ஆதலினால் காதல் செய்வீர்!! (அவ்வப்போது கிளாமர்)
இந்திய வீடுகளில் குழந்தைகள் முன்போ, பெரியவர்கள் முன்போ புதுமணத் தம்பதிகள் கூட ஒட்டி நின்று பேசுவதையும் மாபெரும் குற்றமாகத்தான் இன்றளவு பார்க்கப்படுகிறது. மனித வாழ்வுக்கு சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு செக்ஸும் முக்கியம்தான்.
அன்றாட உடற்பயிற்சி, உறவுகள் பராமரிப்பு, ஆரோக்கிய உணவு இவை அனைத்தும் சரியான விகிதத்தில் கிடைக்கப் பெற்றால்தான் வாழ்க்கை முழுமை அடையும். அதைப்போலவே 50 வயதிலும் தொடர்ச்சியான தாம்பத்திய உறவில் ஈடுபடும் போதுதான், ஒரு இணையின் வாழ்க்கை முழுமை அடையும்.கணவன்-மனைவிக்கிடையே சின்னச் சின்ன தொடுதல்கள், தழுவல்கள், கரம் கோர்த்தல், பரஸ்பர முத்தங்கள் போன்றவை இருந்தால்தான் தாம்பத்தியம் இனிக்கும். வயதான பிறகும் தொடர்ந்து உறவில் ஈடுபடும் தம்பதிகளே ஆரோக்கியமான மனதையும், திடகாத்திரமான உடலையும் பெற்றிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு!
74 வயதுள்ள 133 பேர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வில், எந்தவித சங்கடமுமின்றி ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும், தழுவிக்கொண்டும், முத்தங்களை பரிமாறிக்கொண்டும் இருக்கும் தம்பதிகள் தொடர்ந்து மகிழ்ச்சியான உறவு கொள்கிறார்கள் என்றும், அவர்களே தரமான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்கிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர்.
‘தொடர்ந்து தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஜோடிகள் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள்’ என ஓர் ஆய்வறிக்கையை ‘Age and Aging’ என்ற மருத்துவ இதழிலும் வெளியிட்டிருக்கிறார்கள்.