மேக்கப் கஷ்டப்படுபவர்களுக்கான வருமான பாதை! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 14 Second

அந்த ஒரு நாள் எந்த ஒரு பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள். அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள். பசுமையாக அவளின் மனதில் நிலைத்து இருக்கும் அந்த ஒரு நாள் அவளின் திருமண நாள். அன்று எல்லா பெண்களும் தங்களை அழகாகவும் பிரகாசமாகவும் எடுத்துக் காட்டிக் கொள்ள மேக்கப் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஒருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப மேக்கப் போடலாம். இதில் பல தொழில்நுட்பம் மற்றும் மாடர்ன் முறைகள் இருப்பதால், அந்த நாள் முழுக்க அவர்களை அழகாக காண்பிக்க முடியும். இதற்காகவே பிரத்யேக பயிற்சிகளை அளித்து வருகிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லக்சா பிரசன்னா. இவரிடம் பயிற்சி பெற்ற 500க்கும் மேற்பட்டவர்கள் மேக்கப் துறையில் தங்களுக்கு என ஒரு வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறார்கள்.

சென்னையில் மேக்கப் வர்க் ஷாப்பிற்காக வந்திருந்த லக்சா தன் மேக்கப் பயிற்சி பயணம் குறித்து விவரித்தார்.‘‘நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இலங்கையில் தான். தற்போது பிரான்சில் செட்டிலாயிட்டேன். மேக்கப் துறையில் நான் வருவதற்கான காரணம் என் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம். அம்மா எனக்கு கொடுக்கும் காசில் சேமிப்பது என் வழக்கம். 15 ஆயிரம் யுரோவினை சேமித்திருந்தேன். இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம். அதைக் கொண்டு பயனுள்ள விஷயம் கற்றுக்கொள்ள விரும்பினேன்.

என்னிடம் பட்டப்படிப்பு இருந்தாலும், கைத்தொழிலாக ஒன்றை கற்றுக் கொள்ள நினைச்சேன். பிரான்சில் மேக்கப் கலைக்கென சிறந்த பயிற்சி மையம் உண்டு. அதில் சேர்ந்தேன். இதில் என்ன விசேஷம் என்றால், மேக்கப் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. என் 21 வயது வரை நான் மேக்கப் செய்து கொண்டதில்லை. புருவங்களைக் கூட தீட்டியதில்லை. அம்மா பள்ளி ஆசிரியர் என்பதால் வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்களுக்கு மேக்கப் போடுவது தவறான செயல். ஆனால் நான் அவங்களுக்கு பிடிக்காத துறையைதான் தேர்வு செய்தேன். காரணம், இந்த கலைக்குதான் மொழி தடை கிடையாது. எங்கு போனாலும் சொல்லி புரிய வைக்கலாம்.

நானும் ஒரு ஆர்வத்தில் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். அவங்க பாடம் எடுக்கிறாங்க. எனக்கு எதுவுமே புரியல. என் அம்மாவிற்கோ நான் படித்த படிப்பிற்கான வேலை பார்க்கணும்ன்னு விருப்பம். நான் இதை தேர்வு செய்வேன்னு அவங்க நினைக்கல. முதல் மூணு மாசம் ரொம்பவே சிரமப்பட்டேன். அதன் பிறகு இரவு பகல் பாராமல் எனக்கு நானே மேக்கப் போட்டு பயிற்சி செய்தேன். தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். பிரான்சின் விமான நிலையத்தில் உள்ள ஒரு பிரபல மேக்கப் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன்.

அதற்கு காரணம் என் தங்கை. அவள் தான் என்னை ஊக்குவித்து நேர்காணலுக்கு என்னை அனுப்பினாள். நான் முடிச்சிட்டு வரும் வரை எனக்காக காத்திருந்தாள். அவளின் காத்திருப்பு எனக்கு வெற்றியை தந்தது. எனக்கு வேலையும் கிடைச்சது. நான் மேக்கப் நிறுவனத்தில் வேலை செய்தாலும், நான் பயின்ற கலையை ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்த நினைச்சேன். அம்மா ஆசிரியர் என்பதால், மூணு வயசில் இருந்தே அவங்க பாடம் சொல்லிக் கொடுப்பதை பார்த்து வளர்ந்திருக்கேன். எனக்கும் மற்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க பிடிக்கும். நான் படிச்ச மேக்கப் கலையினை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க விரும்பினேன்.

