சேலை கட்ட கத்துக்கலாமா? (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 39 Second

இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு சேலை கட்டுவதற்கும் டுடோரியல் தேவைப்படுகிறது. இதை சரியாக புரிந்து கொண்ட தீபிகா சேலை கட்டுவதை சொல்லித் தருவதற்காகவே, SD விலாக் என்கிற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, சேலையினை எப்படி சுலபமாகவும், அழகாகவும் உடுத்துவது என்பதை டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்களுடன் சொல்லிக் கொடுத்து அசத்தி வருகிறார்.

கொஞ்சம் மாற்றி யோசித்தாலே போதும்… வீட்டில் இருந்தும் பெண்கள் சம்பாதிக்கலாம் என நம்பிக்கையூட்டும் தீபிகா, துவக்கத்தில் வெளியிட்ட முதல் மூன்று வீடியோக்களுக்கும் 500 முதல் 600 வியூவ்ஸ்கள் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் தன்னுடைய நான்காவது வீடியோவை அப்லோட் செய்த பிறகு 6 லட்சம் வீயூவ்ஸ்களை ஒரே வீடியோ தொட்டது என கட்டை விரல் உயர்த்தி புன்னகைத்தவர், பட்டுச் சேலை, காட்டன் சேலை, பூனம் சேலை, ஷிஃபான் சேலை, ஷாஃப்ட் சில்க் சேலைகள் என விதவிதமான சேலைகளை பார்வையாளர்களுக்கு கட்டிக் காட்டுகிற விதம் பார்க்கவே ரசனை.

சினிமா நடிகைகளும், சீரியல் நடிகைகளும் மட்டும் குட்டி குட்டியா மடிப்பு வைத்து எப்படி இவ்வளவு அழகாக சேலை கட்டுறாங்க என்கின்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதை சரியாக புரிந்து கொண்ட தீபிகா, பள்ளு அல்லது முந்தானை என அழைக்கப்படும் சேலையின் தலைப்பில் தொடங்கி குட்டி குட்டியான மடிப்புகளை (pleats) அடுக்கு மாறாமல், அழகாகவும் நேர்த்தியாகவும், இடது புறம் தோள்பட்டை வரை பார்டர் ஒரே அலைவரிசையில் தெரிகிற மாதிரியாக வைத்து, ரவிக்கையுடன் பின் செய்வதில் தொடங்கி, பெண்கள் நடக்கும்போது முன் பக்கம் அழகாக விரிந்து தெரியும் கொசுவத்திற்கான குட்டி குட்டியான மடிப்புகள் வரை அடுக்குகளாக வைத்து கலைந்துவிடாமல் நேர்த்தியாக பின் செய்து சொருகுவது, இடது புறம் தெரியும் சேலை மடிப்பின் அடுக்கு லேயர்களை எவ்வாறு சுலபமாக வரவைப்பது போன்ற விஷயங்களை, புரியும்விதமாக காணொளியில் செய்து காட்டுகிறார்.

சேலையின் தலைப்பினை ஒற்றை முந்தானையாக விட்டு, தோள்பட்டையில் இருந்து நழுவி விடாமல் எப்படி பின் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்குவதுடன், சேலை கட்டுவதில் உள்ள சின்னச் சின்ன டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்களை செய்து காட்டி, சேலை கட்டுவதில் பெண்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறார். தீபிகாவிடம் பேசியதில்…‘‘நான் பிறந்து வளர்ந்தது சென்னை. தி.நகர் ஜெயின் கல்லூரியில் பி.காம்.சிஎஸ். பாடத்தில் கார்ப்பரேட் செகரெட்டரிஷிப் முடித்தேன். படிப்பு முடிந்ததுமே ஒரு தனியார் நிறுவனத்தில் 6 மாதம் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைத்தது. நான் ரொம்பவே அமைதியான பொண்ணு என்பதால் மார்க்கெட்டிங் எனக்கு செட்டாகல.

