இணை தேடும் இணையங்கள்!! (மகளிர் பக்கம்)
திருமண பந்தத்தில் இணையப் போகும் இரு குடும்பத்தாரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நிறைய திருமணத் தகவல் மையங்கள் இன்று திசைக்கு ஒன்றாய் வளரத் துவங்கியுள்ளன. பணம் கொழிக்கும் ஒரு வணிகமாகவே இன்று இது மாறியிருக்கிறது. இணையம் வழி இயங்கும் பெரும்பாலான திருமணத் தகவல் மையங்கள் குறிப்பிட்ட பாலினத்தவரின் வயது, நிறம், உயரம், படிப்பு, வேலை செய்யும் நிறுவனம், வாங்கும் ஊதியம், தாங்கள் எந்த மதத்தில், எந்த சாதியில், எந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்கள், ராசி, நட்சத்திரம் என்பதுவரை அத்தனை விபரங்களை கேட்டு பெற்று அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இணையர்களைப் பெற்றுத் தரும் ஊடகமாக செயல்படுகிறது. குறிப்பிட்ட சாதியினருக்காக மட்டுமே இயங்கும் திருமணத் தகவல் மையங்களும் ஏராளமாக இருக்கின்றன.
ஒரு சில திருமணத் தகவல் மையங்கள் வசதிக்கேற்ப சில பேக்கேஜ் முறையிலான வசதிகளை கிளாசிக், கிளாசிக் அட்வான்டேஜ், கிளாசிக் பிரிமியம், கோல்ட், பிளாட்டினம், எலைட் எனப் பிரித்து வைத்துள்ளனர். இந்தப் பேக்கேஜ்களுடன் அசிஸ்டன்ட் சர்வீஸ் வழங்கினால் அதற்குத் தனிக் கட்டணமும் இருக்கிறது. இதில் எலைட் என்பது கோடிகளில் புரளும் பிரிவினருக்கானது. இந்த பிரிவில் வரன் தேடுபவர்கள் லட்சங்களிலும், கோடிகளிலும் புரளும் பெரும் முதலாளிகள், அரசியல் புள்ளிகள், சினிமா பிரபலங்கள் என இந்த பக்கங்களை ஆக்கிரமிக்கின்றனர்.
இணையம் வழியே முடிவு செய்யப்படும் திருமணங்கள் எந்த அளவிற்கு இன்று வணிக ரீதியாக விரிவடைந்திருக்கிறதோ அதே போன்று அதில் நம்பகத்தன்மையும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. நேரடியாகப் பார்த்துப் பேசி பழகி இரு குடும்பத்தாரும் கலந்து பேசி முடிவு செய்யும் திருமணங்களே ஏகப்பட்ட நெருக்கடிகளை சந்திக்கும் நிலையில், திருமணத் தகவல் மையங்கள் இணைய வழி மட்டுமே தொடர்பில் இருக்கின்றன. பெரும்பாலான திருமணப் பதிவு மையங்கள் வரன்களின் நம்பகத்தன்மையினை உறுதி செய்வதில்லை.
திருமணம் செய்துகொள்ளப் போகும் மணமகனோ, மணமகளோ தங்களைப் பற்றிய சுய விபரங்களைத், திருமணத் தகவல் மையத்தில் வழங்கும்போது, அவர்கள் தரும் விபரங்கள் எந்த அளவிற்கு உண்மையானது, நம்பகத்தன்மை மிக்கது என்பதை ஆதாரங்களைப் பெற்று சரிபார்ப்பதில்லை. வரன் பார்க்கும் இணைய பக்கங்களுக்குள் உட்புகுந்தாலே ஆயிரக்கணக்கில் மணமக்கள் புகைப்படங்கள் கொட்டுகின்றன. அதில் குறிப்பிட்ட நபர் அளிக்கும் விபரங்கள் எந்த அளவிற்கு நம்பகமானது என்பது கேள்விக்குறியே?
மேலும் ஆன்லைன் திருமணத் தகவல் மையங்களில் வலம் வரும் பெரும்பாலான இளைய தலைமுறையினரின் பெற்றோர்கள் பலர் இணையப் பரிச்சயம் இல்லாதவர்களாக இருப்பதால், திருமணம் செய்துகொள்ள முற்படும் மணமகன் அல்லது மணமகளே இணையப் பக்கங்களை பயன்படுத்துபவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் சுய விபரங்களை நம்பகத்தன்மையுடன் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு பி.காம் படித்த ஒரு மணமகன் தன்னை எம்.காம் படித்ததாகக் காட்டிக்கொள்வதும், குறைவான ஊதியத்தில் சாதாரண பணியில் இருக்கும் ஒரு நபர், மிகப்பெரிய நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் இருப்பது போன்று காட்டிக்கொள்வதும், தங்கள் வயதை குறைத்து காட்டிக்கொள்வதும், தங்கள் வெளித் தோற்றத்தையும், புகைப்படங்களையே மாற்றிக் காட்டும் ஏமாற்று வேலைகளும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன.
ஏற்கனவே திருமணமான நபர்கள், திருமண பந்தத்திலிருந்து மணமுறிவு ஏற்பட்டவர்கள், தங்களைப் பற்றி உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை வழங்கும் அபாயமும் அதிகம் நடக்கிறது. நேரடியாக இல்லாமல், இணையம் வழியே வழங்கும் விபரங்களை மட்டுமே நம்பி, குறிப்பிட்ட நபருடன் தொடர்ந்து இணையத்தில் உரையாடல் செய்து, திருமணம் வரை சென்று ஏமாற்றப்பட்டவர்களும் இருக்கின்றனர்.