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. சனி, ஞாயிறு சும்மாதான் இருப்பேன். அந்த நாட்களை பயனுள்ளதாக மாற்றினேன். மேக்கப் பயிற்சி குறித்து விளம்பரம் செய்தேன். அதைப் பார்த்து இரண்டு பேர் வந்தாங்க. என் வீட்டில் என் அறையில் சொல்லிக் கொடுத்தேன். இரண்டு பேர் நான்கானார்கள், நான்கு பத்தானது. பத்து நூறானது. தற்போது தனியாக ஒரு இடம் எடுத்து அங்கு மேக்கப் ஸ்கூலினை நடத்தி வருகிறேன். இதுவரை என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் அவர்களுக்கான பிசினசினை அமைத்துக் கொண்டுள்ளனர்’’ என்றவர் கண்களுக்கான மேக்கப் போடுவதில்
ஸ்பெஷலிஸ்ட்.

‘‘நான் முழுக்க முழுக்க என் பயிற்சி பள்ளியில்தான் கவனம் செலுத்துகிறேன். பிரைடல் மற்றும் மற்ற நிகழ்வுக்கான மேக்கப் போடுவதில்லை. அதற்கு முதல் காரணம் என் வேலை. வாரம் முழுக்க பிசியாகவே இருப்போம். இதற்கு நடுவில் கல்யாண ஆர்டர் வந்தா நான் அலுவலகத்தில் லீவ் சொல்லணும். அது நல்லா இருக்காது. வார இறுதி நாட்களில் மட்டுமே பயிற்சி என்பதால், அது என்னுடைய வேலையை எந்த விதத்திலும் பாதிக்காது. மேக்கப் பொறுத்தவரை ஒருவரின் முகத்தை வசீகரமா மாற்றணும்.

அதில் மிகவும் முக்கியமானது ஒருவரின் கண் மற்றும் உதடு. இவை இரண்டின் மேல் நாம் கவனம் செலுத்தினால் போதும், எல்லா பெண்களுமே அழகாக தோன்றுவார்கள். என்னிடம் பயிற்சிக்கு வரும் பலரும் என்னுடைய புருவம் மற்றும் கண்களுக்கு நான் போட்டு இருக்கும் மேக்கப் அழகாக இருப்பதாக சொல்வார்கள். அவர் சொன்ன அந்த வார்த்தை என்னை கண்களில் போடும் மேக்கப் மேல் அதிக கவனம் செலுத்த வைத்தது.

கண்கள்தான் ஒருவரின் முகத்தை அழகாக எடுத்துக்காட்டும். எல்லாருக்கும் அழகான பெரிய கண்கள் இருக்காது. ஒரு சிலருக்கு கண்கள் இருப்பதே தெரியாது. முதலில் அவர்களின் புருவங்களை தீட்டி அழகுப்படுத்தலாம். ஒருவரின் முக அமைப்பு மற்றும் கண்கள் பொருத்து அவர்களுக்கான மேக்கப் மாறுபடும். கண்கள் வெளிப்படையாக தெரிய லைட் நிறங்கள் கொண்டு மேக்கப் போடலாம். கருப்பு நிறம் கண்களை மேலும் சிறியதாக எடுத்துக்காட்டும்.

மேக்கப் இப்போது எல்லா பெண்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. முன்பு திருமணத்திற்கு மட்டுமே மேக்கப் போடுவார்கள். இப்போது வேலைக்கு போகும் பெண்கள் கூட காம்பேக்ட் பவுடர், மஸ்காரா, கண்மை, லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். மணப்பெண்ணுக்கான மேக்கப் என்று வரும் போது வாட்டர்ப்ரூஃப், எச்.டி மேக்கப் என்கிறார்கள். என்னைக் கேட்டால் அது அவசியம் இல்லை. புதுப்பெயர்கள் சொன்னாலும், அவர்கள் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. கல்யாண பெண் மேக்கப் போட்டுக் கொண்டு தண்ணீரில் குளிக்கப்போவதில்லை. அவர்களுக்கு எதற்கு வாட்டர்ப்ரூஃப் மேக்கப்.

சருமத்தில் வியர்வைக்கான சுரப்பி உள்ளது. இதற்கும் முகத்தில் தண்ணீர் தெளிப்பதற்கும் வித்தியாசமுண்டு. சருமத்திற்குள் நடப்பதை நாம் மேக்கப் மூலம் சரி செய்தால்தான், இந்த துறையில் நீங்க வெற்றியடைஞ்சதா அர்த்தம். பொதுவாக அனைத்து மேக்கப் சாதனங்களிலும் சிலிக்கான் வேதியப் பொருள் கலந்திருக்கும். சிலிக்கான் தண்ணீரோடு சேராது. மேக்கப் போட்டு சருமத்தில் தண்ணீர் ஊற்றினால் மேக்கப் கலையாது என்பது அடிப்படை விஷயம். அவர்களைப் பொறுத்தவரை அன்றைய நாள் முழுதும் மேக்கப் கலையாமல் இருக்கணும். அப்படி மேக்கப் போட்டால்தான் நீங்க உங்க துறையில் சக்சஸ் செய்ததாக அர்த்தம். இந்த கலையை பெரிய ஒரு பிசினசா மாத்திட்டாங்கன்னு நினைக்கும் ேபாது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.

