிகளுக்கான பாண்டிங் இங்க எனக்கு கிடைச்சது. கனிகா, பிரியதர்ஷினி, மது எல்லாருமே ரொம்ப தைரியமான பெண்கள்.

இன்ஸ்பயரின் ெபண்கள்னு கூட சொல்லலாம். இந்த டீமில் எனக்கு சத்யா ரொம்ப க்ளோஸ். நானும் அவளும் எப்ேபாதும் ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்திட்டு சண்டைப் போட்டுக் கொண்டு தான் இருப்போம். நானும் அவளும் ஒன்னா தான் ஷூட்டிங் வருவோம். ஆன் ஸ்கிரீனில் சண்டை போடுற மாதிரிதான் ஆஃப் ஸ்கிரீனிலும் சண்டை போட்டுக் கொள்வோம். என் கணவரா நடிக்கும் விபுவை எனக்கு முன்னாடியே தெரியும். நானும் அவரும் சேர்ந்து ஒரு சீரியலில் நடிச்சிருக்கோம். சீரியலில் தான் அவர் கரடுமுரடா இருக்கார். ஆனால் நிஜத்தில் ரொம்ப சாஃப்ட். கமலேஷ் அண்ணா. அவர் ஷூட்டிங் வரலைன்னா எங்களுக்கு போர் அடிக்கும்.

பெரிய ஆர்டிஸ்ட்ன்னு தலைகனம் இல்லாமல் ரொம்ப குழந்தைதனமா விளையாடிக் கொண்டு இருப்பார். உரிமையுடன் எல்லாரையும் கிண்டல் செய்வார். அவரை கிண்டல் செய்தாலும் சிரிச்சிட்டே இருப்பார். சக்தியா நடிக்கும் சபரி என்னோட சின்ன தம்பி மாதிரி. ரொம்ப பாசமா இருப்பார். இப்படி ஒரு டீமில் நான் இருக்கேன்னா அது கடவுளின் ஆசீர்வாதம் தான்னு சொல்லணும்.

இவங்க எல்லாருடைய உண்மையான நட்பு வாழ்க்கையில் கிடைச்ச பிறகுதான் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், குழியில் தள்ளப்பட்டாலும், அவங்க திரும்ப நம்மை எழுந்து நிக்க வச்சிடுவாங்க. எதையும் எதிர்த்து சாதிக்க முடியும்னு நண்பர்களால் மட்டும்தான் தைரியம் கொடுக்க முடியும். நிறைய பணம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் கிடையாது. தன்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் வைத்திருப்பவர்கள்தான் உண்மையான பணக்காரர்கள். அந்த விதத்தில் நான் ரொம்பவே கொடுத்து வச்சவள்னு தான் சொல்லணும்’’ என்றார் ஹரிப்பிரியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் போஷிசன்கள் பலவிதம்….!!(அவ்வப்போது கிளாமர்)
Next post டாட்டூஸ் போட முறையான பயிற்சி அவசியம்! (மகளிர் பக்கம்)