கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 48 Second

மதக் காரணங்களைக் கடந்து, ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் செய்வது பரவலாகிவிட்டது. `அப்படிச் செய்வது நல்லது’ எனத் தோழிகள் கூறுகிறார்கள். குழந்தைக்கு எந்த வயதில் சுன்னத் செய்யலாம்? இது தொடர்பான மருத்துவ விளக்கங்கள் தேவை.
– சாரதா நிர்மல், கோவை.

ஆணுறுப்பில் `ஸ்மெக்மா’ (Smegma) என்ற வெள்ளை நிறத் திரவம் இயல்பாகவே சுரக்கும். தினமும் குளிக்கும்போது ஆணுறுப்பைச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், `ஸ்மெக்மா’ திரவம் ஆணுறுப்பில் படிந்து, தொற்று உருவாக வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்னை நீடித்தால், பிற்காலத்தில் ஆணுறுப்பு விறைக்கும்போது வலி உண்டாகலாம். விறைப்புத் தன்மை உண்டாவதிலும் சிக்கல் ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதி இறுக்கமாக இருக்கும். இதனால், அந்தத் தோல் பகுதியைப் பின்புறம் நகர்த்துவதும் (Phimosis), ஆணுறுப்பைச் சுத்தம் செய்வதும் கடினமாக இருக்கும். சிலருக்கு ஆணுறுப்பில் பின்னோக்கி நகர்த்திய தோல் பகுதியை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவருவதும் சிக்கலாக இருக்கும் (Paraphimosis). சிலருக்கு சிறுநீர்க்குழாயின் துளை இயல்புக்கு மாறாகக் குறுகியிருக்கும். இதனால் அந்தக் குழாயில் அடைப்பு, வலி, எரிச்சல், வீக்கம், தொற்று ஏற்படலாம்.

மேற்கண்ட உடல்நலக் காரணங்களுக்காக, குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு `முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை’ செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதன்படி 2 – 5 வயதுக்குள், அதாவது ஆண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் காலத்துக்குள் இதைச் செய்யலாம். வளரிளம் பருவத்தில் அல்லது அதற்குப் பிந்தைய பருவத்தில் செய்யும்போது அவர்களுக்குக் கூச்சமும் வலியும் அதிகமாக இருக்கும்.

அறுவை சிகிச்சை செய்த பிறகு, ஆணுறுப்பைச் சுத்தப்படுத்துவது எளிதாக இருக்கும்; நோய்த் தொற்றுகள் ஏற்படுவதும் குறையும். `அறுவைசிகிச்சை செய்வதால், பிற்காலத்தில் ஆணுறுப்பில் ஏற்படும் சருமப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையலாம்; தாம்பத்ய உறவின்போது விறைப்புத் தன்மை ஏற்படுவதிலும், விந்து வெளியேறுவதிலும் சிக்கல் உருவாகலாம்’ என மருத்துவரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படாத மாறுபட்ட கூற்றுகளும் சொல்லப்படுகின்றன. எனவே, மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக இந்த அறுவை சிகிச்சையைச் செய்ய முடிவெடுக்கக்கூடாது. அத்தியாவசிய மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் செய்யலாம்.

எனக்கு இரண்டு மாதங்களாக வஜைனல் இன்ஃபெக்‌ஷன் இருக்கிறது. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது. ஆனால், பிறப்புறுப்பில் அரிப்பு உணர்வு ஏற்படவில்லை. இதற்குக் காரணம், தீர்வு என்ன?
– ராதிகா, திருவாரூர்.

புதிதாகத் திருமணமான பெண்களுக்குத் தாம்பத்யம் காரணமாக சிறுநீர்த்தொற்று ஏற்படுவது இயல்பு. உங்களின் வயதையோ, புதிதாகத் திருமணமானவரா என்பது உள்ளிட்ட வேறு விவரங்களையோ நீங்கள் குறிப்பிடவில்லை. நான்கு மாதங்களாகப் பிரச்னை இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதால், அது மேலும் தீவிரமடைவதற்குள் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். சர்க்கரைநோயின் காரணமாகவும் வஜைனல் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதற்கான பரிசோதனை அவசியம்.