மிகச் சமீபத்தில் ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்து தந்த இடைத்தரகர் ஒருவர் பெண்ணிற்கு எத்தனை சவரன் நகை போடுகிறார்களோ அதற்கேற்ப கமிஷன் தொகை பெறுவதாகவும் தகவல் கிடைத்தது. அதாவது பெண்ணிற்கு ஐம்பது சவரன் நகை மணமகள் வீட்டார் போடுகிறார்கள் என்றால், தரகருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கமிஷன் மணமகன் வீட்டார் தர வேண்டுமாம். கூடுதல் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, இடைத் தரகராகச் செயல்படுபவர், மணமகன் வீட்டார் கேட்பதாகச் சொல்லி, மணமகள் வீட்டாருக்கு கூடுதல் சுமையினை ஏற்படுத்தும் அபாயமும் வரதட்சனை என்ற பெயரில் நிகழ ஏராளமான வாய்ப்புகள் இதில் இருக்கிறது.
திருமண வயதைத் தாண்டியும் பலர் திருமண இணையப் பக்கங்களில் வலம் வருவது குறித்து சென்னையில் கீதம் திருமணத் தகவல் மையத்தின் இயக்குநர் கீதா தெய்வசிகாமணியிடம் பேசியதில்..‘‘ஆண்-பெண் இருபாலருக்குமே திருமணம் செய்து வைப்பது இன்று மிகமிகக் கடினமான காரியமாக மாறி விட்டது. காரணம், முன்பெல்லாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்களிடம் எதிர்பார்ப்பு குறைவாக இருந்தது.
இன்றைக்கு நிலைமை தலைகீழ். ஆண்-பெண் இருபாலரின் எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சுமையான நிகழ்வாக மாறிக்கொண்டிருக்கிறது. இதில் மணமகள் என்றால் பையனின் படிப்பு, ஊதியம், சொத்து மதிப்பு, நிறம், உயரம் என எல்லாவற்றையும் பார்ப்பதுடன், மணமகன் அவர் பெற்றோருடன் இருப்பதையும் சில மணப் பெண்கள் விரும்புவதில்லை.
மணமகன் என்றால் பெண்ணின் அழகு, வயது, நிறம், கல்வி, வேலை, வரதட்சணையாக எவ்வளவு தேரும் என எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். நூறு சதவிகிதமும் திருப்தி என்றால் மட்டுமே சம்மதிக்கிறார்கள். இருபாலரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க 30 வயது வரை திருமணம் ஆகாத பெண்களும் 38 வயதைக் கடந்து திருமணம் ஆகாத ஆண்களும் திருமணத் தகவல் மைய இணையப் பக்கங்களில் ஏராளமாக உள்ளனர். தங்கள் பெண் மற்றும் பையனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், சில பெற்றோர்கள் சோர்ந்த மன நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
சில மணமக்கள் தங்கள் உறவுகளையும், நட்புக்களையும் கூட்டி நிச்சயம் செய்த பிறகு, ஒரு சில அல்பக் காரணங்களுக்காகக்கூட திருமணத்தைத் தொடர
விருப்பமில்லை என முறித்துக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு’’ என்கிறார் கீதா.மேட்ரிமோனியல் வெப் சைட்கள் அதிகரித்துள்ள நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து கல்யாணமாலை இயக்குநர் மீரா நாகராஜனிடம் பேசியதில்…
‘‘இது திருமணத்திற்கான ஒரு ப்ளாட் ஃபார்ம், அவ்வளவே. இந்த மாதிரியான ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு வரன் இருக்கு என்பதைச் சொல்வதே இதில் முக்கிய வேலை. உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு கடல் கடந்து இருக்கிற உறவுகளையும் இதில் பார்க்கிறோம். இதில் பெற்றோர்கள்தான் கவனமாக இருந்து அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். ஒரு கார் அல்லது பைக் வாங்க 10 ஷோரூம்கள் ஏறுகிறோம். பள்ளியில் சேர்க்க 10 பள்ளிகள் ஏறி இறங்குகிறோம். பிள்ளைகளுக்காக கல்லூரி கல்லூரியாக அலைகிறோம். அதேபோல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் தகவல் இருந்தாலும் பெற்றோர்தான் மெனக்கெட்டு வரனைத் தேடிச்சென்று விசாரிக்க வேண்டும்.
அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதானா என்பதை சரி பார்க்க வேண்டும். அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்’’ என்றவாறு விடைபெற்றார். நீங்கள் முடிவு செய்யும் உங்கள் இல்லத் திருமணங்கள் எந்த வழியில் நடைபெற்றாலும் பரவாயில்லை, ஆனால் விழிப்புடன் இருங்கள். நீங்கள் உங்கள் வீட்டு வரனை முடிவு செய்வதற்கு முன்பு, உங்களுக்கு மிகவும் தெரிந்த நபர் மூலமாக நம்பகத் தன்மையினை உறுதி செய்யுங்கள். இடைத்தரகர்கள், ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் இவற்றைப் பயன்படுத்துவதில் எந்த அளவிற்கு வசதிகள் உள்ளதோ அந்த அளவிற்கு ஆபத்துக்களும் பலவிதங்களில் நிறைந்துள்ளது.விழிப்புடன் நமது இல்லத் திருமணங்களை நிகழ்த்துவோம்.