எல்லா மேக்கப்பிலும் ரசாயனம் இருக்கும். தொடர்ந்து மேக்கப் போடும் போது, சருமம் அதன் பொலிவினை இழக்கும். அதைப் பாதுகாக்க சருமத்திற்கான சீரம் பயன்படுத்தலாம். சீரம் சருமத்தில் உள்ளே ஊடுருவி சென்று தொய்வு ஏற்படாமல் பாதுகாக்கும். அதனைத் தொடர்ந்து மாய்சரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தின் வெளிப் பகுதிக்கு கேடயமாக இருக்கும். எண்ணைப் பசை சருமம் கொண்டவர்கள், முகத்தில் வழியும் எண்ணையினை கட்டுப்படுத்தினால், சருமம் தனக்கான எண்ணை தன்மை முற்றிலும் நின்றுவிட்டதாக நினைத்து அதிகமாக சுரக்கும். எந்த வித மேக்கப் போட்டாலும், இரவு படுக்கும் முன் அதை கிளன்சர் கொண்டு நீக்க வேண்டும்.

சருமத்தை வெளியே மட்டும் பாதுகாக்காமல் உள்ளிருந்தும் கவனிக்க வேண்டும். இதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதைக் கடைப்பிடித்தாலே வசீகரமான சருமம் உங்களுடையது’’ என்றவர் வெளிநாட்டில் உள்ள பிரைடல் மேக்கப் முறைகள் பற்றி விவரித்தார்.‘‘தமிழ்நாட்டில் மணப்பெண்களுக்கான மேக்கப் குறித்து அனைத்து விஷயங்களும் மேக்கப் ஆர்டிஸ்ட் செய்வாங்க. அதாவது அவர்களுக்கான சிகை அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் முதல் நகைகள் வரை மேக்கப் ஆர்டிஸ்ட் பொறுப்பு. ஆனால் இங்கு அப்படி இல்லை. நாங்க மேக்கப் மட்டும்தான் போடுவோம்.

அவர்களின் உடை அதற்கான அணிகலன்கள் எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். மேக்கப் செய்யும் போதும் அவர்களை நம் கைகளால் தொடக்கூடாது. பிரஷ்தான் பயன்படுத்தணும். தொட்டு கரெக்‌ஷன் செய்ய வேண்டுமானால் அனுமதி கேட்க வேண்டும். அவர்களிடம் இப்படி அழகு செய்து கொள்ளுங்கள் என்று கட்டாயம் செய்யக்கூடாது. இதில் எண்ணை சருமம் உள்ளவர்களுக்கு குளித்துவிட்டு சருமத்தில் எதுவும் தடவாமல், ஐஸ்கட்டிகள் கொண்டு மசாஜ் செய்யச் சொல்லி அட்வைஸ் கொடுப்போம்’’ என்றவர் ஆன்லைன் முறையில் இலவச மேக்கப் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘கோவிட் போது, வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல். பயிற்சி பள்ளியினை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாதாரண பள்ளிகளும் இயங்கவில்லை. அம்மா ஆன்லைனில் பாடம் நடத்தினாங்க. அப்ப அவங்க ஒரு விஷயம் சொன்னாங்க. அது எனக்குள் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. கோவிட்டின் கோரத்தாண்டவம் பலரின் வாழ்க்கையில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சிலர் என்ன செய்வதுன்னு புரியாமல் இருப்பாங்க.

அவங்களுக்கு இது போன்ற பயிற்சி பெரிய ஆறுதலை அளிக்கும். கோவிட்டால் வேலை இழந்தவர்களுக்கு உதவியா இருக்கும்ன்னு சொன்னாங்க. ஆன்லைன் முறையில் இலவச மேக்கப் பயிற்சியினை ஆரம்பிச்சேன். கணவனை இழந்த பெண்கள், கஷ்ட நிலையில் இருப்பவர்கள் பலர் பயிற்சியில் இணைந்தாங்க. 15 நாள் பயிற்சியில் மேக்கப் குறித்த அடிப்படை விஷயங்களை சொல்லித் தருகிறேன். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும். இப்போது நிலைமை சீரானாலும், கஷ்டப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் இந்த பயிற்சியினை இன்றும் தொடர்ந்து வருகிறேன்’’ என்றவருக்கு மேக்கப் குறித்து பெரிய அளவில் பள்ளி ஒன்றினை துவங்க வேண்டும் என்பது கனவாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! (மருத்துவம்)