அதேபோல, அல்சர் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், ஸ்கேன் பரிசோதனையும் செய்ய வேண்டும். சிறுநீர்ப்பாதையில் சிறுநீரகக் கற்கள் தங்கி இருந்தாலும், இதுபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றில், உங்கள் பிரச்னைக்கான காரணத்தை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சையைப் பரிந்துரைப்பார். பொதுவாக, பிறப்புறுப்பு சுகாதாரம், நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அடக்காமல் இருப்பது போன்ற பழக்கவழக்கங்கள் சிறுநீர்த்தொற்றிலிருந்து காக்கும்.

என் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. இந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு நட்ஸ் கொடுக்கலாமா… அவற்றை அன்றாட உணவில் எப்படிச் சேர்க்க வேண்டும், என்ன அளவில் இருக்க வேண்டும்?
– பானுமதி, பொள்ளாச்சி.

குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்தே நட்ஸ் வகைகளைச் சாப்பிடப் பழக்கலாம். ஆரம்பத்தில் நட்ஸைப் பொடியாக்கி, ஒரு கிளாஸ் பாலுடன் ஒரு டீஸ்பூன் நட்ஸ் பொடி சேர்த்துக் கொடுக்க ஆரம்பியுங்கள். அது குழந்தைக்கு செரிமானப் பிரச்னை எதையும் ஏற்படுத்தவில்லையெனில், அளவை இரண்டு டீஸ்பூனாக அதிகரித்துக்கொள்ளலாம். குழந்தைக்குப் பல் முளைத்த பின்னர், நெய்யில் வறுத்த நட்ஸை அவர்களின் கையில் கொடுத்து, கடித்துச் சாப்பிடச் சொல்லலாம்.

நட்ஸை அன்றாடம் இவ்வளவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எந்த அளவும் கிடையாது. எனினும், நட்ஸை அதிகம் சாப்பிட்டால் வேறு எந்த உணவையும் சாப்பிட மாட்டார்கள் என்பதால் பாதாம், பிஸ்தா போன்ற ஏதேனும் ஒரு வகையில் நான்கு என்ற எண்ணிக்கையில் தினமும் சாப்பிடக் கொடுக்கலாம். நட்ஸை காலையில்தான் சாப்பிட வேண்டும் என்ற வரையறையும் இல்லை. எனவே, உங்கள் குழந்தை ஸ்நாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் எந்த நேரத்திலும் நட்ஸைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

70 வயதான என் அம்மாவுக்கு சர்க்கரைநோய். கடந்த ஓராண்டாக ஞாபகமறதியால் அவதிப்படுகிறார். கைகளில் நடுக்கம் இருப்பதால், சாப்பிட சிரமப்படுகிறார். நேராக நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. சில நேரம் நடக்க முயன்று கீழே விழுந்துவிடுகிறார். அம்மாவை எந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்? ஆலோசனை தேவை.
– ராஜவேலு, திருபத்தூர்.

நீங்கள் சொல்லக்கூடியவை அனைத்தும் வயது முதிர்வால் ஏற்படும் ஞாபகமறதி நோய்க்கான அறிகுறிகள். மருத்துவம் இதை `டிமென்ஷியா’ என்கிறது. முழு உடல் பரிசோதனை செய்து பார்த்து ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அளவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். குடும்ப மருத்துவர் இருந்தால், அவரிடம் இதற்கான சிகிச்சையைத் தொடரவும். நடக்கவும் நிற்கவும் தடுமாறுகிறார் என்றால், நரம்பு சார்ந்த குறைபாடு அல்லது `டயாபடிக் நியூரோபதி’ எனப்படும் சர்க்கரைநோயால் கால்களில் ஏற்படும் பாதிப்பாக இருக்கலாம். எனவே, சர்க்கரைநோய்
நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

உடல்நிலை சீரானதும், ஞாபகசக்திக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். `டிமென்ஷியா’ இருப்பது உறுதிசெய்யப்பட்டால் தெரபி, சிகிச்சைகள் மூலம் ஓரளவு பிரச்னைகளைக் கட்டுப்படுத்தலாம். ஞாபகமறதி உள்ளவர்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இது குறித்த ஆலோசனைகளுக்கு, தாமதிக்காமல் முதியோர்நல மருத்துவரை அணுகுவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மோகத்திற்கு எதிரி முதுகுவலி!!(அவ்வப்போது கிளாமர்)
Next post டேட்டிங் ஏன் எப்படி? (அவ்வப்போது கிளாமர்)