ஆதிரா ராஜ பிட்னெஸ்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 59 Second

மரகதநாணயம் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கத்தில் ஹிப்ஹாப்தமிழா ஆதி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான வீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் ஆதிரா ராஜ். மலையாள வரவான ஆதிரா ராஜ், 2020 -இல் ஏத்தாழகானு நீ என்ற மலையாளத்தில் குறும்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். இவர், தற்போது, கிருஷ்ணம்மா மற்றும் ஏமிகோ கரேஜ் என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆதிரா ராஜ் தனது பிட்னெஸ் சீக்ரெட் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

டயட்: நான் ஒரு ஃபுட்டி. அதனால் பெரிதாக டயட் எல்லாம் ஃபாலோ செய்வது கிடையாது. பிடித்த உணவை தேடித் தேடி சாப்பிடும் பழக்கம் உடையவள். பிடித்த உணவுக்காக என் அண்ணனோடு சண்டையிட்டு சாப்பிட்டதும் உண்டு. ஆனால், முடிந்தளவு ஜங்க் உணவுகளை தவிர்த்துவிடுவேன் அவ்வளவுதான். ஜங்க் உணவுகளை தவிர்த்தாலே டயட்டில் பெரிய பிரச்னை இருக்காது என்று நம்புகிறேன்.

காலையில் நாட்டுமாட்டு பால் அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு மற்றும் வெஜ் சாண்ட்விச் எடுத்துக் கொள்வேன். மதிய உணவில், பச்சை காய்கறிகள், சாலட், தயிர் நிச்சயம் இருக்கும். இரவில் பழங்கள், சப்பாத்தி, பால் எடுத்துக் கொள்வேன். இவ்வளவுதான் என்னுடைய தினசரி உணவுமுறைகள் அதுபோன்று, தினசரி, பழங்கள், சாலட் அதிகம் எடுத்துக் கொள்வேன். மேலும், ஆரோக்கியமான சருமத்திற்காக நிறைய தண்ணீர் அருந்துவேன். கோடை காலங்களில் இளநீர் மற்றும் ஜூஸ் ஆகியவை அவசியம் எடுத்துக் கொள்வேன். பிடித்த உணவு தலசேரி பிரியாணி, புட்டு, கடலை. இதுதவிர, எங்களது பாரம்பர்ய உணவுகள் அனைத்தும் விரும்பி சாப்பிடுவேன்.

ஒர்க்கவுட்ஸ்: ஒர்க்கவுட்ஸ் என்று எடுத்துக் கொண்டால், அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர். மோகினியாட்டம் முறைப்படி பயின்றிருக்கிறேன். எனவே சிறுவயது முதலே உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறேன். காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடும் பழக்கம் உடையவள் நான். முதலில் யோகாவுடன் எனது ஒர்க்கவுட்ஸ் தொடங்கும். பின்னர், நடைபயிற்சி அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரை மணி நேரம்.

பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர், புஷ்- அப், புல் – அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். இவையெல்லாம் எனது தினசரி உடற்பயிற்சிகளாகும். பின்னர், கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு மணி நேரம் டான்ஸ் பயிற்சிகள் செய்வேன். இவைதான் எனது ஒர்க்கவுட் ரகசியங்கள். அதுபோன்று என்னுடைய தினசரி உடற்பயிற்சிகளோடு யோகாவும் செய்வேன். யோகா மனதிற்கு அமைதி தருவதோடு, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே, உடற்பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேனோ அதே அளவு என்னுடைய யோகா பயிற்சிக்கும் இடம் உண்டு.

பியூட்டி: இயற்கையாகவே எனது தோல் பளபளப்பானதாக அமைந்துவிட்டது. அதனால் தோல் பராமரிப்புக்காக பெரிய மெனக்கெடல்கள் எதுவும் செய்வதில்லை. இதற்கு காரணம் எங்களது வீட்டில் சமைக்கப்படும் உணவு முறையாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பொதுவாகவே, கேரள உணவுகளில் அதிகளவில் தேங்காய் சேர்க்கப்படுவதும் காரணமாக இருக்கலாம்.

எனது கூந்தல் மற்றும் தோல் பராமரிப்புக்கும் தேங்காய் எண்ணெயையே அதிகம் பயன்படுத்துகிறேன். தினமும் குளிக்கச் செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் வைத்திருந்து பின்னரே குளித்துவிட்டு வருவேன். கூந்தலை பொருத்தவரை, என் அம்மாவிடம் இருந்து அழகான அடர்ந்த நீளமான கறுப்பு கூந்தல் எனக்கும் வந்திருப்பதாக நினைக்கிறேன். இதுவும் கேரள பெண்களுக்கே உரித்தானதுதானே.

எனது மேக்கப் ரகசியம் என்பது எதுவும் தனியாக கிடையாது. நான் எப்போதும் லைட் மேக்கப்பையே விரும்புகிறேன். அதுதான் எனக்கும் பொருத்தமானதாக இருக்கும். எனவே, லிப் பாம், கன்னச் சாயம், கான்சீலர் காஜல் மற்றும் கொலோன் இவைகள்தான் பெரும்பாலும் எனது மேக்கப் கிட்டில் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சட்டங்கள் அறிவாய் பெண்ணே!! (மகளிர் பக்கம்)
Next post முகப் பொலிவை மேம்படுத்தும் பூக்கள்! (மருத்துவம்)