வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 37 Second

‘பருவத்தே பயிர் செய்’ வழக்கு மொழி இருந்தாலும், வாழ்க்கை மொழி ‘காலத்தே கடன் பெற்று, பருவத்தே பயிர் செய்து நேரத்தே பெற்ற கடன் செலுத்து’ என்பதேயாகும். ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று அவ்வையாரின் பாடல் வரிகள் விவசாயத்திற்கு மிகவும் பொருந்தும். விவசாயம் செழித்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். விவசாயத்தின் உயர்விற்கான அளவுகோலைக் கொண்டு இந்த நூற்றாண்டில் ஒவ்வொரு நிலையிலும் என்னென்ன தேவை என்று பார்ப்போம்.

வரப்புயர நிதி தேவை, நீர் உயர கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிதி ஆதாரம் தேவை, தரமான விதையை நட்டு, களையெடுத்து, இயற்கை உரமிட்டு நெல்லை உயர்த்த பயிர்க்கடன், அதை சந்தைக்கு எடுத்துச் சென்று லாபமீட்டி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் அவசியம். இவற்றை குறுகிய மற்றும் நீண்டகாலக் கடன்கள் பூர்த்தி செய்கின்றன. இதற்கு நாட்டில் இயங்கும் வங்கிகள் மற்றும் நிதி ஆதாரம் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் அரசு அவ்வப்போது திட்டங்களை வடிவமைத்து இயக்கி வருகிறது. வங்கிகளும் விவசாயிகளுக்கான கடன் திட்டங்களை வழங்குவதுமில்லாமல் அவர்களின் பணச்சேமிப்பையும் பெருக்குகிறது. வெளி சந்தையில் அதிக வட்டிக்கு கடன் பெறத்தேவையில்லை. வங்கி மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால், விளைபொருட்கள் விற்பனைக்கு பிறகு குடும்பத் தேவைகளுக்குச் சேமிக்க முடிகிறது. விவசாயிகளுக்கான கடன் திட்டங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

விவசாயம் மற்றும் விவசாய இணைத் தொழில்கள்

தேனீ, பட்டுப்புழு, காளான் வளர்ப்பு போன்ற பயிர் சார்ந்த உற்பத்திக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. மண்புழு உரம், தொழு உரம், புண்ணாக்கு உற்பத்திக்கு குறுகிய காலக் கடன் பெறலாம். விவசாயிகளுக்கு அவர்களது வேளாண் நடவடிக்கைகளுக்கு உதவ கிராமப்புறங்களில் நல்ல உள்கட்டமைப்புகளை உருவாக்க, கிராமப்புற விவசாய வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வடிவமைக்க நீண்ட கால தவணைக் கடன்கள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. பல்வேறு விவசாயப் பொருட்களின் வேளாண் வணிகத்திற்கும் வங்கிக் கடன் திட்டத்தில் வசதிகள் உள்ளன.

தேனீ வளர்ப்பு கடன்

உலக அளவில் தேனை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகப் பிரதானமான ஒன்றாகும். குறைந்த முதலீட்டுத் திறன் கொண்ட தொழில்களில் தேனீ வளர்ப்பு லாபகரமான தொழிலாக விளங்குகிறது. வனவியல், சமூக வனவியல் மற்றும் விவசாய ஒருங்கிணைப்பை உள்ளடக்கியதாக தேனீ வளர்ப்புத் தொழில் அமைந்துள்ளது. ஊட்டச்சத்து மிக்க உணவாகவும், உடல் நோய் தீர்க்கும் மருந்தாகவும் தேன் பயன் தருவதால் தேனீ வளர்ப்பிற்கு வங்கிகள் கடன்கள் வழங்குகின்றன.

ஒருங்கிணைந்த பண்ணைகளின் மூலம் தேனீ வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேனீக்களின் நடமாட்டம் விவசாயிகளின் லாபமீட்டும் திறனை வலுப்படுத்திஉள்ளது. விவசாயப் பயிர்களின் வளர்ச்சிக்குத் தேனீக்கள் பெருமளவு துணைபுரிகின்றன. சுற்றிலும் தேனீக்களை வளர்த்தால் தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் 30%, பிற விவசாயங்களில் 20% விளைச்சல் அதிகரிக்கும்.

திட்ட வரையறை மற்றும் கடன் தொகை

ஒருவர் மிகச்சிறிய முதலீடாக 10 பெட்டிகளுடன் தேனீ வளர்ப்பைத் தொடங்கி நல்ல முறையில் இயங்கி வந்தால் ஒரு வருட காலத்தில் 20 முதல் 25 பெட்டிகள் வரை வணிகப்பெருக்கம் ஏற்படும். ஒரு பெட்டியில் 40 கிலோ வரை தேன் கிடைக்கும். எத்தனை கிலோ தேன் ஒரு சேமிப்புக்கால சுழற்சியில் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டு, ஒரு கிலோ தேன் ரூ.500 முதல் ரூ.800 வரை பொருளின் தரத்திற்கு ஏற்ப சந்தையாக்கப்படும். தேனீ வளர்த்துத் தேன் வணிகம் செய்பவர்களுக்கு 20% முதல் 30% வரை லாபம் கிடைக்கின்றது.

