டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு களைய!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 33 Second

ஹோமியோ மருத்துவர் -உளவியல் ஆலோசகர் உ.அறவாழி

இக்குறைபாடுள்ள குழந்தைகள் தாங்களே புத்தகத்தை எடுத்து படிக்க விரும்புவதில்லை. பிறரை படிக்கச் சொல்லி அதைக் கேட்டு கற்பார்கள். பிறர் படிக்கும்போது அவர்கள் படிக்கும் பல்வேறு விஷயங்களையும் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்வார்கள். இக்குழந்தைகள் பிறர் கதை சொல்வதை மிகவும் ரசிப்பார்கள். இவர்கள் பிறர் பேசும் பல்வேறு விஷயங்களை மிகவும் விரும்பிக் கேட்பார்கள். பின்பு இவ்விஷயங்களுடன் தங்கள் கற்பனைகளையும் கலந்து பிறருக்கு விரிவாக விளக்குவதில் வல்லவர்கள். இக்குழந்தைகள் பிறர் பேசுவதைக் கேட்கும் அளவுக்கு தாங்களே புத்தகங்களை எடுத்துப் படிப்பதை விரும்பமாட்டார்கள்.

பொதுவாக இக்குழந்தைகளுக்குப் படிக்கப் பிடிக்காது. ஆனால், நிறைய கேட்பார்கள். இக்குழந்தைகளிடம் கற்பனைத்திறன் பிற குழந்தைகளை விட அபரிமிதமாக இருக்கும். அதாவது, இவர்களிடம் கேள்வி ஞானமும் கற்பனை ஆற்றலும் அதிக அளவில் இருக்கும். ஆனால், படிப்பறிவு மிகவும் குறைந்தே காணப்படும். இக்குழந்தைகள் பிற குழந்தைகளை விட புத்திசாலியாக திறமை மிக்கவர்களாக விளங்கினாலும் படிப்பு விஷயத்தில் குறைபாடு இருக்கவே செய்யும். இவர்களுக்கு படிப்பதில் மற்றும் எழுதுவதில் அதிக நாட்டம் இருக்காது. ஆனால், கேட்டு அறிவதில் பிற பிள்ளைகளிடம் இல்லாத அளவுக்கு அதிக திறமை இருக்கும்.

இவர்களுக்கு மொழி, கணிதம், புதிர்கள், இலக்கணம் சூத்திரம் நூற்பா போன்ற விஷயங்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். ஆனால், வரலாறு கலை இலக்கியம் கவிதை ஓவியம் இசை விளையாட்டு போன்றவற்றில் மிகவும் திறமையானவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு மழையில் நனைந்து கொண்டே விளையாடுவது மிகவும் பிடிக்கும். மனப்பாடம் செய்து ஓப்பிப்பது என்பது கடினமான காரியம். இதனால் இவர்களுக்கு பள்ளி வாழ்க்கை பிடிப்பதில்லை. பள்ளி செல்ல அஞ்சுவார்கள் விரும்பமாட்டார்கள்.

இப்பிள்ளைகளுக்கு பிற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது பிடிக்கும். ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடத்தை விவரித்து விளக்குவது பிடிக்கும். ஆனால், ஆசிரியர்கள் புத்தகத்தைப் பார்த்துப் படிக்கச் சொன்னால் பிடிக்காது. பாடங்களை எழுதச் சொன்னால் பிடிக்காது. பாடங்களை ஒப்பிக்கச் சொன்னாலும் பிடிக்காது. ஆனாலும் இவர்கள் மிகவும் புத்திசாலிகள், இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டிஸ்லெக்சியா குறைபாடு என்பது பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒருவித நரம்பியல் குறைபாடாகும். இவர்களால் எழுத்து மற்றும் எண்கள் வடிவில் உள்ள சொற்களை சரியாக புரிந்து கொள்ள முடியாது. அதை சரியாக பிழையின்றி எழுதிக் காட்டவும் தெரியாது. புத்தகங்களிலுள்ள வார்த்தைகளைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.

உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞரான தாமஸ் ஆல்வா எடிசன் டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளவர்தான். ஆனால் இக்குறைபாடு நீங்க எடிசனின் தாயார் அவரை எவ்வாறு வளர்த்து உருவாக்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, இதே போல் நாமும் இக்குறைபாடு உள்ள நம் குழந்தைகளையும் சிறந்தவர்களாக வளர்த்து உருவாக்க இயலும்.

இக்குழந்தைகளின் கேள்விஞானம் இவர்களுக்கு படிப்பதில் உள்ள ஈடுபாட்டைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், இவர்களின் கேள்வி ஞானத்தை உயர்த்த ஒவ்வொரு பெற்றோரும் பாடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு இக்குறைபாட்டைப் பற்றி மட்டுமே பெரிதாக பேசி குறைபட்டு கவலையால் மனம் உடைந்து போய்விடக்கூடாது.

மாறாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் கதைகளையும் வரலாறுகளையும் சொல்லித் தர வேண்டும். வாத்து மற்றும் காத்து போன்ற சொற்களின் வேறுபாட்டை டிஸ்லெக்சியா பிள்ளைகள் சரிவர புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள்.

இதனால் இவர்களுக்கு வாத்து பொம்மையைக் காட்டி வாத்து என்ற சொல்லையும், விசிறியால் காற்றை வீசிக்காட்டி காற்று என்ற சொல்லையும் புரியவைத்து, இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள முதல் எழுந்து வேறுபாட்டை எளிமையாக அறிவுறுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு புரிந்துவிடும். இவ்வாறே இவர்களிடம் படிக்கும் ஆர்வத்தையும் மற்றும் எழுதும் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மலச்சிக்கல் சித்தா தீர்வு! (மருத்துவம்)
Next post சோர்வைப் போக்கும் சோம்பு!! (மருத்துவம்)