சூரிய ஒளியில் ஓவியங்கள் வரையலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 41 Second

நாம் பள்ளியில் படித்த ஒற்றை வரி, இன்று பலரின் சாதனைகளுக்கு வழியாக மாறியுள்ளது. அறிவியல் பாடத்தில் மாணவர் பருவத்தில் அனைவரையும் கவரக்கூடியது பூதக்கண்ணாடி, சூரிய ஒளியினைக் கொண்டு நெருப்பை உருவாக்கலாம் என்பதுதான். அதை நாம் பரிசோதனை செய்தும் கண்டறிந்துள்ளோம். ஆனால் இதனை பயன்படுத்தி சித்திரம் வரைய முடியுமா..? என்ற கேள்விக்கு முடியும் என்று பதில் அளிக்கிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ். இவர் சித்திரம் மட்டுமில்லை, பாடல்கள், கவிதைகள், காலத்தால் அழியாத காவியமான திருக்குறள் என அனைத்தையும் பூதக்கண்ணாடி, சூரியக் கதிர் கொண்டு அழகான ஒரு காவியமாக படைத்து வருகிறார்.

‘‘2010-ல் EEE படிப்பில் டிப்ளமோ முடிச்சேன். அதன் பிறகு அந்த துறை சார்ந்த வேலையை தேடிக் கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் தான் என் அம்மா தவறிட்டாங்க. அதனால என் சொந்த ஊருக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கேயே கிடைச்ச ஒரு சில வேலைகளை செய்து வந்தேன். சரியான வேலை இல்லை, அம்மாவும் தவறியதால், மனதால் மட்டுமில்லாமல் உடலாலும் நான் பாதிக்கப்பட்டேன். டாக்டர் எனக்கு ஒரு மாதம் ஓய்வு அவசியம் என்று சொல்லிட்டார். அந்த கட்டாயத்தால், என்னால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை. வீட்டிலே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என பேச ஆரம்பித்த விக்னேஷ், சூரிய ஒளி மூலம் எவ்வாறு படங்களை வரைய ஆரம்பித்தார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘வேலையை விட்டுட்டு என்ன செய்யலாம்னு யோசிச்ச போதுதான், ஓவியங்கள் வரையலாம் என எண்ணம் ஏற்பட்டது. இது மனதுக்கும் உடலுக்கும் ஒருவித புத்துணர்வினை கொடுக்கும் என்பதால் அதையே செயல்படுத்த முடிவு செய்தேன். 3டி மற்றும் செல்ஃபி படங்களை மட்டுமே ஆரம்பத்தில் வரைந்து வந்தேன். அப்போது தான் இன்ஸ்டாகிராமில் கலிபோர்னியாவை சார்ந்த மைக்கேல் பபடாகிஸ் (Micheal Papadakis) என்ற ஓவியர் சூரிய ஒளியில் ஓவியம் வரைவது, மரப்பலகைகளில் எழுதுவது போன்றவற்றை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதைப் பார்க்கவே ரொம்ப அழகாகவும், வித்தியாசமாகவும் இருந்தது.

அதை பார்த்த நாள் முதல் எனக்கும் அதே போல் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. நாமளும் அதே மாதிரி வரையலாம்ன்னு அவருடைய ஓவியங்களை முன்னுதாரணமாக வைத்து என்னுடைய கையெழுத்தை மரப்பலகையில் சூரிய ஒளி மூலம் வரைந்தேன். அது ரொம்ப நல்லா வந்தது. அதன் பிறகு நடிகர் ஹிப்ஹாப் தமிழா, சதீஷ் அவர்களின் புகைப்படத்தை மரப்பலகையில் வரைந்தேன்.

அதை என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர்களை டேக் செய்து அவர்களின் ஓவியங்களை பதிவு செய்தேன். அவர்கள் அதைப் பார்த்து என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். அந்த ஒரு பாராட்டு எனக்கு பெரிய ஊக்கத்தை அளித்தது. இதுதான் எனக்கான இடம். இந்த வேலைதான் என்னுடையதுன்னு எனக்கு புரியவைத்தது’’ என்றவர், முழு நேரமும் சூரிய ஒளியில் இருப்பதனால் அதனால் ஏற்பட்ட உடல் பிரச்னைகளையும் அதை எவ்வாறு சமாளித்தார் என்பது பற்றியும் கூறுகிறார்.

‘‘நமக்கான வேலை இதுதான் என முடிவு செய்த போது இதில் வரும் நல்லது கெட்டது என அனைத்தையும் கடந்துதான் வரணும். ஆரம்பத்தில் சூரிய ஒளி ஓவியங்கள் வரையும் போது வெயில் பட்டு உடலில் தோல் எல்லாம் எரியும். சருமத்தில் ஏற்பட்ட எரிச்சலுக்கு மருந்து போட்டாலும், திரும்பவும் வெயிலில் நிற்கும் போது மறுபடியும் சரும பாதிப்பு ஏற்பட்டது. அதனால் கைகளுக்கு கையுறை பயன்படுத்த ஆரம்பித்தேன். ஆனால் அப்போதும் கை சூடாகும்.