வங்கிக் கடன்

தேனீ வளர்ப்புப் பெட்டிகள், தேன் பிரித்தெடுக்கும் கருவிகள், தேன் சேமிப்புக் கலன்கள், காலணிகள், கையுறைகள், தேன் வீடுகள் கட்டுதல் ஆகியவற்றின் செலவுகளுக்காக விண்ணப்பதாரர் திட்ட முதலீட்டு அறிக்கையை தயாரித்து வங்கியிடம் விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். மேலும் அடித்தளத் தாள்கள், தேனீ முக்காடு, தேனீ கத்தி, ஹைவ் கருவி, மெழுகு பிரித்தெடுக்கும் கருவி, சுற்றுப்புறத் தூய்மை, தூயநீர் தொடர்ந்து கிடைக்க வழி செய்தல், குறிப்பிட்ட தொலைவிற்குள் பூக்கள் மின்னும் பசுமைத் தோட்டம் அமைத்துப் பராமரித்தல் ஆகிய அனைத்தும் திட்ட முதலீட்டு அறிக்கையில் இடம் பெறவேண்டும்.

பதப்படுத்தப்பட்ட தேனை சந்தைப்படுத்த உபகரணங்கள், வாகனங்கள், கொள்கலன்கள் ஆகியவற்றுக்கான முதலீடுகளும் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அறிக்கையில் இடம்பெறவேண்டும். மொத்த திட்டச் செலவில் 80% முதல் 90% வரை வங்கி கடனாக வழங்குகிறது. கடனைத் திருப்பச் செலுத்தும் காலம் 6 வருடங்கள் ஆகும். இதில் முதல் வருடம் கடன் விடுமுறை காலமாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது முதல் வருட லாப விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் கடன் தவணை செலுத்த வேண்டியதில்லை. இரண்டாம் வருடத்திலிருந்து தவணைத் தொகையை செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

*விண்ணப்ப படிவம்.

*இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

*ஓட்டுநர் உரிமம்/ ஆதார் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை/ பாஸ்போர்ட் ஏதாவது ஒரு அடையாளச் சான்று.

*வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஏதாவது ஒரு அடையாளச் சான்று.

*தகுதிவாய்ந்த அதிகாரிகளால் முறையாக சான்றளிக்கப்பட்ட தேனீ வளர்ப்பு கொட்டகை அமைக்கும் இடம் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுத்ததற்கான சான்று.

*தேனீ வளர்ப்பில் அனுபவம் உள்ளதற்கான உறுதிச் சான்று மற்றும் திட்ட அறிக்கை.

*வங்கி நிர்ணயித்துள்ள வேறு ஆவணங்கள் – வங்கியின் அட்டவணைப்படி.

கட்டணங்கள்

வங்கி நிர்ணயிக்கும் வட்டி மற்றும் கட்டணம் அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் கட்டளைக்கு ஏற்ப மாறுபடும். ரூ.2 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 7% முதல் 10% வரை நிர்ணயிக்கப்படுகிறது. எவ்வளவு பணம் திருப்பச் செலுத்தப்படுகிறதோ அதற்கு ஏற்ப வட்டி குறையும். இந்த வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது. மிகக்குறைந்த வட்டியை வங்கிகள் நிர்ணயித்து கடன் வழங்குகிறது. கடன் தொகை ரூ.50000/- வரை செயலாக்க கட்டணம் கிடையாது. அதற்கு மேல் உள்ள கடன் வரம்பிற்கு வங்கி நிர்ணயிக்கும் செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு தேனீ வளர்ப்பு என்னும் மிக லாபகரமான விவசாய தொழிலுக்கு வங்கியின் மூலம் கடன் பெறலாம்.

வேளாண் நிறுவனக் கடன் வேளாண் பொருட்கள் உற்பத்தி மற்றும் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள், வேளாண் உள்ளீட்டுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் பொருள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண்மை, அதனுடன் தொடர்புடைய, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் துணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாய அடிப்படையிலான நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடிகள் வரை இத்திட்டத்தில் தகுதிகளின் அடிப்படையில் கடன் பெறலாம், கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகள்.