யு டியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணம் ரொம்ப நாளாகவே மனதிற்குள் இருந்தது. யோசித்ததில், எனக்கு சேலை கட்டுவதற்கு இயல்பாகவே அழகாக வரும். காரணம், நான் +2 படிக்கும்போதே பள்ளி விழா ஒன்றில் அழகாக சேலை உடுத்தி வந்ததைப் பார்த்து பலரும் பாராட்டினர். கிடைத்த பாராட்டுகள் சேலை உடுத்துவதில் எனக்கு ஆர்வத்தை மேலும் தூண்டியது எனலாம். கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கு சேலை கட்டுவதெனில், என்னை தேடி வந்து தோழிகள் அழைக்கும் அளவுக்கு பிரபலமானேன். இந்த ஆர்வமே என்னை யு டியூப் சேனலுக்கு இதையே கன்டென்டாக மாற்றுகிற முடிவுக்கு தள்ளியது.

சேலை கட்டிக் காட்டுவதில் ஆரம்பித்து, அதில் உள்ள டிப்ஸ் அண்ட் டிரிக்ஸ், எந்தச் சேலை எங்கு கிடைக்கும், அதன் விலை போன்றவற்றை தொடர்ந்து காணொளியாக்கி போடத் தொடங்கினேன். எனது வீடியோக்களை பெண்கள் பலரும் பின்தொடர ஆரம்பித்தார்கள். வீடியோவின் கீழிருக்கும் கமென்ட் செஷனில் தங்களின் சந்தேகங்களை கேள்விகளாக வைக்க ஆரம்பித்தார்கள். கேள்விகளை தொகுத்து பதில்களை வீடியோவாக்கி போடத் தொடங்கினேன். இதற்கும் ரீச் நன்றாகவே இருந்தது.

மணப்பெண்கள் மட்டுமே ஸாரி ப்ரீ பிலீட்டிங் செய்து பாக்ஸ் போல்டிங் செய்து கட்டும் நிலை மாறி, மணமக்களின் குடும்பத்து பெண்கள், திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும் பெண்கள் என அனைவருமே சேலையினை பாக்ஸ் போல்டிங் செய்து உடுத்தும் முறையினை விரும்ப ஆரம்பித்தனர். இதை சரியாகப் பயன்படுத்தி, பாக்ஸ் போல்டிங் செய்து கொடுப்பது, பாக்ஸ் போல்டிங் செய்வதற்கான வகுப்புகளை பெண்களை ஒருங்கிணைத்து எடுப்பது என என்னை இந்த துறைக்குள்ளாகவே பிஸியாக்கிக் கொண்டேன்’’ என்கிற தீபிகா, ஒரு சேலைக்கு பாக்ஸ் போல்டிங் செய்ய குறைந்தது ஐநூறு ரூபாய் ஆகும் என்கிறார்.

முகூர்த்த மாதம் என்றால் பாக்ஸ் போல்டிங் செய்வதற்கு ஒரு நாளைக்கு மட்டுமே 10 சேலைகள் வரை வரும். முகூர்த்தம் இல்லாத நாட்கள் என்றால் ஒரு மாதத்திற்கு 10 முதல் 15 சேலைகள் வரலாம். பாக்ஸ் போல்டிங் செய்த சேலையினை எப்படி சரியாக வைத்து பின் செய்வது என்பதையும் டிப்ஸ் வீடியோக்களில் வெளிப்படுத்தி வருவதை குறிப்பிட்டவர், என்னுடைய வீடியோக்களுக்கு வரும் வியூவ்ஸ் பார்த்து, சேலை தயாரிப்பு நிறுவனங்களில் சில அவர்களது தயாரிப்பு சேலைகளை விளம்பரப்படுத்தவும் அணுகுவதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘என்னுடையது காதல் திருமணம். என் கணவரின் பெயர் சுந்தர். எங்கள் இருவரது பெயரின் முதல் எழுத்தை இணைத்தே SD விலாக்ஸ் என ஆரம்பித்தோம். அவர் ஐ.டி நிறுவனத்தின் சேனல் ஒன்றில் வேலை செய்வதால் சொந்தமாக எங்களிடம் கேமரா, சிஸ்டம், எடிட்டிங் சாஃப்ட்வேர் என எல்லாமும் இருக்கிறது. சேலை கட்டுவதற்கு கற்றுக் கொடுக்கும் டுடோரியல் வீடியோக்களை பதிவு செய்வது, எடிட் செய்து அப்லோட் செய்வது என இருவருமே இதற்குள்தான் இயங்கி வருகிறோம்’’ என்றவாறு விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post படுக்கையில் பெண்களின் எதிர்பார்ப்புகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மெனோபாஸ் அசௌகர்யங்களும் விளைவுகளும்!! (மருத்துவம்)