அதை தடுக்க சன் க்ரீம், கண்ணாடி, குடை இது போன்ற பல விஷயங்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். நான் வரையும் படம் சின்னதாக இருந்தாலே அதை சூரிய ஒளியில் வரைய குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். இதுவே மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் ஒரு படம் வரைய ஒரு நாள் முழுவதும் கூட ஆகும். என்னதான் இவ்வளவு தற்காப்பு நடவடிக்கைகள் செய்தாலும் சில சமயம் வெயில் அதிகமா இருக்கும் நேரங்களில் இடைவேளை விட்டு விட்டுதான் வரைய முடியும். அதிக நேரம் தொடர்ந்து வெயிலில் நிற்கும் போது உடலில் உள்ள நீர்சத்து அனைத்தும் குறைய ஆரம்பிக்கும். அதை சமாளிக்க இடை இடையே தண்ணீர், ஜூஸ், இளநீர் போன்றவற்றை எடுத்துக்ெகாள்வேன். அப்போதுதான் வெயிலின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.

இப்போ லேசர் பெயின்டிங் என நிறைய வகை பெயின்டிங் வழக்கத்திற்கு வந்துள்ளது. அதுவும் சூரிய ஒளி மூலம் வரையும் பெயின்டிங்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அதனால் நான் வரைவது உண்மையில் சூரிய ஒளி ஓவியமா என நிறைய பேர் கேட்பாங்க. அவங்களுக்காகத்தான் நான் வரைவதை வீடியோ எடுத்து என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன். இந்த வீடியோவும் என்னுடைய மொபைல் போனில் எடுப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு போன் சூடாகி விடும்.

இந்த ஓவியங்கள் மற்ற ஓவியங்கள் போன்று கைகளை தாள்களின் மீது வைத்து வரைய முடியாது. ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து லென்ஸினை பிடித்துக் கொண்டு வரைய முடியும். இதனால் கைகளுக்கும் ஓய்வு தேவைப்படும். எனவே அதிகபட்சம் போனுக்கு ஓய்வு கொடுக்கும் போதும் நானும் ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன். காலையில் சூரியன் வருவதற்கு முன்பே அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்வேன்.

சூரியன் வந்த பிறகு வரைய துவங்குவேன். மே மாதம் போன அக்னி நட்சத்திர காலத்தில் காலை 8க்கு எல்லாம் சூரியன் பளிச்சென்று இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் அப்போது சூரிய ஒளியில் வரைய ஆரம்பிச்சிடுவேன். இதுவே குளிர் காலம் என்றால் 9 மணிக்கு மேல்தான் வெயில் வரும் என்பதால், அப்போது துவங்கி மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் குறையும் வரை வரைய முடியும். இந்த சூரிய ஒளி ஓவியம் வரைய முதலில் எப்போதும் போல், நாம் வரைய இருக்கும் ஓவியத்தின் அவுட்லைன் வரைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதன் மேல் பூதக்கண்ணாடியினை மெதுவாக நகர்த்தும் போது, நமக்கான ஓவியம் கிடைக்கும். அதிகமா ஒளிபடும் போது பலகை முழுவதும் எரிந்து போகக்கூடும். எனவே கவனமாக வரைய வேண்டும்.

சூரிய ஒளி ஓவியம் வரைதலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பல பிரபலங்களின் முகங்களை வரைந்து வந்தேன். அதில் நான் வரைந்த கலைஞர் மற்றும் பெரியாரின் ஓவியத்தை அமெரிக்காவில் இருந்த தமிழர் என் இன்ஸ்டா பக்கத்தை பார்த்து விலைக்கு வாங்கிக் கொண்டார். அதுமட்டுமில்லாமல், ஒரு பொம்மையின் சித்திரத்தை அனுப்பி அதை வரைந்து தரச்சொன்னார். பலர் விரும்பும் இந்த சூரிய ஒளி ஓவியத்தை விற்பனை மட்டும் செய்யாமல், அதில் ஏதேனும் சாதிக்கணும்ன்னு எண்ணம் ஏற்பட்டது. அதன் ஆரம்பமா, தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் அழிந்து வரும் கோவில் சிற்பங்களின் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்.

அதற்கு முன்னுதாரணமா, கும்பகோணம் கோவிலில் இருக்கும் காளை, யானை இணைந்த சிற்பத்தை ஓவியமாக வரைந்தேன். அது மட்டும் போதாது வேறு ஏதாவது செய்யணும்னு நினைத்தேன். அப்போது என் உறவினர் ஒருவர் பூக்கள் அலங்காரத்திற்காக மூங்கில் பட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு வந்தார். அதை பார்த்ததும், எனக்கு ஓலைச்சுவடி நியாபகம் வந்தது. பிறகுதான் நாம ஏன் திருக்குறளை இதில் எழுதக்கூடாது என ஒரு எண்ணம் வந்தது.

முதலில் ஒரு குறள் எழுதினேன். நல்லா வந்தது. எனவே இந்த வருட இறுதிக்குள் 1330 குறளையும் எழுதி முடிக்க வேண்டும்ன்னு இலக்கினை நிர்ணயித்தேன். தற்போது 20 திருக்குறள்களை எழுதியிருக்கேன். விரைவில் 1330 குறள்களையும் எழுதிவிடவேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். இதுதான் என் கனவு, இலக்கு, லட்சியம் எல்லாமே’’ என்றவர், ‘ஆசியாவின் முதல் சூரிய ஒளி ஓவியர்’ என்ற பெருமையையும், ‘சித்திர கலைமாமணி’ என்னும் விருதினையும் பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புறக்கணிப்பின் வலி!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சாமானியரும் அவசர காலத்தில் மருத்துவம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)