கடன் தொகை அல்லது அதன் குறிப்பிட்ட மடங்கு மதிப்பிற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட சொத்து அடமானம், கடனுதவியால் வாங்கப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள், பிற அசையும் சொத்துக்களை பிணையமாக வங்கி பெற்ற பிறகுதான் கடன் தொகை கிடைக்கும். மேலும் ரூ.2 கோடி வரை கடனுக்கான கிரெடிட் உத்தரவாதக் காப்பீடு உண்டு. கடனுக்கான வட்டி இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அந்தந்த வங்கியால் அவ்வப்போது நிர்ணயித்து அறிவுறுத்தப்படும்.

இந்த நிறுவனங்கள் ஏற்கனவே பதிவு செய்திருக்கப்பட்டு அனுபவ ரீதியாக லாபமீட்டுவதாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். இந்திய நிறுவனங்கள் சட்டம், இந்திய கூட்டாண்மைச் சட்டம் ஆகிய எந்த சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதன் வழிகாட்டுதல்களின்படி வங்கிக்கு உரிய ஆவணங்களை கடன் வேண்டி விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

அக்ரி கிளினிக் மற்றும் வேளாண் வணிக மையங்கள்

விவசாயிகளுக்கு பெருமளவு உதவும் பொருட்டு விவசாய பயிர் பாதுகாப்பு மருந்தகங்கள் மற்றும் வேளாண் வணிக மையங்கள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. பயிர் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவ சேவைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மருத்துவ நிபுணர் ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்களின் இயக்கத்திற்காக வங்கிகள் கடன் வழங்குகின்றன. விவசாய உபகரணங்களின் பராமரிப்பு மற்றும் கணினிமயமாக்கல், அத்தகைய பணிகளுக்காக நியமனங்கள், பயிற்சிகள், விவசாயம் சார்ந்த பகுதியில் இடுபொருட்கள் விற்பனை, அறுவடைக்குப் பின் மேலாண்மை மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு சந்தை இணைப்பு உட்பட பல நிலைகளில் வேளாண் வணிக மையங்கள் இயங்குகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் என்பது அவற்றின் கட்டமைப்பு மற்றும் இயக்க நிலைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. தனிநபர்களுக்கான கடன் வரம்பு ரூ.20 லட்சம், ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு ரூ.100 லட்சம் என்று தகுதியின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளன.

கடன் தொகை ரூ.5 லட்சம் வரை விளிம்புத் தொகை செலுத்த வேண்டியதில்லை. அதற்கு மேல் உள்ள தொகைக்கு விளிம்புத் தொகை உண்டு. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இத்திட்டத்தில் சிறப்புச் சலுகைகள் உள்ளன. தவணைக் கடனாக வழங்கப்படும் அசல் தொகையை வட்டியுடன் சேர்த்து 10 வருடங்களுக்குள் மாதத் தவணைகளில் திருப்பச் செலுத்த வேண்டும்.

வட்டி மற்றும் வங்கிக் கட்டணங்கள்

கடன் தொகை ரூ.50 லட்சம் வரை நிதிகளின் விளிம்பு செலவு கடன் விகிதம் எவ்வளவோ அதனுடன் கூடுதலாக 2% கடனுக்கான வட்டியாக நிர்ணயிக்கப்படும். ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ள கடனுக்கு வட்டி எவ்வளவு என்பதை வங்கி அவ்வப்போது நிர்ணயித்து கடனாளிக்கு தெரிவிக்கும். கடன் தொகை ரூ.2 லட்சம் வரை செயலாக்க கட்டணம் கிடையாது. ரூ.2 லட்சத்திற்கு மேல் என்றால் கடன் தொகையில் 1.4% + GST செயலாக்கக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

சொத்து அடமானம் மற்றும் பிணையம்

வங்கிக்கடனிலிருந்து உருவாக்கப்பட்ட சொத்தினை கடன் தொகைக்கான முதன்மை அடமானமாக வங்கி ஏற்கும். கடன் தொகை ரூ.10 லட்சத்திற்கும் மேல் என்றால் வங்கியின் விதிமுறைகளின்படி சொத்து அடமானம் தேவை. மேலும் அடமானமாக வைக்கப்படும் சொத்து அரசு பதிவாளர் அலுவலகத்தில் வங்கியின் பெயரில் இன்ன காரணம் மற்றும் இவ்வளவு கடன்தொகை என்று குறிப்பிடப்பட்டு அடமானப் பத்திரத்தின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

அரசின் சிறப்புத் திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்பட்டிருந்தால் கடனாளி நிர்ணயிக்கப்பட்ட சலுகைகளை பெற முடியும். கடன் பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டால் கடன் தொகை ரூ.10 லட்சம் வரை என்றால் சொத்து அடமானம் தேவையில்லை. அதேபோல் கடன் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்றால் ரூ.1 கோடி வரையிலான கடன்களுக்கு சொத்து அடமானம் தேவையில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா?? (அவ்வப்போது கிளாமர்)
Next post ரத்த அழுத்தமும் வாழ்வியல் மாற்றமும்!! (மருத்துவம்)